தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில்

Go down

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் Empty சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில்

Post  birundha Thu Mar 28, 2013 12:49 am

சேலம் மாவட்டத்தில், மாங்கனி நகராம் சேலம் மாநகரில் பிரசித்திப் பெற்ற பிரார்த்தனை ஸ்தலமாக அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் விளங்குகிறது. சேலத்தில் அமைந்துள்ள

1. கோட்டை மாரியம்மன்
2. அம்மாப்பேட்டை, மாரியம்மன்
3. செவ்வாய்ப்பேட்டை, மாரியம்மன்
4. சஞ்சீவிராயன்பேட்டை, மாரியம்மன்
5. சின்னக் கடைவீதி, சின்னமாரியம்மன்
6. குகை, மாரியம்மன்
7. அன்னதானப்பட்டி, மாரியம்மன்
8. பொன்னம்மாப்பேட்டை, மாரியம்மன்

ஆகிய எட்டு மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரியமாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் "எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி'' என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையானவள் என்பதற்கு மற்றொரு சான்றையும் சொல்லலாம். இப்பொழுது சிறப்பாக நடைபெற்று வரும் ஆடிப்பெருந்திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சேலம் மாநகரத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழாவாகும். இவ்விழாவின்போது பூச்சாட்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் திருக்கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச்சென்று அந்தந்த மாரியம்மன் திருக்கோயில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொன்றுதொட்டு வரும் நிகழ்ச்சியாகும். எனவே, இந்த வகையிலும் பெரிய மாரியம்மன் என்று அழைப்பது பொருத்தமாகும்.

அன்னையின் திருக்கோலம்..........

அன்னையின் சிரசில் ஜூவாலா கிரீடம் அக்னி ஜூவாலையுடன் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது. அக்கிரீடத்தில் நாகம்படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். வலது கீழ்க்கரத்தில் திரிசூலம் விளங்குகிறது.

இடது மேற்கரத்தில் அங்குசமும், அமுத சின்னமும் ஏந்தியவளாய் வீற்றிருக்கிறாள். இடது கீழ்கரத்தில் கபாலம் காணப்படுகிறது. அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக்கொண்டு ஈசான திசை நோக்கி அமைதி வடிவமாய், ஆனந்தம் பொங்கும் முகத்தாளாய் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாட்சி செய்து வருகின்றாள்.

கோவில் வரலாறு.........

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள்.

இந்த அம்மன் கோயிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது.

இக்கோட்டையில் அமைந்த இக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்டைக்கு காவல் தெய்வமாக இருந்ததால் "கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி'' என்ற சின்னப்பகவுண்டரின் பாடல்கள் மூலம் தெரியவருகிறது.

இந்த கோட்டைக்குள் இருந்த அம்மனை திருமணிமுத்தாற்றின் அருகில் சேலம் கணக்கர் தெருவில் இருக்கும் திரு.கனகசபை முதலியார், சிவசங்கர முதலியார் ஆகியோர் இப்போதிருக்கும் இடத்திற்கு இடம் மாற்றம் செய்து கோயில் அமைத்து கும்பாபிசேகம் செய்தார்கள். அப்போது திருமணிமுத்தாற்றிலிருந்து அம்மன் அபிசேகத்திற்கு தண்ணீர் எடுத்து வந்து அபிசேகம் செய்தனர்.

கோட்டை மாரியம்மனை தரிசிக்க சுற்றிலும் இருக்கிற ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர். இவர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை. தங்குவதற்கு இடவசதி இல்லாமல் பக்தர்கள் அல்லல்படுவதை அறிந்த சேலம் திரு.முத்துகுமார பிள்ளையும், பட்டாக்காரர் பார்வதி அம்மாளும் இவர்களின் மகன் மதுரைபிள்ளை ஆகியோர் தங்கள் சொந்த செலவில் இலவசமாக தங்குவதற்கு என்று 1876 தாது வருடம் சித்திரை மாதம் ஒரு தர்ம சத்திரத்தைக் கட்டி கொடுத்தார்கள்.

இந்த தர்ம சத்திரம் தான் கோயிலின் அலுவலகமாக செயல்பட்டு வந்தது. இக்கட்டிடம் பழுதடைந்து இடியும் நிலையில் அதை இடித்துவிட்டு அறநிலையத்துறை ஆணையர் அவர்களின் அனுமதியின்பேரில் ரூபாய் பன்னிரண்டு இலட்சத்தில் அலுவலகக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு பொங்கு மண்டபம் மற்றும் தங்கும் மண்டபம் ரூபாய் 1 லட்சம் மதிப்பில் "ஸ்ரீகோட்டை பெரிய மாரியம்மன் அறக்கட்டளை'' சார்பில் நன்கொடையாக கட்டி முடிக்கப்பட்டு உபயோகத்தில் இருந்து வருகிறது. 1881-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் விசு ஆண்டு கார்த்திகை திங்கள் சேலத்தைச் சேர்ந்த தாயம்மாள் என்பவரின் மகள் நாகம்மாள் என்பவர் கோயில் வடபுறம் அமைந்துள்ள தளம் அமைத்தும், கட்டிடத்தைப் புதுப்பித்தும் கொடுத்துள்ளார்கள்.

இவ்வாறாக திருக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு, சேலம் நகர மக்களிடையேயும், சுற்றுப்புற கிராம மக்களிடையேயும் பிரபலமடைந்து வருகிறது. 1982-1989 ம் ஆண்டிலும் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு 81 அடி உயர இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, 01.07.1993-ந் தேதியன்று திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum