தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாசி மகத்தின் விசேஷம் என்ன?

Go down

மாசி மகத்தின் விசேஷம் என்ன? Empty மாசி மகத்தின் விசேஷம் என்ன?

Post  gandhimathi Thu Jan 24, 2013 2:09 pm

பௌர்ணமி அன்று மாலை மேற்கே சூரியன் அஸ்தமிக்க, கிழக்குத் திசையில் முழு நிலவு அதுவும் கடலிலிருந்து எழும்போது பார்த்தால் தங்கத் தகடு மாதிரி ஜொலிக்கிறது. மேற்கே சூரியன். கிழக்கே முழு நிலவு. நடுவே பூமி. வானவியலின்படி அன்றைய தினம் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் அந்த வரிசையில் நேர்கோட்டில் இருக்கின்றன. எல்லா பௌர்ணமிகளிலும் இப்படித்தான். ஓர் ஆண்டில் மொத்தம் 12 பௌர்ணமிகள் உண்டு. சில ஆண்டுகளில் 13 பௌர்ணமிகள் வருவது உண்டு.சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றையும் சேர்க்கின்ற நேர்கோட்டை, சந்திரனைத் தாண்டி மேலும் இழுத்துக் கொண்டே போனால் அது வானில் ஏதோ ஒரு ராசியில் போய் முடியும். வானை நமது சௌகரியத்துக்காக மேற்கிலிருந்து கிழக்காக 12 ராசிகளாக - பகுதிகளாகப் பிரித்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நாம் மேற்படி நேர்கோட்டை நீட்டித்தால் அந்தக் கோடு ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு ராசியில் போய் முடியும்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி வருகிற பௌர்ணமியன்று அந்த நேர் கோடு சிம்ம ராசியில் போய் முடியும். சிம்ம ராசியில்தான் மக நட்சத்திரம் இருக்கிறது. அன்றைய தினம்தான் மாசி மகம்.இதையே வேறு விதமாகச் சொன்னால் தமிழ் மாதமாகிய மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி அன்று சூரியன், பூமி, சந்திரன், மக நட்சத்திரம் ஆகிய நான்கும் ஒரே வரிசையில் இருக்கும். நாம் ஆண்டுதோறும் அந்த நாளில்தான் மாசி மகம் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். அந்த அளவில் வானவியல் ரீதியிலான ஒரு நிகழ்ச்சியைத்தான் நாம் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். மாசி மகம் பண்டிகை பல நூறு ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிற பண்டிகை. ஆகவே மிக நீண்ட காலத்துக்கு முன்னரே தமிழர்கள் வானவியல் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருந்தனர் என்று கூறலாம்.மக நட்சத்திரத்துக்கு ஆங்கிலத்தில் Regulus என்று பெயர். இரவு வானில் இதை நன்கு காணலாம். வானவியலின்படி சூரியன் ஆகஸ்ட் - செப்டெம்பர் மாதங்களில் சிம்ம ராசியில் இருக்கும். ஆகவே அந்த மாதங்களில் இரவு வானில் மக நட்சத்திரத்தைக் காண இயலாது. மற்ற மாதங்களில் காணலாம். மார்ச் மாதம் 15-ம் தேதி இரவு எட்டு மணி வாக்கில் அதை கிழக்கு திசையில் அடிவானத்துக்குச் சற்று மேலே தெளிவாகக் காணலாம்.மக நட்சத்திரம் சூரியனை விட மூன்றரை மடங்கு பெரியது. அது பிரகாசமாகத் தெரிந்தாலும் பூமியிலிருந்து 77 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. அதாவது ஒளி வேகத்தில் சென்றால் மக நட்சத்திரத்துக்குப் போய்ச் சேர 77 ஆண்டுகள் ஆகும். அது நடக்காத விஷயம்.மாசி மகம் ஒவ்வோர் ஆண்டும் வருவது. இது அல்லாமல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மகம் வரும். மகா மகத்தின்போது வானவியல் ரீதியில் ஒரு விசேஷம் உண்டு. அதாவது சூரியன், பூமி, சந்திரன், வியாழன், மக நட்சத்திரம் ஆகிய அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும். அதாவது ஆண்டுதோறும் வருகிற மாசி மகத்தில் காணப்படும் அணி வகுப்பில் வியாழன் கிரகமும் சேர்ந்து கொள்வதுதான் மகா மகம்.
சூரிய மண்டலத்தில் புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் உள்ளன. இவை அனைத்துமே சூரியனை வெவ்வேறு வட்டங்களில் சுற்றி வருகின்றன. இவற்றில் குறிப்பாக வியாழன் கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆகின்றன. அந்த வகையில் அது ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு ராசியில் இருக்கும்.(மொத்தம் 12 ராசிகள்). இப்படிச் சுற்றி வரும்போது அது சிம்ம ராசியில் ஓராண்டு இருக்கும். வியாழன் அப்படிச் சிம்ம ராசியில் இருக்கிற ஆண்டில் வரும் மாசி மகமே மகா மகம் எனக் கொண்டாடப்படுகிறது. அதாவது 2016-ம் ஆண்டு மாசி மகத்தின்போது மேலே குறிப்பிட்டபடி சூரியன், பூமி, சந்திரன், வியாழன், மக நட்சத்திரம் ஆகியவை ஒரே வரிசையில் அணிவகுத்து நிற்கும்.இதற்கு முன்னர் 1968, 1980, 1992, 2004 ஆகிய ஆண்டுகளில் மகா மகம் கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல பண்டிகைகள் இப்படி வானவியல் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றன. உதாரணமாக ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று கார்த்திகை பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சூரியன், பூமி, சந்திரன், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) ஆகியவை ஒரே வரிசையில் இருக்கும். சித்திரா பௌர்ணமி, வைகாசி விசாகம், திருவாதிரை பண்டிகை ஆகியவற்றுக்கும் வானவியல் அடிப்படை உண்டு.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum