தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐரோப்பியருடன் நெருங்கிய தொடர்பு

Go down

ஐரோப்பியருடன் நெருங்கிய தொடர்பு Empty ஐரோப்பியருடன் நெருங்கிய தொடர்பு

Post  birundha Sat Mar 23, 2013 3:22 pm

இந்த அத்தியாயம், என்னை ஒரு கட்டத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் இக்கதை எவ்விதம் எழுதப்படுகிறது என்பதைக் குறித்து வாசகர்களுக்கு நான் விளக்க வேண்டியது இங்கே அவசியமாகிறது. இதை எழுத ஆரம்பித்தபோது எந்த முறையில் இதை எழுதுவது என்பதைக் குறித்து நான் எந்தத்திட்டமும் போட்டுக் கொள்ளவில்லை. என்னுடைய சோதனைகளின் கதையை எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ள என்னிடம் எந்தவிதமான நாட்குறிப்போ, வேறு ஆதாரங்களோ இல்லை. எழுதும்போது கடவுள் எவ்வழியில் என்னை நடத்திச் செல்கிறாரோ அவ்வழியில் செயல்களும் இறைவனால் தாண்டப்பட்டவையே என்று நிச்சயமாக நான் அறிவேன் என்றும் நான் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால், என் வாழ்க்கையில் நான் செய்திருக்கும் மிகப் பெரிய காரியங்களையும் பரிசீலனை செய்து பார்க்கும் போது அவைகளெல்லாம் கடவுளால் நடத்தி வைக்கப்பட்டவைதான் என்று சொல்லுவது தவறாகாது என்றே எண்ணுகிறேன்.

கடவுளை நான் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை. உலகமெல்லாம் அவரமீது வைத்திருக்கும் நம்பிக்கையையே என் நம்பிக்கையாக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த என் நம்பிக்கை அழிக்க முடியாதது. ஆகையால் அந்த நம்பிக்கை அனுபவம் என்று விவரிப்பது உண்மைக்கு ஊறு செய்வதாகும் என்று சொல்லக் கூடுமாகையால் கடவுளிடம் எனக்குள்ள நம்பிக்கையை எடுத்துக் கூற என்னிடம் சொற்கள் இல்லை என்று சொல்லுவதே மிகவும் சரியானதாக இருக்கக்கூடும். கடவுள் தூண்டும் வழியில் இக்கதையை நான் எழுதுகிறேன் என்று நான் ஏன் நம்புகிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுவது ஓரளவுக்கு இப்பொழுது எளிதாக இருக்கக்கூடும். முந்திய அத்தியாயத்தை நான் எழுத ஆரம்பித்;தபோது இந்த அத்தியாயத்திற்குக் கொடுத்திருக்கும் தலைப்பையே அதற்கும் கொடுத்தேன். ஆனால், அதை நான் எழுதிக் கொண்டிருந்த போது ஐரோப்பியருடன் பழகிய அனுபவத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன்னால் முகவுரையாகச் சில விஷயங்களைச் சொல்லவேண்டும் என்பதை உணர்ந்தேன். அதையே செய்து தலைப்படியும் மாற்றினேன்.

திரும்பவும் இப்பொழுது இந்த அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தபோது ஒரு புதிய பிரச்னை என் முன்பு நிற்பதைக் காண்கிறேன். ஆங்கில நண்பர்களைக் குறித்தே நான் எழுதப் போகிறேன். அவர்களைக் குறித்து எதைக் கூறுவது, எதைக் கூறாதிருப்பது என்பதே கஷ்டமான அப்பிரச்சினை. பொருத்தமான விஷயங்களைக் கூறாது போனால் சத்தியத்தின் ஒளி மங்கிவிடும். இந்தச் சரித்திரத்தை எழுதுவதிலுள்ள பொருத்தத்தைக் குறித்தே நான் நிச்சயமாக அறியாதபோது, பொருத்தமானது எது என்பதை நேரே முடிவு செய்து விடுவதென்பது கஷ்டமானதாகும்.

எல்லாச் சுயசரிதைகளும் சரித்திரங்களாவதற்கு ஏற்றவையல்ல என்பதை வெகு காலத்திற்கு முன்பே படித்திருக்கிறேன். இதை இன்று அதிகத் தெளிவாக அறிகிறேன். எனக்கு நினைவிருப்பவை எல்லாவற்றையும் இக்கதையில் நான் கூறவில்லை. உண்மையின் முக்கியத்தை முன்னிட்டு நான் எவ்வளவு கூறலாம். எவ்வளவு கூறாமல் விடலாம் என்பதை யார் கூறமுடியும் ? என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தைக் குறித்து நான் கூறும் அரைகுறையானதும் ஒரு தலைப் பட்சமானதுமான சாட்சியங்களுக்கு ஒரு நீதிமன்றத்தின் முன்பு என்ன மதிப்பு இருக்கும் ? நான் இது வரையில் எழுதியிருக்கும் அத்தியாயங்களின் பேரில், குறும்புத்தனமானவர் யாரெனும் குறுக்கு விசாரணை செய்வதாக இருந்தால், அவைகளைக் குறித்து மற்றும் பல விவரங்கள் வெளியாகலாம். இது விரோத உணர்ச்சியுடன் குறை கூறுபவரின் குறுக்கு விசாரணையாக இருந்தால் என்னுடைய பாசாங்குகளில் பலவற்றை வெளிப்படுத்திவிட்டதாக அவர் பெருமையடித்துக் கொள்ளலாம்.

ஆகையால், இந்த அத்தியாயங்களை எழுதாமல் இருப்பது கூட நல்லதல்லவா என்ற எண்ணமும் எனக்கு ஒரு கணம் உண்டாகிறது. ஆனால், என்னுள் இருக்கும் அந்தராத்மாவின் தடை எதுவும் இல்லாதிருக்கும் வரையில் நான் தொடர்ந்து எழுதியே ஆகவேண்டும். ஒரு காரியத்தைச் செய்ய ஒரு முறை தொடங்கிவிட்டால், அது ஒழுக்கத் தவறானது என்று நிரூபிக்கப்பட்டாலன்றி அதைக் கைவிடவே கூடாது என்ற முனிவரின் உபதேசத்தை நான் பின்பற்ற வேண்டும். விமர்சகர்களைத் திருப்தி செய்வதற்காக நான் சுயரிதையை எழுதிக் கொண்டிருக்கவில்லை. இதை எழுதுவதுகூடச் சத்திய சோதனையில் ஓர் அம்சமேயாகும். இதை எழுதுவதன் நோக்கங்களில் ஒன்று, நிச்சயமாக என் சக ஊழியர்களுக்குச் சிறிது மன ஆறுதலையும், சிந்தனை செய்வதற்குரிய விஷயத்தையும் அளிப்பதுதான். அவர்களுடைய விருப்பத்திற்கு உடன்பட்டே இதை எழுது ஆரம்பித்தேன் என்பதில் சந்தேகமில்லை. ஸ்ரீ ஜெயராம்தாஸும் சுவாமி ஆனந்தும் இந்த யோசனையை வற்புறுத்தாதிருந்தால் இதை எழுதியே இருக்க மாட்டேன். ஆகையால், நான் சுயசரிதையை - இதை எழுதியது தவறு என்றால் அத்தவறில் அவர்களும் பங்கு கொள்ள வேண்டும்.

இனி, தலைப்பில் குறிப்பிட்டிருக்கும் விஷயத்திற்கு வருவோம். என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக என்னுடன் இந்தியர் வசித்துக் கொண்டிருந்ததைப் போலவே டர்பனில் ஆங்கில நண்பர்களும் என்னுடன் வசித்துக் கொண்டிருந்தார்கள். என்னுடன் வசித்தவர்கள் எல்லோருக்கும் இது பிடித்திருந்தது என்பதல்ல. ஆனால் அவர்கள் என்னுடன் இரக்க வேண்டும் என்று நான் தான் வற்புறுத்தினேன். இவ்விதம் செய்தது எல்லோருடைய விஷயத்திலும் புத்திசாலித்தனமானதாக முடியவில்லை. சிலர் விஷயத்தில் மிகவும் கசப்பான அனுபவமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் இந்தியரும் உண்டு. ஐரோப்பியரும் உண்டு. இந்த அனுபவங்களுக்காக நான் வருத்தப்படவில்லை. இவை போன்றவை இருந்தபோதிலும், நண்பர்களுக்கு அசௌகரியங்களையும் மனக் கவலையையும் அநேக சமயங்கிளில் நான் உண்டாக்கி இருக்கிறேன் என்றாலும் என் பழக்கத்தை நான் இன்னும் மாற்றிக் கொண்டு விடவில்லை. நண்பர்களும் அன்புடன் என்னைச் சகித்துக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள். புதிதாக வருபவர்களுடன் எனக்கு ஏற்படும் தொடர்பு நண்பர்களுக்கு மனவேதனையை அளிப்பதாக இருக்கும் போதெல்லாம் அவர்களைக் குறைகூற நான் தயங்கியதே இல்லை. தங்களுள் காணும் கடவுளை மற்றவர்களிடமும் காணவேண்டும் என்பதை நம்புகிறவர்கள், எல்லோருடனும் விருப்பு வெறுப்பின்றி வாழ முடிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இத்தயை தொடர்புகளுக்குத் தேடமலேயே கிடைக்கும் வாய்புகளை ஒதுக்கித் தள்ளிவிடாமல், சேவை உணர்ச்சியுடன் அந்தச் சந்தர்ப்பங்களை வரவேற்று, அவைகளினாலெ;லாம் மன அமைதிகெடாமல் பார்த்துக் கொள்ளுவதன் மூலமே அவ்விதம் வாழ்வதற்கு வேண்டிய ஆற்றலைப் பெற முடியும்.

ஆகையால், போயர் யுத்தம் ஆரம்பமானபோது என் வீடு நிறைய அட்கள் இருந்தார்கள் என்றாலும் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து வந்த இரு ஆங்கிலேயரையும் அழைத்துக் கொண்டேன். இருவரும் பிரம்மஞான சங்கத்தினர். இவர்களில் ஒருவர் ஸ்ரீ கிட்சின். இவரைக் குறித்து அதிகமாகத் தெரிந்துகொள்ளப் பின்னால் சந்தர்ப்பம் இருக்கும் இந்த நண்பர்களினால் என் மனைவி அடிக்கடி கண்ணீர் வடிக்க வேண்டி வந்தது. துரதிர்ஷ்டவசமாக என்னால் அவளுக்கு இதுபோன்ற சோதனைகள் பல ஏற்பட்டன. ஆங்கில நண்பர்கள், குடும்பத்தினர் போல் என்னுடன் நெருக்கமாக வசிப்பது இதுவே முதல் தடவை நான் இங்கிலாந்தில் இருந்தபோது ஆங்கிலேயரின் வீடுகளில் தங்கியிருக்கிறேன். அங்கே அவர்களுடைய வாழ்க்கை முறையை நானும் அனுசரித்து வந்தேன். ஏறக்குறையச் சாப்பாட்டு விடுதியில் தங்குவதைப் போன்றதே அது. இங்கோ அது முற்றும் மாறானது. ஆங்கில நண்பரக்ள் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயினர். பல விஷயங்களில் அவர்கள் இந்தியரின் முறைகளை மேற்கொண்டனர். நடைமுறை போன்றவைகளில் மேனாட்டு முறையே அனுசரிக்கப்பட்டாலும் உள் வாழ்க்கை முற்றும் இந்திய மயமானதாகவே இருந்தது. குடும்பத்துடன் சேர்ந்தவர்களாக அவர்களை வைத்துக் கொண்டிருப்பதால் சில கஷ்டங்கள் இருந்தன என்பது எனக்கு நினைவு இருக்கிறது. என்றாலும், என் வீட்டில் தங்கள் சொந்த வீடு போன்றே அவர்கள் இருந்து வருவதில் அவர்களுக்கு எந்தவிதமான கஷ்டமுமே இல்லை என்பதை நான் நிச்சயமாகக் கூற முடியும். டர்பனில் இருந்ததைவிட ஜோகன்னஸ்பர்க்கில் இவ்விதமான தொடர்புகள் இன்னும் அதிகமாயின.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum