தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எண்ணமெல்லாம் ஈடேற்றுவார் ஏகாம்பர ஈசன்

Go down

எண்ணமெல்லாம் ஈடேற்றுவார் ஏகாம்பர ஈசன் Empty எண்ணமெல்லாம் ஈடேற்றுவார் ஏகாம்பர ஈசன்

Post  meenu Fri Mar 08, 2013 2:36 pm







பூவுலக மக்களைப் போன்று தானும் மணவறையில் நின்று சிவபெருமானைத் திருமணம் செய்து பார்த்து அந்த இன்பத்தை அனுபவிக்க வேணுமென்ற ஆசைவயப்பட்டு, காஞ்சிபுரத்தில் வேகவதி ஆற்றின் கரையினில் ஒரு மாமரத்தின் அடியில் தபசு செய்தார் அன்னை பராசக்தியாம் பார்வதி தேவியார். தபசின் தன்மையை உலகுக்குணர்த்த சிவபெருமான் அக்னியை, பார்வதி தேவி மேல் பிரயோகித்தார் உலகமாதாவை காக்க, பார்வதி தேவியின் சகோதரரும், காக்கும் பணியை ஆற்றும் மகாவிஷ்ணு சந்திர வடிவு கொண்டு குளிர்ந்த ஒளியால் அன்னையை அக்னியின் கொடுமை தாக்காது காத்தார். அப்பொழுது சிவபெருமானின் சிரசில் விஷ்ணு மறைந்திருந்து இப்பணியை செய்தமையாலேயே சிவனின் சிரசில், இன்றும் பிறை வடிவில் விஷ்ணு விளங்குகின்றார்.
இதையே அகத்தியர்,

‘‘தீ கொடுமை தணிக்க பிறைவடிவம்
கொண்ட யிடையன் முக்கண்ணன்
முடியமர அன்னையும் பிறைசூடிய
நடேசன் என்ன, யென்றும்
சிவசிரசு துலங்க நிற்பன் மாலே’’

-என்றார். வேகவதி என்பது கங்கை நதியின் மற்றொரு பெயர். இதிலிருந்து மணலை தனது கைகளால் எடுத்து லிங்க வடிவம் சமைத்து, பார்வதி தேவியார் பூஜித்து வந்தார். இந்த மூர்த்தியே ஏகாம்பரநாதர். பிருத்வி லிங்கமென வானோர் போற்றி தொழுத லிங்கமிது. ஒருமுறை வேகவதி ஆற்றில் கரை புரண்டு வெள்ள பெருக்கெடுத்து ஓடியது. அது ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள். இவ்வாறு கரை புரண்டு ஓடிய வெள்ளம், சிவலிங்கத்தின் மேல் பட்டால் அது கரைந்து போகுமே. ஏனெனில் அந்த லிங்கம் ஆற்று மணலைக் கொண்டு செய்யப்பெற்றதாயிற்றே! உடனே பார்வதி தேவியார், அந்த மணல் லிங்கத்தை ஆரத்தழுவி, வேகவதி நதிநீர் பிரவாகத்திலிருந்து காத்தார். பார்வதி மாதா அரவணைப்பில் சிவபெருமானாம் ஏகம்பன் குழைந்தார்.

இதையே அகத்தியர்,

‘‘நீரால் கரைந்துருமாறா நிலைபட
ஏகம்பனை அன்னை சக்தி ஆரத்
தழுவ குழைந்தாரது யவன்நாமமே’’

-என்றார். அதாவது ஏகாம்பரநாதருக்கு, தழுவக் குழைந்தார் என்ற பெயரும் உண்டு. அது தோன்றிய விதம் இப்பாடலால் உணரலாம். அப்படி ஆரத் தழுவிய அன்னை அமர்ந்த இடம் காமக்கோட்டம். இதுவே இன்றைய அன்னை காமாட்சி அம்மன் சந்நதி. வைஷ்ண க்ஷேத்திரங்கள் நூற்றி எட்டில் ஏகாம்பர நாதர் கோயில் கொண்டுள்ள இடத்தில் உள்ள நிலாத் திங்கள் துண்டத்தான் சந்நதியும் ஒன்றாகும். காமாட்சி அம்மனை அக்னியின் வெப்பம் தாக்காதிருப்பதற்காக, அதைத் தணிக்க சந்திரனாய் வடிவு கொண்டு நின்றமையால், தன் சந்நதியிலேயே, தனியொரு இடம் தந்து நிலவின் பெயரையே மகாவிஷ்ணுவாம் மாதவனுக்கு தந்து மகிழ்ந்தார் சிவன் இதனையே நம்மாழ்வார்,

‘‘மாதவன் என்று ஒரு வல்லீரேல்
தீதொன்றும் அடையா, ஏதம்
சாராவே’’

-என்றார். மாதவன், ஏகாம்பரேஸ்வரன் எதிர் நிற்பவன். இந்த கோயிலின் பஞ்ச பிராகாரங்களும் பஞ்ச பூதங்களின் அம்சம். அன்னை காமாட்சி ஜோதி வடிவாய் இறைவனை ஆலிங்கனம் செய்தமையால் இங்கு அம்பிகைக்குத் தனி சந்நதி இல்லை. ஆம். அன்னை சக்தி, ஏகாம்பரநாதனுடன் கலந்தே இருக்க இது அம்மையப்பர் ஸ்வரூபம். சச்சியப்ப முனிவரால் பூஜிக்கப்பட்ட திவ்ய அலங்கார மூர்த்தி. பதிணென் சித்தர்களும் ஆராதித்த மூர்த்தி. கம்பை தீர்த்தம் என்பது கோயிலின் புண்ணிய தீர்த்தம். அஷ்டவசுக்களும் இங்கு நீராடி இறைவனை போற்றியமையால் சாப நிவர்த்திக்கு இப்பூவுலகின் புண்ணிய பொக்கிஷம் இது என்கிறார் அகத்தியர்.

‘‘சொன்னோம் சத்தியம்- பூவுலகின்
புண்ணிய பெட்டகமிக் கச்சி
ஏகம்பனுறை கோஇல். எப்பிறவி
சாபமேதாயினுந் நீராகிப் போமே.
லட்சமேழரை சாப முறை கண்டோம்.
அவையனைத்து புகைபட நாடி யோடுவீர்
ஏகம்பனை சரணமடைவீர் மெய்யாது மெய்யே’’

-என்றார். கோயிலின் அடியில் ஒரு ஆறு ஓடுகின்றது. அதுவே கங்கை ஆறு. அதன் தேக்கமே இந்த கம்பை தீர்த்தம்.

‘‘கச்சியடி கங்கையிருக்க
காணலாகாது கண்டோம்
கம்பை நீராட முக்தியோடு
வீடு பேறுங்கிட்டுந்திண்ணமென
உணர்வீரே’’

இங்குள்ள மகாவிஷ்ணு சர்வ வல்லமை படைத்தவர். சந்திர தோஷம், கிரஹண தோஷம், திருஷ்டி தோஷம், ராகு, கேது, நாக தோஷம் போன்றன இவரை சந்திர கிரஹண காலத்திற்கு பிறகு, கம்பை தீர்த்தத்தில் நீராடி தொழுதால் நீங்கும், குழந்தைகளுக்கு வரும் பாலாரிஷ்ட தோஷங்களும் ஓடிவிடும் என்கிறார் அகத்தியர்.

‘‘வாமன ரூபங் கொண்டே நின்ற
நிலா திங்களான் தன்னை முழு
மதி கிரகணமகன்ற பின்னே கம்பை
முழு சப்த காலம் பூஜிப்பார் வினை
யகலுமே. பாம்பொடு நேத்திராடன
பீடை யகலுதல்லால் பாலாரிஷ்டத்துக்கு
பரிகாரமே’’

இங்கு தல விருட்சம் மாமரம். நான்கு வேதங்களே நான்கு கிளைகள். இதில் கனியும் மாம்பழம் ஒவ்வொரு கிளையிலும் வேறு வேறு இனமாக, வேறு வேறு சுவையுடன் இருக்கும். இது அதிசயம். இன்றும் பங்குனி உத்திரத்தில், அன்னை பார்வதி தேவி காமாட்சி அன்னையாய் உருவெடுத்து ஏகாம்பரநாதனை ஏகாந்தமாய் பூஜிக்கின்றாள்.

திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் போன்ற நாயன்மார்கள் இன்றும், மக்களோடு மக்களாய் கலந்து ஏகம்பனை கச்சிக்கரசனை பங்குனி உத்திர விழாவில் தொழுது இன்புறுகின்றனர்.
‘‘ஞானத் தரசனொடு அழகனும்
கூடி ஆண்டுக் கடையுத்திரத்து
துதிபாடி களிக்க கண்டுப் பரவச
மடைந்தோமே’’
-என்கிறார் அகத்தியர்.

மந்திர சித்தி பெறவேண்டுமா? எண்ணிய வாழ்க்கைத் துணையை கைப்பிடிக்க வேண்டுமா? நல்ல வீடு அமைய, நல்ல வரன் அமைய நாம் தேடி ஓடிவந்து போற்றி தொழவேண்டிய ஒரு கோயில் காஞ்சி ஏகாம்பரநாதன் கோயில், இந்தியாவில் தேவர்களுக்கும் சித்தர்களுக்கும் மிகவும் ஈடுபாடுடைய சிவ க்ஷேத்திரங்கள் ஏழு என்கிறது நாடி சாஸ்திரம். இதில் இந்த காஞ்சி ஏகாம்பரநாதர் சந்நதிதான் முதன்மையானது, முக்கியமானது.
எப்படிப்பட்ட பாவங்களுக்கும் விமோசனம் தரும் தலம் இது.

‘‘பூசை யாயிரம் புரியத் தேவையில்லை
துறவு ஏதும் ஏற்க வேண்டுவதுமில்லை
அன்னதானமுள்ளிட்ட தானமேதுமது
செய்து நிற்பதவசியமல்ல - யெடுத்த
பிறவி கடைத் தேறி கச்சி யேகம்பனை
யெண்ணித் தொழ வீடு
பேறு உண்டு நிச்சயமே’’
-என்கிறார் அகத்தியர்.

நாமும் ஒருமுறை இந்த ஏகாம்பர ஈசனை தொழுது கடைத்தேறுவோமே!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum