தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தீமைகள் விலக்கி வைக்கும் திற்பரப்பு ஈசன்

Go down

தீமைகள் விலக்கி வைக்கும் திற்பரப்பு ஈசன் Empty தீமைகள் விலக்கி வைக்கும் திற்பரப்பு ஈசன்

Post  amma Fri Jan 11, 2013 1:26 pm

பக்தர்களை விட்டுத் தான் என்றுமே விலகிச் செல்வதில்லை என்பதை
நிரூபிப்பதற்காக, அந்த பக்தர்களுக்கு ஆதரவாக அருள்பாலிக்க இறைவன் ஆங்காங்கு
ஆலயங்களில் எழுந்தருளியிருக்கிறார். அவற்றில் ஒன்று, திற்பரப்பு எனும்
தலம். மேற்கு பார்த்த திருக்கோயில். பொதுவாகவே மேற்கு பார்த்த சிவாலயம்
என்றாலே அது தனிச் சிறப்பு கொண்டதுதான். அந்த வகையில் திற்பரப்பும்
புண்ணியம் பரப்பும் தலமாகவே திகழ்கிறது. பரளியாறு என்றும் பரப்பாறு என்றும்
அழைக்கப்படும் ஆறு, ஆலயத்தின் அருகேயே குளிர்ச்சி பொங்க பரந்து பாய்ந்து
செல்கிறது. ஆலயத்தின் முன்பு மேற்கிலிருந்து கிழக்காக பாய்கின்றது. இந்த
அமைப்பை உத்திரவாகினி என்பார்கள். இது போன்று ஆறு பாயும் இடத்தில் மேற்கு
நோக்கி சிவாலயம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

தட்சன், தன்
மகள் தாட்சாயிணியை சிவபெருமானுக்கு மணம் முடித்ததாலேயே இறுமாந்திருந்தான்.
உலகாளும் உமையன்னை தனக்கு மகளாக உதித்ததே மகேசனின் மகாகருணை என்று எண்ணாது
பெரிய மாயையில் சிக்கினான். வேதத்தின் மூலமாம் நாயகனான ஈசனின் அசைவுகளே
தேவர்களும் முனிவர்களும் சூரிய சந்திரர்களும் எனும் பேருண்மையை சுத்தமாக
மறந்திருந்தான். யாக முடிவில் அவிர்பாகம் ஏற்கும் தேவர்களின் வரம் தரும்
சக்தியை அந்த மகாதேவன்தான் அருள்கிறார் என்ற பெரும் உண்மையை உணராது
தான்தோன்றியாக யாகம் செய்ய தீர்மானித்தான். தாட்சாயிணி தந்தைக்கு
அருள்கிறார் ஈசனின் மகாத்மியத்தை விரிவாகச் சொல்லிப் பார்த்தாள்.
சிறிதளவும் அவன் சித்தத்தில் அவள் சொற்கள் தைக்கவில்லை.
தட்சன்
மகாயாகத்தைத் தொடங்கினான். எல்லோரையும் அழைத்துவிட்டு ஆதாரப் பொருளான
ஆதிசிவனை நிராகரித்தான். பரமசிவன் வராதுபோனால் என்ன, இதோ
சூரிய-சந்திரர்களும் தேவர்களும் இந்திரராஜனும் வந்திருக்கின்றனரே என்று
அந்த ஒட்டு மொத்த கூட்டத்தையும் கர்வத்துடன் பார்த்தான். யாக குண்டத்தின்
முன் அமர்ந்தான். ஈசன் தமது முக்கண்களையும் தீர்க்கமாக உயர்த்தினார்.
தட்சனின் யாகக் கட்டடத்தின் அஸ்திவாரம் அதிர்ந்தது. கயிலைநாயகன்
காமேஸ்வரியைப் பார்க்க பார்வதி யோகாக்னியால் தன்னை எரித்துக் கொண்டு கரிய
காளியானாள். பேருருவம் கொண்டாள். மூன்றாவது திருக்கண் அனல் கக்க கோபத்தால்
சிவந்தார் ஈசன். அந்த அனல் வீரபத்திரராய் உருவெடுத்தது.

யாகசாலைக்குச்
சென்று தட்சனின் தலையை கொய்து, அங்கே ஆட்டின் தலையை வைத்தார்.
சிவபெருமானின் கோபக் கனல், உலகத்தையே அழிக்கும் விதமாக விபரீதம் கொண்டது.
இந்த கோபாக்னியால் யாருக்கும் தீங்கு நேராதிருக்க இந்த விசாலமான
திருத்தலத்தைத் தேர்ந்தெடுத்து தவமிருந்தார், வீரபத்திரர். இவர் மேற்கு
நோக்கியும், பத்ரகாளி அருகிலுள்ள குகையில் கிழக்கு பார்த்தும் தவம் செய்து
கொண்டிருக்கிறார்கள். ஈசனின் கோபத்தைத் தாங்க இயலாத நந்தி, அவரை
எதிர்நோக்காமல், வடக்கு மாறி படுத்த நிலையில் காட்சி தருகிறது. அழகு
ததும்பும் இயற்கை எழில் கொஞ்சும் இந்தத் தலத்தின் பழைய பெயர் ஸ்ரீ
விசாலபுரம். ஸ்ரீ என்றால் திரு; விசாலம் என்றால் பரப்பு. இந்த ஸ்ரீவிசாலமே
மருவி திருப்பரப்பு என்றாகி, இப்போது திற்பரப்பாகிவிட்டது.

கோயிலுக்குள்
நாம் தெற்கிலிருந்துதான் நுழைய வேண்டும். வெளிப் பிராகாரத்தில் கொடி
மரத்தின் அருகாமையில் வடக்காக சாஸ்தா சந்நதி அமைந்துள்ளது. சுற்றுப்
பிராகாரத்தில் பாலகிருஷ்ணன், பாலமுருகன் சந்நதிகள் உள்ளன. அருகில் நாகப்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கிழக்காக ஆஞ்சநேயர் சந்நதி முற்றிலும்
கல்லினால் உருவான சிறிய ஆலயமாக உள்ளது. இவர் மேற்கு நோக்கிய திசையில்,
பக்தர்களின் சகல காரியங்களையும் வெற்றியாக்கி அருள்புரிகிறார். அதைத்
தாண்டி உள்ளே சென்றால் மகாபலி பீடம் உள்ளது. அதன்பின் கர்ப்பக் கிரகம்.
செம்புத் தகட்டினால் வேயப்பட்ட வட்ட வடிவமான மூலஸ்தானம். உள்ளே தட்சனை
அழித்த சிவன், தீமையை அழித்து நன்மை செய்யும் வண்ணமாக மகாதேவராக மேற்கு
நோக்கி அருள்பாலிக்கிறார்.

நேர் முன்னால் சமசதுர வடிவமுடைய பூஜை
மண்டபத்துடன் கூடிய முதல் பிராகாரத்தில், புராண இதிகாசங்களை தெளிவாகச்
சித்திரிக்கும் அற்புதமான மரச்சிற்பங்கள் நேர்த்தியாக வடிமைக்கப்பட்டுள்ளன.
சிவன் முன்பு நந்தி கிடையாது. சற்று விலகி ஒரு ஓரத்தில் இருக்கிறார்.
அவரும் உருவமற்ற நிலையில்தான் இருக்கிறார். மேலும் இந்த ஆலயத்தில் அம்மன்
கோயில் கொள்ளவில்லை. இந்த ஆலயம் இரண்டாயிரம் வருடத்திற்கு மேல் பழமை
வாய்ந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களில் வருடா வருடம்
மகாசிவராத்திரி நடைபெறும். அப்போதைய சிவாலய ஓட்டத்தில் தரிசனம்
செய்யப்படுபவற்றில் இத்திருக்கோயில் மூன்றாவதாகும். இக்கோயிலில்
பாலகிருஷ்ணன் சந்நதி உள்ளது.

இந்தக் கோயிலுக்கு மக்கள் சிவாலய
ஓட்டம் வரும்போது ‘கோவிந்தா... கோபாலா...’ என்று விஷ்ணு நாமம் கூவிக்கொண்டு
ஆலய தரிசனம் செய்கிறார்கள். இது சைவ-வைணவ ஒற்றுமையை நிலைநாட்டுகிறது.
இக்கோயிலில் அனைத்து திருவிழாக்களும் மிகச் சிறப்பாக நடக்கின்றன.
குறிப்பாக, மார்கழி மாதத்திலுள்ள திருவாதிரை நாள் மிக விசேஷமாக
கொண்டாடப்படுகிறது. திருவாதிரை புழுக்கு என்று ஒருவகை அரிய பதார்த்தம்
தயார் செய்யப்பட்டு நிவேதனம் செய்யப்படுகிறது. கட்டிச் சோறு மிகவும்
உன்னதமான பிரசாதம். மிருத்யுஞ்ஜெய ஹோமம் ஒவ்வொரு மாதமும் கடைசி
திங்கட்கிழமையன்று நடைபெறுகிறது.

தீமை எனும் கருநாகங்கள் நம்மை விட்டு அகல மங்கலமான மஞ்சள் பொடியை இறைவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் நன்மை பெறுகிறார்கள்.
கன்னியாகுமரியிலிருந்து
வடமேற்கே 60 கி.மீ. தூரத்திலும் திருவனந்தபுரத்திலிருந்து வடகிழக்கே 32
கி.மீ. தூரத்திலும் மார்த்தாண்டத்திலிருந்து வடக்காக 18 கி.மீ தூரத்திலும்
திற்பரப்பு உள்ளது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum