தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சகல நலமும் தரும் சோமவார விரதம்

Go down

 சகல நலமும் தரும் சோமவார விரதம் Empty சகல நலமும் தரும் சோமவார விரதம்

Post  ishwarya Thu May 23, 2013 5:41 pm

துணிக் கடையில் எப்போதுதான் கூட்டமில்லை! விழா, பண்டிகை என்றால் அபரிதமாகக் கூட்டம் இருக்கத்தான் செய்யும்; ஆனால் சாதாரண நாட்களிலும் விரைவாகச் செல்ல முடியாதபடி கூட்டம் இருக்கத்தான் செய்தது.கிருத்திகாவும் தீபாவும் தங்களுக்குத் தேவையான துணிகளைத் தேர்வு செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தேர்வு செய்து வந்த பிறகு ஆகும் செலவை மேற்கொள்ளத் தன்னைத் தயார் செய்துகொண்டிருந்த அவர்களுடைய அப்பா, மனைவி புவனேஸ்வரியுடன் சற்று ஒதுங்கி நின்று பேசிக் கொண்டிருந்தார். அவ்வப்போது ஒப்புக்காக, ‘‘அம்மா இது எனக்கு சரியா இருக்குமா, சூட்டாகுமா?’’ என்று இங்கிருந்தபடியே புவனேஸ்வரியிடம் கேட்டு அவளுடைய பதிலுக்கும் காத்திராமல் அடுத்த தேர்வில் இறங்கினார்கள். அதைப் பார்த்து மெல்ல சிரித்துக் கொண்டார் அப்பா.

‘‘என்ன, நீங்க புடவை எதுவும் எடுத்துக்கலையா?’’ பழக்கமான குரல் கேட்டது. பவானி மாமி! ‘‘என்ன சார் சௌக்கியமா?’’புவனேஸ்வரியின் கணவரைப் பார்த்துக் கேட்டாள். ‘‘நல்லா இருக்கேம்மா’’அவர் சொன்னார். ‘‘விரதங்களைப் பத்தியெல்லாம் தொடர்ந்து விவரமா சொல்லிட்றிக்கீங்கன்னு என் மனைவியும் குழந்தைகளும் சொல்வாங்க. ஆனாஎன்னை இவங்க எதுக்கும் வற்புறுத்தறதில்லை. நானும் இவங்க விரத விஷயங்கள்ல குறுக்கே வர்றதில்லை. ஆனா அவங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்வேன்.’’ ‘‘அதுவே பெரிசுதான்’’, மாமி சொன்னாள். ‘‘புவனேஸ்வரி, நாளைக்கு திங்கட்கிழமை. சோமவாரம். விரதம் இருக்கக்கூடிய நாள்.’’

‘‘அப்படியா? பொண்ணுங்க ரெண்டும் இப்போதைக்கு வரா மாதிரி தெரியலே. விவரம் சொல்லுங்களேன்...’’ புவனேஸ்வரி மாமியைக் கேட்டுக் கொண்டாள். தயக்கத்துடன் தன் கணவரைப் பார்த்தாள். ‘‘நானும் வர்றேன். அங்கே சேர்ல உட்கார்ந்துகிட்டு பேசுவோம். நீங்க முதல்ல போங்க, நான் பொண்ணுங்ககிட்ட சொல்லிட்டு வர்றேன்’’ என்றார், மோகன். இருவரும் சற்றுத் தொலைவிலிருந்த நாற்காலிகளில் போய் அமர்ந்தார்கள். ‘‘சோமவாரம்னா திங்கட்கிழமைன்னு அர்த்தம்’’ மாமி ஆரம்பித்தாள். ‘‘சோமன் அப்படீன்னா பார்வதியோட சேர்ந்திருக்கற சிவபெருமான் அப்படின்னு அர்த்தம்...’’ ‘‘சோமன்னா சந்திரன்னும் ஒரு அர்த்தம் இருக்கு இல்லே?’’ என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்தார் மோகன். ‘‘பொண்ணுங்களை மெதுவா வந்தா போதும்னு சொல்லிட்டேன்’’ என்று மனைவியிடம் விவரம் தெரிவித்தார்.

‘‘ஆமாம்...’’ மாமி அவரை ஆமோதித்தாள். ‘‘இந்தத் திங்கட்கிழமைக்கு ஒரு பெருமை உண்டு. அதாவது, பிறைச் சந்திரன், சிவபெருமானுடைய தலைமேலே ஆரோகணிச்சுகிட்டிருக்கறத பாத்திருப்பீங்க...’’ ‘‘ஆமாம், சந்திரன் இப்படி சிவன் தலையிலே வந்து உட்கார்ந்ததுக்கு ஏதோ புராண கதை இருக்கு இல்லே?’’ புவனேஸ்வரி கேட்டாள். ‘‘ஆமாம். சொல்றேன். சந்திரன் தட்சனோட மருமகன். எப்படியாப்பட்ட மருமகன் தெரியுமா? தட்சனோட எல்லா பெண்களையும் மணந்து கொண்டவன்.’’ ‘‘அடக் கடவுளே, எல்லா பெண்களையும்னா எத்தனை பெண்கள்?’’ மோகன் கேட்டார். ‘‘இருபத்தேழு பெண்கள்...’’ பவானி மாமி கொஞ்சம் வெட்கப்பட்டே சொன்னாள். ‘‘ஒண்ணு ரெண்டு பெண்களைப் பெற்றெடுத்து ஒவ்வொரு மாப்பிள்ளைங்க கையிலே பிடிச்சுக் கொடுக்கறது தான் வழக்கம்.

ஆனாதட்சனோ, தன்னோட இருபத்தேழு பெண்களையும் சந்திரனுக்கே கல்யாணம் பண்ணி வெச்சுட்டான்...’’ ‘‘அடக் கடவுளே!’’ வேதனையோடு வியந்தாள், புவனேஸ்வரி. ‘‘இதுக்குக்கூட தட்சன் காரணமில்லே, அவனோட பெண்கள்தான் காரணம். ஆமாம், அவங்க எல்லாரும் சந்திரனையே கல்யாணம் பண்ணிக்கறதுன்னு தீர்மானமாக இருந்தாங்க. அவ்வளவு அழகு சந்திரன்...’’ ‘‘அதுசரி, அதுக்காக...’’ புவனேஸ்வரி இழுத்தாள். ‘‘இரண்டு பெண்டாட்டிக் காரன்னாலேயே அவன்பாடு பெரும்பாடுதான். சந்திரனால் எப்படி இருபத்தேழு பெண்களோட குடும்பம் நடத்த முடிஞ்சுது?’’ மோகன் கேட்டார். பிரச்னை உருவாகிடுச்சு. ஆனா, இந்த பிரச்னையில் இருபத்தாறு பெண்கள் ஒரு அணியிலேயும் ரோகிணிங்கற ஒரு பெண் இன்னொரு அணியிலேயும் இருந்தாங்க.’’

‘‘இது என்ன கூத்து?’’

‘‘ஆமாம். அந்த இருபத்தாறு பேர் என்ன தெரியுமா? அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி....’’

‘‘இது நட்சத்திரங்களோட பெயர்கள்தானே?’’

புவனேஸ்வரி கேட்டாள்.

‘‘ஆமாம், இருபத்தேழு நட்சத்திரப் பெண்கள்தான் அவங்க...’’

‘‘ஓஹோ. சரி, இந்த பிரச்னைக்குக் காரணம் யாரு?’’

‘‘சந்திரன்தான். தன்னோட இருபத்தேழு மனைவிகள்ல அவன் ரொம்பவும் நேசிச்சது ரோகிணியைத்தான். அவகிட்டதான் அவன் அதிகப் பிரியம் வெச்சிருந்தான். தன் மனைவியாக அவளை மட்டும் அங்கீகரிச்சிருந்தான்...’’ ‘‘இப்படியாப்பட்டவன் மிச்ச இருபத்தாறு பெண்களை கல்யாணம் பண்ணியிருந்திருக்கக் கூடாது...’’ புவனேஸ்வரி அவர்களுக்காக வருத்தப்பட்டாள். ‘‘ஆச்சா, தாங்கள் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிண்ட சந்திரன் இப்படித் தங்களைப் புறக்கணிக்கிறானேன்னு அவங்களுக்கெல்லாம் ரொம்ப அவமானமாக இருந்தது. எல்லோரும் அவனோட மனைவிகள்தானே, எல்லோருக்கும் அவன் சம அந்தஸ்து கொடுக்க
வேண்டியதுதானே?’’

‘‘ஆமாம், அதுதானே நியாயம்?’’ மோகன் கேட்டார். புவனேஸ்வரி கணவரை முறைத்தாள். ‘‘வந்து, கதை, கதைக்காகச் சொன்னேன்’’ என்று மழுப்பினார்.
‘‘அவங்க நேராகத் தங்களோட அப்பாகிட்ட போய் கண்ணீரும் கம்பலையுமாக முறையிட்டார்கள். இதென்னடா வம்பாப்போச்சுன்னு தட்சன் கவலைப்பட்டான். இவங்களா விரும்பி அவனைக் கல்யாணம் பண்ணிகிட்டு இப்ப தன்கிட்டேயே வந்து அழறாங்களேன்னு வேதனைப்பட்டான். சந்திரனும் எல்லோரையும் சமமாக பாவிச்சு குடும்பம் நடத்துவான்னுதானே அவனுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சோம்... இப்படி ஒரு பெண்ணுக்கு ஆதரவையும் இருபத்தாறு பெண்களுக்கு புறக்கணிப்பும் தருவான்னு நினைச்சோமா?’’

‘‘ரெண்டு பெண்கள்னாலேயே அப்பன்பாடு திண்டாட்டம்தான். பாவம் தட்சன்.’’ பரிதாபப்பட்டார், மோகன். ‘‘தட்சன் ஒரு முடிவுக்கு வந்தான். நேரே சந்திரன்கிட்டேயே போனார். அவன்கிட்ட பேசினார். எல்லோரையும் சமமாக நடத்தறதுதான் சரின்னு புத்திமதி சொன்னார். தன்னோட பெண்களுக்கு நல்ல வழி தேட அவர் முயற்சி பண்ணினார். ஆனாசந்திரனோ தட்சன் பேசினதைக் காதிலேயே போட்டுக்கலே. பூரணமா, முழு ஒளியுடையவனாக, பார்க்கறவங்க எல்லாரையும் கவர்ந்திழுக்கும் அழகு படைச்சவனாக அவன் இருந்தான். ‘இந்த கவர்ச்சிதானே தன்னோட எல்லா பெண்களையும் ஈர்த்தது...?’ன்னு மனம் வெதும்பினான் தட்சன்...’’ ‘‘நியாயம்தானே?’’

‘‘அதாவது, தன்னோட அழகினாலே அவன் அகங்காரம் கொண்டிருக்கிறான். இல்லையா? அவனோட அகங்காரம் அழிஞ்சா அவனுக்கு புத்தி வரும். அவனோட அகங்காரம் அழியணும்னா அவனோட அழகும் அழியணும்... அப்படி ஒரு நிலை ஏற்பட்டாதான் அவனுக்கு புத்தி வரும்னு நினைச்சார்.’’ ‘‘ஐயோ, மாமனாரே மருமகனுக்கு சாபம் விட்டாரா?’’ ‘‘ஆமாம், உன்னோட இறுமாப்புக்குக் காரணமான உன்னோட அழகு அழியணும். அதுவும் ஒரேயடியாக அழிஞ்சுடக்கூடாது. நீ அணு அணுவாக தண்டனையை அனுபவிக்கணும். தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக நீ அழகு கொறைஞ்சு, கடைசியிலே சுத்தமா ஒளியே இல்லாம இருட்டாகிடணும்...’’

‘‘ஐயோ, இது ரொம்பக் கொடுமையாச்சே...!’’ ‘‘கொடுமைதான். அப்படி அவன் சாபம் விட்டதும் உடனேயே சந்திரன் நாளொரு பிறையும் பொழுதொரு தோற்றமுமாக தேய்ஞ்சுண்டே வந்தான். மாமனாரின் சாபம் பொல்லாததுங்கறதைப் புரிஞ்சுண்ட சந்திரன், அவரோட கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டான். தேய்ஞ்சுகிட்டே வர்ற தன்னோட தேஜஸ் மறுபடி வளரணும், ஒளி வீசணும்னு கேட்டுகிட்டான். ஆனா தட்சன் மசியவேயில்லை. சாபமிட்டா இட்டதுதான்னு சொல்லிட்டார்.’’ ‘‘அடப்பாவமே’’ மோகன் வருத்தப்பட்டார். ‘‘பதறிப்போனான் சந்திரன். நேரே ஓடிப்போய் சிவபெருமானை சரணடைஞ்சான். ‘காப்பாத்துங்க’ன்னு வேண்டிகிட்டான். பரமசிவன் அவனைப் பரிதாபமாகப் பார்த்தார்.

இரவு வேளைகளில் உலகுக்கே ஒளி தந்துகிட்டிருந்த இவன், இப்படி மொத்தமா தேய்ஞ்சு போனா இரவிலே மக்களுக்கு ஒளியே கிடைக்காமப்போய் துன்பப்படக்கூடிய சூழ்நிலை உருவாகிடுமேன்னு யோசிச்சார்.’’

‘‘வாஸ்தவம்தானே...’’

‘‘அதே சமயம் தட்சன் இட்ட சாபத்தை மாற்றவும் அவர் விரும்பலே. உலக மக்கள் நன்மைக்காக சந்திரனைக் காப்பாத்தவும் வேணும். என்ன பண்ணலாம்னு யோசிச்சார். மூன்றாம் பிறையாக சுருங்கிப் போய் அவதிப்பட்டுகிட்டிருந்த சந்திரனை எடுத்து அப்படியே தன்னோட தலையிலே சூட்டிகிட்டார்.’’ ‘‘அட சந்திரனுக்குதான் எவ்வளவு பெரிய பாக்கியம்!’’ ‘‘ஆமாம். அப்படி சந்திரனைத் தன் தலையில் சிவபெருமான் வெச்சுகிட்டது ஒரு சோமவாரத்திலே. அதாவது திங்கட்கிழமையிலே.’’ என்று மாமி சொன்னாள். ‘‘சந்திரனுக்கு அப்பதான் நிம்மதியாச்சு. தான் தேய்ஞ்சு வளரும் தண்டனையிலிருந்து தப்ப முடியாதுங்கறதை உணர்ந்த அவன், அதுக்கப்புறம் எல்லா மனைவிகளையும் சமமாக பாவிச்சு குடும்பம் நடத்த ஆரம்பிச்சான்.’’

‘‘அதனாலதான் அமாவாசைன்னு வருதா?’’

‘‘ஆமாம். தேயறதும் வளர்வதும் சந்திரனோட இயல்பாயிடுச்சு. அதாவது பௌர்ணமியும் அமாவாசையுமாக வாழ ஆரம்பிச்சான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஒளி கூடவும் அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஒளி குறையவும் வழி வகுத்துக் கொடுத்த பரமேஸ்வரனை வழிபட்டு, விரதம் இருக்கறதுதான் சோமவார விரதம்’’ மாமி கதையை முடித்தாள். ‘‘ஓஹோ, விரதம் எப்படி இருக்கறது மாமி?’’ புவனேஸ்வரி கேட்டாள். ‘‘சொல்றேன். திங்கட்கிழமை அன்னிக்கு, காலையிலே குளிச்சுட்டு சிவனுக்கு பூஜை பண்ணுங்க. அன்னிக்குப் பூராவும் சிவ ஸ்தோத்திரம் சொல்லுங்க. வீட்டிலேயே இருக்கக்கூடியவங்க இப்படி நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாம விரதம் இருக்கறது சாத்தியம்தானே? சிவாஷ்டகம் படிக்கலாம்.

சிவ அஷ்டோத்திரம் சொல்லலாம். மனசார சிவனை தியானிச்சு, உங்களோட நியாயமான தேவைகளுக்காகப் பிரார்த்தனை பண்ணிக்கோங்க.’’ ‘‘ஆபீஸ் போகக் கூடிய பெண்கள் என்ன செய்யலாம் மாமி?’’ புவனேஸ்வரி கேட்டாள். ‘‘ஆபீஸ் போகக்கூடிய பெண்கள் அவங்கவங்க உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றாமாதிரி உணவு எதுவும் எடுத்துக்காம இருக்கலாம். அல்லது சிம்பிளான சைவ உணவை ஒருவேளை மட்டும் எடுத்துக்கலாம். சிவ ஸ்தோத்திரங்கள் மனப்பாடமாகத் தெரிஞ்சா சொல்லிகிட்டிருங்க. வேலை நேரத்திலே டீ நேரம், உணவு இடைவேளை நேரம்னு கிடைக்குமானா அப்போ, கையோட ஸ்லோகப் புத்தகம் எடுத்துகிட்டுப் போய் அதைப் பார்த்துப் படிச்சுகிட்டிருக்கலாம்.’’

‘‘இது நல்ல ஐடியாவா இருக்கே! டீ டயத்திலேயும் லன்ச் டயத்திலேயும் வீணா அரட்டை அடிக்காம இப்படி உபயோகமா படிச்சு புண்ணியம் தேடிக்கலாம்’’ மோகன் சொன்னார். ‘‘இதுக்கும் அவகாசமும் வசதியும் இல்லேன்னு வெச்சுக்கோங்க, கவலைப்படாதீங்க. ‘ஓம் நமசிவாய’ங்கற பஞ்சாட்சர மந்திரத்தை மட்டுமாவது நாள்பூரா சொல்லிகிட்டேயிருங்க. வேலைக்குப் போற பெண்களால காலையில் சிவன் கோயிலுக்குப் போக நேரமில்லாம இருக்கலாம். அப்படிப்பட்டவங்க, மாலையிலே வீட்டுக்கு வந்தப்புறம் குளிச்சிட்டு சிவன் கோயிலுக்குப் போய் சிவ தரிசனம் பண்ணிட்டுத் திரும்பலாம்.’’

‘‘அதுவும் முடியாம இரவு வீடு திரும்ப ரொம்ப நேரமாயிடுச்சுன்னா?’’ புவனேஸ்வரி கேட்டாள். ‘‘அதனால பரவாயில்லே. ஆனா, நாள்பூராவும் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை விடாம சொல்லிகிட்டேயிருங்க.’’ ‘‘நம்ம சௌகரியம்போல இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்ங்கறீங்க. ஆனா இறைவனை நினைச்சுகிட்டே இருக்கறது முக்கியம், இல்லையா?’’ மோகன் கேட்டார். ‘‘ஆமாம். அதோட இது மாதிரி திங்கட்கிழமையிலே பிரதோஷமும் வருமானால், அது ரொம்பவும் விசேஷமானதாக அமையும்.’’ ‘‘ஓஹோ, அப்படின்னா சாயங்காலத்திலே கோயில்ல கூடுதல் நேரம் செலவிடணும்.’’ ‘‘ஆமாம். பிரதோஷ நேரத்திலே சிவனுக்கு செய்யப்படற அபிஷேகம், அர்ச்சனை எல்லாத்தையும் மனங்குளிரப் பார்த்து எல்லா பாக்கியங்களையும் அடைய அச்சாரம் வாங்கிக்கலாம்.’’

‘‘அடடா, எவ்வளவு சிம்பிளா இருக்கு இந்த விரதம்!’’ வியந்தாள் புவனேஸ்வரி. ‘‘பொதுவாகவே உண்ணா நோன்பு இருக்கறது’’ மாமி ஒரு தகவலைச் சொல்ல ஆரம்பித்தாள். ‘‘என்ன, என்ன சொன்னீங்க மாமி....?’’ புவனேஸ்வரி கேட்டாள். ‘‘அதான், விரதம்...விரதம் இருக்கறதால குடல்ல விஷமாகத் தங்கியிருக்கற வெளியேறாத கழிவுகள் எல்லாம் சுத்தமாக க்ளீன் ஆகிடும்னு விஞ்ஞான பூர்வமா இப்போ கண்டுபிடிச்சிருக்காங்களாம். அதனால் விரதங்கள் இருக்கறது ஆன்மிக பலத்தோட ஆரோக்கியமும் தரும்ங்கறதைப் புரிஞ்சுகிட்டு, விரதம் இருங்க. வளமெல்லாம் பெறுங்க.’’ ‘‘ரொம்ப தாங்ஸ் மாமி, அதோ என் பொண்ணுங்க வந்துட்டாங்க. நீங்க சொன்னதை அப்படியே ஒரு எழுத்து விடாம அவங்களுக்குச் சொல்லணும். ஏங்க நீங்க போய் பில் செட்டில் பண்ணிட்டு வாங்க’’ -புவனேஸ்வரி கணவரை கேஷ் கவுன்டருக்கு அனுப்பிவிட்டு மாமியிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டாள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum