தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விமர்சனம்: விண்மீன்கள்

Go down

விமர்சனம்: விண்மீன்கள் Empty விமர்சனம்: விண்மீன்கள்

Post  ishwarya Tue Mar 26, 2013 2:15 pm



அனுபவம் வாய்ந்த இயக்குநர்களே தேர்ந்தெடுக்கத் தயங்கும் ஒரு கதைக் களத்தைத் தன் அறிமுகப் படத்திலேயே துணிச்சலாகத் தேர்ந்தெடுத்து, அதை அற்புதமாகக் காட்சிப்படுத்திய இயக்குநர் விக்னேஷ் மேனன் பாராட்டுக்குரியவர்.

நரேன்-மீரா தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தை, செரிபரல் பால்ஸி என்கிற நோயால் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழ் செயல்பாடு இல்லாமல் இருக்கிறது. கிட்டத்தட்ட வெறும் ஜடம் எனக் கருதக்கூடிய வகையில் உள்ள அந்தக் குழந்தையைக் கைவிட மனமில்லாமல் பாசத்தையும் பரிவையும் காட்டி, தன்னம்பிக்கையூட்டி வளர்க்கின்றனர் பெற்றோர். இந்தச் சூழ்நிலையில் இளைஞனாக வளரும் அவன் ஒரு பள்ளி ஆசிரியராக எப்படி உருவெடுக்கிறான் என்பதை பாசம், காதல், சோகம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளைக் கலந்து நெகிழ்ச்சியுடன் கூறுவதே கதை.

நரேன், மீராவாக விஷ்வா, ஷிகா ஆகியோர் நடித்துள்ளனர். மகனுடைய குறையை அறிந்து ஆரம்பத்தில் அழுது புலம்பினாலும் பின்னர் தங்களைத் தேற்றிக்கொண்டு மகனுக்கு தன்னம்பிக்கையூட்டி அவனை ஆளாக்கும் பெற்றோர் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

செரிபரல் பால்ஸியால் பாதிக்கப்பட்ட சிறுவனாய் நடித்துள்ள கிருஷ்ணா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இளைஞன் வேடத்துக்கு ராகுல்; படம் முழுவதும் வீல் சேரில் உட்கார்ந்தபடி, செரிபரல் பால்ஸி குறைபாடுள்ளவர்களின் உடல் மொழியை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய காதலியாக வரும் அனுஜா ஐயர், மனதில் பதிகிறார். படத்தின் இன்னொரு முக்கியத் தூணாக வரும் பாண்டியராஜன், தன்னுடைய அனுபவத்தின் மூலம் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகராகப் பரிமளிக்கிறார்.

அனைத்துக் கதாபாத்திரங்களும் தாங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்றவாறும் பொருத்தமான முக பாவனைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்குரிய நடிப்பைப் பதிவு செய்துள்ளனர்.

படத்தைப் பார்வையாளர்களோடு ஒன்றச் செய்வதில் ஜூபினின் இசையும் ஆனந்தின் ஒளிப்பதிவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பின்னணி இசையும் பாடலிசையும் அற்புதம். "உன் பார்வை போதும்...', "அறியாத பருவத்தில்...' பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. நா.முத்துக்குமாரின் வரிகளில் தாலாட்டும் தன்னம்பிக்கையும் தடம்பதித்துள்ளன.

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் இடம்பெறும் வித்தியாசமான கேமரா கோணங்கள், உதகையின் அழகை உள்ளம் உவகை கொள்ளும்வகையில் படமாக்கிய விதம் போன்றவை ஆனந்தை முன்னணி ஒளிப்பதிவாளர்கள் பட்டியலில் சேர்க்கின்றன.

உடலால் பாதிக்கப்பட்ட ஒருவனை மனதாலும் பாதிக்க வைத்துவிடக்கூடாது என்ற கருத்தைக் கூற இயக்குநர் மேற்கொண்டுள்ள திரைக்கதை உத்திகள் "ஏ' கிளாஸ் ரகம். "தோற்றுவிடுவோம்னு நினைத்து விளையாடாம இருக்கக் கூடாது', "ஃபிஸிக்கலி சேலஞ்சானவங்களை மெண்ட்டலி சேலஞ்சாக்கிடாதீங்க' போன்ற வசனங்கள் பலம்.

அன்பின் ஆழத்தையும், உறவுகளின் உன்னதத்தையும், தன்னம்பிக்கையின் மகத்துவத்தையும் நல்ல கதை மூலம் வணிகச் சிந்தனை இல்லாமல் நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் மேனன்.

காதல் காட்சிகளிலும் ஆங்காங்கே மெதுவாகப் பயணிக்கும் காட்சிகளிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சிறு வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தாலும் அதனால் துவண்டு விடாமல் தன்னம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு, தான் எதிர்கொண்ட தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி, பின்னாள்களில் பிரபலமான எழுத்தாளராகவும் சமூக சேவகராகவும் திகழ்ந்த அமெரிக்கப் பெண்மணி ஹெலன் கெல்லர் கூறிய - "மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல; தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கையே' என்ற உண்மையைத் திரையில் உரத்துச் சொல்லியிருப்பதில் பிரகாசித்திருக்கிறது... "விண்மீன்கள்'!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum