தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமண வரம் தரும் திருவாதிரை விரதம்

Go down

 திருமண வரம் தரும் திருவாதிரை விரதம் Empty திருமண வரம் தரும் திருவாதிரை விரதம்

Post  meenu Sat Mar 09, 2013 12:27 pm

மளிகைக் கடையில் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. பச்சரிசி, பச்சைப் பருப்பு, வெல்லம், ஏலக்காய் என்று பட்டியல் கொடுத்துக் கொண்டிருந்தாள் பவானி மாமி. ‘‘என்ன மாமி, ஏதாவது விசேஷமா?’’ -அதே கடைக்கு வந்த கிருத்திகா கேட்டாள். ‘‘ஏய், நீயா, வா, வா. என்ன விசேஷம்னா கேட்டே, திருவாதிரை வருதே. மார்கழி மாசம்னாலே பூஜைகளும் கோயில் வழிபாடுகளும் நிறைந்த மாசமாச்சே...’’ ‘‘ஆனா பொதுவாக மார்கழி மாசத்தை பீடை மாசம்ங்கறாங்களே மாமி?’’ ‘‘தப்பு, தப்பு. அது பீடை மாசமில்லே. பீடுடைய மாசம். மகிமை மிக்க மாசம். பகவான் கிருஷ்ணன், பகவத் கீதையின் பத்தாவது அத்யாயமான விபூதி யோகத்தில் 35வது ஸ்லோகத்தில் ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ அப்படின்னு சொல்லியிருக்கிறார்: ‘‘மாஸானாம் மார்கசீர்ஷோஹம்.’’

இந்த மாசத்துல பனி அதிகமாக இருக்கும்ங்கறதால உடல்நலக் கோளாறுகள் வரலாம். ஜலதோஷம், சளி, ஜுரம்னு வரலாம். இதைப் போக்கறதுக்கு நம்ம முன்னோர்கள் சொல்லியிருக்கற தற்காப்பு வைத்தியம் என்ன தெரியுமா? அதிகாலையிலேயே எழுந்து குளிச்சுட்டு, திருப்பாவை அல்லது திருவெம்பாவை படிச்சுகிட்டே கோயிலுக்குப் போறதுதான்...’’ ‘‘குளிர்ல சுகம்மா போத்திகிட்டு தூங்கறதை விட்டுட்டா...?’’ ‘‘அப்படித் தூங்கறதுதான் வியாதிங்கறது பெரியவங்களோட அபிப்ராயம். அதனால குளிரையும் சுகமான தூக்கத்தையும் அதிகாலையிலேயே போர்வையோட தூக்கி எறிஞ்சுட்டு, பகவான் வழிபாட்டிலே மனசை செலுத்தணும்ங்கறது அவங்களேட அறிவுரை. இன்னிக்கும்கூட கிராமப்புறங்கள்ல காலை நாலு மணிக்கெல்லாம் ஆர்மோனியம் மிருதங்கத்தைக் கழுத்திலே கட்டி தொங்கவிட்டுகிட்டு அதை வாசிச்சுகிட்டே திருப்பாவையோ, திருவெம்பாவையோ பாடிகிட்டுப் போவாங்க...’’

‘‘இப்பவுமா?’’

‘‘ஆமாம். இதே மாசத்திலேதான் திருவாதிரைப் பண்டிகையும் வர்றது...’’

‘‘திருவாதிரை பண்டிகையா?’’

‘‘ஆமாம். திருவாதிரை விரதமும் அன்னிக்கு மேற்கொள்வாங்க. அந்த விரதம் எப்படி ஆரம்பிச்சது தெரியுமோ?’’

‘‘எப்படி மாமி? அந்தக் கதையைச் சொல்லுங்களேன்.’’ ‘‘இருபத்தேழு நட்சத்திரங்களிலே ‘திரு’ன்னு மரியாதையோட அமைந்த நட்சத்திரங்கள் இரண்டுதான். ஒண்ணு, திருவோணம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்தது; இன்னொண்ணு, திருவாதிரை, பரமசிவனுக்குப் பிடிச்சது. மகேசனுக்குப் பிடிச்ச அந்த திருவாதிரை நாள்லதான் ஒரு சம்பவம் நடந்தது. பாற்கடல்ல ஆதிசேஷன் மேலே பரந்தாமன் பள்ளிகொண்டிருந்தார். அவரோட கால்களை மென்மையாகப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தாள் மஹாலட்சுமி. திடீரென்று, ‘ஆஹா அற்புதம், பிரமாதம்...’னு பாராட்டுக் குரல் எழுப்பினார் மஹாவிஷ்ணு. தன்னோட யோக நித்திரை கலையாமலேயே அவர் அப்படி வியந்தது எதனாலன்னு ஆதிசேஷனுக்கும் சரி, மஹாலட்சுமிக்கும் சரி, புரியவேயில்லை. கொஞ்ச நேரம் கழிச்சு கண் திறந்த மாதவனிடம் ரெண்டு பேரும் தங்களோட சந்தேகத்தைக் கேட்டாங்க...’’

‘‘நியாயந்தானே? ஆனா, பகவான் அப்படி சொன்னதுக்கு ஏதேனும் காரணம் இருக்கத்தான் செய்யும்...’’ ‘‘கரெக்ட். அதை அந்த நாராயணனே சொன்னார். திருவாதிரை நாளான அன்னிக்கு பரமேஸ்வரன் நடராஜனாக மாறி அதி அற்புதமாக ஆனந்த தாண்டவம் ஆடிக்கிட்டிருந்தார். அது யோக நித்திரையிலே இருந்த தனக்குத் தெரிஞ்சதாகவும் அந்த நடனத்தைப் ‘பார்த்த’ பரவசத்திலேதான் அவ்வாறு பாராட்டிக் குரல் கொடுத்ததாகவும் சொன்னார். அதைக் கேட்டதும் ஆதிசேஷனுக்கு உடலே சிலிர்த்தது. கூடவே அந்த சிலிர்ப்பில் ஏக்கமும் தொனித்தது. மஹாவிஷ்ணுவுக்கு அதுக்கான காரணம் புரிஞ்சது. மஹாவிஷ்ணு உடனே ‘என்ன ஆதிசேஷா, உனக்கும் அந்த கயிலை நாதனின் களி நடனத்தைப் பார்க்க ஆசையா இருக்கா?’ என்று கேட்டார். பிறகு, ‘அதுக்கு நீ பூலோகத்தில் பிறந்து தவமிருந்தால்தானே முடியும்? சரி, உனக்கு அந்த பாக்யம் கிட்டும். போய் வா,’ ன்னு அனுப்பிச்சு வெச்சார்...’’

‘‘ஆதிசேஷன் பாம்பு, எந்த ரூபத்திலே அந்த நடனத்தைப் பார்த்தது.’’ ‘‘இடுப்புவரைக்கும் மனித உடலும் இடுப்புக்குக் கீழே பாம்பாகவும் அமைஞ்ச பதஞ்சலி முனிவராக ஆதிசேஷன் பூலோகத்திற்கு வந்தார். நடராஜரோட நடனத்தைப் பார்க்கறதுக்காகப் பலகாலம் தவமிருந்தார். இந்த சமயத்திலேதான் புலிக்கால் முனிவரான வியாக்ரபாத முனிவரோடு நட்பு கிடைச்சது. ரெண்டு பேரும் பல சிவத்தலங்களுக்குப் போய் ஈசனை வழிபட்டாங்க...’’ ‘‘ ஓ, இன்னமும் அவருக்கு நடராஜ நாட்டிய தரிசனம் கிடைக்கலியா?’’ ‘‘கிடைச்சது. இவங்ககிட்ட வந்து நடராஜர் நாட்டியமாடிக் காண்பிக்கறதுக்கு பதிலாக, தான் நாட்டியமாடற இடத்துக்கு அவங்களை வரவழைச்சுட்டார் நடராஜர்.

ஆமாம், ஒவ்வொரு சிவத்தலமாக தரிசனம் பண்ணிகிட்டே வந்த அந்த ரெண்டு பேரும் சிதம்பரத்துக்கு வந்தாங்க. அங்கே அவங்களுக்கு தன்னோட நடனத்தைக் காட்டி அருளினார் மகேஸ்வரன். இடப வாகனான ஈசன், தன்னோட இடது பாதம் தூக்கி ஆடின அற்புதக் காட்சியைப் பார்த்து ரெண்டு பேரும் ஆனந்தப் பரவசப்பட்டாங்க. அன்றைய தினமும் திருவாதிரை நட்சத்திர நாள்தான். அன்னியிலேர்ந்துதான் நடராஜ தரிசனம் பண்றதும், விரதம் இருந்து களியும் தாளகக் குழம்பும் செய்த நடராஜனுக்கு நிவேதனம் செய்து வழிபடறதும் வழக்கத்துக்கு வந்தது...’’

‘‘ஓஹோ, இப்படி விரதம் இருக்கறதால யாருக்கு என்ன நன்மை மாமி?’’ ‘‘குறிப்பாக கன்னிப் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுத் தரக்கூடியது. இவங்களோட மனசுக்குப் பிடிச்ச கணவனை அடையவும் தீர்க்க சுமங்கலிகளாகப் பல வருஷம் வாழவும் பாக்யம் தரக்கூடியது... இத விளக்கவும்கூட ஒரு கதை இருக்கு...’’ ‘‘அது என்ன மாமி?’’ ‘‘அம்பிகையாலேயே ஞானப்பால் ஊட்டப்பட்டு ஞானம் பெற்றவர் திருஞான சம்பந்தர். சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த வணிகரும், சிவனடியாருமான ஒருவர், தனது மகளுக்கு மணமுடிக்க வேண்டும் என்று காத்திருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்தப் பெண்ணை ஒரு பாம்பு தீண்ட அவள் இறந்து போனாள். இதுக்காக வணிகர் வருத்தப்படலே. தன் மகளான பூம்பாவையின் எலும்பு, சாம்பலை எடுத்து பத்திரப்படுத்தி வைத்தார். அவருக்கு நம்பிக்கை இருந்தது.

ஆமாம், திருஞான சம்பந்தராலேயே அவள் உயிர் பெறுவாள் என்று ரொம்பவும் நம்பினார். மகளோட சாம்பல் கலசத்தை எடுத்துகிட்டார். சம்பந்தர் மயிலைக்கு வந்தபோது அவர்கிட்ட அதைக் கொடுத்து விவரம் சொல்லி மகளைக் காப்பாத்த வேணும்னு கேட்டுகிட்டார். அந்தக் கலசத்தைத் தன் கையில் வாங்கிக்கொண்ட சம்பந்தர், மயிலை கபாலீஸ்வரரை துதிச்சுப் பதிகம் பாடினார். அந்தப் பதிகப் பாடல்கள்ல சிவனுக்கு உகந்த நாட்களைப் பத்தி பாடினார். அதிலே, ‘ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்?’ அப்படின்னு பாடினார்...’’ ‘‘அப்படின்னா?’’ ‘‘அதாவது, ‘திருவாதிரை நாள்ல, ஈசனை தரிசனம் பண்ண வேண்டாமா? எழுந்திரு பெண்ணே, தரிசனம் பண்ணு...’ன்னு அர்த்தம். அந்தப் பாட்டை அவர் பாடின உடனேயே பளிச்னு சாம்பலும் எலும்புமா இருந்த பூம்பாவை உயிரோட எழுந்துவிட்டாள்...’’

‘‘அட, இது என்ன அதிசயம்?’’ ‘‘ஆமாம். ஞானசம்பந்தர் அற்புதங்கள் புரிந்தவர். இந்த சம்பவத்துக்கு முன்னால ஒரு முதலை ஒரு குழந்தையை விழுங்கிடுத்து. விழுங்கி சில வருஷம் கழிச்சு, அந்த முதலை வாயிலேர்ந்தே அந்தக் குழந்தையை பதிகம் பாடியே மீட்டவர் அவர். அதுவும் எப்படி? இத்தனை வருஷத்ல அந்தக் குழந்தை எப்படி வளர்ந்திருக்குமோ அதே வளர்த்தியில!’’ ‘‘அடேயப்பா! என்ன அதிசயம் இது!’’ வியந்தாள் கிருத்திகா. ‘‘ஆமாம், சம்பந்தர் ஞானப் பால் குடித்த தெய்வக் குழந்தையாச்சே! ஆச்சா, அப்படி உயிர் பெற்ற எழுந்த தன் பெண்ணை திருஞானசம்பந்தர்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சிவனடியார் வேண்டிக்கொண்டார். ஆனா, சம்பந்தரோ, அவளுக்குத் தான் உயிர் கொடுத்தவன்; அதனால் அவ தனக்கு மகள் மாதிரி, அதனால் அவளைத் தான் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னுட்டார்.

அப்படின்னா அவளுக்குக் கல்யாணம் நடக்குமான்னு வணிகர் கேட்டார். நிச்சயமா நடக்கும். அவ மார்கழி திருவாதிரை அன்னிக்கு விரதம் இருந்து சிவனை வழிபட்டாள்னா அவளுக்கேத்த கணவன் கிடைப்பான்னு சொன்னார்...’’ ‘‘அட, வித்தியாசமானவராக இருக்காரே திருஞான சம்பந்தர்...’’ ‘‘சரி, இப்ப விரதத்தைப் பத்தி சொல்லவா? திருவாதிரை நாள் அன்னிக்கு விடியற்காலையிலேயே எழுந்து, குளிச்சுட்டு மங்களகரமா நெற்றியிலே பொட்டு இட்டுகிட்டு, பூஜையறையிலே சுவாமி முன்னால விளக்கேற்றணும். பூஜையறையிலே பிரதானமாக சிவன் படம் அல்லது சிவசக்தி படம் அல்லது லிங்கம்னு எது இருக்கோ அதை வைக்கணும். அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லே. நீ வழக்கமா வணங்கற தெய்வத்தோட படம் எதையாவது வைக்கலாம். ஆனா, மனசு பூராவும் மகேஸ்வரனையே தியானம் பண்ணணும். அப்புறமா மஞ்சள் சரடு ஒண்ணை எடுத்து அதிலே பூ முடிஞ்சு வலது மணிக்கட்டிலே கட்டிக்கணும்.

சில பேர் கழுத்திலே கட்டிப்பாங்க, அப்படியும் செய்யலாம்...’’ ‘‘நோன்பு சரடு கட்டிக்கறா மாதிரி...?’’ ‘‘ஆமாம். இப்போ விரதம் துவங்கியாச்சு. வழக்கமான உங்க வேலைகளை செய்துகிட்டே, ஈஸ்வர நாமத்தையும் பஞ்சாட்சர மந்திரமான ‘ஓம் நமசிவாய’வையும் சொல்லிக்கிட்டே இருக்கணும். சத்தம் போட்டுதான் சொல்லணும்னு இல்லே, மனசுக்குள்ளேயும் சொல்லிக்கலாம். சிவன் துதிப் பாடல்கள் தெரிஞ்சா அவற்றையும் பாடலாம். அப்புறம் களியும் தாளகக் குழம்பும் தயார் பண்ணி சிவனுக்கு நைவேத்யம் பண்ணலாம்...’’ ‘‘களியும் தாளகக் குழம்புமா? எப்படிப் பண்றது? அம்மாகிட்ட சொல்லணுமே...?’’ ‘‘சொல்றேன். அதுக்கு முன்னால திருவாதிரை அன்னிக்கு களி நைவேத்யம் பண்றதுன்னு ஏன் வந்ததுன்னு சொல்றேன், கேட்டுக்கோ...’’

‘‘ஓ, இன்னொரு கதையா சொல்லுங்க, சொல்லுங்க...’’ ‘‘சேந்தன்னு ஒரு சிவபக்தன் இருந்தான். விறகு வெட்டியான அவன் தினமும் தான் வெட்டி வர்ற விறகுகளை விற்பனை பண்ணி அந்த சம்பாத்தியத்திலே தானும் தன் மனைவியுமாக சாப்பிட்டு வந்தான். தினமும் தில்லையம்பலத்துக்குப் போய் சிவதரிசனம் செய்வான். அதோட தினமும் சிவனடியார் ஒருத்தருக்கு உணவு கொடுத்துவிட்டு அப்புறம் தான் சாப்பிடறதுன்னு ஒரு சபதம் வெச்சிண்டிருந்தான். ஒருநாள் செம மழை பிடிச்சுகிட்டுது. அதனால் விறகு வெட்டவும் போக முடியலே; அது மட்டுமில்ல, மழையினால அவன் ஸ்டாக் வெச்சிருந்த விறகுகள்லாம் ஈரமாப் போயிடுத்து. அதனால விறகு விற்பனையும் நடக்கலே. இந்த சமயத்திலே சிவனடியார் ஒருத்தர் அவனோட வீடு தேடி வந்தார்...’’

‘‘அடப் பாவமே ஏற்கெனவே பிரச்னை, இப்போ சிவனடியாரும் வந்திட்டாரே, அவருக்கு எப்படி சாப்பாடு போடுவார் சேந்தன்?’’ ‘‘வாஸ்தவம்தான். விறகு விற்காததால, கையிருப்பிலே எந்தப் பணமும் இல்லாம, வந்திருக்கும் சிவனடியாருக்கு எப்படி உணவு கொடுக்கறதுன்னு சேந்தன் யோசிச்சான், தவிச்சான். ஆனா, அவன் மனைவி ஒரு ஐடியா சொன்னாள். அதாவது வீட்ல கொஞ்சம் அரிசி மாவு இருக்கு. கொஞ்சம் வெல்லமும் இருக்கு. இரண்டையும் சேர்த்து களியாகக் கிளறி சிவனடியாருக்குத் தரலாமான்னு கேட்டாள். சேந்தனும் சரின்னான். உடனே அவனோட மனைவி களி தயார் பண்ணி சிவனடியாருக்குத் தந்தா. அவரும் ரொம்ப சந்தோஷத்துடன் அந்தக் களியை சாப்பிட்டு அவங்களை வாழ்த்திட்டுப் போனார். ஒரு மாதிரியா அந்த சிவனடியாருக்கு உணவு தர முடிஞ்சுதேன்னு சேந்தனுக்கும் அவனோட மனைவிக்கும் பெரிய நிம்மதி...’’

‘‘அவ்வளவுதானா?’’ ‘‘இல்லே, இனிமேதான் கதையே இருக்கு. மறுநாள் வழக்கம்போல் சேந்தனும் அவன் மனைவியும் சிதம்பரத்துக்கு தில்லையம்பலத்துக்கு போய் சிவதரிசனம் பண்ணினாங்க. அங்கே நடராஜர் சந்நதியில களி சிதறிக் கிடக்கிறதையும் நடராஜர் வாயிலே கொஞ்சம் களி ஒட்டிக்கிட்டு இருக்கறதையும் பார்த்தாங்க. உடனே பளிச்னு அவங்களுக்குப் புரிஞ்சு போச்சு. முந்தின நாள் தன் வீட்டுக்கு வந்தவர் சிவனடியார் இல்லே, சிவனேதான்னு!’’ ‘‘அதுதானே பார்த்தேன்... என்னடா ரொம்ப சிம்பிளா கதை முடியறதேன்னு...’’ ‘‘அன்னியிலேர்ந்து மார்கழி திருவாதிரை அன்னிக்கு களி பண்ணி சிவபெருமானுக்கு நைவேத்யம் பண்றதுங்கற வழக்கம் வந்தது.’’ ‘‘களியை எப்படி மாமி தயார் பண்றது?’’ ‘‘ஒரு சராசரி குடும்பத்துக்குத் தேவையான அளவுக்கு எப்படி பண்றதுன்னு சொல்றேன். கால் கிலோ பச்சரிசியை சிவக்க வறுத்து எடுத்துக்கோ.

அதை மாவு மிஷின்ல கொடுத்தோ அல்லது வீட்லேயே மிக்ஸியிலேயோ அரைச்சுக்கோ. கரகரப்பா மாவு வந்தா அது களியானப்புறம் சுவையா இருக்கும். மாவுக்கு ரெண்டு பங்கு அளவு தண்ணீரை அடுப்புலே பாத்திரம் வெச்சு, அதிலே ஊற்றிக் கொதிக்க விடு. 50 கிராம் பச்சைப் பருப்பை லேசா வறுத்து அந்தத் தண்ணியிலே போட்டுக்கோ. அது கொஞ்சம் வெந்ததும் கால் கிலோ வெல்லத்தை பொடி செய்து போடு. வெல்லம் நல்லா கரைஞ்சப்புறம், அரைச்சு வெச்சிருக்கற மாவை ஒரு கையால கொஞ்சம் கொஞ்சமா வெல்லத் தண்ணீர்ல போட்டுகிட்டே ஒரு கையால மெல்லக் கிளறிகிட்டே வா. அடுப்பு மிதமான தீயிலே எரியறது நல்லது...’’ ‘‘அதாவது ‘ஸிம்’ல வெச்சுக்கணும்...?’’ ‘‘ஆமாம். மாவு கட்டி தட்டிக்காதபடி விடாம கிளறிகிட்டே இருக்க வேண்டியது ரொம்பவும் முக்கியம். வாசனைக்குக் கொஞ்சம் ஏலக்காய்த்தூள் சேர்த்துக்கலாம்.

பொல பொலன்னு வந்ததும் இறக்கி வெச்சுடு. இதோட நெய்யிலே வறுத்த முந்திரி பருப்பையும் உடைச்சு போட்டுக் கலந்துக்கலாம். சில பேர் தேங்காயத் துருவி அதையும் சேர்த்துப்பாங்க. அவங்கவங்க டேஸ்ட்டுக்கு ஏத்தா மாதிரி செய்துக்கலாம்...’’ ‘‘தாளகக் குழம்புன்னு சொன்னீங்களே மாமி...?’’ ‘‘ஆமாம். ஏழு கறிக் கூட்டுன்னும் இதைச் சொல்வாங்க. பூமிக்கு அடியிலே விளையற கிழங்கு வகைகளை சேர்த்துக்கறது இந்தக் குழம்பு தயாரிப்பிலே அவசியம்பாங்க. அதாவது, உருளை, சேப்பங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கருணைக் கிழங்குன்னு சேர்த்துக்கலாம். அதோட பீன்ஸ், வாழைக்காய், கத்தரிக்காய், கேரட், காலிஃப்ளவர், அவரைக்காய், கொத்தவரங்காய், வெள்ளை பூசணி, சிகப்பு பூசணி, பச்சை பட்டாணி...’’ ‘‘மாமி ஏழு காய் கூட்டுன்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு பட்டியலை அடுக்கிகிட்டே போறீங்களே...’’

‘‘பயப்படாதே. இந்த மாதிரி எந்தக் காய்கறி வேணுமானாலும் போடலாம்னு சொல்ல வந்தேன். தேங்காய் அரைச்சு விட்டுக்கலாம். பருப்பு போட்டுக்க வேண்டாம். கொஞ்சம் அரிசி, எள்ளும் சேர்த்துக்கலாம்...’’ ‘‘அடேயப்பா... ஸைட் டிஷ் தாளகக் குழம்பு தயாரிப்புதான் பெரிய வேலை போலிருக்கு...’’ ‘‘ஆச்சா, இப்படித் தயார் பண்ணி சுவாமிக்கு நைவேத்யமும் பண்ணி கற்பூரமும் காட்டி பூஜையை முடிக்கலாம். விரதம்னு இருக்கறவங்க இப்படி பூஜை முடியறதுக்கு முன்னால எந்த ஆகாரத்தையும் எடுத்துக்காம இருக்கறது நல்லது. பூஜை முடிஞ்சப்புறம், நுனி வாழை இலையிலே களியையும் குழம்பையும் போட்டுண்டு சாப்பிடலாம். முதல்ல வீட்ல இருக்கற கன்னிப் பெண்களை இப்படி பிரசாதம் எடுத்துக்கச் சொல்லிட்டு, அப்புறமா பெரியவங்க சாப்பிடறது சில குடும்பங்கள்ல வழக்கமா இருக்கு. அப்படியும் செய்யலாம்...’’

‘‘அவ்வளவுதானா?’’

‘‘பூஜை என்னவோ இதோட முடிஞ்சுடறது. ஆனா, அன்னிக்கு நாள் பூராவும் மனதிலே மகேசனையே தியானம் பண்ணிகிட்டிருக்க வேண்டியது அவசியம். இந்த திருவாதிரை விரதம் பூர்த்தியாகறது நடராஜர் தரிசனத்தோடதான். அதனால சாயங்காலமா பக்கத்து சிவன் கோயிலுக்குப் போய் நடராஜரை தரிசனம் பண்ணணும். இப்படி திருவாதிரை விரதம் இருக்கறதனால கன்னிப் பெண்களுக்குத் திருமணம் கைகூடி வரும், மற்றவங்களுக்கு எல்லா வளமும் தேக நலனும் வரும்னு சிவமகாபுராணம் சொல்றது. ‘திருவாதிரைக் களி ஒருவாயேனும் உண்டார்க்கு நரகமில்லை’ன்னு ஒரு பழமொழியும் இருக்கு...’’

‘‘அட, பரவாயில்லையே!’’ வியந்தாள் கிருத்திகா. ‘‘மாமி நீங்க சொன்ன விரத விவரங்களை நான் மட்டும் கேட்கலே. பாருங்க, கடைக்குப் பொருள் வாங்க வந்தவங்க, ஏன் கடைக்காரங்ககூட தங்களோட வேலைகள அப்படியே விட்டுட்டு நீங்க சொல்றதையே கேட்டுகிட்டிருக்காங்க...’’ மாமிக்கு வெட்கமாகப் போய்விட்டது. இருவரும் அவரவர்களுக்கான பொருட்களை வாங்கிக்கொண்டு மளிகைக் கடையை விட்டு புறப்பட்டார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum