தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்

Go down

ஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம் Empty ஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்

Post  ishwarya Sat Apr 27, 2013 11:32 am

நடிப்பு: கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன்
இசை: ஜிவி பிரகாஷ்
ஒளிப்பதிவு:ராம்ஜி
இயக்கம்: செல்வராகவன்
தயாரிப்பு: ரவீந்திரன்

வரலாறு என்பது கடந்த காலத்தின் நிஜம்… புனைவு என்பது கட்டுப்பாடுகளற்ற வெளி… இந்த இரண்டுக்கும் இடையே செல்வராகவன் எழுப்பியிருக்கும் ஒரு பலவீனமான பாலம் ஆயிரத்தில் ஒருவன்!

எந்த படைப்பும் விமர்சனம் மற்றும் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டதல்ல.. கண்முன்னே விரியும் ஒளி ஜாலத்தைப் பார்த்து மயங்கிப் போய் நல்ல படைப்பென்று வர்ணிக்க முயல்வது வரலாற்றுக்கு செய்யப்படுகிற துரோகமாகவே முடியும். பேண்டஸி என்றாலும் அதில் மனதை லயிக்கச் செய்யும் மாஜிக் அமைய வேண்டும்.

வரலாற்றின் நீட்சியாக அன்றும் இன்றும் படங்கள் வந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் அந்த நீட்சி ஒரு ஜோதா அக்பராகவோ, கிளாடியேட்டராகவோதான் வருகின்றனவே தவிர, அந்தரத்தில் மிதக்கும் ஆயிரத்தில் ஒருவனாக இல்லை என்பதை செல்வராகவன்கள் புரிந்து கொள்ள வேண்டும். தரமாக, சுவாரஸ்யமாக தரப்பட்ட எந்தப் படைப்புக்கும் தமிழன் மகுடம் சூட்டத் தயங்கியதே இல்லை, அது ஹாலிவுட்டிலிருந்து வந்திருந்தாலும்!

சோழ வரலாற்றின் கடைசி பக்கங்களில் முற்றுப் பெறாமல் நிற்கிற அதன் இறுதி வம்சாவளிகளை நோக்கிய பயணமாகத் துவங்குகிறது ஆயிரத்தில் ஒருவன்.

கி.பி 1279 – ல் நடந்த பாண்டியர்களுக்கெதிரான போரில் தோற்கடிக்கப்படும் சோழ மன்னன், தனது வம்சம் அழியாமல் இருக்க தன் வாரிசையும் பாண்டியர்களின் குலதெய்வச் சிலையையும் ராஜகுருவிடம் ஒப்படைத்து, தப்பிக்க வைக்கிறான்.

அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று 8 நூற்றாண்டுகளாகக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. தொலைந்து போன சோழர்களைத் தேடிப் போனவர்களும் திரும்பவே இல்லை. கடைசியாகத் தேடிப்போன பிரதாப் போத்தனும் காணாமல் போகிறார். இதைத் தொடர்ந்து பிரதாப் போத்தன் மகள் ஆண்ட்ரியா, முன்னாள் ராணுவ வீரர் அழகம் பெருமாள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த ரீமா சென் ஆகியோர் சோழர்களைத் தேடி ஒரு குழுவாகக் கிளம்ப, அவர்களுக்கு உதவியாக கூலியான கார்த்தி நியமிக்கப்படுகிறார்.

வியட்நாம் அருகே ஒரு தீவில் சோழர்கள் வசிப்பதாகவும் அவர்களை அடையச் செல்லும் வழியில் ஏழு தடயங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த தடயங்களை ஏகப்பட்ட சேதாரங்களோடு கடந்து, சோழர்கள் கிராமத்தை அடைகிறது ரீமா சென் குழு.

அங்கே சோழர்களின் கடைசி ராஜா பார்த்திபனையும் சோழர்களையும் காண்கிறார்கள், நரபலியை நம்பும் காட்டுமிராண்டிக் கூட்டமாக. அவரை தனது வக்கிரமான கவர்ச்சியைக் காட்டி மயக்கி, தானே சோழர்களுக்காக தூது சொல்ல வந்த பெண் என்று நம்ப வைக்கிறார் ரீமா.

ஆனால் பின்னர்தான் தெரிகிறது, ரீமா வந்ததன் காரணம். அவர் பாண்டிய மன்னன் வாரிசு என்றும், சோழர்கள் வசமிருக்கும் பாண்டியர்களின் குல தெய்வச் சிலையை மீட்டு, சோழர்களை பழிவாங்க வந்த வேடதாரி என்றும் தெரிய வருகிறது.

மீண்டும் பாண்டியர்களுடன் போரிடுகிறார்கள் சோழர்கள்… போரின் முடிவில் சோழர்கள் பெரும்பாலானோர் கொல்லப்பட எஞ்சியிருப்போர் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். அவர்களை வன்புணர்வுக்கு உள்ளாக்கி சிதைக்கிறது ரீமாவின் கூட்டம்…

சோழ மன்னன் தன் இயலாமையை எண்ணி வேதனைபட்டு உயிர் விடுகிறார். அந்த கொடுமைகளை பார்த்துக்கொண்டு இருக்கும் இளவரசன் தப்பித்து ஓட, அவனைப் பின்தொடரும் கார்த்தி, இளவசனுக்குத் துணையாய் காட்டுக்குள் செல்கிறார். சோழன் பயணம் தொடர்வதாக படத்தை முடிக்கிறார்கள் (ஸ்… அப்பாடா… கதையை ஓரளவு சொல்லிட்டோம்ல!)

திரும்பவும் ஒரு சமாச்சாரத்தைச் சொல்லணும்… செல்வராகவன் என்ற கலைஞனைக் காயப்படுத்த வேண்டும் என்பது நமது எண்ணமல்ல. படைப்பில் குறைந்தபட்ச நேர்மை வேண்டும் என்பதைச் சொல்வதே.

சின்னச் சின்ன விஷயங்கள், காட்சிகளின் அழகுக்காக பெரிய அளவு மெனக்கெட்டிருக்கும் செல்வராகவன் குழு, ஒரு முழுமையான ஸ்கிரிப்டை உருவாக்கத் தவறியதே, ஆயிரத்தில் ஒருவன் தடுமாற்றத்தோடு வந்திருப்பதற்குக் காரணம்.

எந்தப் படைப்பும் பார்த்த மாத்திரத்தில் எல்லா தரப்பு பார்வையாளனையும் தனக்குள் வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தான் சொல்ல முயற்சித்ததை, படம் வெளியான பிறகு பிரஸ் மீட் வைத்து கதைச் சுருக்கம் தருகிறார் இயக்குநர் என்றால் அது என்ன வகைப் படைப்பு?

ஒன்று இயக்குநர் அந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டார் என்று அர்த்தம். அல்லது, ‘நான் சொல்வதை முடிந்தால் புரிந்து கொள்’ என்ற மேதாவித்தனமாக இருக்க வேண்டும். நிச்சயம் இந்த இரண்டாவது ரகத்தில் செல்வராகவன் இருக்கமாட்டார் என நம்பலாம். காரணம் அதற்குக் கூட ‘மேல்மாடி’யில் எக்கச் சக்க சரக்கு இருக்க வேண்டும்!

சோழர்களை நரமாமிசம் திண்ணும் காட்டுமிராண்டிக் கூட்டமாகக் காட்டுவதற்கு என்ன காரணம் சொல்வாரோ செல்வராகவன் தெரியவில்லை. குடவோலை முறை தேர்தல், நல்ல நகர நாகரீக வாழ்க்கை என மேம்பட்ட நிர்வாகத்தை உலகுக்குச் சொன்ன சோழர்கள் மீது எதற்காக இந்த வக்கிரமான புனைவைப் பூச வேண்டும்?

இதற்கு குறிப்பிட்ட ஒரு சரித்திர பின்புலத்தை குறியீடாகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன… ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா’ என்று எதையாவது சொல்லிவிட்டுப் போவதுதானே… சோழர் சரித்திரத்தை இழுக்க வேண்டியதில்லையே!

ரீமா சென்னை செல்வராகவன் கையாண்டிருக்கும் விதம் அவரது பிறழ்ந்த மனநிலையின் குறியீடாகவே பார்க்கத் தோன்றுகிறது.

இந்தப் படத்தின் கலைஞர்கள் பங்களிப்பைப் பொறுத்தவரை கார்த்தி பரவாயில்லை. பார்த்திபனை இன்னும் பக்குவமாக கையாண்டிருக்கலாம் இயக்குநர். இந்த மிகைப்படுத்தலே அவரை அந்நியமாக்குகிறது படத்தின் ஓட்டத்திலிருந்து.

ராம்ஜியின் ஒளிப்பதிவு ஓகே. ஆனால் கிராபிக்ஸ் காட்சிகள் ஒட்டாமல் ஒட்டுப் போட்ட மாதிரி தனித்து தெரிகின்றன. பாடல்கள், இசை இரண்டும் முதல்முறையாக செல்வராகவன் படத்தில் தோற்றுப் போயிருக்கின்றன.

உலகில் கெட்ட விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன… இருந்தாலும் நாம் அந்த முடை நாற்றத்துக்குள்ளேவா வாழ்கிறோம்? கெட்டவைகளை விலக்கி, நல்லவைகளை நாடுவதில்லையா… படைப்புகளில் முடிந்த அளவு வக்கிரத்தைத் தவிர்ப்பது வரும் சந்ததிக்கு ஒரு கலைஞன் செய்கிற மிகப் பெரிய கைம்மாறு.

அதை செல்வராகவன் போன்றவர்களிடம் இன்னும் இனி எதிர்பார்க்க முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் வருகிறது!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum