புண்ணியம் தரும் புரட்டாசி - ஸ்ரீவெங்கடாசலபதி வழிபாடு
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
புண்ணியம் தரும் புரட்டாசி - ஸ்ரீவெங்கடாசலபதி வழிபாடு
புரட்டாசி மாதம் பல மகிமைகளைக் கொண்டது. திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் இந்த மாதத்தில் நடக்கிறது. பித்ருக்களை மகிழ்ச்சிப்படுத்தும் மகாளய அமாவாசை, விஜயதசமி மற்றும் முப்பெரும் தேவியர்களை வணங்கும் நவராத்திரி திருவிழாக்களும் இந்த மாதமே வருகிறது. இந்த வழிபாடுகள் ஒவ்வொன்றும் புண்ணியம் தரவல்லவை. அவற்றை விரிவாக காணலாம்.
வெங்கடாசலபதியைத் தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வழிபடுகின்றனர். புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்றுகின்றனர். சிலர் புரட்டாசியில் வரும் எல்லாச் சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுகின்றனர்.
புரட்டாசி மகாளயம்:
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு மகாளய அமாவாசை என்பது பெயர். புரட்டாசி மாதத்தில் எமன் தனது உலகத்திலுள்ளவர்களைப் பூமிக்குச்சென்று பதினாறு நாட்கள் தங்கி வருமாறு ஆணையிட்டு அனுப்புவான். அவர்கள், பெரிய இடமான பூமிக்கு வந்து தம் உறவினர்களுடன் மிக்க மகிழ்ச்சியுடன் பதினாறு நாட்கள் தங்கியிருப்பார்கள்.
மகாளய விதிப்படி அந்தப் பதினாறு நாட்களும் பித்ருக்களுக்காக அன்ன சிராத்தம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் பொன் முதலிய பொருட்களைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கலாம். முடியாதவர் ஒருநாள் மகாளயம் செய்து மற்ற நாட்களில் தர்ப்பணம் (எள்ளுத் தண்ணீர் விடுதல்) செய்யலாம்.
நவராத்திரி:
பங்குனி, புரட்டாசி என்ற இரு மாதங்களை எமனது இரு கோரப்பற்கள் என்பர். அப்போது, நெய்க்குடத்தை எறும்புகள் மொய்த்துப்பற்றிக் கொள்வதைப்போல, நோய்கள் உடம்பைப் பற்றிக்கொள்ளும். பிணிகளோ உடம்பை விட்டு நீங்காமல் பிணித்துக்கொள்ளும். சாதாரணமாக, உயிரும், உடம்பும் தாங்கவே முடியாத பல பெருந்துன்பங்களை இறைவன் அருளுவதில்லை.
இருந்தாலும், எமனது கோரப்பற்களால் கடிபடுகின்ற துன்பங்கள் உடம்புக்கு ஏற்படுகின்றபோது, அவற்றிலிருந்து விடுபடுகின்ற போக்குவாய் சக்தி வழிபாடே. சக்தியைப் பங்குனி மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி, புரட்டாசி மாதத்தில் வழிபடுவது சாரதா நவராத்திரி. இவை இரண்டில் சாரதா நவராத்திரி என்பது எல்லாரும் கொண்டாடுவது தனிச்சிறப்புடையது.
சாரதா என்பது சரஸ்வதியைக் குறிக்கும். புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை முதல் நவமி வரையில் நவராத்திரி என்ற விரத விழா கொண்டாடப்படுகிறது. அந்த ஒன்பது நாட்களிலும் முப்பெரும் தேவியரை வழிபட வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு, இடை மூன்று நாள்கள் லட்சுமி வழிபாடு, இறுதி மூன்று நாள்கள் சரஸ்வதி வழிபாடு.
துர்க்கை:
இவள் நெருப்பைப் போன்றவள். ஆவேசமான பார்வையுடன் அழகாய்த் திகழ்கின்றாள். வீரத்தின் விளை நிலம். சிவனின் வீர சக்தி. பழைய தமிழ் நூல்கள் இவளைக் கொற்றவை என்றும், காளி என்றும் குறிப்பிடுகின்றன.
லட்சுமி:
இவள் மலரைப் போன்றவள். அருள்கனிந்த பார்வையுடன் அமைதியாகப் பொலிவாக இருக்கின்றாள். செல்வத்தின் அதிதேவதை. நாராயணனின் சக்தி. திருச்சானூரில் இவளுக்குத் தனிக்கோவில் உள்ளது. ஆதி லட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி, சந்தான லட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி என்று மொத்தம் அஷ்ட லட்சுமிகள். சென்னை பெசன்ட் நகரில் அஷ்டலட்சுமிக்கு கோவில் இருக்கிறது.
சரஸ்வதி:
இவள் வைரத்தைப் போன்றவள். சாந்தம் நிறைந்த பார்வையுடன் எழிலுடன் விளங்குகின்றாள். கல்வி, கலைகளின் தெய்வம், பிரம்மனின் சக்தி.
சரஸ்வதி பூஜை:
நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது சரஸ்வதியை எழுந் தருளச் செய்ய வேண்டும். இது தேவியின் அவதார நாள். திருவோண (சிரவண) நட்சத்திரம் உச்சமாகும் நாளில் சரஸ்வதி பூஜை நிறைவு பெறுகிறது.
அன்றே விஜயதசமி. மக்களின் தொழில்கள் அனைத்தும் புலமை, தொழில் என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகின்றன. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை வழிபடுவது சரஸ்வதி பூஜை, நூல்களில் சரஸ்வதியை எழுந்தருளச் செய்து வழிபடுகின்றனர்.
ஆயுத பூஜை:
தொழில் புரிகின்றவர்கள் கொண்டாடுவது ஆயுத பூஜை. இவர்கள் மிகச்சிறிய ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய இயந்திரங்கள் வரை அனைத்தையும் பூவும், பொட்டுமிட்டு வழிபடுகின்றனர். காரணம், செய்யும் தொழிலே தெய்வம். அத்தொழில் எத்தொழிலாயினும் வணக்கத்துக்கும், வழிபாட்டுக்கும் உரியதே.
இந்த அடிப்படைகளை உணர்த்தும் வழிபாடுகளே சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. கூத்தனூரில், சரஸ்வதி பூஜையன்று அம்மனின் திருவடிகள் வெளி மண்டபம் வரையில் நீண்டிருக்கும்படி அலங்காரம் செய்கின்றனர். பக்தர்கள் அனைவரும் அம்மனின் திருவடிகளுக்குக் குங்குமத்தாலும், மலர்களாலும் அர்ச்சனைகள் செய்து வழிபடுகின்றனர். இந்த அபூர்வ வழிபாட்டு முறை இப்போதும் நடை முறையில் இருக்கின்றது.
நவராத்திரியின்போது, முப்பெரும் சக்திகளுக்குள் அடங்கியிருக்கும் ஒன்பது சக்திகளையும் வழிபட வேண்டும். அப்போது ஒரு சக்தியை முதன்மையாகவும், மற்ற எட்டுச் சக்திகளைப் பரிவாரச் சக்திகளாகவும் கருத வேண்டும். நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்ப தாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுகின்றனர்.
நவராத்திரி ஒன்பது நாட்களும் வழிபட முடியாதவர்கள் இந்த நாட்களில் வழிபடலாம். நவராத்திரி வழிபாடு முழுக்க முழுக்கப் பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவங்களுடைய பெண்கள் அனைவரும் வழிபாட்டில் பங்கேற்கின்றனர். நவராத்திரி வழி பாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சிப்பலன். எனவே, நவராத்திரியை எல்லாப் பெண்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.
விஜயதசமி:
புரட்டாசி மாத வளர்பிறையில் வரும் தசமியே விஜயதசமி. துர்க்கை, எருமைத் தலையைக் கொண்ட மகிஷாசுரனோடு ஒன்பது இரவுகள் போரிட்டாள். இந்த இரவுகளே `நவராத்திரி' என்ற பெயரைப் பெற்றன. அவனை வதைத்த பத்தாம் நாள் விஜயதசமி. விஜய என்றால் வெற்றி, தசமி என்றால் பத்தாம் நாள்.
ஆணவம் அடியோடு அழிந்த நாள், அறியாமையை அறிவு வென்ற நாளைக் குறிக்கிறது விஜயதசமி. பல குழந்தைகளின் பள்ளிக்கல்வி இன்றுதான் ஆரம்பம். இன்று தொடங்குகிற அனைத்து நற்காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம். வீட்டுப் பூஜையறை ஒரு கோவில் என்றால், நவராத்திரி வழிபாட்டை அதன் `பிரம்மோற்சவம்' என்று உறுதியாகக் கூற முடியும்.
தசரா:
தசரா என்றால் பத்து இரவுகள். நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் தசரா மிக முக்கியமான பண்டிகையாகும். குலசேகரன் பட்டினத்தில் உள்ள ஈஸ்வரிக்குப் பெருவிழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள். பழைய பெருமைகளும், சிறப்புகளும் சற்றும் குன்றாமல் தசரா பண்டிகை இப்போதும் உயர்வாகவும் பல சிறப்புகளுடனும் கொண்டாடப்படுகிறது.
கொலு:
புரட்டாசி மாதம் வீடுகளில் கொலு வழிபாடு சிறப்பானது. புரட்டாசி அமாவாசையன்றே கொலு வைப்பதற்குரிய செயல்கள் தொடங்குகின்றன. ஓர் அறையைத் தேர்ந்தெடுத்துப் புனிதமாக்குகின்றனர். மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகளை வசதிக்குத் தகுந்தபடி அமைக்கின்றனர்.
முதல்படியின் நடுவில் கலசத்தை வைக்கின்றனர். ஒரு கலசத்தில் பச்சரிசியை நிரப்பி, ஐந்து மாவிலைகளை வட்டமாக அடுக்கி, மஞ்சள், குங்குமம் பூசிய தேங்காயை அதில் பொருத்துகின்றனர். தீப ஆராதனை நடைபெறுகிறது. தேவி கலசத்தில் பிரசன்னமாகிறாள். நவராத்திரி வழிபாடும் கொலு வழிபாடும் தொடங்குகின்றன. கொலு வைக்கப்பட்டுள்ள அறையின் ஒரு பகுதியில் நவதானியங்களை விதைக்கின்றனர்.
அவை முளைவிட்டுச் செழித்து வளர்ந்தால், குடும்பமும் செழிப்புடன் விளங்கும் என்று நம்புகின்றனர். கோவில்களில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தேவிகளைப் புதுப் புது கோலங்களில் அலங்கரித்துக் கொலு மண்டபத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். இத்தகைய அலங்காரங்கள் மிகுந்த தேவிகளைக் கொலு வின்போதுதான் தரிசிக்க முடியும். பேரருளைப் பெற முடியும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» புண்ணியம் தரும் புட்லூர்
» புண்ணியம் தரும் ரிஷப வாகன வழிபாடு
» புண்ணியம் தரும் ரிஷப வாகன வழிபாடு
» புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
» முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை
» புண்ணியம் தரும் ரிஷப வாகன வழிபாடு
» புண்ணியம் தரும் ரிஷப வாகன வழிபாடு
» புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
» முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum