ஏசுவின் உயிர்ப்பு பெருவிழா
Page 1 of 1
ஏசுவின் உயிர்ப்பு பெருவிழா
ஏசுவின் உயிர்ப்பு பெருவிழாஏசுநாதர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெரு விழாவை கொண்டாடுகிறார்கள். சிலுவையில் மரணம் அடைந்த இயேசு கிறிஸ்து, மூன்றாம் நாளில் மீண்டும் உயிரோடு வந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இந்த அடிப்படை நம்பிக்கை மீதுதான் கிறிஸ்தவ சமயம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
உலகில் எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ கல்லறைகள் உள்ளன. உலக நாடுகளையும், சமயங்களையும் வளர்த்தெடுத்த மாபெரும் தலைவர்களின் கல்லறைகள் அனைத்தும் மூடிய நிலையிலேயே காணப்படுகின்றன. ஆனால், ஒரே ஒருவரின் கல்லறை மட்டும் திறந்தே இருக்கிறது. அவர் போர் செய்யவில்லை, உலக அரசுகளை கட்டி எழுப்பவில்லை.
அவர் வாழ்ந்தபோதும் அனைவரும் அவரை எதிர்த்தார்கள், இறந்த நேரத்திலும் மக்கள் அவரை ஏளனம் செய்தார்கள். அவர் ஏழைகளோடும், பாவிகளோடும் வாழ்ந்தார், இறந்த போதும் கயவர்கள் நடுவில் சிலுவையில் தொங்கினார். கிறிஸ்தவர்களால் இறைமகன் என்று அழைக்கப்படும் அவர்தான் இயேசு. சாவையே லட்சியமாக கொண்டு வாழ்ந்த இயேசு கிறிஸ்து, தமது பணி வாழ்வில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார்.
அவர் வாழ்ந்த யூத சமூகத்தில் பெண்களும், குழந்தைகளும் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை. நோயாளிகளும், பாவிகளும், ஏழைகளும் கடவுளால் சபிக்கப்பட்டவர்களாகவும், ரோம் அரசுக்காக வரி வசூலித்தவர்கள் இன விரோதிகளாகவும் கருதப்பட்டனர். ஆனால் இத்தகைய மக்களோடு உறவாடி, அவர்கள் நடுவிலேயே இயேசு பணி செய்தார்.
அவர் ஒரு யூத போதகராக இருந்தும், சமயச் சட்டங்களின் பெயரால் மக்கள் ஒடுக்கப்பட்டதை எதிர்த்தார். இதனால் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்களும், சமயத் தலைவர்களும் இயேசுவை எதிர்த்தனர். அதே வேளையில், இயேசு மக்களிடையே பல்வேறு அற்புதங்களை செய்தார். தொழுநோய், இரத்தப்போக்கு, முடக்குவாதம் உள்ளிட்ட பல நோய்களை நலமாக்கினார்.
பார்வையற்றோர், காது கேளாதோர், மற்றும் வாய் பேசமுடியாதோரை குணமாக்கினார். இறந்தவர்களையும் உயிரோடு எழுப்பினார். ஏசுவின் போதனைகளை கேட்கவும், அதிசயங்களை காணவும் ஏராளமான மக்கள் அவரை பின்தொடர்ந்தனர். இயேசு இஸ்ரயேல் மக்களின் `மெசியா' என்ற அரசராகப் போகிறார் என்ற நம்பிக்கையில், அவரது 12 சீடர்களும் பதவிக்காக போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.
யூத சமயத் தலைவர்களோ இயேசுவை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டினர் என்பதை பைபிள் மூலம் அறிகிறோம். ஏழை, எளியவர்களுக்காகவே இயேசு வாழ்ந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத சமயத் தலைவர்களின் சூழ்ச்சியால், அவருக்கு ரோம் ஆளுநர் பிலாத்து மரண தண்டனை விதித்தார். கல்வாரி மலை வரை சிலுவையை சுமந்து சென்ற இயேசு, அங்கு அதே சிலுவையில் அறையப்பட்டார்.
அப்போது யூத சமயத் தலைவர்கள், `பிறரை விடுவித்தான் தன்னையே விடுவிக்க இயலவில்லை. `நான் இறைமகன்' என்றானே! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம்` (மத்தேயு 27:42-43) என்று ஏளனம் செய்தார்கள். மரணத்தை வென்று உயிர்த்தெழ வேண்டுமென்ற இறைவனின் திட்டத்தால், இயேசு அமைதியாக தன்னை சாவுக்கு கையளித்தார்.
ஆனால் இறந்து அடக்கம் செய்யப்பட்ட பிறகும், "மூன்றாம் நாளில் மீண்டும் உயிரோடு வருவேன்` என்று இயேசு கூறியிருந்த வார்த்தைகளுக்கு பயந்த சமயத் தலைவர்கள், அவரது கல்லறையை காவல்காக்க வீரர்களை ஏற்பாடு செய்தனர். என்றாலும் இயேசு வெற்றி வீரராக உயிர்த்து எழுந்தார் என்பதை பைபிள் இவ்வாறு சொல்கிறது:
மூன்றாம் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது.
அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர். அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, "நீங்கள் அஞ்சாதீர்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.
நீங்கள் விரைந்து சென்று, `இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்' எனச் சீடருக்குக் கூறுங்கள்'' என்றார். (மத்தேயு 28:1-7) தாம் கூறியபடியே, இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். வாழ்வின் ஊற்றாம் இறைமகன் இயேசுவிடம் மரணம் தோற்றுப்போனது. ஆனால், இயேசு மீண்டும் உயிருடன் வந்ததை ஏற்றுக்கொள்ள அவரது சீடர்கள் உடனடியாக முன்வரவில்லை.
இயேசு நேரடியாக அவர்கள் முன் தோன்றியபோதும், அது ஆவியாக இருக்கும் என்று நினைத்து அவர் உயிர்த் தெழுந்ததை நம்பத் தயங்கினார்கள் (லூக்கா 24:37). அவரது சீடர்களில் ஒருவரான தோமா, இயேசுவின் காயங்களில் விரலை விட்டுப் பார்த்தால்தான் நம்புவேன் என்று பிடிவாதமாக இருந்தார்.
இயேசு கைது செய்யப்பட்ட போது, அவரை தனியே விட்டுவிட்டு தப்பியோடிய சீடர்கள், இயேசு உயிர்த்தெழுந்த பிறகும் வீடுகளுக்குள் பதுங்கியிருந்தார்கள். பின்னர் இயேசுவின் உயிர்ப்பை புரிந்து கொண்டு, அவரது நற்செய்தியை உலகெங்கும் அறிவிப்பதற்காக உயிரையும் கொடுக்க துணிந்தார்கள்.
இதுவே அவர் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு வலுவான சான்று. மாவீரன் நெப்போலியன் போரில் தோற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, "இயேசு நிறுவிய அன்பின் அரசு இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நான் எனக்காக ஒன்றை செய்ய வேண்டுமானால், ஒரு வீரனை அழைத்து அவனை நேருக்கு நேர் பார்த்து கட்டளையிட்டால்தான் அந்த வேலை நடக்கும்.
நான் இப்போது நாடு கடத்தப்பட்டு சிறையில் இருக்கும் வேளையில், எனக்காக பணிவிடை செய்ய யாருமே இல்லை. ஆனால் இயேசுவின் ஆற்றல் அளவற்றது. இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் அவருக்காக, அவர் மீது கொண்ட அன்புக்காக உயிரையும் கொடுக்கத் துணியும் ஏராளமான மக்கள் இன்றும் இருக்கிறார்கள்.
அவர் என்றும் வாழும் கடவுளாக இருக்கிறார் என்பதே என் அசைக்க முடியாத நம்பிக்கை` என்று கூறினார். இயேசு உயிர்த்தெழுந்தபோது வானதூதரால் திறக்கப்பட்ட அந்த கல்லறை இன்றளவும் திறந்தே இருக்கிறது. `இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்.
இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல` (உரோமையர் 6:9) என்ற பைபிள் வார்த்தைகளின்படி, உயிர்த்தெழுந்த இயேசு என்றென்றும் வாழ்கிறார் என்பதே கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இதை சிறப்பிக்கும் வகையில், ஈஸ்டர் பெருவிழா உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாவையின் உயிர்ப்பு
» ஏசுவின் தோழர்கள்
» சென்னை கோவில்களில் ஆடிப் பெருவிழா
» மயிலை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா
» ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஆரம்பம்
» ஏசுவின் தோழர்கள்
» சென்னை கோவில்களில் ஆடிப் பெருவிழா
» மயிலை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா
» ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஆரம்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum