தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முடிவில் கண்டுகொண்டேன்!

Go down

முடிவில் கண்டுகொண்டேன்! Empty முடிவில் கண்டுகொண்டேன்!

Post  birundha Sat Mar 23, 2013 4:24 pm

குஜராத் முழுவதிலும் கங்காபென் தேடியலைந்து விட்டுக் கடைசியாகப் பரோடா சமஸ்தானத்தில் வீஜாப்பூர் என்ற இடத்தில் கைராட்டையை அவர் கண்டுபிடித்தார். அங்கே அநேகம் பேர் தங்கள் வீடுகளில் கைராட்டைகளை வைத்திருந்தார்கள். ஆனால், வெகு காலத்திற்கு முன்னாலேயே, அவையெல்லாம் ஒன்றுக்கும் ஆகாதவை என்று கருதி மரக்கட்டைகளோடு மரக்கட்டையாக அவைகளைப் பரண்களில் தூக்கிப் போட்டு விட்டார்கள். ஒழுங்காக யாராவது பட்டை போட்ட பஞ்சு கொண்டுவந்து கொடுத்து, நூற்ற நூலையும் வாங்கிக்கொள்ளுவதாக இருந்தால், தாங்கள் திரும்பவும் ராட்டையில் நூற்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கங்காபென்னிடம் அறிவித்தனர். இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை கங்காபென் எனக்கு அனுப்பினார். பட்டை போட்ட பஞ்சுக்கு ஏற்பாடு செய்வது கஷ்டமாக இருந்தது. இதைக் குறித்துக் காலஞ்சென்ற உமார் ஸோபானியிடம் கூறினேன். அவர் தம்முடைய மில்லிலிருந்து பட்டை போட்ட பஞ்சைப் போதுமான அளவு கொடுப்பதாக உடனே கூறி, இக்கஷ்டத்தை நிவர்த்தி செய்துவிட்டார்.

உமார் ஸோபானியிடமிருந்து வந்த பட்டை போட்ட பஞ்சைக் கங்கா பென்னுக்கு அனுப்பினேன். உடனே, நூற்ற நூல் ஏராளமாக வந்து குவியத் தொடங்கிவிட்டது. அந்த நூலை என்ன செய்வது என்பது பிறகு ஒரு பிரச்னையாகி விட்டது. ஸ்ரீ உமார் ஸோபானி மிகுந்த தாராளமான குணமுடையவர்தான். ஆனால், அவருடைய தாராளத்தை எப்பொழுதுமே பயன்படுத்திக் கொண்டிருப்பது என்பது கூடாது. பட்டை போட்ட பஞ்சைத் தொடர்ந்து அவரிடமிருந்து வாங்கிக் கொண்டிருப்பதென்பது என்மனத்திற்குக் கஷ்டமாக இருந்தது. மேலும், மில்லில் தயாரான இப்பஞ்சை உபயோகித்துக் கொள்ளுவது அடிப்படையிலேயே தவறு என்றும் எனக்குத் தோன்றிற்று. மில்லில் பட்டை போட்ட பஞ்சை உபயோகிக்கலாமென்றால் மில் நூலையே ஏன் உபயோகித்துக் கொள்ளக்கூடாது? முன் காலத்திலெல்லாம் கைராட்டையில் நூற்றவர்கள், வேண்டிய பஞ்சை பட்டை போட்டு எவ்வாறு தயாரித்துக் கொண்டு வந்தார்கள்? என் மனத்தில் எழுந்த இத்தகைய எண்ணங்களோடு கங்காபென்னுக்கு ஒரு யோசனை கூறினேன்.

பஞ்சு அடித்துப் பட்டை போட்டுக் கொடுக்கக் கூடியவர்களைக் கண்டுபிடிக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். அவரும் நம்பிக்கையோடு அவ்வேலையை ஏற்றுக் கொண்டார். பஞ்சு கொட்டிப் பட்டை போட்டுத் தரக்கூடிய ஒருவரை அவர் அமர்த்தினார். அந்த ஆசாமியோ, தமக்கு அதிகம் கொடுக்காவிட்டாலும் மாதம் முப்பத்தைந்து ரூபாய் கொடுக்க வேண்டும் என்றார். அந்தச் சமயத்தில் அதற்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதிகம் அல்ல என்று எண்ணினேன். கொட்டிய பஞ்சிலிருந்து பட்டை போடுவதற்குச் சில இளைஞர்களையும் கங்கா பென் பழக்கினார். யாராவது பஞ்சு கொடுத்து உதவ வேண்டும் என்று பம்பாயில் கொடுக்க முன்வந்தார். இவ்விதம் கங்கா பென்னின் முயற்சி எதிர்பார்த்ததற்கு மேலாகவே பலன் தந்தது. வீஜாப்பூரில் தயாரான நூலை நெய்வதற்கும் நெசவாளர்களுக்கு அவர் ஏற்பாடு செய்தார். சீக்கிரத்தில் வீஜாப்பூர்க் கதர், புகழ்பெற்று விளங்கியது.

வீஜாப்பூரில் இந்த அபிவிருத்திகளெல்லாம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஆசிரமத்திலும் கைராட்டினம் துரிதமாக நிலைபெற்று வந்தது. மகன்லால் காந்தி, தமக்குள்ள யந்திர நுட்ப ஆற்றலையெல்லாம் பயன்படுத்தி ராட்டினத்தில் பல அபிவிருத்திகளைச் செய்தார். ராட்டினத்தின் சக்கரத்தையும் மற்ற சாமான்களையும் ஆசிரமத்திலேயே தயாரிக்க ஆரம்பித்தார். ஆசிரமத்தில் தயாரான முதல் கதர், கெஜம் 17 அணா விலையாயிற்று. அதிக முரடாயிருந்த இந்தக் கதரை அந்த விலைக்கு நண்பர்களுக்குச் சிபாரிசு செய்ய நான் தயங்கவே இல்லை. அவர்களும் மனமுவந்து அவ்விலையைக் கொடுத்து வாங்கிக்கொண்டார்கள். நான் பம்பாயில் படுத்த படுக்கையாக இருந்தேன். என்றாலும், அங்கேயும் ராட்டினங்களைத் தேடுவதற்கு வேண்டிய சக்தி எனக்கு இருந்தது. கடைசியாக நூல் நூற்கக்கூடியவர்கள் இருவர் தென்பட்டனர். ஒரு சேர், அதாவது 28 தோலா அல்லது சுமார் முக்கால் ராத்தல் நூலுக்கு ஒரு ரூபாய் விலை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டார்கள். கதரின் பொருளாதாரத் தத்துவத்தைக் குறித்து அப்பொழுது எனக்கு எதுவுமே தெரியாது.

கையினால் நூற்ற நூலுக்கு என்ன விலையும் கொடுக்கலாம் என்று எண்ணினேன். வீஜாப்பூரில் கொடுக்கப்படும் விலையையும் நான் கொடுத்த விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது நான் ஏமாற்றப்பட்டேன் என்பதைக் கண்டேன். நூற்றவர்களோ, விலையில் எதையும் குறைத்துக்கொள்ள மறுத்து விட்டார்கள். ஆகையால், அவர்களை அனுப்பிவிட வேண்டியதாயிற்று. என்றாலும், அவர்களை அமர்த்தியிருந்ததால், பயனில்லாது போகவில்லை. ஸ்ரீமதிகள் அவந்திகாபாய், ரமீபாய் காம்தார், ஸ்ரீ சங்கர்லால் பாங்கரின் தாயார், ஸ்ரீமதி வசுமதி பென் ஆகியவர்களுக்கு அவர்கள் நூற்கக் கற்றுக் கொடுத்திருந்தார்கள். என் அறையில் ராட்டினம் ஆனந்தமாகச் சுழன்று இனிய கீதத்தை எழுப்பிக்கொண்டிருந்தது. நான் நோயினின்றும் குணம் அடைவதற்கு அந்தக் கீதம் பெருமளவு துணை செய்தது என்று நான் கூறினால், அது மிகையாகாது. அதனால், உடலுக்கு ஏற்பட்ட நன்மையைவிட மனத்திற்கு ஏற்பட்ட நற்பலன் அதிகம் என்பதை ஒப்புக்கொள்ள நான் தயார். அப்படியானால், மனிதனின் உடலில் மாறுதலை உண்டாக்குவதற்கு மனத்திற்கு அபார சக்தி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. நானும் ராட்டையில் நூற்க ஆரம்பித்தேன். ஆனால், அச்சமயம் நான் அதிகமாக எதுவும் நூற்கவில்லை.

கையினால் கொட்டித் தயாரித்த பஞ்சுப் பட்டைகளைச் சம்பாதிக்கும் பிரச்னை மீண்டும் பம்பாயிலும் ஏற்பட்டது. பஞ்சு கொட்டுகிறவர் ஒருவர், பஞ்சு கொட்டும் வில்லுடன், அந்த வில்லின் நாணிலிருந்து ஒலி எழுப்பிக்கொண்டு ஸ்ரீ ரேவா சங்கரின் வீட்டு வழியே தினம் போய்க்கொண்டிருப்பார். அவரைக் கூப்பிட்டு அனுப்பினேன். அவரை விசாரித்ததில் அவர் மெத்தைகளுக்குத் திணிக்கும் பஞ்சை கொட்டுகிறவர் என்று தெரிந்தது. நூற்பதற்குப் பஞ்சுப் பட்டைகள் போட்டுத் தர அவர் சம்மதித்தார். ஆனால், அதிகமாகக் கூலி கேட்டார், என்றாலும் நான் கொடுத்தேன்.இவ்வாறு நூற்ற நூலைப் பவித்திர ஏகாதசியன்று சுவாமிக்கு மாலை போடுவதற்காகச் சில வைஷ்ணவ நண்பர்கள் வாங்கிக் கொண்டார்கள். ஸ்ரீ சிவ்ஜி, நூற்கக் கற்றுக்கொடுக்கும் வகுப்பு ஒன்றைப் பம்பாயில் ஆரம்பித்தார். இந்தப் பரிசோதனைகளுக்கு எல்லாம் அதிகப் பணம் செலவாயிற்று. ஆனால், கதரில் நம்பிக்கையுள்ள, தாய்நாட்டிடம் பக்தியுள்ள தேசாபிமானிகளான நண்பர்கள், இச்செலவையெல்லாம் விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டார்கள். இவ்விதம் செலவான பணம் வீணாகிவிடவில்லை என்பதே என்னுடைய பணிவான கருத்து. இதனால் எங்களுக்கு அதிக அனுபவம் ஏற்பட்டதோடு கைராட்டையின் சாத்தியங்களும் எங்களுக்குத் தெரியலாயின.

நான் கதரை மாத்திரமே உடுத்த வேண்டும் என்ற பேரவா அப்பொழுது எனக்குப் பலமாக ஏற்பட்டது. அப்பொழுது இந்திய ஆலைகளில் தயாரான வேட்டியையே கட்டிக் கொண்டிருந்தேன். ஆசிரமத்திலும் வீஜாப்பூரிலும் தயாரான முரட்டுக் கதர்த் துணி, முப்பது அங்குல அகலமே இருக்கும். ஆகையால், கங்கா பென்னுக்கு ஒரு முன்னெச்சரிக்கை செய்தேன். ஒரு மாத காலத்திற்குள் நாற்பத்தைந்து அங்குல அகலத்தில் எனக்குக் கதர் வேட்டி தயாரித்துக் கொடுக்காது போனால், அகலக் கட்டையாக இருக்கும் முரட்டுக் கதரையே கட்டிக்கொள்ளப் போகிறேன் என்று அவருக்குத் தெரிவித்தேன். இந்த இறுதி எச்சரிக்கை அவரைத் திடுக்கிடச் செய்துவிட்டது. ஆனால், அவரிடம் கேட்டதை அவர் நிறைவேற்றி விட்டார். ஒரு மாதத்திற்குள்ளேயே 45 அங்குல அகலத்தில் ஒரு ஜதைக் கதர் வேட்டிகளை அவர் எனக்கு அனுப்பினார். இதன் மூலம் எனக்கு ஒரு சங்கடமான நிலைமை ஏற்பட்டுவிடாமல் அவர் காப்பாற்றிவிட்டார். அதே சமயத்தில் ஸ்ரீ லட்சுமிதாஸ், லாத்தியிலிருந்து ஸ்ரீ ராம்ஜி என்ற நெசவுக்காரரையும் அவர் மனைவி கங்கா பென்னையும் ஆசிரமத்திற்கு அழைத்துவந்து ஆசிரமத்திலேயே கதர் வேட்டி நெசவாகும்படி செய்தார். கதர் பரவுவதில் இத்தம்பதிகள் செய்திருக்கும் சேவை அற்பமானது அன்று. குஜராத்தில் மாத்திரமேயல்லாமல் வெளியிலும் கையால் நூற்ற நூலைக்கொண்டு நெய்வதற்கு அவர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். கங்கா பென், தறியில் நெய்வதைப் பார்ப்பதே மிகவும் உற்சாகம் ஊட்டும் காட்சியாகும். எழுதப் படிக்கத் தெரியாத, ஆனால் ஆற்றல் மிக்க இச் சகோதரி, கைத்தறியில் வேலை செய்ய உட்கார்ந்துவிட்டால், அவர் மனம் முழுவதும் அதிலேயே ஆழ்ந்துவிடும். பிறகு அவர் மனத்தையும் கண்களையும் தறியிலிருந்து வேறு இடத்திற்குத் திருப்புவதென்பது மிகவும் கஷ்டமான காரியமே.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum