தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காவலன் – திரைவிமர்சனம்

Go down

காவலன் – திரைவிமர்சனம்                     Empty காவலன் – திரைவிமர்சனம்

Post  ishwarya Sat Apr 20, 2013 2:32 pm

நடிகர்கள்: விஜய், ராஜ்கிரண், வடிவேலு, அசின்
ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம்
இசை: வித்யாசாகர்
இயக்கம்: சித்திக்
தயாரிப்பு: ரொமேஷ் பாபு
பிஆர்ஓ: பி டி செல்வகுமார்

விஜய்யின் தொடர் சறுக்கலுக்கு வைக்கப்பட்ட முட்டுக்கட்டை என்று சொல்லும்படி வந்திருக்கிற படம் காவலன். மலையாள பாடிகார்டின் ரீமேக் என்றாலும் அதை தமிழ்ப்படுத்தியிருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது.

காற்றில் பறக்கும் வில்லன்கள், வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பஞ்ச் வசனங்கள், அநியாய அறிமுக பில்ட் அப்புகள் எதுவுமில்லாத விஜய்யும், கிடைக்கிற கேப்பிலெல்லாம் புகுந்து சிரிப்பு வெடி வைக்கும் வடிவேலுவும் படத்தை அலுப்பின்றி ரசிக்க வைக்கிறார்கள் என்பதை முதலிலேயே சொல்லிவிட வேண்டும்!

ஊர்ப் பெருசு ராஜ்கிரணையும் அவரது குடும்பத்தையும் காப்பாற்றி அவரது அன்புக்குப் பாத்திரமாகிறார் விஜய். அவருக்கு ஒரு புதிய அஸைன்மென்ட்டாக மகள் அசினையும் அவரது தோழியையும் பாதுகாக்கும் பாடிகார்ட் வேலையைத் தருகிறார் ராஜ்கிரண்.

கல்லூரிக்குப் போகும்போதும், கல்லூரி வளாகத்திலும் விஜய் நிழலாய்த் தொடர்வதை வெறுக்கும் அசின், விஜய்யை திசைமாற்ற, தனது குரலை மாற்றி விஜய்க்கு போன் செய்து அவரை விரும்புவதாகக் கூறுகிறார்.

இந்த செல்போன் காதலியை நிஜமென்று நம்பும் விஜய்யும் அவரை சீரியஸாகக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய்யின் தீவிர காதலைப் பார்த்து அவரிடம் உண்மையைச் சொல்ல தயாராகிறார் அசின். ஆனால் அதற்குள் விஜய்யும் அசினும் ஊரைவிட்டு ஓடப் போகிறார்கள் என ராஜ்கிரணிடம் சொல்லப்பட, கொதித்துப் போன அவர் இருவரையும் சிறைப்படுத்துகிறார்.

தனக்காக செல்போன் காதலி ரயில் நிலையத்தில் காத்திருப்பாள் என்று விஜய் கூற, அதை ராஜ்கிரண் நம்ப மறுக்க, குறுக்க புகும் அசின், விஜய்யை அனுப்பி வைக்குமாறு அப்பாவிடம் கூறுகிறார். விஜய் சொன்ன மாதிரி ரயில் நிலையத்தில் காதலி இல்லாவிட்டால் விஜய்யை கொன்றுவிடுமாறு உத்தரவிடுகிறார் ராஜ்கிரண்.

விஜய் எதிர்ப்பார்த்துப் போகும் காதலி உண்மையில் ரயில் நிலையத்துக்கு வந்தாளா? ராஜ்கிரண் ஆட்கள் விஜய்யை என்ன செய்கிறார்கள்? அசின் நிலை என்னானது? இந்த மூன்று கேள்விகளும் மிக சுவாரஸ்யமான கிளைமாக்ஸுக்கு காரணமாகின்றன.

அடக்க ஒடுக்கமான, பக்கத்துவீட்டுப் பையன் விஜய்யை இதில் மீண்டும் பார்க்க முடிகிறது. வேட்டைக்காரன், சுறா என வெத்துவேட்டுகளைப் பார்த்த கண்களுக்கு இதுவே பெரும் ஆறுதல்தான்! செல்போன் காதலிக்காக உருகுவது, வடிவேலுவுடன் காமெடி செய்வது என தனக்கு நன்கு பழக்கப்பட்ட களத்தில் ஃபோரும் சிக்ஸருமாக அடித்துத் தள்ளுகிறார். க்ளைமாக்ஸில் அவரது நடிப்பு விஜய் என்ற நடிகனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வகை நடிப்பும் அவ்வப்போது தொடர்வது விஜய்க்கு நல்லது!

சொன்ன வேலையைச் செய்திருக்கிறார் என்பதைத் தவிர அசின் பற்றி சொல்ல எதுவுமில்லை.

வடிவேலு இந்தப் படத்திலும் வெடிவேலு. தான் வரும் காட்சிகளிலெல்லாம் ரசிகர்களின் மொத்த கவனத்தையும் தன் பக்கமே திருடிக் கொள்ளும் மேஜிக்மேன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் வடிவேலு.

கம்பீரத்தின் இன்னொரு பெயர் ராஜ்கிரண். அசராத, அலட்டலில்லாத நடிப்பு. ரோஜா, எம்எஸ் பாஸ்கர், மித்ரா குரியன் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.

நிறைய காட்சிகளில் லாஜிக் இல்லை என்றாலும், நகைச்சுவையான காட்சி நகர்வுகள் மூலம் அவற்றை மறக்கடித்துள்ளார் இயக்குநர் சித்திக்.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு வெகு நேர்த்தி. கண்களை காட்சிகளிலிருந்து எடுக்க முடியாத அளவுக்கு அத்தனை ஈர்ப்பு ஒவ்வொரு ப்ரேமிலும். வித்யாசாகர் பாடல்களில் சொதப்பிவிட்டார்.

படத்தின் முக்கிய குறை… யதார்த்தமில்லாத, அழுத்தமான காதலைச் சொல்லாத திரைக்கதை. செல்போன் காதலிக்காக இத்தனை தூரம் யாராவது உருகுவார்களா? என்ற கேள்வியில் உள்ள நியாயத்தை இயக்குநர் மறுக்க முடியாது.

ஆனால், 100 சதவீதம் நிஜத்தை மட்டுமே, அதுவும் லாஜிக்குடன் சொல்லும் சினிமாக்கள் வருவது சாத்தியமில்லையே… எனவே திரைக்கதையில் குறைகள் இருந்தாலும், பொழுதுபோக்கு என்ற அம்சத்தில் இந்தக் காவலன் குறையொன்றும் வைக்கவில்லை என்ற ஆறுதலுடன், குடும்பத்துடன் பார்க்கலாம்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum