தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமிர்தசரஸ் காங்கிரஸ்

Go down

அமிர்தசரஸ் காங்கிரஸ் Empty அமிர்தசரஸ் காங்கிரஸ்

Post  birundha Sat Mar 23, 2013 4:25 pm

ராணுவ ஆட்சிக் காலத்தில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த நூற்றுக்கணக்கான பஞ்சாபிகளைப் பாஞ்சால அரசாங்கம் நீண்ட காலம் சிறையில் வைத்திருந்துவிட முடியாது. இவர்களெல்லாம், பெயரளவிலேயே கோர்ட்டுகளாக இருந்த மன்றங்களில் அரைகுறையான சாட்சியங்களைக் கொண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். இப் பெரிய அநீதியைக் குறித்து எங்கே பார்த்தாலும் கண்டனங்கள் எழுந்ததால், அவர்களை மேற்கொண்டும் சிறையில் அடைத்து வைத்திருப்பது அசாத்தியம் என்று ஆகிவிட்டது. காங்கிரஸ் மகாநாடு ஆரம்பமாவதற்கு முன்னாலேயே சிறையில் இருந்தவர்களில் பெரும்பாலோர் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். காங்கிரஸ் மகாநாடு நடந்து கொண்டிருந்த போதே லாலா ஹரி கிருஷ்ணலாலும் மற்றத் தலைவர்களும் விடுதலையாயினர். அலி சகோதரர்களும் சிறையிலிருந்து நேரே காங்கிரஸு க்கு வந்தார்கள். மக்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. பண்டித மோதிலால் நேரு தமக்கு ஏராளமான வருமானத்தை அளித்து வந்த வக்கீல் தொழிலைத் தியாகம் செய்துவிட்டுப் பாஞ்சாலத்தையே தமது தலைமை ஸ்தானமாகக் கொண்டு மகத்தான சேவை செய்திருந்தார்.

காங்கிரஸ் மகாநாட்டுக்கு அவரே தலைவர். காலஞ்சென்ற சுவாமி சிரத்தானந்தஜி வரவேற்பு கமிட்டித் தலைவராக இருந்தார். இந்தச் சமயம் வரையில் காங்கிரஸின் வருடாந்திர நடவடிக்கையில் நான் கொண்ட பங்கு, தேசீய மொழியில் என் பிரசங்கத்தைச் செய்து ஹிந்தியை அனுசரிக்கும்படி வற்புறுத்தி வந்ததே ஆகும். அந்தப் பிரசங்கங்களில் வெளிநாடுகளிலிருக்கும் இந்தியர் குறைகளைக் குறித்தும் எடுத்துக் கூறி வந்தேன். இந்த ஆண்டு அதைவிட நான் அதிகமாக எதுவும் செய்ய வேண்டி இருக்கும் என்றும் நான் எதிர் பார்க்கவில்லை. ஆனால், இதற்கு முன்னால் அநேக சமயங்களில் நேர்ந்திருப்பதைப் போன்றே இச்சமயமும் பொறுப்பான வேலை எனக்கு வந்து சேர்ந்தது. புதிய அரசியல் சீர்திருத்தங்களைக் குறித்து மன்னரின் அறிவிப்பு அப்பொழுதுதான் வெளியாயிற்று. எனக்குக் கூட அது முற்றும் திருப்தியளிப்பதாக இல்லை. மற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் அது திருப்தியை அளித்தது. அளிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் குறைபாடுடையவைகளேயாயினும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே என்று அச்சமயம் நான் எண்ணினேன்.

மன்னரின் அறிக்கையிலும், அதன் பாஷையிலும் லார்டு சின்ஹாவின் கைத்திறன் இருப்பதாக எனக்குத் தோன்றியது. இது எனக்குச் சிறிதளவு நம்பிக்கையையும் அளித்தது. ஆனால், காலஞ்சென்ற லோகமான்யர், தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் போன்ற அனுபவமுள்ள தீரர்களோ, அந்தச் சீர்திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல என்று தலையை அசைத்து விட்டார்கள். பண்டித மாளவியாஜி நடுநிலைமை வகித்தார். பண்டித மாளவியாஜி, தமது சொந்த அறையிலேயே நான் தங்கும்படி செய்தார். ஹிந்து சர்வகலாசாலை அஸ்திவார விழாச்சமயம் அவருடைய எளிய வாழ்க்கையைக் குறித்து நான் கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்தேன். ஆனால், இச்சமயம் அவருடைய அறையிலேயே அவருடன் இருந்து வந்ததால், அவருடைய அன்றாட வாழ்க்கை முறையை மிக நுட்பமாகக் கவனிக்க என்னால் முடிந்தது. நான் கண்டவை, எனக்கு ஆனந்தத்தையும் ஆச்சரியத்தையும் அளித்தன. ஏழைகள் எல்லோரும் தாராளமாக வந்து இருக்கக்கூடிய தரும சத்திரத்தைப் போன்றே அவரது அறைகாட்சி அளித்தது. அந்த அறையில் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் போய் விடமுடியாது. உள்ளே அவ்வளவு கூட்டம். எந்த நேரத்திலும் யாவரும் அவர் அறைக்குள் போகலாம். விரும்பும் வரையில் அவருடன் தாராளமாக பேசிக்கொண்டிருந்து விட்டுப் போகலாம்.

இந்த அறையின் ஒரு மூலையில் என்னுடைய சார்ப்பாய் (நார்க் கட்டில்) மிகவும் கம்பீரமாகக் கிடந்தது. ஆனால், மாளவியாஜியின் வாழ்க்கை முறையை இந்த அத்தியாயத்தில் நான் வர்ணித்துக்கொண்டு இருப்பதற்கில்லை. நான் கூற வந்த விஷயத்திற்கே நான் திரும்பவேண்டும். இவ்வாறு தினமும் மாளவியாஜியுடன் நான் பழக முடிந்தது. ஒரு மூத்த சகோதரரைப் போன்று அவர், பலதரப் பட்ட கட்சியினரின் கருத்துக்களையும் அன்போடு எனக்கு விளக்கிச் சொல்லி வந்தார். அரசியல் சீர்திருத்தத்தைப் பற்றிய தீர்மானத்தின் மீது மகாநாட்டின் நடவடிக்கைகளில் நான் கலந்து கொண்டாக வேண்டியது தவிர்க்க முடியாதது என்பதைக் கண்டேன். பாஞ்சால அட்டூழியங்களைக் குறித்த காங்கிரஸின் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பில் நானும் பங்கு கொண்டிருந்ததால், அதன் சம்பந்தமாக இனி மேல் செய்ய வேண்டியவைகளையும் நான் கவனித்தே ஆக வேண்டும் என்பதை உணர்ந்தேன். அது சம்பந்தமாக அரசாங்கத்துடன் விவகாரம் நடத்தியாக வேண்டும். அதே போல கிலாபத் பிரச்னையும் இருந்தது. மேலும் ஸ்ரீ மாண்டேகு, இந்தியாவின் லட்சியத்திற்குத் துரோகம் செய்ய மாட்டார். துரோகம் செய்யப்படுவதற்கு அனுமதிக்கமாட்டார் என்றும் அச்சமயம் நான் நம்பியிருந்தேன்.

அலி சகோதரர்களும் மற்ற கைதிகளும் விடுதலை செய்யப்பட்டது நல்ல சகுணம் என்றும் எனக்குத் தோன்றியது. இந்த நிலைமையில் அரசியல் சீர்திருத்தங்களை நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தைச் செய்வதே சரியான காரியம் என்றும் எண்ணினேன். ஆனால், தேசபந்து சித்தரஞ்சன் தாஸோ, அரசியல் சீர்திருத்தங்கள் போதுமானவை அல்ல, திருப்திகரமானவை அல்ல என்று அடியோடு நிராகரித்து விடவேண்டியதே என்ற கருத்தில் உறுதியுடன் இருந்தார். காலஞ்சென்ற லோகமான்யரோ, அநேகமாக நடுநிலைமையே வகித்தார். ஆனால், தேசபந்து அங்கீகரிக்கும் எந்தத் தீர்மானத்திற்கும் சாதகமாகத் தமது ஆதரவை அளித்து விடுவதென்றும் தீர்மானித்திருந்தார். இத்தகைய அனுபவமுள்ள, நீண்ட காலம் சிறந்த தேசத் தொண்டாற்றி மக்களின் மதிப்பைப் பெற்றிருந்த தலைவர்களின் கருத்துக்கு மாறான கருத்தை நான் கொள்ளுவது என்ற எண்ணமே என்னால் சகிக்க முடியாததாக இருந்தது. ஆனால், அதே சமயத்தில் என்னுடைய மனச்சாட்சியின் குரலும் எனக்குத் தெளிவாக ஒலித்தது. காங்கிரஸிலிருந்து ஓடிப் போய்விடவே நான் முயன்றேன். காங்கிரஸில் இனி நடக்கவிருக்கும் நடவடிக்கைகளில் நான் கலந்துகொள்ளாது இருந்து விடுவதே எல்லோருக்கும் நன்மையாக இருக்கும் என்று பண்டித மாளவியாஜியிடமும் மோதிலால்ஜியிடமும் சொன்னேன். அவ்வாறு நான் செய்தால், மதிப்பிற்குரிய
தலைவர்களுக்கு மாறான கருத்தை நான் காட்டிக்கொள்ளுவதிலிருந்து நான் காப்பாற்றப்பட்டவனும் ஆவேன் என்றேன். ஆனால், என் யோசனையை இவ்விரு தலைவர்களும் அங்கீகரிக்கவில்லை.

என்னுடைய இந்த யோசனை எப்படியோ லாலா ஹரிகிருஷ்ண லாலின் காதுகளுக்கும் எட்டிவிட்டது. அப்படிச் செய்யவே கூடாது. பாஞ்சாலத்தினரின் உணர்ச்சிகளை அது மிகவும் புண்படுத்தும் என்றார் அவர். இவ் விஷயத்தைக் குறித்து லோகமான்யர், தேசபந்து, ஸ்ரீ ஜின்னா ஆகியவர்களுடன் விவாதித்தேன். ஆனால், எந்த வழியையும் காண முடியவில்லை. முடிவாக என் துயர நிலைமையை மாளவியாஜியிடம் எடுத்துக் கூறினேன். சமரசம் ஏற்படும் என்பதற்கான எதையும் நான் காணவில்லை. என் தீர்மானத்தை நான் கொண்டு வருவதாயின், அதன்மீது வாக்கெடுக்க வேண்டிவரும். ஆனால், அதற்கு வேண்டிய ஏற்பாடு எதுவும் அங்கிருப்பதாக நான் காணவில்லை. காங்கிரஸ் மகாநாட்டில் இதுவரையில் கை தூக்கச் சொல்லி வாக்கெடுக்கும் முறையே அனுசரிக்கப்பட்டு வந்திருக்கிறது. பிரதிநிதிகளுக்கும், மகாநாட்டை வேடிக்கை பார்க்க வந்திருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசங்களெல்லாம் அப்பொழுது போய்விடுவதும் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இத்தகைய பெரிய கூட்டங்களில் வாக்குகளை எண்ணுவதற்கான சாதனங்களும் நம்மிடம் இல்லை. வோட்டு எடுக்க வேண்டும் என்று நான் விரும்பினாலும், அதற்கு வேண்டிய வசதியும் நம்மிடம் இல்லை, அதில் அர்த்தமும் இல்லை என்று சொன்னேன். லாலா ஹரிகிருஷ்ண லாலே இதில் கை கொடுக்க முன் வந்தார். வேண்டிய ஏற்பாடுகளைத் தாம் செய்வதாக ஒப்புக் கொண்டார். வாக்கெடுக்கும் தினத்தன்று, வேடிக்கை பார்க்க வந்திருப்பவர்களைக் காங்கிரஸ் பந்தலில் அனுமதிக்க மாட்டோம். வாக்குகளை எண்ணிக் கணக்கிடுவதைப் பொறுத்த வரையில் நான் கவனித்துக் கொள்ளுகிறேன். ஆனால், நீங்கள் மாத்திரம் காங்கிரஸு க்கு வராமல் இருந்து விடக் கூடாது என்றார், அவர்.

நான் உடன்பட்டேன். என் தீர்மானத்தைத் தயாரித்தேன். உள்ளத்தில் நடுங்கிக்கொண்டே அதைப் பிரேரிக்கவும் முற்பட்டேன். பண்டித மாளவியாஜியும் ஸ்ரீ ஜின்னாவும் அதை ஆதரிக்க இருந்தனர். எங்களுடைய கருத்து வேற்றுமையில் மனக்கசப்பு என்பது ஒரு சிறிதேனும் இல்லாமல் இருந்த போதிலும், நியாயத்தை எடுத்துக் கூறியதைத் தவிர எங்கள் பிரசங்கங்களில் வேறு எதுவுமே இல்லையென்றாலும், அபிப்பிராய பேதம் இருக்கிறது என்பதை மக்கள் சகிக்கவே இல்லை. அது அவர்களுக்கு வேதனையை அளித்தது என்பதைக் கண்டேன். பூரணமான ஒற்றுமையையே அவர்கள் விரும்பினார்கள். ஒரு பக்கம் பிரசங்கங்கள் செய்யப்பட்டு வந்த அதே சமயத்தில் மற்றொரு பக்கத்தில், அபிப்பிராய பேதத்தில் சமரசம் செய்து வைப்பதற்கு மேடையில் முயற்சிகள் நடந்து கொண்டு வந்தன. அதற்காக, தலைவர்கள் தங்கள் தங்கள் கருத்துக்களைத் தாராளமாகப் பரிமாறிக்கொண்டு வந்தனர். ஒற்றுமையை உண்டாக்குவதற்கு மாளவியாஜி எல்லா முயற்சிகளையும் செய்து வந்தார். அச்சமயத்தில் ஜெயராம்தாஸ், தீர்மானத்திற்குத் தமது திருத்தத்தை என்னிடம் கொடுத்தார். தமக்குள்ள இனிய சுபாவத்துடன், பிளவு ஏற்படும் இப்பெரிய தொல்லையிலிருந்து பிரதிநிதிகளைக் காப்பாற்றும் படியும் என்னைக் கேட்டுக்கொண்டார்.

அவருடைய திருத்தம் எனக்குப் பிடித்திருந்தது. இதற்கிடையில் நம்பிக்கைக்கு எங்காவது இடம் இருக்கிறதா என்று மாளவியாஜியின் கண் தேடிக்கொண்டே இருந்தது. ஜெயராம்தாஸின் திருத்தம் இரு தரப்பாரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக எனக்குத் தோன்றுகிறது என்று அவரிடம் நான் கூறினேன். அடுத்த படியாக அத்திருத்தம் லோகமான்யரிடம் காட்டப்பட்டது. ஸி. ஆர். தாஸ் ஒப்புக்கொள்ளுவதாக இருந்தால், எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என்றார். அவர் முடிவாக தேசபந்து தாஸு ம் தமது பிடியைத் தளர்த்தி அங்கீகாரத்திற்காக ஸ்ரீ விபினசந்திரபாலை நோக்கினார். மாளவியாஜிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. திருத்தத்தைக் கொண்ட காகிதச் சீட்டை அவர் பிடுங்கிக்கொண்டு, சரி என்று தேசபந்து திட்டமாகத் தமது ஆதரவை அறிவிப்பதற்கு முன்னாலேயே, சகோதரப் பிரதிநிதிகளே! சமரசம் ஏற்பட்டுவிட்டது என்பதை அறிய நீங்கள் ஆனந்த மடைவீர்கள் என்று கோஷித்தார். பிறகு அங்கே கண்ட காட்சி வர்ணிக்க முடியாததாகும். கூடியிருந்தவர்களின் கரகோஷம் பந்தலையே பிளந்துவிடும் போல் எழுந்தது. இதுகாறும் கவலை தேங்கியிருந்த முகங்கள் ஆனந்தத்தால் பிரகாசமடைந்தன. திருத்தத் தீர்மானத்தைக் குறித்து இங்கே கூறிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த அத்தியாயங்களில் நான் விவரித்து வரும் என்னுடைய சத்தியசோதனையின் ஒரு பகுதியாக மேற்கண்ட தீர்மானத்தை எவ்வாறு நான் கொண்டுவர நேர்ந்தது என்பதை விவரிப்பதே இங்கே என்னுடைய நோக்கமாகும். இந்தச் சமரசம் என்னுடைய பொறுப்பை மேலும் அதிகரித்தது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» காங்கிரஸ் காங்கிரஸ்
» காங்கிரஸ் பணி ஆரம்பம்
» நேட்டால் இந்தியர் காங்கிரஸ்
» காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum