தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுபிட்சம் தரும் சுப்ரமணியன்

Go down

சுபிட்சம் தரும் சுப்ரமணியன் Empty சுபிட்சம் தரும் சுப்ரமணியன்

Post  ishwarya Fri May 10, 2013 11:54 am



விடிந்தால் கல்யாணம்..! ஊரும் உறவும் மட்டுமன்றி உலகமே திரண்டிருந்தது அங்கே.

இடம் _ கயிலை மலை. மணமகன் _ ஈஸ்வரன். மணமகள் _ ஈஸ்வரி. நேரம் குறைந்து கொண்டே போக, கூட்டம் நிறைந்து கொண்டே போனது.

அப்போதுதான் நிகழ்ந்தது அந்த சம்பவம். சட்டென்று வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. அட்சதை தூவ வந்தவர்களிடையே அச்சத்தைத் தூவியது அந்த சம்பவம். பயந்து ஓடியவர்களை அன்போடு பார்த்தார், அரன். தன் மணம் காண வந்த அவர்களின் கனம் தாங்காது பூமி தாழ்ந்து விட்டதைச் சொன்னார். நிலைப்படுத்துவதாகச் சொல்லி நிம்மதி தந்தார். பின், குறு முனியை அழைத்து தென்பகுதி செல்ல ஆணையிட்டார்.

புவி உயிர்கள் முழுதும் பார்க்கும் புண்ணிய தரிசனத்தை தான் மட்டும் காணாது போக வேண்டுமா? அகத்துள் புழுங்கினார் அகத்தியர். அவர் மனதைப் படித்த மகேசன் சொன்னார், குறுமுனியே வருந்தாதே! உன் மனக்குறை தீரும்படி என் மணக்கோலம் நீ இருக்கும் இடத்திலேயே கிட்டும்!

புறப்பட்டார் அகத்தியர். அரக்கர் பலர் எதிர்ப்பட்டனர் வழியில். அவர்களை அரன் அருளால் அழித்தார் அகத்தியர். மலைவடிவாக நின்று மாயத்தோற்றம் காட்டினான் கிரௌஞ்சன் எனும் அரக்கன். அவனை அடக்கிய அகத்தியர், பரமனைப் பணிந்தார்.

குறுமுனியே அஞ்ச வேண்டாம்… எம் குமாரனை நாம் அங்கு அனுப்புவோம்… அவன் அம் மலையைத் தகர்ப்பான்! என வாக்காக ஒலித்தார் வாமதேவன். பின்னர், அரன் ஆணையை ஈடேற்றினார் அகத்தியர். மகேசனின் மணக்கோலத்தை மனம் விரும்பிய போதெல்லாம் தரிசித்தார்.

காலம் நகர்ந்தது.

முக்கண்ணன் மகனாக முருகன் உதித்தான். மூவுலகும் காத்திட அசுர வதம் புரிந்திடப் புறப்பட்டான். சூழ்ச்சிகள்அனைத்துக்கும் சூத்ரதாரியாக விளங்கிய சூரபன் மனை வதைத்திட, வேல் தந்து வழியனுப்பினாள், அன்னை வேல் நெடுங்கண்ணி. வந்த வடிவேலன் வழியிலே தடைசெய்த தாரகனைத் தகர்த்தான். அவனது இருப்பிடமான கிரௌஞ்சமலை அகத்தியர் சாபப்படி ஆறுமுகனால் தகர்ந்து பறந்தது. அப்போது அம்மலையில் மூன்று துண்டங்கள் மகேந்திர மலைக்குக் கிழக்கே விழுந்தன. அதில் கிரௌஞ்சனின் தலைப்பகுதி விழுந்த இடம் பூரணகிரி ஆனது. முடிவில் சூரனையும் வதைத்து வாகை சூடிய வடிவேலனுக்கு தன் மகள் தேவயானையை மணம் முடித்து வைத்தான் தேவேந்திரன். மாதவனின் மகள்கள் இருவர் முற்பிறவியில் கேட்ட வரத்தின்படி மால்மருகன் இருவருக்கு மாலையிட வேண்டும். அதன்படி வள்ளியையும் மணந்து கொண்டான் வடிவேலன். அப்போது வள்ளி ஒரு வரம் கேட்டாள்.

பூரணகிரியில், எங்களோடு நீர் கோயில் கொள்ள வேண்டும். அருகே உள்ள பகுதி என் பெயரால் அழைக்கப்பட வேண்டும்..!, அப்படியே! என்றான் ஆறுமுகன். பூரணகிரியில் வேலவன் கோயில் கொண்டதை அறிந்தார் அகத்தியர். வந்தார். பணிந்தார். அவர் அன்புக்குப் பரிசாக, அருந்தமிழ் ஞானத்தைத் தந்தான் ஞானஸ்கந்தர். அதன்பின், பிரம்மன், இந்திரன் எனப் பலரும் வந்து குமரனைக் கும்பிட்டு குறைகள் நீங்கப் பெற்றனர்.

இதோ, இன்றும் அதே குன்றின் மேல் நம் குறையாவும் தீர்த்திடக் கோயில் கொண்டு காட்சியளிக்கிறான் குமரன். பூரணகிரியான குன்றின் அருகே அமைந்துள்ள தலம், வள்ளி கேட்ட வரத்தின்படி, வள்ளியூர் என்றே இப்போதும் அழைக்கப்படுகிறது.

சுபிட்சம் யாவும் தரும் அந்த சுப்ரமண்யனை தரிசிக்க கோயிலுக்குள் நுழைவோம் வாருங்கள்!

நெல்லை மாவட்டத்திலேயே நெடிது உயர்ந்து நிற்கும் குகைக்கோயில் இதுதான். பூரணகிரி என்ற பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது இக்கோயில். அதோ, கருவறையில் கருணையே உருவாக வள்ளி தேவசேனாவுடன் வடிவழகு நிரம்பியவனாகக் காட்சி தரும் சுப்ரமண்யனை தரிசியுங்கள். வலக்கரத்திலே மலரும், இடக்கரத்தினை தொடையில் ஊன்றியும் வைத்திருக்கிறான் தெரிகிறதா? பின்னிரு கரங்கள் வஜ்ரமும், சக்தி ஆயுதமும் ஏந்தியுள்ளன. அர்த்த மண்டபத்தில் அமைந்திருப்பவர், ஆறுமுகநயினார். குகைப்பாதை வழியே வலம் வந்தால், இதோ ஜெயந்தீஸ்வரர் சன்னதி. லிங்க வடிவில் காட்சி தரும் ஈசனையும் உடன் காட்சி தரும் சௌந்தர்ய நாயகியையும் வழிபட்டு விட்டீர்களா! அர்த்தமண்டபத்தில் வலம் வரலாமா?

கன்னிவிநாயகர், வீரபாகு, வீரமகேந்திரனைப் பார்த்து விட்டு, வலப்புறமுள்ள குகையின் வாயிலில் விநாயகர், மலைதாங்கி சாஸ்தா, இடைக்காடர், எட்டு சக்திகளின் பீடம் என எல்லாவற்றையும் பார்த்துவிட்டீர்களா? விளக்கேற்றும் சித்தர் அருகே, உற்சவரான முருகனையும் பார்த்து விடுங்கள். மயில் மண்டபத்தில், உள்ள குகையில் முருகனை முதன் முதலில் கண்டு வணங்கிய உக்கிர பாண்டியனின் பேரனான அள்ளியுண்ட பாண்டியன் சிலை இருக்கிறது. இக்கோயிலைக் கட்டியவன் இவனே. சண்முக விலாசம், சபாபதி மண்டபம், சண்முகர் மண்டபம் எல்லாம் பார்த்தாயிற்றா? புராணக் காட்சிகளும், சிற்பத்திறனும் பளிச்சிடுவதை அங்கங்கே பார்க்கத் தவறிவிடாதீர்கள். கோயில் தீர்த்தம், சரவணப்பொய்கை. இது, வேலவனே தன் வேலால் உருவாக்கியதாம்.

சரி… கோயிலை வலம் வந்தாயிற்று. இனி உங்களுக்குக் கிட்டப் போகும் பயன் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். தடைகள் யாவும் தகரும்; மணப்பேறும் மகப்பேறும் கிட்டும்; பகை பயம் விலகும்; அகமும், புறமும் ஆரோக்யமாகும்; மொத்தத்தில் சுப்ரமண்யன் அருளால் வாழ்வில் சுபிட்சம் சேரும்.

திருநெல்வேலி _ நாகர்கோவில் வழித்தடத்தில் வள்ளியூரில் உள்ளது இக்கோயில்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum