தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மார்கழி மாதம் திருவாதிரை நோன்பு!

Go down

 மார்கழி மாதம் திருவாதிரை நோன்பு! Empty மார்கழி மாதம் திருவாதிரை நோன்பு!

Post  oviya Sun Mar 24, 2013 7:14 pm

மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளில் அமைவதுதான் ஆருத்திரா தரிசனம். இந்த திருநாளில் சிவபெருமானின் திருநடனத்தை காண கண் கோடி வேண்டும். நடராஜ பெருமானின் நடனத்துடன் அந்த இசையும் கேட்டாலே நம் கவலைகள் மறந்து நம்மையும் அறியாமல் ஆட வைக்கும் சிலிர்க்க வைக்கும் நடனம்தான் எம்பெருமான் ஈசனின் ஆருத்திரா நடனம். இந்த ஆருத்திரா தரிசனத்தை நேரடியாக கண்டாலே போதும் பாவங்கள் நீங்கி, நாம் எங்கு சென்றாலும் நம்மை பின்தொடரும் தரித்திர துஷ்ட தேவதைகள், தலைதெறிக்க ஓடிவிடும். இப்படி சக்தி வாய்ந்த ஆருத்திரா தரிசனம் எப்படி உருவானது என்பதை தெரிந்தகொள்ள வேண்டும் அல்லவா?.

முனிவர் பத்தினியால் வந்துதான் ஆருத்திரா தரிசனம்

ஒருநாள், பலர் முனிவர்கள் யாகம் செய்து கொண்டு இருந்தார்கள். ஈசன், பிச்சாடனர் உருவத்தில் தோன்றி, முனிவர்களின் வீடுகளுக்கு சென்று பிச்சை கேட்டார். சிவனுக்கு பிச்சை இட வந்த முனிபத்தினிகள், பிச்சாடனரிடம் மதி மயங்கி பிச்சாடனர் கிளம்பும் போது முனிபத்தினிகளும் அவர் பின்னால் சென்றார்கள். இதை கண்ட முனிவர்கள் கோபம் கொண்டு, வந்திருப்பது சிவபெருமான் என்பதை அறியாமல், மதயானைகளையும், மானையும், தீப்பிழம்பையும் பிச்சாடனர் மேல் ஏவினார்கள். தம்மை தாக்க வந்த அத்தனையும் சிவன், தன்னுள் வசியப்படுத்தினார். அத்துடன் வலதுகாலை ஊன்றி இடதுகாலை தூக்கி நடனம் ஆடினார். அதை கண்ட முனிவர்கள் வந்திருப்பது சிவபெருமானே என்பதை அறிந்து மகிழ்ந்து, தங்களின் தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டி, ஆருத்திரா தரிசனத்தை கண்டு ஆனந்தம் அடைந்தார்கள்.

முதன் முதலில் ஆருத்திரா தரிசனம் முனிவர்களுக்காக ஈசன் ஆடினார் என்கிறத புராணம்.

அமிர்தத்தை விட சிறந்த விருந்து என்று புகழ்ந்த ஈசன்
சிதம்பரத்தில் வாழ்ந்து வந்தவர் சேந்தனார். அவர் விறகுவெட்டி, அதை விற்று அந்த பணத்தை வைத்துகொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இவருடைய மனைவி நற்குணம் படைத்தவர். இவர்கள் சிறந்த சிவபக்தர்கள். அதனால் தினமும் தன் சக்திக்கேற்ப ஒரு சிவதொண்டருக்காவது உணவு படைத்த பிறகுதான் இவர்கள் சாப்பிடுவார்கள்.

ஒருநாள் விறகுவெட்ட காட்டுக்கு சென்றபோது, பேய் மழை கொட்டியது. இதனால் வெட்டிய விறகுகள் அனைத்தும் ஈரம் ஆனது. ஒரு விறகை கூட விற்க முடியவில்லை. பணம் இல்லாமல் வீடு திரும்பினார். காய்கறி சமைத்து போடும் அளவில் பண வசதி இல்லாததால், வீட்டில் இருந்த உளுந்து மாவில் களி சமைத்து, சிவதொண்டர் யாராவது வருவார்களா? அவர்கள் இந்த களியை சாப்பிடுவார்களா? என்ற மனவருத்தத்துடன் காத்திருந்தனர் சேந்தனார் தம்பதியினர்.

தொண்டனை தேடி தொண்டனாக வந்த இறைவன்

அப்போது ஒரு சிவதொண்டர், சேந்தனாரின் வீட்டு வாசலில் நின்றபடி, “சேந்தனார், உண்ண உணவு எதாவது இருக்கிறதா?“ என்று தேனினும் இனிய தெய்வீக குரலில் வினவினார். இதைகேட்ட சேந்தனார் மகிழ்ந்து, தன் வீட்டுக்கு இந்த நல்ல மழையில் சிவதொண்டர் ஒருவர் வந்து உணவு கேட்கிறாரே என்று மகிழ்ந்து, மனமகிழ்ச்சியுடன் சேந்தனாரும் அவருடைய மனைவியும் அவசர அவசரமாக அவரை வீட்டினுள் அழைத்து, சமைத்து வைத்திருந்த களியை விருந்தினராக வந்த சிவதொண்டருக்கு தந்தார்கள். அதை வாங்கி சாப்பிட்ட சிவதொண்டர், “அடடா, அமிர்தத்தை விட சுவையாக இருக்கிறதே. இதுபோல் நான் சாப்பிட்டதே இல்லை. எல்லோரும் வடை பாயசத்துடன் உணவு தந்து தந்தே என் நாவே செத்துவிட்டது. இப்போதுதான் அதற்கு உயிரே வந்தது.” என மகிழ்ந்து சிரித்தார். இன்னும் களி இருந்தால் கொடுங்கள். அடுத்த வேலைக்கு சாப்பிடுவேன்.” என்று கேட்டு வாங்கி சென்றார் சிவதொண்டர்.


தில்லைவாழ் அந்தணர்கள் அதிர்ந்தார்கள்

சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோவிலில் வழக்கமாக வழிபாடு செய்ய கருவறையை திறந்தார்கள் தில்லைவாழ் அந்தணர்கள். அப்போது அவர்கள் கண்ட காட்சி ஆச்சரியமும் அதிர்ச்சியும் தந்தது. கருவறையில் நடராஜப் பெருமானின் வாயில் களி ஒட்டி இருந்தது. ஆங்காங்கே களி சிதறியும் இருந்தது. “யார் கருவறைக்குள் களி கொண்டு வந்திருப்பார்கள்.? எப்படி கருவறையில் களி வந்தது.? அதுவும் நடராஜர் வாயிலும் களி இருக்கிறதே.” என்று எண்ணி இந்த விஷயத்தை அரசரிடம் தெரிவிக்கவேண்டும் என்று அரசரிடமும் தெரிவித்தார்கள் தில்லைவாழ் அந்தணர்கள்.

விஷயத்தை கேட்ட அரசரும் ஆச்சரியம் அடைந்தார். “நேற்று இரவு என் கனவில் சிவபெருமான் தோன்றி, “தினமும் நீ கொடுத்த உணவை விட இன்று நமது தொண்டன் சேந்தனார் கொடுத்த களி அமிர்தத்தை விட சுவையாக இருந்தது.” என்றார். அப்படியென்றால் அது கனவல்ல – நிஜம். ஒரு சிவதொண்டர் கொடுத்த களியைதான் ஈசன் சாப்பிட்டார் என்று அந்தணர்களிடம் விளக்கி, அத்துடன் யார் இந்த சேந்தனார்.? அவர் எங்கிருக்கிறார் என்று விசாரியுங்கள். அவரை நான் உடனே காணவேண்டும்.” என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் மன்னர்.

பல்லாண்டு பல்லாண்டு

சேந்தனாரை தேடிகொண்டு இருந்தார்கள் ராஜ அதிகாரிகள். அப்போது, சிதம்பர நடராஜ பெருமானுக்கு தேர் திருவிழா நடந்தது. அந்த தேர் திருவிழாவில் மக்களுடன் அரசரும் கலந்துகொண்டார். அங்கே சேந்தனாரும் வந்திருந்தார். ஆனால் அவர்தான் சேந்தனார் என்று யாருக்கும் தெரியாது. அன்று நல்ல மழை. தேரை வடம் பிடித்து இழுக்கும்போது தேரின் சக்கரம் மண்ணில் புதைந்து கொண்டது. எவ்வளவோ முயன்றும் தேர் சக்கரத்தை மண்ணில் இருந்து விடுவிக்க இயலவில்லை. அப்போது ஒர் அசரீரி குரல் கேட்டது. “சேந்தனார்…. நீ பல்லாண்டு பாடு“ என்றது அசரீரி.

அதற்கு சேந்தனார், “இறைவா.. நான் பாடுவதா.? எனக்கு பாட தெரியாதே.” என்று பொருள்பட தன்னை அறியாமல் பாடலாகவே பாடினார் சேந்தனார். அத்துடன் “மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல” என்ற பாடலை தொடங்கி, “பல்லாண்டு கூறுதுமே” என்று பாடிகொண்டே பதிமூன்று பாடல்களை பாடினார். அந்த பாடல்களை கேட்டு இறைவன் மகிழ்ந்து, மண்ணில் மாட்டிக்கொண்ட தேர் சக்கரத்தை விடுவித்தார். தேர் நகர ஆரம்பித்தது. மக்களும் சுலபமாகவே தேரை இழத்தார்கள். தேர் இழுத்தவர்கள் ஏதோ பஞ்சை நகர்த்துவது போல் தேர் பாரம் இல்லாமல் இருப்பதை உணர்ந்தார்கள்.

நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அரசர், சேந்தனாரிடம் வந்து, “தாங்கள்தான் சேந்தனார் என்பதை இன்றுதான் இறைவன் மூலமாக அறிந்தேன். தங்கள் இல்லத்தில்தான் சிவபெருமான் களி சாப்பிட்டு, அமிர்தத்தை விட சுவையாக இருக்கிறது என்று புகழ்ந்தார்” என்று அரசர் சேந்தனாரிடம் சொன்னதும் சேந்தனார் மகிழ்ச்சியடைந்தார். அன்று தம் வீட்டுக்கு ஒரு சிவதொண்டராக வந்ததது இறைவனே என்பதை சேந்தனார் அரசர் மூலமாக தெரிந்துக்கொண்டார்.

இறைவன் சிவபெருமான், முதன் முதலில் களி சாப்பிட்ட நாள், திருவாதிரை நட்சத்திர நாள் என்பதால் “திருவாதிரை களி” என்று பெயர் வந்தது என்கிறது வரலாறு.

திருவாதிரை களி செய்யும் முறை

வாணலியில் பச்சரிசியை ஒரு தவாவில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். ஒரு ஆளாக்கு அரிசிக்கு இரண்டரை தம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவேண்டும். கொதித்த தண்ணீரில் அரைத்து வைத்திருந்த பச்சரிசிமாவை சிறிது சிறிதாக போட்டு கிளர வேண்டும். கட்டி ஆகாத படி கிளறவும். வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து வெல்லத்தை கிளறவும். பாகு பதத்திற்கு வரும் வரை கிளறவும்.

பிறகு அந்த வெல்லம் பாகுவை எடுத்து கொதித்த கொண்டு இருக்கம் மாவில் ஊற்றி கிளர வேண்டும். வாணலியில் 10 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் போட்டு வதக்கி அதை, செய்து வைத்திருந்த வெல்லமாவில் போட்டு கிளரினால் திருவாதிரை களி ரெடி.

திருவாதிரை நாளன்று விரதம் இருப்பது மிகவும் சிறந்தது. விரதம் இருக்க முடியாதவர்கள் ஈசனை நினைத்து, ஈசனுக்கு பிடித்த திருவாதிரை களி படைத்து அதை பிரசாதமாக சாப்பிடலாம். அருகில் உள்ள சிவலாயத்திற்கு சென்று சிவபெருமானை தரிசிக்க வேண்டும். ஆருத்திரா நடனத்தையும் காண வேண்டும்.

ஈசன் திருவருளால் நீர், நெருப்பு, காற்றால் எந்த ஆபத்தும் வராது. பூமியோகம் ஏற்படும். சர்வலோகநாயகனை வணங்கி சகலநன்மைகளை பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum