தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐரோப்பியரின் தொடர்பு (தொடர்ச்சி)

Go down

ஐரோப்பியரின் தொடர்பு (தொடர்ச்சி) Empty ஐரோப்பியரின் தொடர்பு (தொடர்ச்சி)

Post  birundha Sat Mar 23, 2013 3:20 pm

ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு சமயம் என்னிடம் நான்கு இந்தியக் குமாஸ்தாக்கள் இருந்தனர். குமாஸ்தாக்கள் என்பதைவிட அவர்கள் என் புத்திரர்கள் போலவே இருந்தனர் எனலாம். ஆனால் எனக்கு இருந்த வேலைக்கு இவர்கள் போதவில்லை. டைப் அடிக்காமல் எதுவும் செய்ய இயலாது எங்களில் யாருக்காவது டைப் அடிக்கத் தெரியுமென்றால் அது எனக்குத்தான். குமாஸ்தாக்களில் இருவருக்கு அதைச் சொல்லிக் கொடுத்தேன். ஆனால் அவர்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியாததனால் அவர்கள் அதில் போதிய திறமை பெறவில்லை. அவர்களுள் ஒருவரை நல்ல கணக்கராகப் பயிற்சி செய்துவிடவும் விரும்பினேன். அனுமதிச் சீட்டுப் பெறாமல் டிரான்ஸ்வாலுக்குள் யாரும் வர முடியாதாகையால், நேட்டாலிலிருந்து நான் எவரையும் கொண்டு வருவதற்கும் முடியவில்லை. என்னுடைய சொந்தச் சௌகரியத்திற்காக அனுமதிச் சீட்டு அதிகாரியின் தயவை நாடுவதற்கு நான் விரும்பவுமில்லை.

என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை. வேலை பாக்கியாகிக் குவிந்துகொண்டே போயிற்று ஆகையால், நான் என்னதான் முயன்றாலும் தொழில் சம்பந்தமான வேலைகளுடன் பொது வேலையையும் செய்த சமாளித்துக் கொண்டு விடுவது அசாத்தியம் என்று எனக்குத் தோன்றியது. ஓர் ஐரோப்பியக் குமாஸ்தாவை வைத்துக் கொள்ளநான் தயாராகவே இருந்தேன். ஆனால் என்னைப் போன்ற ஒரு கறுப்பு மனிதனிடம் வேலை செய்ய ஒரு வெள்ளைக்கார ஆணோ, பெண்ணோ வருவார்கள் என்ற நிச்சயம் எனக்கு இல்லை. என்றாலும், முயன்று பார்ப்பது என்று தீர்மானித்தேன். எனக்குத் தெரிந்த டைப்ரைட்டர் தரகர் ஒருவரிடம் சென்றேன். சுருக்கெழுத்தும் தெரிந்த டைப் அடிப்பவர் ஒருவர் எனக்குத் தேவை என்று அவரிடம் கூறினேன். பெண்கள் கிடைப்பார்கள் என்றும், ஒரு பெண்ணை ஏற்பாடு செய்வதாகவும் அவர் சொன்னார். ஸ்காட்லாந்திலிருந்து அப்பொழுதுதான் வந்தவரான குமாரி டிக் என்ற பெண்ணைப் பார்த்து அவர் விசாரித்தார். அப் பெண்ணுக்குப் பணம் தேவை. ஆகையால், யோக்கியமான பிழைப்பு எங்கே கிடைத்தாலும் வேலை பார்ப்பதில் அவளுக்கு ஆட்சேபமில்லை. எனவே, அந்தத் தரகர் அப்பெண்ணை என்னிடம் அனுப்பினார். அப் பெண்ணைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்துப் போய்விட்டது.

இந்தியரின் கீழ் ஊழியம் பார்ப்பதில் உமக்கு ஆட்சேபம் உண்டா ? என்று அப்பெண்ணைக் கேட்டேன். இல்லவே இல்லை என்று அவர் உறுதியாகக் கூறினார். என்ன சம்பளம் நீர் எதிர்பார்க்கிறீர்? ஏழரைப் பவுன் கேட்டால் அது உங்களுக்கு அதிகமானதாக இருக்குமா? உம்மிடமிருந்து நான் விரும்பும் வேலையை அளிப்பீரானால், அச் சம்பளம் அதிகமானதாகாது. எப்பொழுது வேலைக்கு வர முடியும்? நீங்கள் விரும்பினால் இந்த நிமிடத்திலேயே. நான் அதிகத் திருப்தி அடைந்துவிட்டேன். எழுத வேண்டிய கடிதங்கள் அவளுக்கு அப்பொழுதே சொல்ல ஆரம்பித்துவிட்டேன். அப்பெண் டைப் அடிப்பவர் என்பதற்குப் பதிலாக வெகு சீக்கிரத்திலேயே எனக்கு ஒரு மகள் அல்லது சகோதரி போல் ஆகிவிட்டார். அவர் செய்த வேலை பற்றிக் குறை கூற எந்தக் காரணமும் எனக்கு இல்லை. ஆயிரக்கணக்கான பவுன் தொகையை நிர்வகிக்கும் பொறுப்பும் அடிக்கடி அவரிடம் ஒப்படைக்கப் பட்டது உண்டு. கணக்குகள் வைத்துக் கொள்ளுவதும் அவர்தான். என் முழு நம்பிக்கையையும் அவர் பெற்றுவிட்டார். இன்னும் அதிக முக்கியமானது என்னவென்றால், அவர் தமது மனத்திற்குள்ளிருந்த எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கூட என்னிடம் கூறிவந்தார். முடிவாகத் தமக்குக் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் என் ஆலோசனையையும் நாடினார். அவரைக் கன்னிகாதானம் செய்து கொடுக்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. குமாரி டிக், ஸ்ரீமதி மெக்டானல்டு ஆனதும் என்னைவிட்டுப் போய்விட வேண்டியதாயிற்று. ஆனால், விவாகமான பிறகும் கூட வேலை அதிகமாக இருக்கும்போது கூப்பிட்டால் தவறாமல் வந்து செய்துவிட்டுப் போவார்.

ஆனால், அவருடைய ஸ்தானத்தில் நிரந்தரமான ஒரு டைப் குமாஸ்தா இப்பொழுது அவசியமாயிற்று, மற்றோர் பெண் எனக்குக் கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலியானேன். குமாரி ஷிலேஸின் என்பவரே இவர். இவரை ஸ்ரீ கால்லென் பாக் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஸ்ரீ கால்லென்பாக் பற்றி உரிய இடத்தில் வாசகர் அறிந்து கொள்ளுவர். இப் பெண்மணி இப்பொழுது டிரான்ஸ்வாலில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் உபாத்தியாயினியாக இருக்கிறார். இவர் என்னிடம் வந்தபோது சுமார் பதினேழு வயது இருக்கும். இப் பெண்ணிடம் சில விசித்திரமான சுபாவங்கள் உண்டு. சில சமயங்களில் எனக்கும் ஸ்ரீ கால்லென்பாக்குக்கும் அதைப் பொறுக்க முடியாது போகும். டைப் அடிக்கும் குமாஸ்தாவாக வேலை செய்வதைவிட, அதற்கான அனுபவம் பெறுவதற்கு என்றே இப் பெண் முக்கியமாக வேலைக்கு வந்தார். நிறத் துவேஷம் என்பது இவருடைய சுபாவத்திற்கே விரோதமானது. வயதுக்கோ அனுபவத்திற்கோ இவர் மதிப்புக் கொடுப்பதில்லை. ஒருவரை அவமதிப்பதாகுமே என்பதைக் கூட பொருட்படுத்தமாட்டார், அவரைக் குறித்துத் தாம் நினைப்பதை நேருக்கு நேராகத் தயக்கமின்றிக் கூறிவிடுவார். இவருடைய அதி தீவிரப் போக்கு பல சமயங்களில் என்னைச் சங்கடத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆனால் இவருடைய கபடமற்ற வெள்ளை மனப்போக்கோ, சங்கடம் ஏற்பட்டவுடனே அச்சங்கடதத்தை போக்கியும் விடும். இவருடைய ஆங்கில ஞானம் என்னுடையதைவிட மேலானது என்று கருதினேன். அதோடு இவருடைய விசுவாசத்தில் எனக்கு முழு நம்பிக்கையும் இருந்தது. ஆகையால், இவர் டைப் அடிக்கும் கடிதங்களைத் திரும்பப் படித்துப் பாராமலேயே கையெழுத்திட்டுவிடுவேன்.

இவர் செய்திருக்கும் தியாகம் மகத்தானது. வெகு காலம் வரையில் இவர் ஆறு பவுனுக்கு மேல் வாங்கிக் கொள்ள எப்பொழுதும் மறுத்துவிட்டார். கொஞ்சம்அதிகமாக வாங்கிக் கொள்ளுமாறு நான் வற்புறுத்தும்பேது என்னைத் திட்டிவிடுவார். உங்களிடம் சம்பளம் வாங்குவதற்காக நான் இங்கே இல்லை. உங்களுடன் வேலை செய்ய விரும்புகிறேன், உங்கள் கொள்கைகளும் எனக்கு பிடித்திருக்கின்றன என்பதனாலேயே இங்கே இருக்கிறேன் என்பார். ஒரு சமயம் என்னிடம் நாற்பது பவுன் வாங்கிக் கொண்டார். ஆனால் அதைக் கடனாகவே பாவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். சென்ற ஆண்டு முழுத்தொகையையும் திருப்பி அனுப்பிவிட்டார். அவருடைய தியாகத்திற்குச் சமமானவை அவர் தைரியமும், பளிங்கு போன்ற மாசற்ற ஒழுக்கமும். போர் வீரனும் வெட்கமடையும்படி செய்யும் தீரம் கொண்ட சில பெண்களுடன் பழகும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. அத்தகைய பெண்களில் இவரும் ஒருவர். இப்பொழுது இவர் வயது முதிர்ந்த மாது. இவர் என்னிடம் இருந்தபோது நான் அறிந்திருந்ததுபோல, இப்பொழுது இவர் மனநிலையைப் பற்றி நான் அறியேன். ஆனால் இந்த யுவதியுடன் ஏற்பட்ட பழக்கம் எனக்கு என்றென்றும் புனிதமானதொரு நினைவாகவே இருந்துவரும். ஆகையால், அவரைப் பற்றி எனக்கத் தெரிந்தவைகளைக் கூறாமல் விடுவேனாயின் நான் சத்தியத்திற்குத் துரோகம் செய்தவனாவேன்.

லட்சியத்திற்காக உழைப்பதில் இவருக்கு இரவென்றும் பகலென்றும் தெரியாது. நள்ளிரவுல் தன்னந்தனியாக வெளி இடங்களுக்குச செய்தி கொண்டுபோவார். துணைக்கு ஆள் அனுப்புவதாகச் சொன்னால், கோபத்தோடு அதை மறுத்து விடுவார். ஆயிரக்கணக்கான தீரமான இந்தியர் இவருடைய புத்திமதியை எதிர் நோக்கி நின்றனர். சத்தியாக்கிரக சமயத்தில் தலைவர்கள் எல்லோரும் சிறையில் இருந்தபோது இவர் தன்னந்தனியாக இயக்கத்தை நடத்தி வந்தார். அப்பொழுது ஆயிரக்கணக்கானவர்களை வைத்துக் கொண்டு இவர் நிர்வகிக்க வேண்டியிருந்தது. கவனிக்க வேண்டிய கடிதப் போக்குவரத்துக்களும் ஏராளமாக இருந்தன. இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கையையும இவரே நடத்த வேண்டியிருந்ததென்றாலும், அவர் சோர்வடைந்து விட்டதே இல்லை. குமாரி ஷிலேஸினைக் குறித்து முடிவில்லாமல் நான் எழுதிக் கொண்டே போக முடியும். எனினும், அவரைக் குறித்துக் கோகலே கொண்டிருந்த அபிப்பிராயத்தைக் கூறி இந்த அத்தியாயததை முடிக்கிறேன். என் சக ஊழியர்கள் ஒவ்வொருவரையும் கோகலே நன்கு அறிவார். அவர்களில் பலரை அவருக்குப் பிடித்திருந்தது. அவர்களைப் பற்றி தமது அபிப்பிராயத்தையும் கூறுவார். எல்லா இந்திய, ஐரோப்பிய சக ஊழியர்களிலும் குமாரி ஷிலேஸினுக்கு அவர் முதலிடம் கொடுத்தார். குமாரி ஷிலேஸினிடம் நான் கண்ட தியாகம் தூய்மை, அஞ்சாமை ஆகியவைகளைப் போல வேறு யாரிடமும் நான் கண்டதில்லை என்றார் அவர். உங்களுடைய சக ஊழியர்களிடையே குமாரி ஷிலேஸின் முதலிடம் வகிக்கிறார் என்பதே என் அபிப்பிராயம் என்றும் கூறினார்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum