தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவபிரானுக்கு சேலை அலங்காரம்

Go down

சிவபிரானுக்கு சேலை அலங்காரம் Empty சிவபிரானுக்கு சேலை அலங்காரம்

Post  ishwarya Thu May 23, 2013 2:06 pm

மயிலாடுதுறை

தஞ்சாவூர் அருகே உள்ள ஊர் சக்கரபள்ளி. அங்கே நாதசர்மா என்று ஒரு சிவபக்தர் வசித்து வந்தார். அவருடைய மனைவி அநவித்யை. அவளும் ஒரு சிறந்த சிவபக்தையே. இருவரும் தினசரி மூன்று வேளையும் திருவையாற்றில் அருள்பாலிக்கும் இறைவன் ஐயாறப்பரையும் அம்மை அறம் வளர் த்த நாயகியையும் பூஜித்து வந்தார்கள். திடீரென அவர்களுக்கு, ஐப்பசி மாத கடைசி நாளன்று மாயூரத்தில் (தற்போதைய மயிலாடுதுறை) நடைபெறும் கடை முழுக்கு விழாவில் கலந்து கொண்டு துலாஸ்நானகட்டத்தில் நீராட வேண்டுமென்று ஆசை ஏற்பட்டது.

அன்று, அங்குள்ள அனைத்து ஆலய மூர்த்திகளும் காவிரிக் கரைக்கு உலா வந்து, மாயூரநாதர்-அபயாம்பிகையோடு காவிரியில் தீர்த்தம் கொடுப்பது வழக்கம். துலா மாதமாகிய ஐப்பசியில், தன் மீது படிந்த பாவங்களை போக்க விரும்பும் கங்கை உட்பட சகல நதிகளும் காவிரியில் கலப்பதாக ஐதீகம். நாதசர்மா-அநவித்யை தம்பதியர் துலா கட்டத்தில் நீராடிவிட்டு இரவு திரும்பிவிட நினைத்து மாயூரம் புறப்பட்டனர். இரவு நெருங்கி விட்டது. தாம் நினைத்தபடி ஐப்பசி கடைசி நாளன்று பகலில் காவிரியில் நீராட முடியவில்லையே என வேதனைப்பட்டனர். கூடவே இரவாகிவிட்டதால் மீண்டும் திரு வையாறு திரும்பி, தினசரி நடைமுறையான இறைவன், இறைவியை தரிசிப்பதும் இயலாது போன ஆதங்கமும் சேர்ந்துகொண்டது.

‘‘கவலை வேண்டாம். பொழுது விடிவதற்குள் காவிரியில் போய் நீராடுங்கள். உங்களுக்கு ஐப்பசியில் நீராடிய அனைத்து புண்ணியங்களும் கிடைக்கும். தவிர திருவையாறுக்கு திரும்ப முடியவில்லையே எனவும் வருந்த வேண்டாம். மாயூரநாதர் ஆலயத்திற்கு மேற்கிலுள்ள ஆலயத்தில் நாங்கள் எழுந்தரு ளியுள்ளோம். எங்களை வந்து தரிசித்துச் செல்லுங்கள்’’ என அசரீரி ஒலிக்க அதன்படி இருவரும் மறுநாள் விடியற்காலையில் காவிரியில் நீராடி விட்டு அசரீரி சொன்ன ஆலயத்திற்கு வந்து இறைவனையும் இறைவியையும் வழிபட்டனர்.

அவர்கள் வழிபட்ட அந்த ஆலயமே மயிலாடுதுறையில் உள்ள அருள்மிகு ஐயாறப்பர் ஆலயம். திருவையாற்று இறைவனும் இறைவியுமே தனது பக்தர்களுக்காக இங்கு எழுந்தருளியுள்ளதால் அதே திருப்பெயர்களில் இங்கும் அழைக்கப்படுகின்றனர். தன்னை வணங்கிய இருவரையும் இறைவன் ஆட்கொள்ள, அப்படியே நாதசர்மாவும் அநவித்யையும் சிவபெருமானுடன் ஐக்கியமாயினர். நாதசர்மா ஐக்கியமான சிவலிங்கம் மாயூரநாத சுவாமி ஆலயத்தில் கணக்கடி விநாயகர் சந்நதிக்கு அருகே தனி சந்நதியில் அருள்பாலிக்கிறது. அந வித்யை ஐக்கியமான சிவலிங்கம் மாயூரநாதர் ஆலயத்தில் உள்ள அன்னை அபயாம்பிகை சந்நதிக்கு தென்புறத்தில் அருள்பாலிக்கிறது.

அநவித்யை ஐக்கியமான சிவலிங்கத்திற்கு வழக்கமான ஆடை அலங்காரங்களுக்கு பதிலாக சேலையையே உடுத்துகின்றனர். இது எந்த சிவாலயத்திலும் காண முடியாத சிறப்பம்சமாகும். இந்த ஐயாறப்பர் ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மொட்டைக் கோபுரம் இருந்தாலும் அதன்முன் அழகிய ஆலய முகப்பு நம்மை வரவேற்கிறது. உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் திருக்குளமும் அதனருகே படித்துறை விநாயகர் ஆலயமும் உள்ளன. அடுத்துள்ள முகப்பை கடந்ததும் விசாலமான பிராகாரத்தில் பலிபீடம், நந்தியம் பெருமான், கொடிமரம் ஆகியவை உள்ளன. மேற்குப் பிராகாரத்தில் விநாயகர், தென்கயிலை நாதர், வடகயிலைநாதர், வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், மகாவிஷ்ணு, கஜலட்சுமி சந்நதிகள் உள்ளன.

வடக்கில் சண்டிகேஸ்வரர் சந்நதி. வடகிழக்கில் பைரவர், சனிபகவான், சூரியன் திருமேனிகளும் கிழக்குப் பிராகாரத்தில் நவகிரக நாயகர்களும் அருள்பாலிக்கின்றனர். தெற்கு பிராகாரத்தில் நால்வர் திருமேனிகள் உள்ளன. மகாமண்டபத்தின் இடதுபுறம் அறம் வளர்த்த நாயகியின் சந்நதி. அன்னையின் முன் இரண்டு துவார பாலகிகள் சுதை வடிவில் திகழ்கிறார்கள். இந்த அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் வலது கரத்தில் சங்கு மாலையையும் மேல் இடதுகரத்தில் தாமரையையும் ஏந்தி கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள்.

மகாமண்டபத்தின் இடதுபுறம் பள்ளியறையும் நடராஜர்-சிவகாமி அருள்பாலிக்கும் நடன சபையும் உள்ளன. அடுத்துள்ள இறைவனின் அர்த்த மண்டப நுழைவாயிலை துவாரபாலகர்களின் சுதை வடிவத் திருமேனிகள் அலங்கரிக்க, கருவறையில் இறைவன் ஐயாறப்பர் லிங்க ரூபமாய் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவகோட்டத்தில் வடபுறம் பிரம்மா, துர்க்கை; கிழக்கில் அர்த்தநாரீஸ்வரர், தெற்கில் விநாயகர், தட்சிணாமூர்த்தி என அருள்பாலிக்கின்ற னர். அர்த்தநாரீஸ்வரருக்கு தொடர்ந்து ஐந்து வாரங்கள் அர்ச்சனை செய்து வந்தால் தடைகள் எல்லாம் நீங்கி, விரைவில் திருமண வரம் கிட்டுகிறது. அமாவாசை தினங்களில் அர்த்தநாரீஸ்வரருக்கு, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். இங்கு சித்திரை சப்தஸ்தானத் திருவிழா பத்து நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். சிவபக்தர்களான நாதசர்மா, அவர் மனைவி அநவித்யை ஆகியோருக்காக திருவையாறு இறைவன் பெயரிலேயே, ஐயாறப்பராக இங்கு எழுந்தருளிய இறைவன் திருவையாறு திசை நோக்கி அமர்ந்ததால், இந்த ஆலயம் மேற்கு பார்த்தபடி உள்ளது. தன்னை துதிக்கும் பக்தர்களுக்காக எழுந்தருளிய ஐயாறப்பன், தன்னை நாடும் பக்தர்களின் குறையையும் கவலையையும் தீர்த்து வைப்பார் என்பதில் ஐயமில்லை. மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஐயாறப்பர் ஆலயம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum