தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூவரசன்குப்பம் நரசிம்மர் கோயில்

Go down

பூவரசன்குப்பம் நரசிம்மர் கோயில் Empty பூவரசன்குப்பம் நரசிம்மர் கோயில்

Post  meenu Mon Jan 14, 2013 3:08 pm

தமிழகத்தின் முக்கிய எட்டு நரசிம்மர் தலங்களில் நடுவில் இருப்பது பூவரசன்குப்பம். ஒரு தடவை சப்தரிஷிகள் இரண்யவத்தைக் காண விரும்பினர். அத்ரி, பரத்வாஜர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், காச்யபர், கௌசிகர் ஆகியவர்களே அந்த ஏழு ரிஷிகள்.

அவர்களுக்காக திருமால் காட்சி கொடுத்த இடம் தான் பூவரசன்குப்பம். மற்ற இடங்களில் பயங்கரமான உருவில் காட்சியளிக்கும் நரசிம்மர் இங்கே தம்பதியர் போலவே காட்சியளிக்கிறார். தாயாரின் ஒரு கண் நரசிம்மரைப் பார்த்துக் கொண்டிருக்க, மற்றோர் கண் நம்மை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. நரசிம்மர் எப்படி இங்கு வந்தார் என்பதை வரலாறு சொல்கிறது.

பல்லவ மன்னன் சமய சமயத்தைச் சேர்ந்தவன். அப்போது தமிழகத்தில் சமண ஆதிக்கம் நிலவி வந்தது. திருநீறும் திருமண்ணும் துவேஷத்தோடு பார்க்கப்பட்டன. கோயில்கள் பரமசிவனுடையதாக இருந்தாலும் சரி பரந்தாமனுடையதாக இருந்தாலும் சரி இடிக்கப்பட்டன.

பல்லவனின் கொடுமையை எதிர்த்துக்குரல் கொடுத்தார் நரஹரி என்ற வைணவ ரிஷி. அவரைக் கொல்ல ஆணையிட்டான் மன்னன். வெகுண்டார் நரஹரி. `என்னைக் கொல்ல ஆணையிட்ட உனக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கட்டும். உடன் உடல் அழுகட்டும்' என்று சாபமிட்டுக் காற்றோடு கரைந்தார் நரஹரி.

மன்னனை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்க, உடல் வேதனையால் துடிக்க, மன்னனின் கெட்ட காலம் ஆரம்பித்தது. மன்னன் பைத்தியம் பிடித்தவன் போலானான். சாபவிமோசனம் பெற நரஹரியை நாடெங்கும் தேடினான். ஆனால் அவர் கிடைக்கவில்லை. நோய் முற்றி புழுக்கள் உடலில் நெளியவே மன்னனின் மனைவி மக்கள் கூட அவனை வெறுத்து ஒதுக்கினார்கள்.

நாட்டை விட்டே வெளியேறினான் அவன். ஒரு நாள்... தென்பெண்ணையாற்றின் வடகரையில் ஒரு பூவரச மரத்தடியில் களைப்புடன் விதியை நொந்தபடி படுத்திருந்தான் மன்னன். ஆணவம் அழிந்து விட்டது. ஆதிக்க வெறியில் அவன் செய்த பாவங்களுக்காக கண்ணீர் விட்டு கலங்கி சோர்ந்து அப்படியே தூங்கி விட்டான்.

திடீரென்று விழித்தபோது, அவன் மேல் ஒரு பூவரச இலை விழுந்திருந்தது. அந்த இலையின் அதிர்வைக்கூட அவனால் தாங்க முடியவில்லை. அந்த இலையை நகர்த்த எண்ணி அதைக் கையில் எடுத்தான். அதில் லட்சுமி நரசிம்மர் உருவம் தெரிந்தது. பூவரச இலையில் பூத்த முறுவலுடன் நரசிம்மர் அன்னையுடன் சேர்ந்து இருப்பதைக் கண்டான்.

கைகள் கூப்பின. கண்ணீர் பெருகியது. அப்போது வானிலிருந்து ஒரு அசரீரி கேட்டது. `மன்னா, கோயில் கட்டுவதாக நினைத்தாலே கோடி புண்ணியம் உண்டாகும். நீ எத்தனை கோயில்களை இடித்திருக்கிறாய். அதற்குப் பிராயச்சித்தம் செய்தே ஆக வேண்டும்.

இந்தப் பூவரச மரத்தடியிலேயே லட்சுமி நரசிம்மருக்கு கோவில் எழுப்பு. அதுவே பூவரசமங்கலம் எனப் பெயர் பெறும். இந்தக் கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உன் மனத்தில் எழுந்த மறுகணமே உனக்கு விடிவு காலம் பிறக்கும்' என்றது.

மன்னன் கோயில் கட்ட நினைத்த மறுகணமே அவன் உடலில் தெம்பு வந்தது.உடனே கோயில் கட்டும் வேலையில் ஈடுபட்டான். மனம் மாறவே மதமும் மாறியது. மன்னன் மறுபடியும் மாமன்னன் ஆனான். பூவரச மங்கலத்தில் லட்சுமி நரசிம்மப் பெருமாளின் அருளாட்சி தொடங்கியது.

கோயில் அமைப்பு:

கருவறையில் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்தவல்லித் தாயாரை) அனைத்துக்கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது.

இடது காலை மடக்கி வைத்து அதில் லட்சுமியை அமர்த்தியுள்ளார். நரசிம்மருடைய மடியில் பெருமிதத்துடன் தாயார் அமர்ந்திருக்கிறார். வலக்கரம் அன்புக்கரமாக அண்ணலைத் தழுவிக் கொண்டிருக்கிறது. ஒரு கண் அண்ணலை நோக்குகின்றது.

மற்றொரு கண் பக்தர்களை நோக்கியுள்ளது. சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ர கலக திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். லட்சுமி நரசிம்மரை வேண்டினால் கடன் தீரும், பொருள் குவியும், சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் உண்டு.

போக்குவரத்து வசதி:

விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ளது இந்த கோயில். விழுப்புரம் பண்ருட்டி சாலையில் கள்ளிப் பட்டியில் இறங்கினால் இத்தலம் மூன்று கி.மீ., விழுப்புரம் புதுச்சேரி சாலையில் சிறுவந்தாடில் இறங்கினால் இத்தலம் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம் அல்லது பாண்டிச்சேரி சென்று பின் அங்கிருந்து உள்ளுர் பேருந்து மூலம் இந்த கோயிலுக்கு செல்லலாம். எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து ரெயில் மூலம் விழுப்புரம் அல்லது பாண்டிச்சேரி சென்று பின் அங்கிருந்து உள்ளுர் பேருந்து மூலம் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum