தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பக்தர்கள் ஓடிச் சென்று வழிபடும் சிவாலய ஓட்டம்

Go down

பக்தர்கள் ஓடிச் சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் Empty பக்தர்கள் ஓடிச் சென்று வழிபடும் சிவாலய ஓட்டம்

Post  meenu Fri Jan 18, 2013 1:01 pm

குமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் இன்று மாலை தொடங்குகிறது. சிவாலய ஓட்டம் நடத்தப்படுவதற்கு 2 விதமான கருத்துகள் கூறப்படுகின்றன.

அதில் 3 தத்துவங்களை நிலைப்படுத்தும் பீமன் கதை தான் ஏராளமான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. பாண்டவர்களின் முதல்வரான தர்மபுத்திரனுக்கு ராஜ குரு யாகம் ஒன்றை நிறை வேற்ற புருஷ மிருகத்தின் (வியாக்ரபாத மகரிசி) பால் தேவைப்பட்டது.

அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு. பீமனின் அகந்தையை அடக்கவும், வியாக்ரபாத மகரிசிக்கு, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என பாடம் புகட்டவும் நினைத்து மகா விஷ்ணு, பீமனிடம் பால் கொண்டு வர கட்டளையிட்டார்.

அத்துடன் 12 உத்திராட் சங்களை பீமனின் கையில் கொடுத்து, உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால், இதில் ஒன்றை கீழே போட்டுவிடு என்று சொல்லி அனுப்பி வைத்தார். பீமன் தயக்கத்துடன் உத்திராட்சங்களை வாங்கிவிட்டு புறப்பட்டான். பீமன் அடர்ந்த காட்டை அடையும் போது அங்கு புருஷ மிருகம் கடும் தவத்தில் இருந்தது.

அப்போது, பீமன், கோவிந்தா, கோபாலா என குரல் எழுப்பியபடி பால்பெற முயற்சி செய்தான். கோவிந்தா என்ற வார்த்தையை கேட்டவுடன் புருஷ மிருகத்துக்கு சிவலிங்கம், விஷ்ணுவாக தெரிய, தவம் கலைந்து விடுகிறது. சிவபூஜையில் புகுந்த பீமனை புருஷ மிருகம் கோபத்துடன் துரத்திச் சென்று பிடித்துக்கொண்டது.

உடனே பீமன் ஒரு உத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான். உடனே அந்த இடத்தில் ஓரு சிவலிங்கம் உருவாகியது. புருஷ மிருகம் ஆழ்ந்த சிவநெறி செல்வர் என்பதால் லிங்க பூஜையை தொடங்கி விடுகிறது. சிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும் கோவிந்தா, கோபாலா என குரல் எழுப்பி
பால் பெற முயன்ற போது புருஷ மிருகம் மீண்டும் துரத்தி சென்று பற்றிக்கொள்ள, அடுத்த உத்திராட்ச காயை அங்கு போட்டுவிட்டு ஒடிவிட்டார்.

இவ்வாறு 12 உத்தராட் சங்களும் 12 சைவ தலங்களை உருவாக்கி விடுகிறது. 12-வது உத்திராட்சம் போடும் போது பீமனின் ஒருகால் வியாக்ரபாத மகரிசிக்கு சொந்தமான இடத்திலும், மறுகால் வெளியிலும் இருந்தது. உடனே, பீமன் அதனுடன் வாதம் செய்தான்.இந்த வழக்கில் நீதி தேவனான தரும புத்திரன், தனது தம்பி என்றும் பாராமல் புருஷ மிருகத்துக்கு சாதகமாக நீதி வழங்கினார்.

பீமனுடைய உடலில் பாதி, புருஷ மிருகத்துக்கு சொந்தம் என அறிவிக்கிறார். இறுதியில் யாகம் நிறைவேற புருஷ மிருகம் பால் வழங்குகிறது. பீமனுடைய கர்வம் ஒடுக்கப்பட்டது. புருஷ மிருகத்தின் மீது இருந்த அவதூறுகளும் களையப்படுகிறது.

இவ்வாறு பீமன் ஓடியதை நினைவு கூறும் வகையில் இன்றும் பக்தர்கள் கோவில்களுக்கு ஓடிச்சென்று வழிபடுகிறார்கள். சூண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந்தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் (முதல் சிவாலயம்) கடும் தவம் புரிந்தான்.

அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன், `நான் யாருடைய தலையை தொட்டாலும் அவன் சாம்பலாகி விட வேண்டும்' என்ற வரத்தை கேட்டான். சிவனும் அந்த வரத்தை கொடுத்தார்.

உடனே அரக்கன் வரம் உண்மையிலேயே தனக்கு தரப்பட்டதாப என்பதை அறிய சிவனின் தலையை தொடமுயன்றான். உடனே சிவன் அங்கிருந்து கோபாலா, கோவிந்தா என்று அழைத்தவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார். இறுதியில் நட்டாலத்தில் விஷ்ணு, மோகினி அவதாரம் எடுக்கிறார்.

மோகினியின் அழகில் மயங்கிய அரக்கனை அவன் கையால் அவனது தலையை தொட செய்து அழிக்கிறார், விஷ்ணு. இவ்வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பபட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு, சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு கூறும் வகையில் தான் சிவாலய ஓட்டம் நடப்பதாக வரலாறு கூறுகிறது.

குமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதிகளில் திருமலை மகாதேவர்கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில்,மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில் உள்பட 12 சிவாலயங்கள் உள்ளன.

இந்த 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தில் பக்தர்கள் `கோபாலா..... கோவிந்தா....' என அழைத்தவாறு நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். சிலர், சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களில் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த சிவாலய ஓட்டம் முதல் சிவாலயமான புதுக்கடை அருகே உள்ள முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு செல்வர்.

பின்னர் அங்கிருந்து அருமனை, களியல் வழியாக 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவிலுக்கு சென்று, அங்கிருந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வழியாக 8 கி.மீ தொலைவில் உள்ள திருநந்திக்கரை சிவன் கோவில் செல்வார்கள். பின்னர், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன்கோவில், பத்மநாபபுரம் என்று அழைக்கப்படும் கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் செல்வார்கள்.

12 சிவாலங்களில் இங்கு மட்டும் தேவிவடிவில் சிவன் உள்ளார். அங்கிருந்து, மேலாங்கோடு சிவன்கோவில், தென்கரை வில்லுக்குறி வழியாக, திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், அங்கிருந்து கோழிப் போர்விளை, பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் சென்று இறுதியாக திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டம் நிறைவு செய்யப்படுகிறது.

இதில் பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள். இன்று மாலை முன்சிறை மகாதேவர் கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கும் பக்தர்கள் நாளை(புதன் கிழமை) மாலை நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் ஓட்டத்தை முடித்துக்கொள்வார்கள்.

சிவாலய ஓட்டத்தில் ஓடுவதற்காக குமரி மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான சிவ பக்தர்கள் குமரி மேற்கு மாவட்டத்தில் குவிந்துள்ளனர்.காவி, மஞ்சள் நிற ஆடைகள் அணிந்த பக்தர்கள் கையில் விசிறி, பணப்பை ஆகியவற்றுடன் முதல் சிவாலயமான முஞ்சிறை திருமலை மகா தேவர் கோவிலில் குவிந் துள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  பக்தர்கள் ஓடிச் சென்று வழிபடும் சிவாலய ஓட்டம்
» சிவாலய ஓட்டம்
»  பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப் பினும் ராமபிரான் தனது தந்தைக் காகவும், மூதாதையர் களுக்காகவும் பம்பைக்கரை யில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூ
» சிவாலய தரிசன விதிகள்
» சிவாலய தரிசனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum