தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காங்கிரஸ் பணி ஆரம்பம்

Go down

காங்கிரஸ் பணி ஆரம்பம் Empty காங்கிரஸ் பணி ஆரம்பம்

Post  birundha Sat Mar 23, 2013 4:25 pm

அமிர்தசரஸ் காங்கிரஸ் நடவடிக்கைகளில் நான் கலந்து கொண்டது, காங்கிரஸின் ராஜீய காரியங்களில் என்னுடைய உண்மையான பிரவேசம் என்றே நான் கொள்ள வேண்டும். இதற்கு முந்திய காங்கிரஸ் மகாநாடுகளுக்கு நான் போனதெல்லாம், காங்கிரஸினிடம் எனக்குள்ள பக்தியை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொள்ளுவதைப் போன்றதே அன்றி வேறல்ல. அந்தச் சமயங்களில் காங்கிரஸின் சாதாரணப் போர் வீரன் என்று தான் நான் இருந்தேனேயல்லாமல் எனக்கென்று குறிப்பிட்ட வேலை எதுவும் இல்லை. சாதாரணச் சிப்பாய் என்பதற்கு அதிகமாக எதையும் நான் விரும்பியதும் இல்லை. இரண்டொரு காரியங்களைச் செய்யும் தன்மை என்னிடம் இருக்கக்கூடும். அது காங்கிரஸு க்குப் பயன்படும் என்று அமிர்தசரஸ் அனுபவம் காட்டியது. பாஞ்சால விசாரணை சம்பந்தமாக நான் செய்த வேலை, காலஞ்சென்ற லோகமான்யர், தேசபந்து, பண்டித மாளவியாஜி ஆகியவர்களுக்குத் திருப்தியளித்தது என்பதை, அதற்கு முன்னாலேயே என்னால் காண முடிந்தது. விஷய ஆலோசனைக் கமிட்டிக்கு அனுப்பும் தீர்மானங்களைக் குறித்து ஆலோசித்த தலைவர்களின் தனிக் கூட்டங்களுக்கு வழக்கமாக என்னையும் அழைப்பார்கள். தலைவர்களின் விசேட நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களையும், யாருடைய சேவை தங்களுக்குத் தேவைப் படுகின்றதோ அவர்களையும் மாத்திரமே அத்தகைய கூட்டங்களுக்கு அழைப்பார்கள். அவ்விதம் அழைக்கப்படாதவர்கள் சிலரும் சில சமயங்களில் இக்கூட்டங்களுக்கு வந்து விடுவதும் உண்டு.

அடுத்த ஆண்டில் ஒரு காரியங்களைச் செய்வதில் நான் சிரத்தை கொண்டேன். அவற்றைச் செய்வதில் எனக்கு விருப்பமும் ஆற்றலும் இருந்தன. அவற்றில் ஒன்று, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஞாபகார்த்தச் சின்னம். இதைச் செய்வதென்று காங்கிரஸில் மிகக் குதூகலத்தினிடையே ஒரு தீர்மானம் நிறைவேறியிருந்தது. இதற்காக ஐந்து லட்சம் ரூபாய் நிதி திரட்ட வேண்டும். இந்த நிதிக்கு என்னையும் ஒரு தருமகர்த்தாவாக நியமித்தார்கள். பொதுக்காரியங்களுக்குப் பிச்சை எடுப்பதில் மன்னர் என்று பண்டித மாளவியாஜி கீர்த்தி பெற்றிருந்தார். ஆனால், இந்தக் காரியத்தில் அவருக்கு நான் அதிகம் பின்வாங்கியவன் அல்ல என்பது எனக்குத் தெரியும். நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதுதான் இத்துறையில் எனக்கு இருந்த ஆற்றலைக் கண்டுபிடித்தேன். என்றாலும், சுதேச மன்னர்களிடமிருந்து பெருந்தொகையை வசூலித்துவிடுவது மாளவியாஜிக்கு இருந்த இணையில்லாத ஜாலவித்தை என்னிடம் இல்லை. ஜாலியன் வாலாபாக் நினைவுச் சின்னத்திற்கு ராஜாக்களிடத்திலும் மகாராஜாக்களிடமும் பணம் கேட்பதற்கில்லை என்பதை நான் அறிவேன். ஆகவே, இதற்கு நிதி திரட்டும் முக்கியப் பொறுப்பு, நான் எதிர்பார்த்ததைப் போலவே என் பேரில் தான் விழுந்தது.

தாராள குணமுள்ள பம்பாயின் மக்கள் ஏராளமாகப் பணம் கொடுத்தார்கள். ஆகையால், இந்த ஞாபகார்த்தச் சின்னத்தின் டிரஸ்ட்டிடம் பாங்கில் இப்பொழுது பெருந்தொகை இருக்கிறது. ஆனால், ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்களின் ரத்தங்கள் கலந்தோடிய அந்த இடத்தில் எந்த விதமான புனித ஞாபகச் சின்னத்தை எழுப்புவது என்பதே இன்று நாட்டின் முன்பிருக்கும் பிரச்னை. இந்த மூன்று சமூகங்களும் ஒற்றுமையினாலும் அன்பினாலும் பிணைக்கப்பட்டிருப்பதற்கு பதிலாக ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. எனவே, நினைவுச் சி ன்ன நிதியை எப்படிப் பயன்படுத்துவது என்பது நாட்டு மக்களுக்கு இப்பொழுது புரியாமல் இருந்து வருகிறது. தீர்மானங்களைத் தயாரிப்பதில் எனக்கு இருந்த ஆற்றல், காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மற்றொன்று ஆகும். எதையும் சுருக்கமாகக் கூறும் ஆற்றலை, நீண்ட கால அனுபவத்தினால் நான் பெற்றிருந்தேன். இதைக் காங்கிரஸ் தலைவர்கள் கண்டு கொண்டார்கள். அப்பொழுது இருந்த காங்கிரஸ் அமைப்பு விதிகள், கோகலே தயாரித்து வைத்துவிட்டுப் போன ஆஸ்தியாகும். காங்கிரஸ் இயந்திரம் நடந்துகொண்டு போவதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சில விதிகளை அவர்
அமைத்திருந்தார்.

இந்த விதிகளைத் தயாரித்ததைப்பற்றிய ருசிகரமான சரித்திரத்தைக் கோகலேயின் வாய் மொழியாலேயே நான் கேட்டிருக்கிறேன். காங்கிரஸின் வேலைகள் மிக அதிகமாகி விட்ட இக்காலத்திற்கு இந்த விதிகள் போதுமானவைகளே அன்று என்பதை இப்பொழுது ஒவ்வொருவரும் உணர ஆரம்பித்து விட்டனர். இவ்விஷயம் ஆண்டுதோறும் காங்கிரஸின் ஆலோசனைக்கு வந்து கொண்டும் இருந்தது. காங்கிரஸின் ஒரு மகாநாட்டிற்கும் மற்றொரு மகாநாட்டிற்கும் இடையிலும், ஓர் ஆண்டில் புதிதாக ஏற்படக்கூடிய நிலைமைகளிலும், வேலை செய்வதற்கு அச்சமயம் காங்கிரஸில் எந்தவிதமான ஏற்பாடும் இல்லாமல் இருந்தது. அப்பொழுதிருந்த விதிகளின்படி, காரியதரிசிகள் மூவர் உண்டு. ஆனால், அவர்களில் ஒருவர் தான் காங்கிரஸின் வேலைகளைக் கவனிப்பார். அவரும் முழு நேரமும் அவ்வேலையைக் கவனிப்பவரல்ல. அவர் ஒருவரே எவ்விதம் காங்கிரஸ் காரியாலயத்தை நடத்தி, எதிர்காலத்தைக் குறித்துச் சிந்தித்து, காங்கிரஸ் ஏற்றுக் கொண்டிருக்கும் பழைய பொறுப்புக்களை நிறைவேற்றி வைப்பதும் சாத்தியமாகும்? ஆகையால், அந்த ஆண்டில் இந்த விஷயம் மிக முக்கியமானது என்று எல்லோரும் கருதினார்கள். பொது விஷயங்களையெல்லாம் காங்கிரஸ் மகாநாடே விவாதிப்பதென்றால், அவ்வளவு பெரிய கூட்டத்தைச் சமாளிப்பது கஷ்டம்.

காங்கிரஸு க்கு வரும் பிரதிநிதிகள் தொகை இவ்வளவுதான் என்பதற்கோ, ஒவ்வொரு மாகாணமும் இத்தனை பிரதிநிதிகளைத்தான் அனுப்பலாம் என்பதற்கோ எந்த வரையறையும் விதிக்கப்படவில்லை. இவ்விதம் அப்பொழுதிலிருந்த குழப்பமான நிலைமையில் ஏதாவது அபிவிருத்தி செய்தாக வேண்டியது அவசியம் என்று ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள். காங்கிரஸின் விதிகளை அமைக்கும் பொறுப்பை, ஒரு நிபந்தனையின் பேரில், நான் ஏற்றுக் கொண்டேன். பொதுமக்களிடையே அதிகச் செல்வாக்குப் பெற்றிருந்த இரு தலைவர்கள் லோகமான்யரும், தேசபந்துவும் என்பதைக் கண்டேன். காங்கிரஸ் விதிகளை அமைக்கும் கமிட்டியில் மக்களின் பிரதிநிதிகளாக அவர்கள் இருவரும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால், விதிகள் அமைப்பு வேலையில் நேரடியாகக் கலந்து கொள்ளுவதற்கு அவர்களுக்கு அவகாசம் இருக்காது என்பது தெரிந்ததே. ஆகையால், விதிகள் கமிட்டியில் என்னுடன் அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் இருவர் இருக்க செய்து விடவேண்டும் என்றும் யோசனை கூறினேன். இந்த யோசனையைக் காலஞ்சென்ற லோகமான்யரும், காலஞ்சென்ற தேசபந்துவும் ஏற்றுக் கொண்டார்கள். முறையே தங்கள் பிரதிநிதிகளாக ஸ்ரீ மான்கள் கேல்கர், ஐ.பி.ஸென் ஆகிய இரு பெயர்களையும் கூறினர். விதிகள் அமைப்புக் கமிட்டி உறுப்பினர்கள் ஒரு தடவையேனும் ஒன்று சேர முடியவில்லை. ஆனால், கடிதப் போக்குவரத்தின் மூலமே ஆலோசித்துக் கொண்டோம். முடிவாக ஒருமனதான அறிக்கையையும் சமர்ப்பித்தோம். இந்தக் காங்கிரஸ் அமைப்பு விதிகளைக் குறித்து நான் ஓரளவுக்குப் பெருமை அடைகிறேன்.இந்த விதிகள் முழுவதையும் நாம் நிறைவேற்றி வைக்க முடிந்தால், இவற்றை நிறைவேற்றுவது ஒன்றின் மூலமே நாம் சுயராஜ்யத்தை அடைந்துவிட முடியும் என்று நான் கருதுகிறேன். இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் காங்கிரஸின் ராஜீய காரியங்களில் உண்மையில் நான் பிரவேசித்து விட்டேன் என்றே சொல்லலாம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» காங்கிரஸ் காங்கிரஸ்
» அமிர்தசரஸ் காங்கிரஸ்
» நேட்டால் இந்தியர் காங்கிரஸ்
» காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum