தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாயை இழந்த எனக்குத் துணையாக நின்றது இசைஞானியின் இசைக்கரங்கள்! – உருக வைத்த முத்துக்குமார்

Go down

தாயை இழந்த எனக்குத் துணையாக நின்றது இசைஞானியின் இசைக்கரங்கள்! – உருக வைத்த முத்துக்குமார் Empty தாயை இழந்த எனக்குத் துணையாக நின்றது இசைஞானியின் இசைக்கரங்கள்! – உருக வைத்த முத்துக்குமார்

Post  ishwarya Mon Apr 08, 2013 2:41 pm

தாயை இழந்த எனக்குத் துணையாக நின்றது இசைஞானியின் இசைக்கரங்கள்! – உருக வைத்த முத்துக்குமார் 30-illayarajaதாயை
இழந்த எனக்கு துணையாக வந்தது இசைஞானியின் இசைக்கரங்களே. அன்று பிடித்த
அவரது கரங்களை இன்றுவரை நான் விடவில்லை என்றார் பிரபல பாடலாசிரியர் கவிஞர்
நா முத்துக்குமார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பிரகாஷ் ராஜின் தோணி பட இசைவெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை மாலை நடந்தது.

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள படம் அது. படத்தின் இசைவெளியீட்டை,
இளையராஜாவுக்கு சிறப்பு செய்யும் விதத்தில் அமைத்திருந்தார் பிரகாஷ் ராஜ்.

இதுவரை தன் வாழ்க்கையிலேயே முதல் முறையாக தான் இசையமைத்த பட இசை
விழாவில் அந்தப் படப் பாடல்களை லைவாக இசைக்க வைத்து, வந்திருந்தவர்களுக்கு
ஆனந்த அதிர்ச்சி தந்தார் இளையராஜா.

நான்கு பாடல்கள் இசைக்கப்பட்டன. நான்கும் முத்தான பாடல்கள் என்று
சொல்லும் அளவுக்கு மிக இனிமையாக, அர்த்தமுள்ளதாக அமைந்திருந்தது சிறப்பு.

இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள்,
சாதனையாளர்கள், இளையராஜாவின் அபிமானிகள் அத்தனை பேரும் குவிந்திருந்தனர்.
மாலை 7 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி, இரவு 9.30ஐ தாண்டிய பிறகும் நீடித்தது.
ஆனால் ஒருவரும் வெளியில் எழுந்து செல்லவில்லை. அப்படியொரு ஈர்ப்புடன்
அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தனர்.

இளையராஜாவுடனான தங்கள் அனுபவங்கள், அவரது இசையின் சிறப்பு, இளையராஜா
எனும் அற்புதமான கலைஞனின் தொழில்முறை நேர்த்தி என பல விஷயங்களைப் பகிர்ந்து
கொண்டனர் பிரபலங்கள்.

இயக்குநர்களின் ஆதர்ச நாயகனாகக் கருதப்படும் மகேந்திரன், இயக்குநர்
சிகரம் எனப் புகழப்படும் பாலச்சந்தர், எஸ்பி முத்துராமன், இயக்குநர்கள்
பார்த்திபன், கேஎஸ் ரவிக்குமார், ஆர் வி உதயகுமார், ஜெயம் ராஜா, ராதா மோகன்
என ஒவ்வொருவர் பேசியதையும் தனித்தனி கட்டுரைகளாகவே வெளியிடலாம். அத்தனை
சிறப்பாக அமைந்தது பேச்சு.

குறிப்பாக நாசரின் பேச்சு, சுவாரஸ்யமிக்கதாக அமைந்தது.

இந்த விழாவின் ஹைலைட் என்றால் அது கவிஞர் நா முத்துக்குமாரி்ன் பேச்சு.
அந்தப் பேச்சை கண்கலங்காமல் கேட்டவர்கள் அநேகமாக வெகு சிலராகத்தான்
இருந்திருப்பார்கள்.

அவரது பேச்சு முழுவதுமாக:

இசைஞானி அவர்களுக்காக முதல்முறையாக நான் தோணி திரைப்படத்திற்காக அனைத்து
பாடல்களையும் எழுதியிருக்கிறேன். ஜூலி கணபதி படத்துக்காகத்தான் அவரை நான்
முதல் முறையாக என் குருநாதர் பாலுமகேந்திராவுடன் சந்தித்தேன். அந்த
சந்திப்பு மறக்க முடியாதது. ஒரு பரீட்சை எழுதப்போகும் மாணவனின் பதைப்புடன்
அவர் அறைக்குச் சென்றேன்.

எனக்குத் தந்த மெட்டுக்கு…

‘எனக்குப் பிடித்தப் பாட்டு அது உனக்குப் பிடிக்குமே
என் மனது போகும் வழியை உன் மனது அறியுமே
எனக்குப் பிடித்த நிலவு அது உனக்குப் பிடிக்குமே’

என்ற பல்லவியை அவருக்குக் கொடுத்தேன். படித்துப் பார்த்துவிட்டு
‘நன்றாயிருக்கிறது பல்லவி..! ஒரு சின்ன திருத்தம் செய்யலாமா?’ என்று
கேட்டார். ‘தாராளமாக ஐயா’ என்று சொன்னேன்.

‘எனக்குப் பிடித்த நிலவு அது உனக்குப் பிடிக்குமே’ என்ற வரியை ‘என்னைப்
பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே’ என்று மாற்றினால் அர்த்தம் இன்னும்
சிறப்பாக இருக்குமென்றார். நான் எழுதிய வரிகளை விட பத்துமடங்கு சிறப்பாக
இருக்கிறது என்று பரவசப்பட்டுப் போனேன்.

அன்று எனக்கு ஒன்று புரிந்தது. பாடலில் திருத்தம் என்பது சிதைப்பது
அல்ல; செதுக்குவது என்று. அதன் பின்னர் நிறைய பாடல்கள் எழுதினேன். ஒவ்வொரு
முறை அவர் அறைக்குள் நுழையும்போதும் என் கைகால்கள் நடுங்கத் துவங்கும்.

அவர் எப்போதும் என்னை அமரவைத்து, நகைச்சுவையாகப் பேசி என்னை
இயல்புக்குக் கொண்டுவருவார். ஒவ்வொரு முறை பாடல் எழுதும்போதும் அவரிடம் ஒரு
புதிய விஷயத்தை நான் கற்றுக்கொள்வேன். எப்படி எளிமையாக எழுத வேண்டும்…
எப்படி மக்களுக்குப் புரியும் வகையில் எழுத வேண்டும்… போன்ற பல விஷயங்களை
அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்.

‘தோணி’ திரைப்படத்தின் கம்போஸிங்கிற்கு “முத்துக்குமாரையும் கூட்டி
வாருங்களேன்,” என்று சொல்லியனுப்பியிருந்தார். போயிருந்தேன். அது ஒரு பரவச
அனுபவம். முதல் முறை அவருடன் கம்போசிங்கில். ஒரு முக்கால் மணி நேரத்தில்
வரிசையாக 5 டியூன்களைப் போடுகிறார். நான் கண்களை மூடி அமர்ந்து
கேட்டுக்கொண்டிருக்கிறேன். கடவுளிடம் நேரடியாகப் பேசுபவர்கள் குழந்தைகளும்
இசைக் கலைஞர்களும் என்று சொல்வார்கள். அந்த தருணத்தில் அதை நான்
கண்டுகொண்டேன்.

என் மகனுக்கு தினமும் கண்ணே கலைமானே…

இன்றைக்கும் நான் இசைஞானியின் பாடல்களைக் கேட்காமல் தூங்குவதில்லை. என்
மகனுக்கு நான் தினமும் பாடும் தாலாட்டு ‘கண்ணே கலைமானே’ பாடல்தான். ஒரு
பாடலாசிரியராக என்னுடைய குருவாக அவரை நினைக்கிறேன். ஒரு சில பாடல்களே அவர்
திரைப்படத்திற்கு எழுதியிருந்தாலும் அவர் எழுதிய பாடல்களுக்கு இன்றைக்கும்
நான் ரசிகன். அழகி திரைப்படத்தில் எழுதியிருப்பார்…

“கோயில் மணிய யாரு ஏத்துறா?
தூண்டா வெளக்க யாரு ஏத்துறா ?
ஒரு போதும் அணையாம நின்று எரியணும்..”

அதே படத்தின் வேறொரு பாடலில்…

“இருள் தொடங்கிடும் மேற்கு – அங்கு
இன்னும் இருப்பது எதற்கு?
ஒளி தொடங்கிடும் கிழக்கு
உண்டு பொதுவினில் ஒரு விளக்கு”

இதை எந்தக் கவிஞனும் எழுதி விடலாம். ஆனால் அதன்பின்னர் வரும் ‘ஒளி
இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை’ என்ற வரிகள் அத்தனை சிறப்பானவை.
அதே போல நாடோடித் தென்றல் படத்தில்,

‘யாரும் விளையாடும் தோட்டம்
தினந்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் பூமி இந்த மண்ணு நம்ம சாமி
கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு’

என்ற வரிகள். இந்த பூமியை, மண்ணை அவர் நேசிக்கும் அழகை அத்தனை அற்புதமாக்ச சொல்லியிருப்பார்.

நான் சிறுவயதில் தாயை இழந்தவன். அந்தத் தனிமை எப்போதும் என்னுடன்
இருந்துகொண்டே இருக்கும். அப்போது ‘ஆவாரம்பூ’ படத்தில் ஒரு பாடல் கேட்டேன்.

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே..!
அதைக்கேட்டு தூங்கும் ஆவராம்பூவே..!
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு

இந்த வரிகளைக் கேட்டவுடன் அவரின் இசைக் கரங்களை நான் பிடித்துக்கொண்டேன். அதன் பின்னர் வரும்,

தாய் இழந்த துன்பம் போலே
துன்பம் அது ஒன்றுமில்லை
பூமி என்ற தாயும் உண்டு
வானம் என்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் எங்கும் உண்டு

என்ற வரிகள் எனக்கு தன்னம்பிக்கை அளித்தன. அன்று பிடித்த அவரின் இசைக் கரங்களை இன்றுவரை நான் விடவில்லை,” என்றார்.

அதுவரை நிசப்தத்தில் இருந்த அரங்கம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து அதிர்ந்தது!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum