தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமண வரம் தரும் ஆடிப்பூரம்

Go down

திருமண வரம் தரும் ஆடிப்பூரம் Empty திருமண வரம் தரும் ஆடிப்பூரம்

Post  gandhimathi Sun Jan 20, 2013 2:21 pm



ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அந்த அழகான நந்தவனத்தில் திடீரென்று ஒரு குழந்தையின் அழுகுரல். அதைக்கேட்ட மாத்திரத்தில் வேகமாக ஓடினார் பெரியாழ்வார். அந்த குழந்தையை வாரியெடுத்து அணைத்தார். குழந்தை அழுகையை நிறுத்தியது. `கோதை நாச்சியார்' என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டு தன் குழந்தை போலவே பாசத்தை கொட்டி வளர்த்தார். அந்த குழந்தை தான் ஆண்டாள்.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் தான் ஆண்டாளை பெறாமல் பெற்ற தந்தை. சிறுவயதில் ஆண்டாளுக்கு கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார். அதை கேட்டு கேட்டு வளர்ந்த ஆண்டாள், எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள்.

பெருமாளுக்கு தனது தந்தை தினமும் அணிவிக்க தொடுத்து வைத்திருக்கும் மாலையை, தந்தைக்கு தெரியாமல் தானே சூடிக்கொண்டு அழகு பார்ப்பாள். அருகே உள்ள கிணற்றை கண்ணாடியாக நினைத்து அதில் தான் அழகை பார்த்து ரசிப்பாள். பின்னர் மாலையை கழற்றி இருந்த இடத்தில் வைத்து விடுவாள். அந்த மாலையை தான் பெருமாளுக்கு அணிவித்து வந்தார் பெரியாழ்வார்.

ஒருநாள் பெருமாளுக்கு உரிய மாலையை ஆண்டாள் அணிந்திருந்ததை பெரியாழ்வார் பார்த்துவிட்டார். மகளை கண்டித்தார். பின்னர் வேறொரு மாலையை தொடுத்து அதை பெருமாளுக்கு அணிவித்தார். ஆனால் அது அறுந்து விழுந்தது. விபரீதம் ஏதும் நடக்கப்போகிறதோ? என்ற அச்சத்தில் இருந்தார் பெரியாழ்வார்.

அவரிடம், தான் ஏற்கனவே அணிந்து அழகு பார்த்த மாலையை கொண்டு கொடுத்து, பெருமாளுக்கு அணிவிக்குமாறு கூறினாள் ஆண்டாள். அவரும் அவ்வாறு செய்ய மாலை அறுந்துவிழவில்லை. அப்போது பெருமாள் அவர்கள் முன்தோன்றி, `ஆண்டாள் அணிந்த மாலையை யாம் ஏற்றுக்கொண்டோம்' என்றார்.

ஆண்டாள் `சூடிக்கொடுத்த சுடர் கொடியாள்' ஆனாள். ஆண்டாள் பருவ வயதை அடைந்தபோதும் கண்ணன் மீது தீவிர பற்றுள்ளவளாக இருந்தாள். அதுவே காதலாக மாறியது. மணந்தால் ஸ்ரீரங்க பெருமானைத்தான் மணப்பேன் என்று வைராக்கியத்துடன் இருந்தாள். ஸ்ரீரங்கனை மணப்பதுபோல் கனவு கண்டாள்.

தான் கண்ட கனவை கவிதையாக்கி தோழிகளிடம் படித்து காட்டுவாள். தனக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது தான் இறைவன் மீது தான் கொண்ட காதலை தந்தையிடம் சொன்னாள். பின்னர் இறைவனை மணக்க மார்கழி நோன்பு மேற்கொண்டாள். அதிகாலையில் எழுந்து குளித்து சகதோழியரோடு கோவிலுக்கு சென்று வழிபட்டாள் (அவள் மார்கழி மாதம் 30 நாட்களும் பாடிய 30 பாடல்கள் தான் திருப்பாவை).

ஒருநாள் பெரியாழ்வார் கனவில் ஸ்ரீரங்க பெருமாள் தோன்றி, "உனது மகளை ஸ்ரீரங்கம் அழைத்து வா. அங்கே யாம் அவளை மணந்து கொள்வோம்'' என்றார். அதன்படி ஆண்டாளை பல்லக்கில் அமர வைத்து ஸ்ரீரங்கம் அழைத்து சென்றனர். ஸ்ரீரங்க எல்லையை அடைந்தபோது திடீரென்று ஆண்டாள் மாயமாகிவிட்டாள்.

பெரியாழ்வார் அதிர்ச்சி அடைந்து பெருமாளை நோக்கி வேண்டினார்.அப்போது ஆண்டாளுடன் பெருமாள் காட்சி கொடுத்தார். "உமது மகள் லட்சுமியின் அம்சம். அவளையாம் ஏற்றுக் கொண்டோம்'' என்றார். ஆனால் அதை பெரியாழ்வார் ஏற்றுக்கொள்ளவில்லை. "தாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து முறைப்படி என் மகளை மணந்து செல்ல வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

அதன்படி பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாளை மணந்தார் பெருமாள். இத்தகைய சிறப்புமிக்க ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்டது ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திர நாளன்று அதனால், அன்றைய நாளை ஆடிப்பூரம் என்று அழைத்து கொண்டாடுகிறார்கள். ஆடிபுரத்தில் விரதம் இருந்தால் திருமணம் விரைவில் கைக்கூடும்.

தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்க...

ஆண்டாளின் பக்திக்கு பெருமை அளித்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அவளை தன்னுடன் ஏற்றுக் கொண்டார். இதை உணர்த்தும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் ஆடித்திருவிழாவின் 7-ம் நாளில் ஆண்டாளின் மடியில் சயனித்த காலத்தில் ரெங்கமன்னார் காட்சி தருவார். இந்த ஊரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.

இந்த அரிய காட்சியை தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒற்றுமை பலப்படும் என்கிறார்கள். இரண்டாவது பெரிய தேர்:::: தேர் என்று சொன்னதும் சட்டென்று நம் நினைவுக்கு வருவது திருவாரூர் தேர்தான். தமிழகத்தில் அதுதான் மிகப்பெரிய தேர். இதற்கு அடுத்த மிகப்பெரிய தேர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாங்குநேரி பரமஹம்ச பட்டர் பிரான் ராமானுஜ ஜீயர் சுவாமிகளால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு இந்த தேர் உபயமாக வழங்கப்பட்டது. தேர் முழுவதும் தேக்கு, கொங்கு போன்ற உயர்ரக மரங்களால் செய்யப்பட்டது என்பதால் இன்று வரையும் உறுதியாக இருக்கிறது. ராமாயண, மகாபாரத வரலாறுகளை குறிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பங்கள் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சுமார் 1500 டன் எடையும், 112 அடி உயரமும் கொண்ட இந்த தேரின் சக்கரம் முன்பு மரத்தால் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தேரை நிலைக்கு கொண்டு வர பலமாதங்கள் ஆனது. தற்போது இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் 3 மணி நேரத்தில் நிலைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஆண்டாள் அவதார நாளான ஆடிப்பூரம் அன்று இந்த தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. ஆண்டாளும் ஸ்ரீரங்கமன்னாரும் பவனிவரும் காட்சியைத் தரிசனம் செய்தால் பிறவிப்பயனை அடையலாம்.

திருமண வரம் அருளும் நாயகி:

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் 48-வது திருத்தலமாகும். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதலாவதாக திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரும், 2-வதாக உள்ள திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடிய ஆண்டாளும் அவதிரித்த தலம் இது. இந்த கோவில் இருபெரும் பகுதிகளாக அமைந்துள்ளது.

வடகிழக்கில் இருப்பது வடபெருங்கோவிலுடையான் என்ற ஸ்ரீவடபத்ரசாயி கோவில். தென்மேற்கில் இருப்பதுதான் ஆண்டாள் கோவில். சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே இக்கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. நாச்சியார் திருமாளிகை எனப்படும் ஆண்டாள் கோவில் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டாகவும் திகழ்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார், வடபத்ரசாயி (சுயம்பு) ஆகிய 3 பேரும் அவதரித்த பெருமை கொண்டது என்பதால் இந்த கோவிலை `மும்புரி ஊட்டிய தலம்' என்கின்றனர். இக்கோவிலின் முதல் பிரகாரத்தில் லட்சுமி ஹயக்ரீவர் ஓவிய வடிவில் அருள்பாலிக்கிறார். கல்வியில் சிறந்து விளங்க இவரிடம் வேண்டி கொள்கிறார்கள்.

ஆண்டாள் அவதரித்த துளசி தோட்டத்தில் ஆண்டாளுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சன்னதியின் முன்னால் துளசிமாடம் உள்ளது. இதில் இருக்கும் மண்ணை பக்தர்கள் சிறிதளவு எடுத்துக் கொள்கிறார்கள். இந்த மண்ணை வீட்டில் வைத்தால் தேவையான நேரத்தில் செல்வம் கிடைக்கும் என நம்புகின்றனர். சிலர் இந்த மண்ணை நெற்றியிலும் பூசி கொள்கிறார்கள்.

மாடத்தின் அடிப்பகுதியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது. மார்கழி நோன்பு இருந்த ஆண்டாள் தனது தோழியரை எழுப்புவது போன்ற பொருளில் 30 பாசுரங்கள் பாடினாள். அவ்வாறு தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஆண்டாள் சன்னதி விமானத்தில் உள்ளன. இதற்கு `திருப்பாவை விமானம்' என்று பெயர்.

ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழி 143 பாடல்கள் கொண்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருள் பாலிக்கிறாள். கிழக்கு நோக்கி இருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லாமே நலமாகும் என்பர். அதன்படி இவளிடம் வேண்டிக் கொள்ள, அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமணமாகாத பெண்கள் துளசி மாலை வாங்கி வந்து ஆண்டாளுக்கு சாத்தி வணங்கி, பின் அதனை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு அருகில் இருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வருகிறார்கள். தொடர்ந்து கிணற்றை எட்டிப் பார்த்துவிட்டு பின் மீண்டும் ஆண்டாளை வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுகிறவர்களுக்கு கோவில் சார்பில் வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை. *

ஆண்டாள் விட்ட கிளிதூது:

ஆண்டாள் தான் ரங்கநாதர் மீது கொண்ட காதல் பற்றி தூது அனுப்ப கிளியை பயன்படுத்தி இருக்கிறாள். அவளது இடது கையில் உள்ள கிளியே அதற்கு காட்சி. வியாசரின் மகனாகிய சுகபிரம்ம முனிவரே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாக கூறுவர். பக்தர்கள் ஆண்டாளிடம் வைக்கும் கோரிக்கையை கேட்கும் இந்த கிளி தாயே...

இந்த பக்தன் உன்னிடம் இதை வேண்டினான். அதை எப்போது நிறைவேற்றப் போகிறாய் என்று ஆண்டாளிடம் நினைவுபடுத்தும் என்கிறார்கள். மேலும் அந்த கிளி அதிக சக்தி உள்ளதாகவும் கருதப்படுகிறது. இந்த கிளி ஆண்டாளின் கையில் வைக்கப்பட்டு, பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

கிளி வேண்டுவோர் முன்னரே சொல்லி வைக்க வேண்டும். இந்த கிளியை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் திருமண தடையுள்ள ஆண், பெண்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum