தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நேட்டால் இந்தியர் காங்கிரஸ்

Go down

நேட்டால் இந்தியர் காங்கிரஸ் Empty நேட்டால் இந்தியர் காங்கிரஸ்

Post  birundha Fri Mar 22, 2013 10:53 pm

வக்கீல் தொழில் எனக்கு இரண்டாம் பட்சமான வேலையாக இருந்து வந்தது. நேட்டாலில் நான் தங்கியது நியாயம் என்றால் பொதுஜன வேலையில் நான் அதிகக் கவனம் செலுத்துவது அவசியம். வாக்குரிமையைப் பறிக்கும் மசோதா சம்பந்தமாக மகஜரை அனுப்பியது மாத்திரம் போதாது. குடியேற்ற நாட்டு மந்திரி, இதில் கவனம் செலுத்தும்படி செய்வதற்கு இடைவிடாது கிளர்ச்சி செய்து கொண்டிருப்பது அத்தியாவசியம் ஆகும். இக்காரியத்திற்காக ஒரு நிரந்தரமான ஒரு பொது ஸ்தாபனத்தை ஆரம்பிப்பது என்று நாங்கள் எல்லோரும் முடிவுக்கு வந்தோம்.

இந்தப் புதிய ஸ்தாபனத்திற்கு என்ன பெயர் கொடுப்பது என்பது சதா என் மனத்தை அலட்டி வந்தது. எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிச் சார்பும் உள்ளதாக இது இருக்கக்கூடாது. காங்கிரஸ் என்ற பெயர், இங்கிலாந்தில் இருக்கும் கன்ஸர்வேடிவ்களுக்கு வெறுப்பானதாக இருந்தது என்பதை அறிவேன். என்றாலும் இந்தியாவுக்கு ஜிவனாக இருப்பதே காங்கிரஸ்தான். நேட்டாலில் அப்பெயரைப் பிரபலபடுத்த விரும்பினேன். அப்பெயரை வைக்க தயங்குவது கோழைத்தனம் என்று எனக்குத் தோன்றிற்று. ஆகையால், அந்த ஸ்தாபனத்திற்கு நேட்டால் இந்தியர் காங்கிரஸ் எனப் பெயரிட வேண்டும் என்று விரிவான விளக்கத்துடன் நான் சிபாரிசு செய்தேன். மே மாதம் 22-ஆம் தேதி. நேட்டால் இந்தியர் காங்கிரஸ் பிறந்தது.

சேத் அப்துல்லாவின் விசாலமான அறை முழுவதிலும் அன்று ஒரே கூட்டம் நிறைந்துவிட்டது. வந்திருந்தவர்கள் எல்லோரும் காங்கிரஸைக் குதூகலமாக வரவேற்றனர். அதன் அமைப்பு விதி எளிதானது. சந்தா மாத்திரம் அதிகம். மாதம் ஐந்து ஷில்லிங் கொடுப்பவர் மாத்திரமே அங்கத்தினராகலாம். பண வசதி உள்ளவர்கள், தங்களால் இயன்ற வரையில் தாராளமாகக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாதம் இரண்டு பவுன் தருவதாக அப்துல்லா சேத் முதலில் கையெழுத்திட்டார். நானும் என் சந்தா விஷயத்தில் தாராளமாக கொடுக்க நினைத்து மாதத்திற்கு ஒரு பவுன் என்று எழுதினேன். என்னைப் பொறுத்தவரை இது சின்னத்தொகை அல்ல. நான் சம்பாதித்து, என் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போவதெனில், இத் தொகை என் சக்திக்கு மிஞ்சியதென்று எண்ணினேன். கடவுளும் எனக்கு உதவி செய்தார். மாதம் ஒரு பவுன் சந்தா செலுத்தும் உறுப்பினர்கள் பலர் சேர்ந்தனர். மாதம் 10 ஷில்லிங் தருவதாக முன் வந்தவர்களின் தொகையோ இன்னும் அதிகம். இவையெல்லாம் போக நன்கொடையாகக் கொடுக்கப்பட்டதையும் நன்றியுடன் ஏற்றுக்கொண்டோம்.

கேட்ட மாத்திரத்திலேயே யாரும் சந்தாவைச் செலுத்தி விடுவதில்லை என்பது அனுபவத்தில் தெரியலாயிற்று. டர்பனுக்கு வெளியிலிருந்த உறுப்பினர்களிடம் அடிக்கடி போய்க் கேட்பது என்பது முடியாதது. ஒரு சமயம் இருக்கும் உற்சாகம் இன்னுமொரு சமயம் இருப்பதில்லை. டர்பனில் இருந்த உறுப்பினர்களிடம் கூடப் பன்முறை விடாமல் கேட்டுத் தொந்தரவு செய்துதான் சந்தா வசூலிக்கக வேண்டியதிருந்தது.

நானே காரியதரிசியாகையால், சந்தா வசூலிக்கும் வேலை என்னுடையதாயிற்று. என் குமாஸ்தா, நாளெல்லாம் சந்தா வசூலிக்கும் வேலையிலேயே ஈடுபட்டிருக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டது. அவரும் அலுத்துப் போனார். இந்த நிலைமை மாறவேண்டுமானால், மாதச் சந்தா என்பதற்குப் பதிலாக அதை வருடச் சந்தாவாக்கி, அந்தச் சந்தாவைக் கண்டிப்பாக முன் பணமாகச் செலுத்திவிடச் செய்துவிட வேண்டும் என்று கருதினேன். ஆகவே காங்கிரஸின் கூட்டத்தைக் கூட்டினேன். மாதச் சந்தா என்பதற்குப் பதிலாக, அதை வருடச் சந்தாவாகச் செய்துவிடுவது என்பதையும், குறைந்த பட்ச சந்தா 3 பவுன் என்று நிர்ணயிப்பதையும் எல்லோரும் வரவேற்றனர். இவ்விதம் வசூல் வேலை அதிக எளிதாயிற்று.

கடன் வாங்கி, அந்தப் பணத்தைக் கொண்டு பொது வேலையைச் செய்யக்கூடாது என்பதை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டிருந்தேன். மக்களின் வாக்குறுதியை எல்லாவற்றிலும் நம்பலாம், ஆனால் பண விஷயத்தில் மாத்திரம் நம்பக்கூடாது. கொடுப்பதாகத் தாங்கள் ஒப்புக்கொண்ட பணத்தைச் சீக்கிரத்தில் கொடுக்கக் கூடியவர்களை நான் பார்த்ததே இல்லை. நேட்டால் இந்தியர்களும் இதற்கு விலக்கானவர்கள் அல்ல. எனவே, பணம் இருந்தால் ஒழிய எந்த வேலையையும் செய்தில்லையாகையால், நேட்டால் இந்தியர் காங்கிரஸ் கடன் பட்டதே இல்லை.

அங்கத்தினர்களைச் சேர்ப்பதில் என் சக ஊழியர்கள் அதிக உற்சாகத்துடன் வேலை செய்தார்கள். அந்த வேலை அவர்களுடைய மனத்திற்குப் பிடித்ததாக இருந்ததோடு, அது அதிகப் பயனுள்ள அனுபவமாகவும் இருந்தது. ஏராளமானவர்கள் ரொக்கமாகச் சந்தா கொடுத்துச் சேர முன்வந்தனர். தொலைவாக, உள் நாட்டில் இருந்த கிராமங்களின் விஷயத்தில்தான் வேலை கஷ்டமானதாக இருந்தது. பொது வேலையின் தன்மையை மக்கள் அறியவில்லை என்றாலும் தொலை தூரங்களில் இருந்த இடங்களிலிருந்தும் எங்களுக்கு அழைப்புக்கள் வந்தன. ஒவ்வோர் இடத்திலும் முக்கியமான வியாபாரிகள் எங்களை வரவேற்று, வேண்டிய உதவிகளைச் செய்ய முன்வந்தார்கள்.

இந்த சுற்றுப் பிரயாணத்தின் போது ஒரு சமயம் நிலைமை சங்கடமானதாகிவிட்டது. நாங்கள் யாருடைய விருந்தினராகச் சென்றிருந்தோமோ, அவர் ஆறு பவுன் கொடுப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவரோ மூன்று பவுனுக்கு மேல் எதுவும் கொடுக்க மறுத்துவிட்டார். அவரிடமிருந்து அத்தொகையை வாங்கிக் கொண்டோமாயின் மற்றவர்களும் அது மாதிரியே கொடுப்பார்கள். எங்கள் வசூல் கெட்டுவிடும். அன்று இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. எங்களுக்கோ பசி. ஆனால், அவரிடம் வாங்கியே தீருவது என்று நாங்கள் முடிவு கட்டிக்கொண்ட தொகையை அவரிடம் வாங்காமல் அவர் வீட்டில் நாங்கள் எப்படிச் சாப்பிடுவது ? என்ன சொல்லிப் பார்த்தும் பயனில்லை. அவரோ பிடிவாதமாக இருந்தார். அவ்வூரின் மற்ற வர்த்தகர்களும் அவருக்குச் சொல்லிப் பார்த்தார்கள். இரவெல்லாம் அப்படியே எல்லோரும் உட்கார்ந்திருந்தோம். அவரும் பிடிவாதமாக இருந்தார். நாங்களும் பிடிவாதமாக இருந்தோம். என் சக ஊழியர்களில் பலருக்குக் கோபம் பொங்கிற்று. ஆனால், அடக்கிக்கொண்டார்கள். கடைசியாகப் பொழுதும் விடிந்து விட்ட பிறகு அவர் இணங்கி வந்தார். ஆறு பவுன் கொடுத்து, எங்களுக்கு விருந்துச் சாப்பாடும் போட்டார். இது தோங்காத் என்ற ஊரில் நடந்தது. ஆனால் இச் சம்பவத்தின் அதிர்ச்சி, வடக்கில் கடலோரம் இருக்கும் ஸ்டான்கர் வரையிலும் மத்தியப் பகுதியில் இருக்கும் சார்லஸ் டவுன் வரையிலும் பரவி விட்;டது. அது எங்கள் வசூல் வேலை துரிதமாக முடியும்படியும் செய்தது.

ஆனால் செய்ய வேண்டிய வேலை, நிதி வசூல் செய்வது மாத்திரம் அன்று. உண்மையில், அவசியமானதற்கு மேல் பணம் இருக்கக்கூடாது என்ற கொள்கையை வெகு காலத்திற்கு முன்னாலிருந்தே நான் கற்றுக்கொண்டிருந்தேன். கூட்டங்கள் மாதம் ஒரு முறை நடக்கும். அவசியமானால், வாரத்திற்கு ஒரு முறையும் நடப்பது உண்டு. முந்திய கூட்டத்தின் நிகழ்ச்சிகள் அடுத்த கூட்டத்தில் படிக்கப்படும். பல விஷயங்களும் விவாதிக்கப்படும். பொது விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ளுவதிலும், விஷயத்தை ஒட்டிச் சுருக்கமாகப் பேசுவதிலும் மக்களுக்கு அனுபவமே இல்லை. எழுந்து பேச ஒவ்வொருவரும் தயங்கினர். கூட்டங்களின் நடைமுறை விதிகளை அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன். அவற்றை மதித்து, அவர்களும் நடந்து கொண்டார்கள். அது தங்களுக்கு ஒரு படிப்பு என்பதை உணர்ந்தார்கள். ஒரு கூட்டத்திலும் இதற்கு முன்னால் பேசியே பழக்கம் இல்லாதவர்கள். சந்தித்துப் பொது விஷயங்களைச் குறித்துப் பகிரங்கமாகப் பேசவும் பழகிக் கொண்டனர்.

பொதுவேலைகளில், சில்லரைச் செலவே சமயத்தில் பெருஞ் செலவாகிவிடும் என்பதை அறிவேன். ஆகையால், ஆரம்பத்தில் ரசீதுப் புத்தகங்களைக்கூட அச்சிடுவதில்லை என்று முடிவு செய்திருந்தேன். என் காரியாலயத்தில் பிரதிகள் எடுக்கும் சைக்ளோஸ்டைல் யந்திரம் ஒன்று இருந்தது. அதிலேயே ரசீதுகளுக்கும் அறிக்கைகளுக்கும் பிரதிகளைத் தயாரித்துக் கொண்டேன். காங்கிரஸினிடம் நிதி அதிகம் சேர்ந்து அங்கத்தினர்களும் அதிகமாகி, வேலையும் பெருகிய பிறகே ஸ்தாபனத்திற்கும் இத்தகைய சிக்கனம் அவசியம், என்றாலும் அதுதான் அனுசரிக்கப்படுவதில்லை என்பதையும் அறிவேன் இதனாலேயே, சிறிய ஆனால் வளர்ந்துவருகிற ஒரு ஸ்தாபனத்தின் விஷயத்தில் ஆரம்பத்தில் இந்தச் சிறு விவரங்களையெல்லாம் கவனிப்பதே சரி என்று எண்ணினேன்.

தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு ரசீது பெற வேண்டும் என்பதைக் குறித்து மக்கள் கவலைப்படுவதே இல்லை. ஆனால் நாங்கள் வற்புறுத்தி ரசீதுகளைக் கொடுத்து வந்தோம். இவ்விதம் ஒவ்வொரு தம்படிக்கும் சரியாகக் கணக்கு வைக்கப்பட்டது. 1894-ஆம் ஆண்டின் கணக்குப் புத்தகங்களை இன்று கூட நேட்டால் இந்தியர் காங்கிரஸ் தஸ்தாவேஜூக்களில் காணலாம் என்று நான் தைரியமாகக் கூற முடியும். கணக்குகளைச் சரியாக வைத்திருக்க இல்லை யானால் அந்த ஸ்தாபனத்திற்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு விடும். சரியானபடி கணக்கு வைத்திருக்காவிட்டால், உண்மையை அதனுடைய அசல்தூய்மையுடன் வைத்து இருப்பதென்பது இயலாத காரியம்.

காங்கிரஸின் மற்றோர் அம்சம், தென்னாப்பிரிக்கா விலேயே பிறந்தவர்களான, படித்த இந்திய இளைஞர்களின் சேவையாகும். அங்கே பிறந்த இந்தியரின் கல்வி சங்கம் ஒன்று காங்கிரஸின் ஆதரவில் அமைக்கப் பெற்றது. இந்தப் படித்த இளைஞர்களே பெரும்பாலும் அச் சங்கத்தின் அங்கத்தினர்கள். பெயருக்கு அவர்கள் ஒரு தொகையைச் சந்தாவாகச் செலுத்தவேண்டும் அவர்களுடைய தேவைகளையும் குறைகளையும் எடுத்துக் கூறுவதற்கும், அவர்களிடையே புதிய எண்ணங்களை எழுப்புவதற்கும், இந்திய வர்த்தகர்களுடன் அவர்களுக்குத் தொடர்பை உண்டாக்கிக் சமூகத்திற்குச் சேவை செய்யும் வாய்ப்பை அவர்களுக்கு அளிப்பதற்கும் இச்சங்கம் பயன்பட்டது. அது ஒரு வகையான விவாதசபை போன்றது. அங்கத்தினர்கள் எழுதியும் படிப்பார்கள். இச்சங்க சம்பந்தமாக ஒரு சிறு புத்தகசாலையும் ஆரம்பமாயிற்று. காங்கிரஸின் மூன்றாவது அம்சம், பிரசாரம். நேட்டாலில் இருந்துவரும் இந்தியர் சம்பந்தமான உண்மையான நிலையை தென்னாப்பிரிக்காவில் மக்களும் அறியும்படி செய்வதே இக்காரியம். அந்த நோக்கத்தின் பேரில் நான் இரு துண்டுப் பிரசுரங்களை எழுதினேன். அவற்றுள் ஒன்று, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு பிரிட்டானியருக்கும் வேண்டுகோள் என்பது. அது, நேட்டால் இந்தியரின் பொதுவான நிலைமையை ஆதாரங்களுடன் கூறுவதாகும். மற்றொரு பிரசுரம், இந்தியரின் வாக்குரிமை - ஒரு கோரிக்கை என்ற தலைப்புடையது. நேட்டால் இந்தியரின் வாக்குரிமையைப்பற்றிய சரித்திரம், உண்மை விவரங்களுடனும், புள்ளி விவரங்களுடனும் அதில் சுருக்கமாகக் கூறப்பட்டது, இந்த துண்டுப் பிரசுரங்களைத் தயாரிப்பதற்கு நான் அதிகம் படிக்க வேண்டியிருந்ததோடு அதிக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், இதில் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைத்தது. அவைகளை எல்லா இடங்களுக்கும் அனுப்பினோம்.

இத்தகைய நடவடிக்கைகளின் பயனாகத் தென்னாப்பிரிக்காவில் இந்தியருக்கு ஏராளமானவர்கள் நண்பர்கள் ஆயினர். இந்தியாவில் இருந்த எல்லாக் கட்சியினரின் தீவிரமான அனுதாபமும் கிடைத்தது. அத்துடன் தென்னாப்பிரிக்க இந்தியர், திட்டமான நடவடிக்கையில் இறங்குவதற்கு ஒரு வழியும் ஏற்பட்டு, வேலைத் திட்டமும் உருவாயிற்று.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நேட்டால் சேர்ந்தேன்
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது – கமலுக்கு சிறப்பு விருது
» காங்கிரஸ் காங்கிரஸ்
» காங்கிரஸ் பணி ஆரம்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum