தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோவில்

Go down

 சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோவில்  Empty சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோவில்

Post  meenu Fri Jan 18, 2013 12:18 pm

துர்வாச முனிவரின் சாபத்தால் இந்திரனுக்கு பதவி பறிபோகிறது. அப்பதவியை பெற அமுதத்தை உண்டு பலம் பெற வேண்டும். அதற்கு பாற்கடலை கடைந்து அதைப் பெறுமாறு தேவகுரு பிரகஸ்பதி ஆணையிடுகிறார். தேவர்களும், அசுரர்களும் மந்தரகிரியை மத்தாகவும், வாசுகி என்ற பாம்மை கயிறாகவும், கொண்டு பாற்கடலை கடைந்தனர்.

பல நாட்கள், கயிறாக விளங்கிய வாசுகி பாம்பு கொடிய வியத்தை கக்க... அந்த விஷம் கடலோடு கலந்து காலகூட விஷமாக மாறி தேவர்களையும், அசுரர்களையும் பயங்கரமாக துரத்தியது. பயந்து நடுங்கிய தேவர்களும், அசுரர்களும் தங்களை காக்க வேண்டி கைலாச நாதரான ஸ்ரீபரமேஸ்வரனின் திருவடிகளில் வீழ்ந்து பணிந்து தஞ்சம் அடைந்தனர்.

பரமேஸ்வரரின் ஆணைப்படி நந்தி தேவரும், சுந்தரரரும் எடுத்து வர ஒரு நாவல் பழம் போல அந்த காலகூட விஷத்தை உருட்டி ஈசன் உட்கொண்டார். பரமேஸ்வரன் அதை உட்கொண்டால் அவன் உள்ளே இருக்கும் பல கோடி உயிர்களும் அழிந்து விடும் என்பதை உணர்ந்த அன்னை பராசக்தி தன் தளிர்க் கரங்களினால் ஈசனின் கண்டத்தைப் பற்றி விஷத்தை அங்கேயே தங்கச் செய்கிறாள்.

விஷம் உண்ட கழுத்தை உடைய ஈசன் திருநீலகண்டரானார். நீலகண்டரான பரமேஸ்வரன் விஷத்தை உண்டதால் ஏற்பட்ட சிரமத்தைத் தணித்து கொள்வதற்காக, சற்று சயனிக்க விரும்பி அமைதியான இடத்தை தேடி சுருட்டப்பள்ளி என்னும் ஷேத்திரத்தை அடைந்தார்.

அமைதி சூழ்ந்த, மரங்கள் நிறைந்த, புங்கை மரங்களும், பூஞ்செடிகளும் நிறைந்த சுருட்டப்பள்ளி என்னும் ஷேத்திரத்தை தேர்வு செய்து அன்னை சர்வ மங்களம்பிகையின் மடியில் தலை வைத்து படுத்து களைப்பாடுகிறார்.

சுருட்டப்பள்ளி பெயர்க்காரணம்:

சர்வேஸ்வரன் சயனித்த ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரராக, திருக்கோல காட்சி தரும் புண்ணியம் பெற்ற ஸ்தலம் தான் சுருட்டப்பள்ளி. விஷத்தை சாப்பிட்ட பகவான் சுருண்டு மயக்க நிலையில் படுத்ததால்தான் சுருட்டப்பள்ளி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தேவர்கள் வாசம் செய்யும் ஊர் ஆகையால் சுருளு பள்ளி, சுருளு: தேவர்கள் பள்ளி, ஊர் என பெயர் பெற்றதாக கூறலாம்.

மகாவிஷ்ணு நிற்பார்-இருப்பார்-கிடப்பார் என்பதை பல தலங்களில் பார்ப்போம். அவர் சயன திருக்கோலத்தை இருபத்தி ஏழு புண்ணிய தலங்களில் காணலாம். ஆனால் சயனித்த கோலத்தில், சிவபெருமான் பள்ளி கொண்ட ஈஸ்வரராக காட்சி அளிப்பது உலகத்திலேயே சுருட்டப்பள்ளி ஷேத்திரத்தில்தான்.

கைலாயத்தில் கூட இக்காட்சியை காண தேவர்கள் பரமனை தரிசிக்க இக்கோவிலுக்கு ஓடோடி வருகின்றனர். தர்மத்தின் ரூபமான நத்தி தேவர் அவர்களை எதிர்நோக்கி அவசரப்படாதீர்கள் பரமசிவன் மயக்கத்தில் இருக்கிறார். மயக்கம் தெளிந்ததும் நீங்கள் தரிசிக்கலாம் என்று தடுத்து நிறுத்துகிறார்.

சிறிது நேரத்திற்குப் பின் மயக்கம் தெளிந்தவுடன் தேவர்களை அழைத்து சிவதரிசனம் செய்ய அனுமதிக்கிறார். மகாவிஷ்ணு, பிரம்மதேவர், தேவாதி தேவர்கள், சந்திரன், சூர்யர், நாரதர், தும்புரு, குபேரன், சப்த ரிஷிக்கள் சேர்ந்து தரிசித்து பரமனை வணங்குகிறார்கள். எல்லோரையும் பார்த்த சிவபெருமான் ஆனந்தத்துடன் அன்று மாலை கூத்தாடுகிறார்.

அதுதான் ஆனந்த தாண்டவம். இப்படி தரிசித்த அனைவரையும் ஆசீர்வதித்த நன்நாள் கிருஷ்ணபட்ச திரியோதசி ஸ்திரவாரம் (சனிக்கிழமை) இதுதான் மகாபிரதோஷம். அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷம் கொண்டாடுவதற்கு இதுவே காரணம். (ஆதாரம் ஸ்கந்த புராணம் உத்திரகாண்ட ரகசியம்).

ஆலய அமைப்பு::

கிழக்கு நோக்கிய சிறிய கோபுரம். மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடன் ஆலய நுழைவு வாயில் அமைந்துள்ளது. ஐந்து கலசங்களும் இறைவனின் திருமந்திரமான ஐந்து எழுத்துக்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன.

உள்ளே நுழைந்ததும் எதிரில் முதன் முதலின் நாம் காண்பது அம்பிகையின் சன்னதி. இங்கு ஈஸ்வரனும், அம்பிகையும், ஒரே கோவிலில் தனித்தனியான சன்னதிகளில் கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளனர். பள்ளிகொண்டீஸ்வரரின் சன்னதி தனித்த திருக்கோவிலாக அமைந்துள்ளது.

அம்பிகையின் சன்னதிக்கு முன் முகப்பு மண்டபத்தில் குபேரனின் செல்வங்களான சங்க நிதியும், பதும நிதியும் துவார பாலகர்களாக, திருஉருவங்களை காணலாம். இத்தலத்திற்கு வந்து இறைவன், இறைவியை வணங்குபவர்களுக்கு அம்மையப்பர், அன்னமும், சொர்ணமும் அளித்து வாழ்வை வளமாக்குவார் என்பது இதன் தத்துவம்.

அம்பிகை இறைவனுக்கு வலது புறத்தில் கோவில் கொண்டுள்ளது தனி சிறப்பு அநேக கோவில்கள் அம்பிகை இறைவனுக்கு இடது புறத்தில் கோவில் கொண்டுள்ளதை காணலாம். வலது புறத்தில் அம்மன் கோவில் கொண்டுள்ளதால் இத்தலத்தை திருக்கல்யாண ஷேத்திரம் என கூறுவர். திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வணங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது இதன் பொருள்.

அம்பிகையின் கருவறைக்குள் கேட்டதை எல்லாம் வாரிக் கொடுக்கக்கூடிய, நினைத்ததை எல்லாம் நடத்தி வைக்க கூடிய காமதேனுவும், கற்பக விருட்சமும் தன்னகத்தே கொண்டு அருள்பாலிக்கிறார்.

பள்ளிகொண்டீஸ்வர தரிசனம்::

சிவ பெருமான் சயன கோலத்தில் இருக்கும் பள்ளிகொண்டேஸ்வரரின் கருவறை அமைப்பு வித்தியாசமானது. ஆலகால விஷத்தை உண்டு அசதியில் உறங்கும் பரமேஸ்வரனையும், அவருடைய தலைமாட்டில் வீற்றிருக்கும் பரமேஸ்வரியான சர்வமங்களாம்பிகையும் தரிசிக்கலாம்.

அவர்களை சூழ்ந்து நின்றிருக்கும் சந்திரன், சூரியன், நாரதர், தும்புரு, குபேரன், பிரம்மா, விஷ்ணு மற்றும் சப்த ரிஷிகளையும் கண்டு வணங்கும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்காது பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும். நீண்ட செவ்வக வடிவில் அமைந்திருக்கும் மூலக்கருவறையில் தெற்கே தலை வைத்து மல்லாந்த வண்ணம் நெடுந்துயில் கொண்டிருக்கிறார் பள்ளிகொண்டீஸ்வரர்.

இரண்டரை உயர பீடத்தில் பதினாறு அடி நீளத்திற்கு படுத்த வண்ணம் ஈசுவரர் காட்சி அளிக்கிறார். ஈசனின் தலைமாட்டில் அன்னை சர்வமங்களாம்பிகை புன்னகை பூத்தபடி வீற்றிருக்கிறாள். அன்னையின் குளிர்ந்த திருவடி ஈசனின் திருமேனியை சற்றே தொடுகிற மாதிரி அம்பாள் வீற்றிருக்கிறாள். இப்பொழுது தான் அன்னைக்கு பரம திருப்தி.

ஏனென்றால், உயிர்கள் எல்லாம் அயர்ந்து உறங்குகின்ற வேளையில், உலகம் முழுவதும் ஒழுங்காக இயங்க சதாசர்வ காலமும் நடனமாடிக்கொண்டு இருந்தவருக்கு சற்ற ஓய்வு கிடைத்ததே என மகிழ்ந்தாள். பள்ளி கொண்டீஸ்வரரை வணங்கும் போது, அவன் திருவடி தரிசனத்தை மனத்தின் உள்ளே நிறுத்தி வைத்து தியானிக்க வேண்டும். அவனை உட்கொள்ள வேண்டும்.

அப்பொழுது தான் பலன் கிடைக்கும். இந்த ஒரே எண்ணத்தோடு பள்ளி கொண்டீஸ்வர பெருமானின் திருவடி தாமரைகளை போற்றி பணிந்து வணங்கி, அவன் திருமுக தரிசனத்தை நம்முள் வாங்கிக்கொள்ள வேண்டும். நெடுஞ்சாண் கிடையாக படுத்திருக்கும் மூலவருக்கு சாம்பிராணி தைலக்காப்பு மட்டும் தான் உண்டு.

மற்ற அபிஷேகங்கள் கிடையாது. இந்த சன்னதிக்குள் இன்னொரு விசேஷம் உண்டு. சிவன் என்பதால் வழக்கமான விபூதிப் பிரசாதம் இங்கே கிடைக்காது. மாறாக பெருமாள் சன்னதியை போல தீர்த்த பிரசாதமும், தலையில் சடாரி வைத்த ஆசீர்வாதமும் தான்.

பெருமாளின் திருவடி நிலைக்கு தான் சடாரி என்று சொல்லுவார்கள். அந்த பெருமானே நம் தலையில் திருவடி வைத்து ஆசீர்வாதம் செய்வதாக ஐதீகம்.

தாம்பத்திய தட்சணாமூர்த்தி::

தேவ்யாலிங்கித வாமாங்கம் பாதோதபஸ் மூர்திம் சிவம்! நந்தி வாஹன மீஸானம் ஸ்ரீதாம்பத்ய தட்சணாமூர்த்தியே நமஹ!! வால்மீகிஸ்வரனின் தெற்கு மாடத்தில் அமைந்துள்ள தாம்பத்திய தட்சணாமூர்த்தி திருவுருவம் எங்கும் பார்க்க முடியாதபடி அமைந்துள்ளது இக்கோவில் விசேஷம்.

எல்லா ஆலயங்களிலும் இருப்பது போல இங்கு தட்சணாமூர்த்தி சனகாதிகள் சூழ கல்லால் மரத்தில் அடியில் அமர்ந்து காட்சி தரவில்லை. அதற்கு மாறாக பதஞ்சலி, வியாகர பாதர்களுடன், ரிஷபாரூடராய் தேவியை அனைத்த வண்ணம் சின்முத்திரையுடனும், ஞான சக்தியுடனும் காட்சியளிக்கிறார். அம்பிகையின் பெயர் கவுரி.

சுருட்டப்பள்ளி - 25

1. சென்னையில் இருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பதியில் இருந்து 75 கி.மீ. தொலைவிலும் சுருட்டப்பள்ளி உள்ளது.

2. ராவணனை கொன்று சீதையை மீட்டபிறகு ராமர் அயோத்தி செல்லும் வழியில் இங்கு வந்து லிங்க வழிபாடு செய்தார். அவர் வணங்கிய லிங்கம் ராமலிங்கேஸ்வரர் என்ற பெயரில் உள்ளது.

3. வால்மீகி முனிவர் வழிபட்ட லிங்கம் வால்மீகேஸ்வரர் என்ற பெயரில் இருக்கிறது.

4. சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலை விஜயநகரை ஆட்சி செய்த ஹரிஹர புக்கா என்ற அரசர் கட்டினார்.

5. காஞ்சிப் பெரியவர் இங்கு 10 நாட்கள் தங்கி இருந்து அற்புதம் செய்தார். அவர் நினைவாக இங்கு ஒரு தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

6. பள்ளி கொண்டேஸ்வரர் சன்னதி போலவே காசியிலும் ஒரு கருவறை உள்ளது. எனவே காசிக்கு செல்ல விரும்புபவர்கள் சுருட்டப்பள்ளிக்கு சென்று வழிபட்டாலே காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என்று காஞ்சி பெரியவர் கூறி உள்ளார்.

7. சுருட்டப்பள்ளி கோவிலில் கடைசியாக 2002-ல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

8. சுருட்டப்பள்ளி கோவிலில் நடை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் பிறகு மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கும்.

9. பிரதோச நாளில் கோவில் நடை நாள் முழுக்க திறந்து இருக்கும். அன்று சுமார் 20 ஆயிரம் பேர் வழிபாடு செய்வார்கள்.

10. மகாசிவராத்திரி தினத்தன்று சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

11. பார்வதி மடியில் சிவபெருமான் தலை வைத்து படுத்து இருப்பது போன்ற சயனகோலம் உலகில் சுருட்டப்பள்ளியில் மட்டுமே உள்ளது.

12. கோவிலில் நுழைந்ததும், இடது பக்கத்தில் வால்மீகேஸ்வரர் மற்றும் பார்வதியின் அவதாரமான மரகதாம்பிகை சன்னதிகளை காணலாம். முதலில் இந்த இரண்டு சன்னதிகளிலும் வழிபாடு செய்த பிறகே, வலது பக்கத்தில் உள்ள பள்ளிகொண்டேஸ்வரர் சன்னதிக்கு செல்ல வேண்டும்.

13. கர்ப்பகிரக வாசலில் சங்கநிதி, பதுமநிதியுடன் குபேரர் காவலராக உள்ளார்.

14. வால்மீகி, ராமாயணம் எழுதுவதற்கு முன்பு இங்குள்ள லிங்கத்தை வழிபாடு செய்த பிறகே எழுத்துப் பணியை தொடங்கியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

15. 1976-ம் ஆண்டு காஞ்சி மகாபெரியவர் இந்த கோவிலில் தங்கி இருந்தபோது, குறிப்பிட்ட ஒரு இடத்தை தோண்ட சொன்னார். அந்த இடத்தில் நிறைய கால்தடங்களுடன் ஒரு கல் கிடைத்தது. அந்த கல்லில் உள்ள கால் தட பதிவுகள், ராமபிரானின் இரட்டை குழந்தைகளான லவ-குசாவினுடையது என்று மகாபெரியவர் அருளினார்.

16. சுருட்டப்பள்ளியில் உள்ள தாம்பத்ய தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்பவர்களுக்கு மனஅமைதி ஏற்படும் என்பது ஐதீகம்.

17. பள்ளிகொண்டீஸ்வரர்சிலை அமைப்பு 6 அடி நீளத்தில் உள்ளது.

18. பார்வதி இருபுறமும் சூரிய, சந்திரர்கள் நிற்க, விஷ்ணு, பிரம்மா, லட்சுமி, மார்க்கண்டேயர், அகஸ்தியர், வால்மீகி, இந்திரன், நாரதர், முருகர், விநாயகர் ஆகியோரும் இந்த கோவிலில் உள்ளனர். இத்தகைய அம்சத்தை வேறு எந்த சிவாலயங்களிலும் காண இயலாது.

19. சுருட்டப்பள்ளி சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயரும் உண்டு. அதுபோல இங்குள்ள பார்வதி அமுதாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்.

20. ராமரின் மகன்கள் லவ, குசா இருவரும் தங்கள் பாவத்தை பள்ளிகொண்டேஸ்வரரை வழிபட்டு நிவர்த்தி பெற்றனர் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

21. பிரதோச வழிபாடு முதன் முதலாக இந்த கோவிலில்தான் தோன்றியது.

22. சிவாலயங்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக விபூதி கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் ஆலயத்தில் விபூதிக்கு பதில் பிரசாதமாக தீர்த்தம் வழங்கப்படுகிறது.

23. சுருட்டப்பள்ளி கோவில் ஆந்திர மாநிலத்துக்குள் உள்ள போதிலும் அறிவிப்பு மற்றும் ஸ்தல புராண வரலாறு தமிழிலும் வைக்கப்பட்டுள்ளது.

24. சுருட்டப்பள்ளி கோவில் ராமாயண நிகழ்வுகளுக்கும் முற்பட்ட மிக, மிக பழமையான கோவிலாகும். காஞ்சி மகா பெரியவர் இங்கு அடிக்கடி தியானம் செய்து, இந்த வரலாற்று ஆதாரத்தை கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்.

25. சிவபெருமான், இந்த தலத்தில் நடத்திய ஆனந்த தாண்டவம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

காஞ்சி பெரியவரின் ஆசி::

சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் 1977-ம் ஆண்டு காஞ்சி பெரியவர் விஜயம் செய்து அருளாசி வழங்கினார். பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும், தாம் கண்டகண் கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும் என்றும் அனுக்கிரகம் பண்ணினார்.

காஞ்சி பெரியவரின் பாதங்கள் பட்டவுடன் சுருட்டப்பள்ளி என்னும் இத்திருத்தலம் வெளிஉலகிற்குத் தெரியவர ஆரம்பித்தது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அத்தருணத்தில் வெளிவந்த ஆலகால விஷத்தை உண்டகளைப்பால் சற்றே அயர்ந்து சயனக்கோலத்தில் பரமேஸ்வரன் பள்ளி கொண்டதாக ஐதீகம், எனவே இத்தலத்தில் பிரதோஷ பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது.

மகாசிவராத்திரி சிறப்பு பூஜைகள்::

இவ்வாலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 5 மணி வரை நான்கு கால விசேஷ அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன.

நடை திறக்கும் நேரம்::

சுருட்டப்பள்ளி கோவிலில் நடை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் பிறகு மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கும்.பிரதோச நாளில் கோவில் நடை நாள் முழுக்க திறந்து இருக்கும்.

பள்ளிகொண்ட பரமேஸ்வரனை வெள்ளி அங்கியில் அன்று தரிசனம் செய்யலாம். சுருட்டப்பள்ளி சிவன் ஆலயத்தில் 1979-ம் வருடம் நடந்த கும்பாபிஷேகத்திற்குப் பிறகு பல்வேறு திருப்பணி வேலைகள் சுமார் 1 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றன.

புதியதாக பிரதோஷ மண்டபம், ராஜகோபுரத்வார மண்டபம், மூன்று நிலை ராஜகோபுரத்திற்கான சிற்பங்கள், கருங்கல் ஆலய மதிற்சுவர், இந்திர நந்தி பிரதிஷ்டை போன்ற வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த அன்பர்கள் பல்வேறு திருப்பணி வேலைகளில் பங்கேற்றுள்ளனர்.

5 ஆலயங்களில் ஒன்று::

தமிழக-ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி கிராமம். மலைகள், மரங்கள் சூழ்ந்த இக்கிராமத்தை ஒட்டி ஆரணி ஆற்றங்கரையில் இயற்கையின் எழிலுடன் திகழும் இந்த ஊரில் பள்ளிக்கொண்ட சிவனாரின் ஆலயம் உள்ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்று இந்த சிறிய ஊரில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட்டால் வாழ்வு சிறக்கும் என்பது உறுதி. வால்மீகி முனிவர் இங்கு ஓர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு ஒரு லிங்க மூர்த்தியை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இத்தலத்தில் லிங்க மூர்த்தி புற்றுருவில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

ராமபிரானின் மகன்கள் லவ, குசா இருவரும் இங்கு விளையாடியதாக கூறப்படுகிறது. இத்தலத்தில் தேவர்களும், ரிஷிகளும் யாகம் செய்ய உத்தேசித்து அரணியை கடைந்தார்களாம். அச்சமயம் கலைமகள் யாகத்திற்கு உதவியாக அரணியில் இருந்து நதியால் தோன்றினாளாம்.

அந்த நதியே அருணா நதி என்று அழைக்கப்பட்டு இன்றும் ஆலயத்தின் பின்புறம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த அருணா நதி மரகதாம்பிகையின் பாதகமங்களை வருடிக்கொண்டு ஓடுகிறது. நதி ஓடுவதை நாம் சன்னதியின் பிரகாரத்தில் இன்றும் காணலாம்.

எல்லாம் சக்திமயம்::

சுருட்டப் பள்ளி கோவிலில் அம்பிகை சன்னதிக்கு வலதுபுறத்தில் சிவப்பு கல் கணபதியை காணலாம். உருவம் கிடையாது. சோனபத்திர விநாயகரை சாளக்கிராம விநாயகர் என்றும் கூறுவர். சன்னதிக்கு இடது புறத்தில் வள்ளி தெய்வானை சகிதம் சுப்பிரமணியர் காட்சி அளிக்கிறார்.

கருவறையில் அம்பிகை, ஒயிலாக நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அம்பிகை மரகதாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். மரகதாம்பிகையை வணங்கி விட்டு பிரகாரத்தை வலம் வரலாம். அம்பிகை அங்கு மகா சக்தி வாய்ந்தவள்.

அன்னை ஸ்ரீசக்திநாயகி என்னும் உண்மைக்கேற்ப கருவறையை சுற்றிலும், மகாலட்சுமி, ஞானசரஸ்வதி, மாதங்கி, அன்னபூரணி ஆகிய சக்திகள் சூழ்ந்து இருக்கின்றனர். மரகதாம்பிகையின் தெற்கு சுவர் மாடத்தில் ராஜராஜேஸ்வரியின் நின்ற திருக்கோலம் உள்ளது. இந்த காட்சியைக் காண்பது மிக அரிது. அடுத்து `ஏகபாத திருமூர்த்தியின்' அற்புத சிற்பத்தை காணலாம்.

இது போன்ற திருஉருவங்கள் திருவொற்றியூர், திருவானைக்கா கோவில்களிலும் உள்ளன. இச்சிற்பம் சிவவிஷ்ணு பேதமற்ற உண்மையை விளக்குகிறது. மூல கணபதியான சித்தி கணபதியையும், கபால ஹஸ்த மகாவிஷ்ணு ஆகியோர்களை காணலாம். வடமேற்கில் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. அடுத்துள்ள ராஜா மாதங்கியின் சிலை வெகு அழகாகவும், சிற்ப நுட்பங்களுடனும் உள்ளது.

இங்குள்ள சப்த மாதர்களை வணங்கி விட்டு இறைவன் சன்னதிக்கு செல்லலாம். கருவறையில் அற்புதமாக லிங்க மூர்த்தி சேவை செய்கிறார். இந்த லிங்க மூர்த்திக்கு வால்மீகேஸ்வரர் என பெயர். வால்மீகி முனிவரால் பூஜை செய்யப்பட்டவர் புற்று உருவில் காட்சியளிக்கிறார்.

வால்மீகி மகரிஷியின் தவம் கண்டு மகிழ்ந்து இறைவன் மரகதாம்பிகையுடன் ஒன்றாக முனிவருக்கு காட்சி அளித்ததாக கூறப்படுகிறது.

ஆணவத்தை அழித்த `லிங்கோத்பவர்'::

சுருட்டப்பள்ளி கோவில் கருவறையின் மேற்கு சுவர் மாடத்தில் `லிங்கோத்பவ' மூர்த்தியின் சிற்பம் காணப்படுகிறது. பிரம்மதேவருக்கும், விஷ்ணு பகவானுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதுகுறித்து சிவபெருமானிடம் கேட்பதற்கு சென்ற போது அவர் எனது தலையையும், பாதத்தையும் யார் ஒருவர் முதலில் பார்த்து விட்டு வருகிறீர்களோ அவர்களே பெரியவர் எனக்கூறினார்.

அதன்படி ஒருவர் முடியைத் தேடியும், ஒருவர் பாதத்தைத் தேடியும் சென்றனர். இருவரும் முடிவைக் காண முடியாமல் திரும்பி வந்தனர். பின்னர் இருவரின் ஆணவமும் அழிந்தது. வடப்புற சுவரில் பிரம்ம தேவர் கைகூப்பிய வண்ணம் காட்சியளிக்கிறார். அடுத்த மாடத்தில் விஷ்ணுதுர்க்கையின் சிற்பம் உள்ளது.

இங்கு லவகுசர்களின் பிஞ்சு கால்கள் பதிந்த பாதை வைக்கப்பட்டுள்ளது. அடுத்து கால பைரவரின் திருஉருவம் உள்ளது. இதன் விசேஷம் பைரவமூர்த்தியை உற்சவ வாகனத்துடன் காணலாம். இங்கு பைரவர் தனியாகவும், அவருக்கு முன் அடுத்த கால பைரவர் பார்த்த வண்ணம் நிற்கும் இந்த சிற்பத்தை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.

இரண்டாவது ராமேஸ்வரம் சுருட்டப்பள்ளி கோவிலில் வால்மீகேஸ்வரரின் சன்னதிக்கு நேர் எதிரே அமைந்துள்ளது ஸ்ரீராம லிங்கேஸ்வரரின் சன்னதி. மிகப் பெரிய மூர்த்தம். இந்த சிலை நர்மதையில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மூர்த்தி ராமபிரானால், இங்கு தங்கி சீதை, லட்சுமணன், பரதன், சத்ருக்னன், அனுஷன் இவர்களுடன் இந்த ராமலிங்கேஸ்வரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சன்னதிக்குள் ராமர், லட்சுமணன், சீதை, பரதன், சத்ருக்னன், அனுமன் முதலியவர்கள் இருப்பதை காணலாம். இது இரண்டாவது ராமேஸ்வரம் (அபர ராமேஸ்வரம்) என வழங்கப்படுகிறது.

காஞ்சி முனிவர் வருகை::

சுருட்டப்பள்ளி கோவிலில் ஒரு தடவை மகா பெரியவர் பதினைந்து நாட்கள் தங்கி தவம் இருந்தார். பள்ளி கொண்டீஸ்வர பெருமானை தரிசித்த சுவாமிகள் அப்போதே கற்கண்டு கவிதை ஒன்றை இயற்றி அர்ப்பணம் செய்தார். அந்த கவிதை வருமாறு:-

தேவ்யூரு ஸயனம் தேவம்
ஸ்ரீபாணம் ஸ்வார்ந்த விக்ரஹம்
ப்ருக்வாதி வந்திதம் தேவம்
லோகஷேமார்த்த மாஸ்ரயே

இந்த கவிதையின் பொருள் வருமாறு:- விஷத்தை உண்ட களைப்பில் அம்பாளின் மடியில் ஈஸ்வரன் பள்ளி கொண்டிருக்கிறார். உலக நன்மைக்காக விஷம் உண்ட சிவனை காண தேவரும், பிருகு முதலிய ரிஷிகளும் வந்திருக்கிறார்கள். சயனத்தில் உள்ள ஈசுவரனை வணங்கி பயன் பெறுவோம். -இதுவே இந்த கவிதையின் அர்த்தமாகும்.

பிரதோஷ தொடக்கம்::

இந்த ஆலயத்தில் பிரதோஷ தரிசனம் செய்ய வேண்டும் என்பது காஞ்சி முனிவரின் விருப்பம். பிரதோஷ தரிசனம், பிரதோஷ திருவிழா ஆகியவை உண்டானதற்கு முக்கிய காரணமாக, உயர்ந்த மரியாதையுடன் பக்தர்கள் கொண்டாடுவதற்கு ஏதுவாக அமைந்த ஒரே தலம் சுருட்டப்பள்ளி தான்.

விஷத்தை உண்டு சயன நாயகராக படுத்திருக்கும் சிவபெருமானைக் காண அனைத்துலக மூர்த்திகள், தேவர்கள், மகரிஷிகள் தேடி வந்து தரிசனம் பெற்ற புண்ணிய ஸ்தலம் சுருட்டப்பள்ளி. இந்த ஆலயத்தில் பிரதோஷ தரிசனம் செய்வது அசுவமேத யாகம் செய்த பலனைத் தரக்கூடியது என்றெல்லாம் காஞ்சிப் பெரியவர் சுருட்டப்பள்ளி தலத்தை பற்றி மேன்மையாக கூறியுள்ளார்.

பிரதோஷ காலத்திலும், கார்த்திகை திங்கட்கிழமைகளிலும், சித்ரா பவுர்ணமி நாட்களிலும் வழிபடுவது மிக விசேஷம். கார்த்திகை பவுர்ணமியில் தீபம் ஏற்றுவது மிக மிக விஷேசம். ஸ்ரீகாமகோடி ஆச்சார்யா இங்கு ஒரு கார்த்திகை பவுர்ணமியில் தங்கி இருந்து லட்ச தீபம் ஏற்றச் சொல்லி வீணா, வேணு, வயலின் இசை விழாவையும் நடத்தினார்கள்.

இவ்வளவு பெருமை கொண்ட இத்தலத்தின் முக்கியத்துவம் உணர்ந்து பூரண பயபக்தியுடன் நாம் எல்லாரும் அடிக்கடி அங்கு விஜயம் செய்து அருளைப் பெறுவோம்.

போக்குவரத்துக்கு வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது.ஊத்துக்கோட்டையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த கோவிலுக்கு செல்லும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum