தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீர்ப்பறவை

Go down

நீர்ப்பறவை                                 Empty நீர்ப்பறவை

Post  ishwarya Sat Mar 23, 2013 2:18 pm



பெற்றோர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட அநாதையாக படகில் அழுது கொண்டிருக்கும் சிறுவனை தமிழக மீனவர் ஒருவர் தன் மகன் போல் எடுத்து வளர்க்கிறார். வளர்ந்து பெரியவனான அவனை அதே கடலில் இருந்து குண்டுகள் துளைத்து இறந்த நிலையில் எடுத்து வர வேண்டியதாகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் இனிக்க இனிக்க அவனது வாழ்க்கையைச் சொல்லி வலிக்க வலிக்க முடிப்பதுதான் "நீர்ப்பறவை'.

இறுக்கமான முகம், சோகம் கவ்வும் கண்கள், காத்திருப்பின் வலியுடன் எப்போதும் ஜெபித்தபடியே கடலை வெறுத்துப்பார்த்துக் கொண்டிருக்கும் நந்திதா தாûஸ பார்க்கும்போதே இது சராசரி தமிழ்ப்படம் அல்ல என்று புரிந்து விடுகிறது.

அவரது வீட்டிலிருந்து 25 வருடங்களுக்கு முன் காணாமல் போனதாக சொல்லப்பட்ட நந்திதாதாஸின் கணவரின் எலும்புக்கூட்டை தோண்டி எடுக்கிறார்கள். கணவனுக்காக 25 வருடங்களாக கடற்கரையில் காத்திருக்கும் நந்திதா தாஸ், தனது கணவர் இறந்ததை ஏன் மறைத்து வீட்டிலேயே அவரது உடலை புதைக்க வேண்டும்?

இந்த கேள்விக்குப் பதிலாக பரந்து விரிகிறது படம். எந்நேரமும் சாராயமும், போதையுமாக அலையும் இளைஞன் விஷ்ணுவை, அந்த ஊரின் கிறிஸ்துவ மடத்தில் ஊழியம் செய்பவராக வரும் சுனைனாவின் காதல் நல்லவனாக மாற்றுகிறது. போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று ஊர் திரும்பும் விஷ்ணு, சுனைனாவை கரம் பிடிக்கிறார். அவருக்காகவே வாழ ஆசைப்படுகிறார். மீன் பிடிக்க ஆசை. ஆனால் பிறப்பு குறுக்கே நிற்கிறது. ""மீனவனாக பிறந்தவன் மட்டும்தான் கடலில் இறங்கி மீன் பிடிக்க வேண்டும்'' என்று ஊர் பகைகள் ஒன்று சேர, அதனைக் கடந்து விஷ்ணு தன் கனவை எப்படி சாதித்தார், அவனது வாழ்வு என்ன ஆனது என்பதை மீனவ வாழ்வோடு, அவர்கள் கனவோடு பின்னி பிணைந்து சொல்கிறது படம்.

தமிழ் திரைப்படங்கள் இதுவரை பேசாத கதையை முதன் முதலாக விவாதத்துக்கு கொண்டு வந்ததற்காகவே சீனு ராமசாமிக்கு வாழ்த்துகள்.

ஜெயமோகன், சீனு ராமசாமியின் எதார்த்தமான வசனங்கள், நிஜ வாழ்க்கைக்கு அருகில் போய் வந்த சுப்பிரமணியனின் கேமரா என எல்லாமும் திரைக்கதையை சுவாரஸ்யமாக்குகிறது.

குடித்து விட்டு கல்லறைத் தோட்டத்தில் விழுந்து கிடக்கிற மகன், பிள்ளைக்கு கை நடுங்குது என்று போதை தெளிந்ததும் குடிக்க பணம் தந்து அனுப்பும் பாசக்காரத் தாய், இந்த இரண்டு பேருக்கும் இடையில் சிக்கி தவிக்கும் தகப்பன் என்று உத்தேச மீனவ குடும்பத்தை சரியாக காட்டியிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.

பாசக்கார தாயாக வரும் சரண்யாவுக்கு இது மற்றொரு பரிமாணம். தந்தையாக வரும் "பூ' ராமுவுக்கு நேர்த்தியான பாத்திரம். குடியிலிருந்து மகனை மீட்ட மருத்துவரின் முன்னால் பெரிய மீனைக் காணிக்கையாக வைத்து வசனமே இல்லாமல் கண்கலங்கி நின்று நம்மை வசப்படுத்துகிறார்.

விஷ்ணுவுக்கு இது முக்கியமான படம். ஒவ்வொரு காட்சியிலும் அவரது பாத்திரம் அழுத்தமாக மனதில் அமர்ந்து விடுகிறது. சுனைனாவுக்கு லைஃப் டைம் கேரக்டர். மேக்கப் இல்லாமல் கடற்கரையோர எஸ்தராகவே மாறியிருக்கிறார்.

இவ்வளவு ஆழமான மீனவ வாழ்க்கை தமிழ் சினிமாவில் சொல்லப்படவில்லை எனலாம். திரைக்கதைக்கு தேவையான உழைப்பைத் தந்து நடித்திருக்கிறார்கள் துணை நடிகர்கள். "பிளாக்' பாண்டி, மகன் கள்ள சாராயம் குடித்தது கண்டு சாராயம் விற்பதையே நிறுத்தும் வடிவுக்கரசி, ""நீங்க சேர்ந்தா போராட்டம். நாங்க சேர்ந்தா தீவிரவாதம்'' என சின்ன சின்னதாக அரசியல் பேசி உதுமான்கனியாக வாழ்ந்திருக்கும் சமுத்திரக்கனி, கண்டிப்பும் கருணையுமாக உருகும் பெனிட்டா சிஸ்டர், எழுச்சிக் கவிஞர் தம்பி ராமையா, பாதிரியார் அழகம் பெருமாள், அருள்தாஸ், "யோகி' தேவராஜ், உப்பள முதலாளி, அந்த முதலாளியின் தங்கை என அனைத்து பாத்திரங்களுமே கடற்கரையோர வாழ்க்கையின் நிஜ பிம்பங்கள்.

சுப்பிரமணியனின் கேமரா கதையை கைப்பிடித்து கூட்டிச் செல்கிறது. முன் பின் நகரும் திரைக்கதையை குழப்பம் இல்லாமல் கச்சிதமாக செதுக்கியிருப்பதில் எடிட்டர் காசி.மு.விஸ்வநாதனின் உழைப்பு நச். என்.ஆர்.ரஹ்நந்தனின் பின்னணி இசை படத்துக்கு பலம். சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்கள், மீனவர்களின் வலியை கவிஞர் வைரமுத்து வரிகளாக்கிய விதம் என எல்லாமே படத்துக்கு பலம்.

ரசிகர்கள் இதுவரை கண்டிராத உண்மையான கடல் பின்னணியைக் காட்சிப்படுத்தியிருப்பதில் இயக்குநரின் மெனக்கெடல் பாராட்டுக்குரியதெனினும் - அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருந்த இயக்குநர் இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அதிர்வையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தாதது ஏமாற்றம்தான். மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதுதான் படத்தின் முக்கிய பிரச்னை எனும்போது அதை நெகிழ்வான காட்சிகள் மூலம் வெளிப்படுத்துவதை விட்டுவிட்டு வெறுமனே வசனங்களால் மட்டுமே சொல்லியிருப்பதன் பின்னணியில் "சென்சார்' இருந்ததோ என்னவோ?

கடல் என்றால் ஆழம் அதிகம் இருக்கும். கடல் சார்ந்த இந்த கதையில் ஆழம் குறைவுதான். கடற்கரையில் இருந்தே கடலைப் பார்த்தது போல் ஒரு உணர்வு. கதை என்கிற கடலுக்குள் மூழ்கிய உணர்வு ஏற்படாமல் போய் விட்டது.

நாற்பதாண்டு கால இலங்கைப் பிரச்னையை தமிழ் சினிமா கூர்ந்து கவனிக்கவே முப்பது ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் ஈழத்தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தை துணிச்சலாகக் காட்சிப்படுத்தவும் சிங்களக் கடற்படையின் கைகளில் சிக்கி உயிரிழக்கும் தென் தமிழக மீனவர்களின் வாழ்வியல் சூழலை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யவும் இங்கே யாருக்கும் துணிவில்லை.

அந்த வகையில் "முதல் கல்'லை எறிந்த கவனிக்கத்தக்க சில இயக்குநர்களின் பட்டியலில் "நீர்ப்பறவை' மூலம் இணைந்திருக்கிறார் சீனு ராமசாமி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum