தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வம்சம் – திரைப்பட விமர்சனம்

Go down

வம்சம் – திரைப்பட விமர்சனம் Empty வம்சம் – திரைப்பட விமர்சனம்

Post  ishwarya Wed Apr 24, 2013 6:18 pm

நடிகர்கள்: அருள்நிதி, சுனேனா, ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு
ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி
கலை இயக்கம்: தேவராஜன்
இசை: தாஜ் நூர்
பிஆர்ஓ: நிகில் முருகன்
இயக்கம்: பாண்டி ராஜ்
தயாரிப்பு: மோகனா மூவீஸ்

பசங்க எனும் ஒரே படத்தில் நம்பிக்கை இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜிடமிருந்து வந்திருக்கும் அடுத்த படைப்பு வம்சம்.

கிராமம், திருவிழா, உள்பகை, பகை கிராமத்துப் பெண் மீது காதல், அந்தக் காதலுக்காக மோதல் என்று கால காலமாக பார்த்துப் பழகிய கதைதான் என்றாலும், அதை நகைச்சுவையுயும் இனிய காதலுமாக கலந்து சொன்ன விதத்தில் மனசை ஈர்க்கிறார் பாண்டி.

புலிவதனம், சிங்கம்பிடரி என இரண்டு தேவர் சமூக கிராமங்கள். இங்கு நடக்கும் 15 நாள் திருவிழா ஏகப் பிரசித்தம். இந்த திருவிழாவில் நடக்கும் ரேக்ளா ரேஸ், கம்புச் சண்டை, கோழிச் சண்டை என அனைத்திலும் ஜெயித்து தள்ளுபவர் லோக்கல் தாதா கிஷோர் (அருள்நிதியின் அப்பா). அவரிடம் தொடர்ந்து தோற்கும் அவமானத்தில் கடுப்பான ஊர்ப் பெரிய மனிதர் ஜெயப்பிரகாஷ், சாராயத்தில் விஷம் கலந்து கொடுத்து கிஷோரைக் கொன்று விடுகிறார்.

அதன் பிறகு மகனுடன் அந்த கிராமத்தை விட்டே வெளியேறி ஒதுக்குப் புறமாக வசிக்கும் கிஷோரின் விதவை மனைவி, மகனை கணவனின் தாதாயிச நிழல் படாமல் நல்ல பிள்ளையாக வளர்க்கிறார்.

ஆனால் தந்தை செய்தததின் ‘பலனை’ அனுபவித்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அருள் நிதிக்கு. இந்த நேரம் பார்த்து அவருக்கும் பக்கத்து ஊர் சுனேனாவுக்கும் காதல் அரும்புகிறது. சுனேனாவின் அப்பாவை ஒரு விரோதத்தில் ஜெயப்பிரகாஷ் கொன்றுவிட, அந்த கோபத்தில் ஜெயப்பிரகாஷுடன் நடுரோட்டில் மோதுகிறார் சுனேனா. காதலிக்காக களம் இறங்குகிறார் அருள் நிதி. இருவரையும் போட்டுத் தள்ளப் பார்க்கிறார் ஜெயப்பிரகாஷ். இதில் யார் ஜெயித்தார்கள்? என்பது சற்றே எளிதில் யூகிக்க முடிகிற க்ளைமாக்ஸ்.

கதை பழசுதான் என்றாலும், அதற்கு பாண்டிராஜ் போட்டிருக்கும் பாலீஷ், அட சொல்ல வைக்கிறது. திருவிழாக் காட்சிகளைப் படமாக்கியிருக்கும் விதம் அத்தனை நேர்த்தி. எப்போது கிராமத்துக்குப் போவோம் என்ற ஏக்கத்தையே உண்டாக்கிவிடுகின்றன அந்தக் காட்சிகள்.

அருள் நிதிக்கு இது முதல் படம். வெகு சுலபமாக தேறிவிடுகிறார். சண்டைக் காட்சிகளில் இப்போதே ஆக்ஷன் கிங் அளவுக்கு பறந்து பறந்து பந்தாடுகிறார். கொஞ்சம் அடக்கி வாசித்தால் தேவலாம். மற்றபடி வசன உச்சரிப்பிலும், உடல்மொழியிலும் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை. ம்ம்… அதையெல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள்… ஏதோ ஒரு சூரியன் என்ற அடைமொழியுடன் அருள்நிதியை பெரிய ரவுண்ட் வரவைத்து விடமாட்டார்களா தமிழ் சினிமாக்காரர்கள்!

கிராமத்து மின்னலாக கலக்கியிருக்கிறார் சுனேனா. நடிக்க வாய்ப்புள்ள பாத்திரமென்றால் வெளுத்து வாங்க இதோ இன்னொரு நாயகி தயார். பசுமாட்டுக்கு அசின் என்று பெயர் வைத்து காதல் வளர்க்கும் காட்சி குபீர் (பூனைக்கு த்ரிஷா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்!).

கேரக்டர் வில்லனாக இருந்தாலும் படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லுமளவுக்கு அசத்தியிருப்பவர் ஜெயப்பிரகாஷ். அலட்டல், ஆர்ப்ப்பாட்டம் இல்லாமல் கண்ணசைவிலேயே பயங்கரத்தைக் காட்டுகிறார் மனிதர்.

மனதில் நிற்கிற இன்னொரு பாத்திரம் அருள் நிதியின் அம்மாவாக நடித்திருக்கும் புதுமுகம் நந்தினி. அலட்டிக் கொள்ளாத பாந்தமான நடிப்பு. ரவுடி ரத்தினமாக சில காட்சிகளில் வந்தாலும் அந்த பாத்திரத்துக்கு உயிர் தருகிறார் கிஷோர்.

கஞ்சா கருப்பு வரும் காட்சிகள் சிரிப்புக்கு 100 சதவிகித உத்தரவாதம்.

பசங்க படத்தில் செல்போனை வைத்து கவிதையாய் காட்சிகளை வடித்த பாண்டி, இந்தப் படத்தில் அதே செல்போன்களை வைத்து அட்டகாசமான எள்ளல் காட்சி ஒன்றை அமைத்திருக்கிறார். இந்த வித்தியாசம்தான், வழக்கமான கதையென்றாலும் வம்சத்துக்கு ஆதரவைக் கூட்டுகிறது.

கோயில் காட்சிகளை விலாவாரியாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அதுவே ஒரு கட்டத்தில் சலிப்புத் தட்டுவதையும் இயக்குநர் கவனித்திருக்கலாம்.

சண்டைக் காட்சிகளை இன்னும் சற்று இயல்பாக வைத்திருக்கலாம்.

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, புதுக்கோட்டை கிராமங்களை அப்படியே கண்முன் நிறுத்துகிறது. எது செட், எது நிஜம் என்று இனம் பிரிக்க முடியாத தேவராஜனின் கலை இயக்கத்தைப் பாராட்டியே தீர வேண்டும்.

தாஜ் நூரின் இசை பெரிதாகக் கவரவில்லை. குறிப்பாக பின்னணி இசை பெரிய மைனஸ்.

உப்பு கொஞ்சம் கம்மி, காரம் கொஞ்சம் தூக்கல் என குறைகள் இருந்தாலும், தலைவாழை இலையில் கிராமத்து விருந்து பரிமாறப்பட்ட விதமே நிறைத்துவிடுகிறது மனதை!

வம்சம்… சுவாரஸ்யமான கிராமத்து அத்தியாயம்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வம்சம் – திரை விமர்சனம்
» புத்தகம் - திரைப்பட விமர்சனம்.
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» நான் மகான் அல்ல, வம்சம், இனிது இனிது 5 புதுப்படங்கள் இம்மாதம் ரிலீஸ்
» மகா வம்சம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum