தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்! இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?

Go down

 அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்! இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?  Empty அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்! இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?

Post  amma Sat Jan 12, 2013 12:04 pm

முஸ்லிமல்லாதவர்களை மதமாற்றம் செய்வதற்காகவும் மறுப்பவர்களைக் கொன்று குவிப்பதற்காகவும் பிறநாட்டில் உள்ள அழகு மங்கையரைக் கவர்ந்து செல்வதற்காகவும் அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் முஸ்லிம்கள் படையெடுத்து உள்ளனர் என்றும் இஸ்லாம், பிறமதங்களைச் சகித்துக் கொள்ளாத மார்க்கம் என்பதற்கும் அருவாள் முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்பதற்கும் இந்தப் போர்களும் படையெடுப்புகளும் சான்றுகளாக உள்ளன என்பது முஸ்லிமல்லாதவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

முகலாய மன்னர்களும், வேறு பல முஸ்லிம் மன்னர்களும் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஏராளமான போர்களை நிகழ்த்தியுள்ளதையும் தங்கள் வாதத்துக்குச் சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பல போர்களைச் சந்தித்ததும் உண்மை.

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததும் உண்மை.

ஆயினும் இவற்றை ஆதாரமாகக் கொண்டு எடுத்து வைக்கப்படும் வாதங்கள் தாம் உண்மைக்கு அப்பாற்பட்டவை.

இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற இரண்டு ஆதாரங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவர்கள் கூறுகின்ற காரணங்களுக்காகப் போர் செய்திருந்தால் அதைக் காரணமாகக் கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்வதில் நியாயம் உள்ளது. அவர்களைத் தவிர ஏனைய முஸ்லிம் மன்னர்கள் எந்தக் காரணத்துக்காகப் போர் செய்திருந்தாலும் அதற்காக இஸ்லாத்தை விமர்சிப்பது அறிவுடைமையாகாது.

ஆகவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி மட்டும் விளக்குவதுதான் நமது பொறுப்பாகும். ஆயினும் நாம் வாழக்கூடிய நாட்டில் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வந்தது பற்றியே பிரதானமாகப் பேசப்படுவதால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும் அதுபற்றி சுருக்கமாக ஆராய்ந்து விட்டு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி ஆராய்வோம்.

அன்றைய காலத்தில் போர்கள் சர்வ சாதாரணமாக நடந்து வந்தன. மன்னர்களின் சுயநலத்திற்காகப் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டதுண்டு.

அன்றைக்கு தனித்தனி நாடுகளாக விளங்கிய சேர, சோழ, பாண்டிய நாட்டு மன்னர்கள் ஒருவருடன் ஒருவர் போர் புரிந்த வரலாறு உண்டு. அன்றைக்குத் தனி நாடாக விளங்கிய வடநாட்டின் மீது பாண்டிய மன்னன் படை நடத்திச் சென்று வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. இந்த நாட்டைச் சுரண்டுவதற்காக ஆரியர்கள் படையெடுத்து வந்த வரலாறும் உண்டு. மத நம்பிக்கையில்லாத திராவிடர்கள் மீது ஆரியர்கள் இந்து மதத்தை திணித்த வரலாறும் உண்டு. பலநாடுகள் மீது படையெடுத்துச் சென்ற அலெக்சாண்டரின் வீர(?) வரலாறும் உண்டு. வெள்ளையர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட சமீபத்திய வரலாறும் உண்டு. தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும், பகைமை கொண்டிருந்த அண்டை நாட்டு மன்னனுக்குப் பாடம் புகட்டுவதற்காகவும், வளங்களை வாரிச் செல்வதற்காகவும் எத்தனையோ படையெடுப்புகளை உலகம் சந்தித்துள்ளது அது போன்ற ஒரு படையெடுப்பே முகலாயர்களின் படையெடுப்பும்.

முஸ்லிம் படையெடுப்புகள் :

வெண்ணி, வாகை, புள்ளலுர் பரியலம், மணி மங்கலம், நெய்வேலி, பெண்ணாடகம், விழிஞம், தௌ;ளாறு, திருப்புறம்பியம், வெள்ளூர், தக்கோலம், நொப்பம், கூடல், கலிங்கம், ஈழம், சுமந்திரம், மகேந்திரமங்கலம், மற்றும் கண்ணனூர் ஆகிய போர்கள் தமிழக அளவில் இந்து மன்னர்கள் நிகழ்த்திய போர்களில் சில. இன்னும் ஏராளமான போர்கள் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் நிகழ்ந்துள்ளன.

இந்தப் போர்களுக்கெல்லாம் எவை காரணமாக இருந்தனவோ அவைதாம் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புக்கும் காரணங்களாக இருந்தன. நிச்சயமாக மதத்தைப் பரப்புவதோ மதமாற்றம் செய்வதோ இதற்குக் காரணங்களாக இருந்ததில்லை.

முஸ்லிம் மன்னர்கள் 800 ஆண்டுகாலம் இந்த நாட்டை ஆட்சி புரிந்தனர். இந்து மதத்தை அவர்கள் அழிக்க நினைத்திருந்தால் அதற்கு 800 ஆண்டுகள் மிகவும் அதிகமாகும். அதற்கு குறைவான ஆண்டுகளிலேயே அழித்திருக்க முடியும்.

அவர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயங்கள் இதற்கு இன்றளவும் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன.

இந்துக் கோவில்களைக் கட்டிய முஸ்லிம் மன்னர்களும் அவற்றுக்கு மானியம் வழங்கிய முஸ்லிம் மன்னர்களும் இருந்துள்ளனர்.

இஸ்லாம் தடை செய்துள்ள ஆடல் பாடல்களை அவர்கள் தடை செய்ததில்லை. வட்டியை அவர்கள் ஒழித்ததில்லை. குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய தண்டனைகளை அவர்கள் சட்டமாக்கவில்லை. அரசுப் பதவிகளில் முஸ்லிமல்லாதவர்களை பெருமவு நியமிருத்திருந்தார்கள். முஸ்லிமல்லாத பெண்களை மணந்தார்கள்.

இன்னும் இஸ்லாத்தின் ஆயிரமாயிரம் கட்டளைகளைப் புறக்கணித்தவர்கள் இஸ்லாத்தை இந்த நாட்டில் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்களா? நடுநிலையாக யோசிக்க வேண்டும்.

இஸ்லாத்தை விட்டும் வெகுதூரம் விலகியிருந்த முஸ்லிம் மன்னர்கள் வாளால் மிரட்டி இந்திய மக்களை முஸ்லிம்களாக்கினார்கள் என்று நியாயவுணர்வுடைய எவருமே கூறத்துணிய மாட்டார்.

நவீன ஆயுதங்களுடன் இந்த நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளையர்களை 200 ஆண்டுகளில் நாட்டு மக்கள் விரட்டியடித்தனர். அதற்கு முன்பே அவர்களை வெளியேற்ற ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன.

ஆனால் முஸ்லிம் மன்னர்கள் கத்தி, அரிவாள், வாள், கேடயம் போன்ற சாதாரண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் ஆள்பலமே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற காலத்தில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர். முஸ்லிம் மன்னர்கள் மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டிருந்தால் வாள் முனையில் மிரட்டியிருந்தால் ஒரு சதவிதத்துக்கும் குறைவாக இருந்த அவர்களை இந்த நாட்டு மக்கள் வெறும் கையாலேயே அடித்து விரட்டியிருப்பார்கள். முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது அவர்கள் மக்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.

ஆயினும், ஒரு விஷயத்தை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். மோசமான நடத்தையுடைய முஸ்லிம் மன்னர்களின் மோசமான ஆட்சி, அதற்கு முன் நடந்த மன்னர்களின் ஆட்சிகளை விட சிறப்பானதாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், மிகச் சிறு படையுடன் வந்தவர்களை இந்திய மக்கள் பல நூற்றாண்டுகள் வரை சகித்துக் கொண்டிருக்க முடியாது.

இந்துக்களின் போர்களுக்கெல்லாம் இந்துமதம் தான் தூண்டிவிட்டது என எப்படி கூறமுடியாதோ அது போலவே முஸ்லிம்கள் நிகழ்த்திய போர்களை எல்லாம் இஸ்லாமே தூண்டிவிட்டது எனக் கூறமுடியாது.

சுருக்கச் சொல்வதென்றால் வாள்முனையில் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. பரப்பமுடியும் என்றாலும் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் நிச்சயமாக யாரையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்ததில்லை. அப்படியே செய்திருந்தார்கள் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை. ஏனெனில் திருக்குர்ஆனில் கூறப்பட்டவையும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டிய வழியும் தான் இஸ்லாம். முஸ்லிம் பெயர் தாங்கிகளின் தவறான செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது.

இம் மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாக உள்ளது. (அல்குர்ஆன் 2:256)

எனவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஏராளமான யுத்தங்களில் ஈடுபட்டுள்ளார்களே! அவர்களும் நாடு பிடித்துள்ளார்களே! இதற்கு என்ன கூறுகிறீர்கள்? என்ற அடிப்படையான விஷயத்துக்கு வருவோம்.

அது பற்றியே நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சந்தித்த போர்களங்கள் எந்த அடிப்படையிலானவை? என்பதை விரிவாகக் காண்போம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் போர்கள் நாடு பிடிப்பதற்காகவா?

தனது நாட்டை விரிவுபடுத்திக் கொள்வதற்காக நபி(ஸல்) அவர்கள் போர் நடத்தினார்களா? நிச்சயமாக இல்லை. இதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும், அவர்களின் முன்னூறுக்கும் சற்று அதிகமான தோழர்களும், மக்காவின் எதிரிகளுடன் 'பத்ர்' எனுமிடத்தில் போர் புரிந்தனர். ஆயிரம் பேர் கொண்ட எதிரிகளின் படை இந்த முதல் போரிலேயே படுதோல்வி கண்டு ஒடலாயிற்று. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர். அனைவரும் அறிந்து வைத்துள்ள வரலாற்று நிகழ்ச்சி இது.

நாடு பிடிப்பது அவர்களின் நோக்கம் என்றால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? தோல்வியுற்று ஓடுபவர்களை விரட்டிச் சென்றிருக்க வேண்டும். விரட்டிச் சென்று அவர்களைக் கொன்று குவித்திருக்க வேண்டும். மேலும் முன்னேறி எதிரிகளின் தலை நகரம் மக்கா வரை சென்று வெறியாட்டம் போட்டிருக்க வேண்டும். அந்த ஒரு போரிலேயே மக்கா அவர்களின் கைவசமாக ஆகி விடக் கூடிய அருமையான சூழ்நிலை வெற்றியடைந்த எந்தத் தலைவரும் நடந்து கொள்ளும் முறையும் அதுதான்.

'பத்ர்' எல்லையத் தாண்டி அவர்கள் ஒரடியும் எடுத்து வைக்க வில்லை என்றால் நாடு பிடிப்பது அவர்களின் நோக்கமில்லை என்பதற்கு இதை விடவேறு என்ன சான்று வேண்டும்?

'உம்ரா' எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான தம் தோழர்களுடன் புறப்பட்டு மக்காவுக்குச் சென்றனர். ஹூதைபியா எனும் இடம் வரை வந்து விட்டனர். மக்காவுக்குள் அனுமதிக்க எதிரிகள் மறுத்தனர். நபியவர்களுக்கு ஆத்திரமூட்டும் அளவுக்கு பிடிவாதம் பிடித்தனர். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நாடு பிடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அரை மணி நேரத்திற்குள் மக்கா நகரம் அவர்களின் வசமாகி இருக்கும். ஆனாலும் நபியவர்கள் பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து அவர்களுடன் சமாதான உடன் படிக்கை செய்து கொண்டனர். மக்காவுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றாமலேயே திரும்பி வந்தனர். இதுவும் அனைவராலும் அறியப்பட்ட வரலாறுதான். நாடு பிடிக்கும் எண்ணம் நபியவர்களுக்கு இருந்ததில்லை என்பதற்கு இவையே போதுமாகும்.

கொள்ளையிடுவதற்காகவா! எதிரி நாட்டு வளங்களைக் கொள்ளையிடுவதற்காகப் போர் நடத்தினார்களா என்றால் நிச்சயமாக இல்லை. 'தாயிப்' நீங்கலாக உள்ள மற்ற பகுதிகள் எதுவும் மதீனாவை விட வளமானதாக இருந்ததில்லை. போர் நோக்கமாக அது இருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் அவர்களுக்குத் தெளிவான கட்டளையும் பிறப்பித்துள்ளது.

விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டால் தீர விசாரித்துக் கொள்ளுங்கள்! உங்களை நோக்கி ஸலாமை-(சமாதானத்தை) கூறியவரிடம் (அவரிடம் உள்ள) இவ்வுலக சாதனங்களை (கைப்பற்ற)நாடி 'நீர் விசுவாசி அல்ல' எனக் கூறாதீர்கள் அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. (அல்குர்ஆன் 4:94)

கொள்ளையிடுவது அவர்களின் குறிக்கோளாக இருக்கலாகாது என்று குர்ஆன் தெளிவான கட்டளையிட்டிருக்கும் போது அவர்கள் நடத்திய போருக்கு இது காரணமாக இருக்க முடியாது.

பழிவாங்குவதற்கா? எதிரிகள் ஏற்கனவே செய்த கொடுமைகளுக்குப் பழிவாங்குவதற்காக போர்க்களங்களைச் சந்தித்தார்களா? நிச்சயமாக அதுவுமில்லை.

மக்காவில் வெற்றிவீராக நபியவர்கள் நுழைந்த நேரத்தில் பழி வாங்குவதற்குரிய அத்தனை காரணங்களும் இருந்தன. சக்தியும் இருந்தது. நபிகள் நாயகத்தைக் கல்லால் அடித்தவர்கள் அங்கே நின்றார்கள். அவர்களைக் கொலைச் செய்யத் திட்டம் தீட்டியவர்கள், அவர்களை நாடு துறத்தக் காரணமானவர்கள், தோழர்களை கொன்றவர்கள், இஸ்லாத்தை ஏற்றதற்காக சுமையா என்ற பெண்ணின் மர்ம உறுப்பில் ஈட்டியை நுழைத்து கொன்றவர்கள், மதீனாவுக்குச் சென்ற பின்பும் பல முறை அவர்களுடன் போர் புரிந்தவர்கள், இப்படி பலரும் அங்கே நின்றார்கள். தங்களின் கதி என்னவாகுமோ என்று பயந்து போய் நின்றார்கள்.

அனைவருக்குமே பொது மன்னிப்பு வழங்கியது தான் அவர்கள் வழங்கிய தண்டனை. பழி வாங்குவதற்குரிய அத்தனை நியாயங்களும் அவர்கள் பக்கம் இருந்தன. ஆனாலும் எவரையும் பழிவாங்கவில்லை. இந்த ஒரு நிகழ்ச்சியே அவர்களின் உயர் பண்புக்குப் போதுமான சான்றாகும்.

ஒரு கூட்டத்தினர் மீது உங்களுக்குள்ள வெறுப்பு நீதியுடன் நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதியுடன் நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவன். (அல்குர்ஆன் 5:Cool

என்று இறைவன் கட்டளையிட்டிருக்கும் போது எப்படி அவர்கள் அதை மீறியிருப்பார்கள்?

ஒரு போர்க்களத்தில் பெண்ணொருத்தி கொல்லப்பட்டுத் கிடப்பதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அதை ஆட்சேபித்து பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

போர்க்களத்தில் வரம்புமீறாதீர்கள்! சிறுவர்களையும், மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: புரைதா(ரலி) நூல்கள்: முஸ்லிம்)

போர்க்களத்தில் எந்த தர்மமும் பார்க்க வேண்டியதில்லை என்பது உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தும் இங்கேயும் புது நெறியைக் கற்றுத் தரும் அளவுக்கு அவர்களின் உள்ளம் விசாலமானது. எனவே பழி வாங்குதல் என்பது அவர்களிடம் கற்பனை கூட செய்ய முடியாதது.

மத மாற்றம் செய்வதற்காகவா? மற்றவர்களை மத மாற்றம் செய்வதற்காக போர் நடத்தினார்களா என்றால் நிச்சயமாக அதுவும் இல்லை.

இம் மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாக உள்ளது. (அல்குர்ஆன் 2:256)

அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் கட்டாயமாக மதமாற்றம் செய்வதை தடை செய்கின்றது. வெற்றியடைந்த பின் அம்மக்களிடம் இஸ்லாத்தை எடுத்தச் சொல்வார்கள். விரும்பியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். விரும்பாதவர்கள் ஜிஸ்யா வரி செலுத்திவிட்டு அவர்களின் மதத்திலேயே நீடிப்பார்கள். (ஜிஸ்யாவரி என்றால் என்ன? அது சரியா என்பது பற்றி பின்னர் வரும் கேள்விகளில் வர உள்ளது)

இணை வைப்பவர்களில்(அதாவது மாற்று மதத்தவர்களில்) உள்ள எவரேனும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தையை அவர் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் கொடுப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக! ஏனெனில் அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 9:6)

மாற்று மதத்தவர்களிடம் நபியவர்களின் நடைமுறை எத்தகையதாக இருந்தது என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.

எதற்காகப் போர் செய்தனர்?

மேற்கண்ட காரணங்களுக்காக போர் நடக்கவில்லை என்றால் அவர்கள் போர் நடத்தியதாகச் சொல்லப்படுவது பொய்யா? அதற்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளனவா? என்ற கேள்விகளுக்கு வருவோம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எந்தப் போரிலும் பங்கெடுத்ததில்லை என்று நாம் சொல்லவில்லை. சன்னியாசியாக வாழ்ந்தார்கள் என்று நாம் சொல்லவில்லை.

தாங்களே களத்தில் இறங்கியுள்ளார்கள் மிகச் சிறந்த படைத் தளபதியாக இருந்தார்கள். எத்தனை ஒட்டகங்களை எதிரிகள் அறுத்துள்ளனர் (உணவுக்காக) என்பதை விசாரித்து எதிரிகளின் எண்ணிக்கையை சரியாக மதிப்பிடக் கூடிய அளவுக்கு திறமை மிக்க தலைவராக இருந்தார்கள். அவர்கள் படை நடத்திச் சென்றதற்கு கீழ்கண்ட காரணங்கள் இருந்தன. இது சரியா தவறா என்று நடுநிலையுடன் சிந்தியுங்கள்.

முதலாவது காரணம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் சொந்த ஊரிலிருந்து அநியாயமாக விரட்டப்பட்டு மதீனா வந்து அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் போது மக்காவை விட்டு அவர்களை விரட்டியவர்கள், அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் கூண்டோடு கறுவறுப்பதற்காக படையெடுத்து வந்தனர். அவர்களை எதிர்த்துப் போரிடவில்லையானால் மொத்த சமுதாயமும் அழிந்து விடக்கூடிய அபாயம் ஏற்பட்ட போது எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக நபி(ஸல்) அவர்கள் போர்களை சந்தித்துள்ளனர். எல்லாப் போர்களுக்கும் இதுவே காரணமில்லை என்றாலும் சில போர்கள் இந்த ஒரு காரணத்துக்காகவே நடத்தப்பட்டன.

நியாய உணர்வுடைய எவரும் இதில் குறை காணமாட்டார்கள். இந்தக் காரணத்துக்காக நடத்தப்பட்ட போர்களில் இரண்டை மட்டும் இங்கே நாம் விளக்குவோம்.

'உஹதுப் போர்' என்பது பிரசித்தி பெற்ற போராகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்தப் போர் 'உஹத்' எனும் மலை அடிவாரத்தில் நடந்ததால் 'உஹதுப் போர்' என்று இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது.

போர் நடந்த இடம் மதீனாவுக்கு ஐந்து மைல் தொலைவில் உள்ளது. மக்காவிலிருந்து ஏறத்தாழ முன்னூறு மைல் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அதாவது மக்காவாசிகளான எதிரிகள் சுமார் முன்னூறு மைல்களைக் கடந்து மதீனாவின் எல்லை வரை வந்துவிட்டனர். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வெறும் ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்தனர்.

முன்னூறு மைல்களைக் கடந்து வந்தவர்கள் வம்புச் சண்டைக்கு வந்தவர்களா? ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்திக்க நபியவர்கள் வம்புச் சண்டைக்குச் சென்றார்களா? முன்னூறு மைல்களைக் கடந்து வருவதென்றால் அன்றைய காலத்தில் அதற்கு எவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்! எவ்வளவு நாட்களுக்கு முன் புறப்பட்டிருக்க வேண்டும் இந்த நிலையிலும் ஆட்சித் தலைவராக உள்ள நபியவர்கள் தமது குடிமக்களின் நலனைப் பேண வேண்டிய நபியவர்கள் இதைக் கண்டு கொள்ளாமலிருக்க வேண்டும் என்று எவருமே எதிர்பார்க்க முடியாது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த இரண்டாவது போரின் நிலை. இதுவென்றால், அவர்கள் சந்தித்த முதல் போரின் நிலையும் இத்தகையது தான்.

'பத்ருப் போர்' என்று அறியப்படும் இப்போர் பத்ரு எனும் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இந்த இடம் மதீனாவுக்கு எண்பது மைல் தொலைவிலும், மக்காவுக்கு இருநூறு மைல்களை விட அதிக தூரத்திலும் அமைந்துள்ளது.

வலியப்போர் செய்ய நபியவர்கள் சென்றிருந்தால் மக்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் போர் நடந்திருக்க வேண்டும். மதீனாவுக்கு அருகிலேயே இருப்போர் நடந்துள்ளதால் இதுவும் தற்காப்புப் போர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறியலாம்.

தங்களின் ஒப்பந்தங்களை முறித்து விட்டவர்களுடன் நீங்கள் போரிட வேண்டாமா? (இறைத்) தூதரை வெளியேற்றத் திட்டமிட்டவர்களுடன் (நீங்கள் போரிட வேண்டாமா?) மேலும் அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா?) (அல்குர்ஆன் 9:13)

போரை முதலில் துவக்கியவர்களே அவர்கள்தான் என்று திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது. சில போர்கள் இந்தக் காரணத்துக்காகவே நடத்தப்பட்டவை.

இரண்டாவது காரணம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற பின் அங்குள்ள மக்களின் பேராதரவுடன் ஒரு ஆட்சியை நிறுவினார்கள். மதீனாவும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அந்த நாட்டின் எல்லைகளாக இருந்தன. சிறியதோ, பெரியதோ ஒரு நாடு என்று ஆகிவிட்டால் அதற்கென இறையான்மை உண்டு. அதை மற்ற நாடுகள் பேணி நடக்க வேண்டும். ஒரு நாட்டுக்குள் அன்னிய நாட்டவர் பிரவேசிக்க வேண்டுமானால் அந்த நாட்டின் முன் அனுமதி பெற வேண்டும். இது இன்றைக்கு மட்டுமல்ல. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தது.

இதனால்தான் மக்காவுக்கு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சென்ற நபியவர்கள் மக்காவாசிகளின் ஆட்சேபணைக்கிணங்கத் திரும்பி வந்தார்கள்.

ஆனால் மக்காவாசிகள் மதீனாவின் இறையாண்மையில் அவ்வப்போது குறிக்கிட்டுக் கொண்டிருந்தனர். பல ஊர்களுக்கு வியாபாரம் செய்யச் சென்று விட்டு மக்கா வியாபாரிகள் திரும்பும் போது மதீனாவுக்குள் புகுந்தோ அல்லது மதீனா எல்லைக்குள் புகுந்தோ போய் வந்து கொண்டிருந்தார்கள். இப்படி அனுமதியின்றி அத்து மீறுபவர்களை வழி மறிக்கவும் அவர்களின் பொருட்களை பறிமுதல் செய்யவும் நபியவர்கள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டார்கள். இதனால் இவ்வப்போது சிறுசிறு சண்டைகள் நடந்துள்ளன. பத்ருப் போர்க்களத்துக்குச் சற்று முன்னால் அபூசுப்யானின் வணிகக் கூட்டம் வழி மறிக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எந்த ஆட்சித் தலைவருக்கும் கடமையான ஒரு காரியமாகவே இதைக் கொள்ள வேண்டும். தம் விஷயத்தில் எதிர்மறையான நிலைய மேற்கொள்ளக்கூடியவர்களிடம், இத்தகைய அத்து மீறல்களை எந்த ஆட்சியாளரும் தத்தமது நாடுகளில் அனுமதிப்பார்களா என்பதை மாற்றார்கள் சிந்திக்க வேண்டும்.

மூன்றாவது காரணம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் தாயகம் மக்காவாகும். அவர்களுடன் தியாகப் பயணம் மேற்கொண்ட அனைவரின் தாயகமும் மக்காவாகும். சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப் பட்டவர்கள் என்று இவர்களைக் கூறலாம்.

நபிகள் நாயகத்தை எதிர்த்த மக்காவாசிகளுக்கு மக்காவில் எந்த அளவு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு நபிகள் நாயகத்துக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமை உள்ளது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்த பின் அவர்களின் சிறப்பையும், அவர்களின் உண்மையான கொள்கைகளையும் உணர்ந்து மக்காவாசிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தனர். ஏற்றுக் கொண்டவர்களெல்லாம் மக்காவின் தலைவர்களது கொடுமைக்கு அஞ்சி மக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்குச் சென்றனர்.

பெரும்பாலான மக்காவாசிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டனர். இழந்ததை (சொந்த நாட்டை) மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் நபியவர்கள் மக்காவை இரத்தம் சிந்தாமலேயே வெற்றிக் கொண்டனர்.

தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக போரிடுபவர்களுக்கு(அதற்கு) அனுமதியளிக்கப்படுகின்றது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெற்றவனாவான். அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து 'எங்கள் இறைவன் அல்லாஹ்' என்று கூறியதற்காக அநியாயமாக வெறியேற்றப்பட்டனர்.

தங்கள் தாயகத்தை மீட்டிதற்காகப் போராடும் பாலஸ்தீனியர்களை இந்தியா உள்ளிட்ட அனேக நாடுகள் ஆதரிப்பதற்கு எவ்வளவு நியாயங்கள் இருக்கின்றனவோ அந்த அளவு நியாயங்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடமும் இருந்தது. இதையும் நியாய உணர்வு படைத்த எவரும் குறை சொல்ல மாட்டார்கள்.

நான்காவது காரணம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவில் நல்லாட்சி ஒன்றை நிறுவியது மக்காவின் தலைவர்களுக்கு எப்படி சகித்துக் கொள்ள முடியாததாக இருந்ததோ அதுபோலவே மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்த யூதர்களுக்கும் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வருகைக்கு முன் மதீனாவைத் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின் மதீனத்து மக்களில் மிகப் பெரும்பாலோர்(மதீனத்து யூதர்கள் உட்பட) நபியின் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள்.

இதனால் சுற்று வட்டாரத்தில் இருந்த யூதர்கள் சதிவேலைகளில் ஈடுபடலாயினர். சில்லரை விஷமங்களையும் செய்து வந்தனர். மக்காவுக்குத் தகவல் அனுப்பும் ஏஜண்டுகளாகச் செயல்பட்டனர். இஸ்லாத்தை அறிந்து கொள்ள என்று கூறி சில நபித்தோழர்களை அழைத்துச் சென்று கோரமாகக் கொலை செய்தனர். நபிகள் நாயகத்துடன் பல தடவை ஒப்பந்தம் செய்துவிட்டு ஒவ்வொரு தடவையும் அதை மீறி வந்தனர். இத்தகைய நம்பிக்கைத் துரோகிகளுடனும் நபியவர்கள் போர் செய்துள்ளனர். யூதர்களுடன் நடைபெற்ற போர்களில் பெரும்பாலானவை இந்த காரணத்துக்காக நிகழ்த்தப்பட்டவையே.

இதுவரை கூறிய நான்கு காரணங்களுக்காக போர் செய்வதை நேர்மையான ஆட்சியாளர்கள் என்று மாற்றார்களால் போற்றப்படும் தலைவர்கள் கூட தவிர்த்ததில்லை. நாம் வாழும் நாட்டுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவதையே நாம் வரவேற்போம். இவையல்லாத மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.

ஐந்தாவது காரணம்

ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் இன்னொரு நாடு தலையிடக் கூடாது என்பதை உலகம் ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளது. உலகில் அமைதி நிலவிட இந்த கொள்கை அவசியமானதுதான். ஆனாலும் இதற்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் இன்னொரு நாட்டின் விவகாரத்திலும் தலையிடுவது தவறில்லை என்பதையும் உலகம் ஒப்புக் கொண்டிருக்கின்றது.

ஒரு மனிதன் தன் மனைவியை ஏசுகிறான். அடுத்த வீட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். அவளை அடிக்கிறான் அப்போதும் அடுத்த விட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். அவளைப் பட்டினிபோடுகிறான், அப்போதும் கூட அடுத்த வீட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். கூர்மையான கத்தியால் அவளைக் குத்திக் கொலை செய்யப்போகிறான். அப்போதும் அடுத்த வீட்டு விவகாரம் என்று போசாமல் எவரும் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவன் மனிதனாகவே இருக்க முடியாது. அடுத்த வீட்டு விவகாரத்திற்கு நாம் வைத்திருக்கும் எல்லை அடுத்த நாட்டுக்கும் பொருந்தக் கூடியது தான்.

ஒரு கொடுங்கோலன் தனது குடிமக்களைக் கொடுமைப்படுத்துகிறான் தாங்க முடியாத அளவுக்கு கொடுமை அதிகரிக்கின்றது. அவனை எதிர்ப்பதற்கான துணிவோ, பலமோ அம்மக்களுக்கு இல்லை. அந்த நாட்டு மக்களே இந்தக் கொடுங்கோலன் தொலையமாட்டானா? இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறிவிடுவோமா? என்று ஏங்குகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அம்மக்களை மீட்பதை இஸ்லாம் அனுமதிக்கின்றது.

பலவீனமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் 'எங்கள் இறைவா! இந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு பொறுப்பானவரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு உதவியாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! என்று கூறிக் கொண்டுள்ள நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன வந்து விட்டது. (அல்குர்ஆன் 4:75)

யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என்று ஒரு நாட்டு மக்களே எதிர்பார்க்கும் நிலையில் அந்த அக்கிரம ஆட்சியாளருக்கு எதிராக போரிடுமாறு இந்த வசனம் கட்டளையிடுகின்றது.

மக்களைச் சுரண்டி கொள்ளையடித்து, நிற்பதற்கு வரி, நடப்பதற்குவரி, பேசுவதற்கு வரி, எழுதவரி, திருமணவரி, சாவு வரி, வியாபார விரி, விவசாயவரி, வாகனத்துக்கு வரி, குழந்தை பிறப்பதற்கு வரி, என்று தாங்க முடியாத வரிகளை மக்கள் மீது சுமத்தி, இப்படிப்பெறப்பட்ட பணத்தைக் மக்களுக்குச் செலவிடாமல் தங்கத்தால் செருப்பு முதல் சிம்மாசனம் வரை தங்களுக்குச் செய்து கொண்டு, அந்தப் புரத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆட்சி புரியும் நாடுகள் மீதும் நபியவர்கள் படையெடுத்துள்ளனர். அவர்களின் நான்கு கலீபாக்களும் போர் செய்துள்ளனர். அங்குள்ள மக்களே அதை ஆதரிக்கவும் செய்தனர்.

பங்களாதேஷ் என்று அறியப்படும் முன்னால் கிழக்கு பாகிஸ்தான் மக்கள், ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டனர். அங்குள்ள வளங்கள் மேற்குப் பகுதியின் நலனுக்கே பயன்படுத்தப்பட்டன. இதை எதிர்த்து முஜீபுர் ரஹ்மான் என்பவரின் தலைமையில் போராட்டம் நடந்தது. அவரால் இந்தியாவின் உதவியும் கோரப்பட்டது. அன்னிய நாடு என்று பாராமல் அம்மக்களைக் காப்பாற்ற இந்தியா தனது இராணுவத்தை அனுப்பியது. அவர்களை மீட்டது.
விடுதலைப் புலிகள் இன்றைக்கு இந்தியாவிற்கு வேண்டாதவர்களாக ஆகி விட்டாலும், அவர்கள் வேண்டப்பட்டவர்களாக இருந்த காலத்தில் அவர்களுக்குப் பல வகையிலும் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த நாட்டுத் தமிழர்களை இலங்கை அரசு பட்டினி போட்டபோது இந்தியாவின் விமானங்கள் அந்நாட்டின் மீது பறந்து சென்று உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தன.

மாலத்தீவு என்ற அன்னிய நாடு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட போர் இந்திய அதிரப்படை சென்று அதை மீட்டுக் கொடுத்தது.

இவற்றை நியாயப் படுத்துவோர் நியாயமான முறையில் நபியவர்கள் நடத்திய போர்களைக் குறை கூறுவது தான் வியப்பாக உள்ளது.

நபிகள் நாயகத்தின் போர்கள் அமெரிக்காவின் அடாவடித்தனமான போர்கள் போன்றவை அல்ல.

அனைவராலும் நியாயமானவை என இன்றளவும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகின்ற காரணங்களுக்காகவே நபியவர்களும் போர் செய்துள்ளனர். இஸ்லாத்தைக் குறை கூற வேண்டுமென்பதற்காகவே இது சம்பந்தமாக தப்புப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

உருவ வழிபாட்டை அனுமதிக்காத இஸ்லாம், அதே நேரத்தில் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கக்கூடாது எனக் கூறுகிறது என்றால் அதிலிருந்து இஸ்லாத்தை அவர்கள் விளங்கட்டும்.

மக்களில் சிலர் மூலம் சிலரை அல்லாஹ் தடுக்காவிட்டால், கிறித்துவ, யூத, ஆலயங்கள் மற்றும் இறைவனின் பெயர் அதிகமாகக் கூறப்படும் பள்ளிவாயில்கள் இடிக்கப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் 24:40)

எந்த ஆலயமும் இடிக்கப்படக் கூடாது என்பதை இதன் மூலம் இறைவன் கூறுகின்றான்.

மற்றவர்கள் வணங்குபவற்றை நீங்கள் ஏசாதீர்கள். அதனால் அவர்களும் அறியாமையினால் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)

ஏகத்துவக் கொள்கைளை உயிர் மூச்சாகக்கொண்டுள்ள இஸ்லாம், மற்ற மதத்தவர்களுக்கு அநீதி இழைக்க நாடியிருந்தால் இந்த இரண்டு போதனைகளையும் கூறியிருக்காது.

இதுபோலவே, மற்ற விஷயங்களில் இஸ்லாம் எவ்வளவு தாராளத்துடன் நடந்திருக்கும் என்பதை நடுநிலையான பார்வை இருப்பவர்கள் விளங்கலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum