தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெருமாளின் பிரம்மோற்சவம் கண்டீரா..!

Go down

பெருமாளின் பிரம்மோற்சவம் கண்டீரா..! Empty பெருமாளின் பிரம்மோற்சவம் கண்டீரா..!

Post  meenu Thu Mar 07, 2013 1:38 pm

திருப்பதியில் தினமுமே உற்சவந்தான் என்றாலும் புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர்-அக்டோபர்) மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிக முக்கியமானது. இந்த பிரம்மோற்சவத்தில் கலந்துகொள்ளும் பேறுபெற்றோர் லட்சக்கணக்கானோர் என்பது வருடாந்திர புள்ளிவிவரம். இந்த எண்ணிக்கை வருடா வருடம் அதிகரிப்பதும் கண்கூடு. அப்படியும் சிலரால் அந்த பிரம்மோற்சவத்தைக் காண முடியாத பல காரணங்கள், ஏக்கமாக நெஞ்சில் பாரம் ஏற்றும். அவர்கள் மனவருத்தம் நீங்கவும் பிரம்மோற்சவம் கண்டவர்கள் அந்த நினைவுகளில் மீண்டும் மலரவும் இதோ சில காட்சிகள்: ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த உற்சவம், முதன்முதலில் பிரம்மாவால் கொண்டாடப்பட்டது. தான் படைக்கும் உயிர்களை வெங்கடேசப் பெருமாள் சிறப்பாகப் பாதுகாப்பதற்கு நன்றி கூறும் விதமாக பிரம்மன் உற்சவம் நடத்தினார்.

அதனாலேயே இந்த விழா ‘பிரம்மோற்சவம்’ எனப்படுகிறது. இந்தக் கலியுலகில், மைசூர் மகாராஜா திருமலையில் தங்கி பிரம்மோற்சவ விழாவையும் நவராத்திரி கொண்டாட்டத்தையும் அனுசரித்த பிறகு, வருடந்தவறாமல் அவை இரண்டும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன.
பிரம்மோற்சவ வழிபாடுகள் என்னென்ன? முதல் நாள், த்வஜாரோகணம். த்வஜஸ்தம்பத்தில் கருடன் உருவம் பதித்த கொடியேற்றப்படும். விஷ்ணுவின் வாகனமாகிய கருடன், தேவலோகம் சென்று அனைத்து தேவர்களையும் பிரம்மோற்சவத்திற்கு வர அழைப்பு விடுக்கும் திருநாள். சங்கு, சக்கரம், கதை, வாள், சார்ங்கம் (வில்) ஆகிய ஆயுதங்கள் ஏந்தி பெருமாள் திவ்ய தரிசனம் தருகிறார். மாலையில் எம்பெருமான், ஆதிசேஷ வாகனத்தில், அதாவது பெத்த சேஷ வாகனத்தில் வீதியுலா வருகிறார்.

இரண்டாம் நாள், காலையில் சின்ன சேஷ வாகனத்தில் பெருமாள், குழலூதும் கிருஷ்ணனாகக் காட்சி தருகிறார். பாற்கடலைக் கடைய உதவிய வாசுகி நாகம், வாகனமாக சேவை புரிகிறது. அடுத்து ஹம்ச (அன்னப் பறவை) வாகனத்தில் வீணாகானம் இசைத்தபடி பெருமாள் பக்தர்களுக்கு உலா வந்து தரிசனம் தருகிறார். மூன்றாம் நாள் காலை, சுவாமி சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடக்கும். சிம்மம் என்றாலேயே நரசிம்மர் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாதல்லவா? பெருமாளும் யோக நரசிம்மர் கோலத்தில் சிம்ம வாகனத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மாலை முத்யால பல்லக்கு வாகனத்தில் பெருமாள் பவனி வருகிறார். மதிப்பு வாய்ந்த முத்துகள் சரம் சரமாகக் கோர்க்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பெருமாள் உலாவருவது கண்ணின் கருமணி முத்துகளுக்குத் தெவிட்டாத காட்சி.

நான்காம் நாள், கற்பகவிருக்ஷ வாகனத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார். கற்பக விருட்சம் என்பது அதனடியில் அமர்வோர் வேண்டும் வரங்களையெல்லாம் அளிக்க வல்லது. அந்தவகையில் இந்த வாகன உலாவைக் காண்போரும் எல்லா வளங்களும் பெறுவர். மாலையில், சர்வ பூபாள வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள் உலா வந்து பக்தர்களைப் பரவசப்படுத்துகிறார். ஐந்தாம் நாள், பெருமாள் மோகினி அலங்காரம் ஏற்று, நளினமாக உலா வருகிறார். பாற்கடலைக் கடைந்தபோது அசுரர்களிடமிருந்து அமிர்தத்தைக் காக்க மஹாவிஷ்ணு மோகினியாக அவதாரம் கொண்டு, தேவர்களை உய்விக்கிறார். அந்த அழகுத் திருக்கோலம் கண்கொள்ளா காட்சியாகப் பரிமளிக்கிறது. அன்று மாலையில் தன் சொந்த வாகனமான கருடனில் ஆரோகணித்து அழகாக உலா வருகிறார், பெருமாள். பிற வாகனங்களில் இதுநாள்வரை தரிசனம் தந்த பெருமாள், தனக்கே உரிய கருட வாகனத்தில் திருக்கோலம் காட்டுவது கூடுதல் சிறப்புதானே!

இதனாலேயே கருட சேவை எனப்படும் இந்த நிகழ்ச்சி மொத்த பிரம்மோற்சவ வைபவங்களிலேயே தனி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது; தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்காக இருக்கிறது! ஆறாம் நாள், அனுமனின் தோள்மீது ஆரோகணித்து வருகிறார் பெருமாள். வீரத்தில், பக்தியில், விநயத்தில், அறிவில் என அனைத்திலுமே உயர்வெல்லையைக் கண்ட சிரஞ்சீவி, அனுமன். தன் ராமாவதாரத்தில், மாபெரும் தியாகங்களைச் செய்து ராமசேவை ஆற்றிய அனுமனுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக பெருமாள் அனுமனையே வாகனமாக்கி, பக்தகோடிகள் அனைவருக்கும் அதனைப் பிரகடனப்படுத்தவும் செய்கிறார். அன்று மாலை, முதலையின் தளையிலிருந்து தன்னை விடுவித்து மோட்ச பதவி அளித்த நாராயணனுக்குத் தன் மரியாதையை செலுத்தும் வகையில் கஜேந்திரன் வாகனமாகி, பெருமாளை சுமந்து பெருமை பொங்க ஊர்வலம் வருகிறது.

இந்திரனின் ஐராவதம் என்ற வெள்ளை யானை, பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தத்தோடு உடன் தோன்றியது. அவ்வாறு தன்னை வெளிப்படுத்த உதவிய நாராயணனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் இந்த கஜ வாகனம் அமைவதாகவும் சொல்வார்கள். ஏழாம் நாளன்று, சூர்ய பிரபையில் திருக்காட்சி நல்குகிறார் பெருமாள். மகாவிஷ்ணுவின் அம்சங்களில் ஒன்றல்லவா சூரியன்! பகவானை சூர்ய நாராயணன் என்றே அழைக்கிறோமே! அது மட்டுமின்றி சூரியன் மகாவிஷ்ணுவின் கண்ணிலிருந்து தோன்றியது எனவும் ஒரு நம்பிக்கை உண்டு. உலகெங்கும் இருளை நீக்கி ஒளிதரவல்ல தினகரனையும் பெருமைப்படுத்துகிறார் பெருமாள். ஆகவே காலையில் சூர்ய பிரபையுடன் உலா வருகிறார். சூரியன் இருக்கும்போது, சந்திரன் இல்லாமலா? சந்திரபிரபையிலும் காட்சி அருள்கிறார், பெருமாள். சந்திரன் மஹாவிஷ்ணுவின் சிந்தனையிலிருந்து உதித்ததாகச் சொல்வார்கள்.

ஒரு நாளில் பகலும்-இரவும் எவ்வளவு முக்கியம் என்பதை பெருமாள் தன் இந்த இரு வாகனங்கள் மூலமாக உணர்த்துகிறார். எட்டாம் நாள், பிரமாண்ட ரதோற்சவம். காலையில் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எம்பெருமான், தாயாருடன் வலம் வருவார். இதைக் காண்போருக்கு மறுபிறப்பே கிடையாது என்ற நம்பிக்கை நிலவுகிறது. மறுபிறவி இருக்கட்டும், இப்பிறவியிலேயே, இப்பூவுலகிலேயே வைகுந்தத்தைக் காணவைக்கும் பெருமாளின் பேரருள் அல்லவா அது! மாலையில் பகவான் குதிரை வாகனத்தில் கம்பீரமாகப் புறப்படுகிறார். மஹாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக எதிர்பார்க்கும் கல்கி அவதாரத்தின் முன்னோடி காட்சி இது. ஏற்கெனவே குதிரை முகத்துடன் ஹயக்ரீவ அவதாரம் எடுத்திருந்த தன்மையையும் நினைவுகூரும் வகையில் இந்த வாகனம் அமைந்திருக்கிறது.

ஒன்பதாம் நாளன்று காலை வராக சுவாமி ஆலயத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி-பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. விஷ்ணுவின் ஆயுதமான சக்கரத்தை புஷ்கரணியில் நீராட்டல் செய்விக்கிறார்கள். திருமலை பிரம்மோற்சவத்தில் சக்ர ஸ்நானம் பிரசித்தி பெற்றது. ஆதிமூலமே என்றழைத்த கஜேந்திரனையும் துர்வாசரிடம் இருந்து அம்பரீஷனையும் மகாபாரதப் போரில் ஜெயத்ரதனையும் காப்பாற்றியது அந்த சுதர்சன சக்கரமே. தேவர்களையும், ரிஷிகளையும், விலங்குகளையும் காப்பாற்றிய அந்த சக்கரம் திருமாலின் பக்தர்களை என்றென்றும் காப்பாற்றும். அந்த நம்பிக்கையில்தான் லட்சக்கணக்கான பக்தர்கள் சக்ரராஜனான சுதர்சனர், திருமலை சுவாமி புஷ்கரணியில் ஸ்நானம் செய்யும்போது தாங்களும் தங்கள் கர்மவினையைத் தொலைக்க அந்த சமயத்தில் புஷ்கரணியில் நீராடுகின்றனர்.

அப்போது புஷ்கரணிக் கரையில் வேங்கடவனின் உற்சவரான மலையப்ப சுவாமியும் தேவியரோடு நீராடுவார். ‘வெங்கடேஸ்வரா’ என்ற பதத்தில் ‘வென்’ என்றால் பாவம், ‘கடா’ என்றால் அழிப்பவர், ‘ஈஸ்வரன்’ என்றால் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள்பவர் என்றுதானே அர்த்தம்! அந்த வெங்கடேஸ்வரருக்கு பிரம்மோற்சவம் நிகழ்த்துவதும் அதை தரிசித்து நிறைவான, நிம்மதியான, வளமான வாழ்வைப் பெறுவதும்தான் எத்தனை பெரிய பாக்கியம்! இந்த நேரடி தரிசனத்தை இந்த ஆண்டு தவறவிட்டவர்கள், வேங்கடவன் கருணையால் அடுத்த ஆண்டாவது நிறைவேற்றிக்கொள்ளத் துடிப்பதும் நியாயம்தான்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum