தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியன் ஒப்பீனியன்

Go down

இந்தியன் ஒப்பீனியன் Empty இந்தியன் ஒப்பீனியன்

Post  birundha Sat Mar 23, 2013 3:20 pm

மற்றும் பல ஐரோப்பியருடனும் ஏற்பட்ட நெருங்கிய தொடர்பைக் குறித்துச் சொல்லுவதற்கு முன்னால் இரண்டு மூன்று முக்கியமான விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும் என்றாலும், ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பை; குறித்து இப்போதே சொல்லிவிட வேண்டும். என் வேலைக்குக் குமாரி டிக்கை நியமித்தது மாத்திரம் போதவில்லை. எனக்கு மேற்கொண்டும் உதவி தேவையாயிற்று. முந்திய அத்தியாயங்களில் ஸ்ரீ ரிச் என்பவரைப் பற்றிக் கூறியிருக்கிறேன். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு வர்த்தக ஸ்தாபனத்தில் அவர் நிர்வாகியாக இருந்தார். அந்த வர்த்தக ஸ்தாபனத்தை விட்டு விட்டு என் கீழ் வக்கீல் வேலைக்குப் பயிற்சி பெறுமாறு யோசனை கூறினேன். அதன்படி அவர் செய்து எனக்கு இருந்த வேலைப்பளுவைப் பெரியதும் குறைத்தார்.

அந்தச் சமயம் ஸ்ரீ மதன்ஜித் இந்தியன் ஒப்பீனியனை ஆரம்பிக்கும் திட்டத்துடன் என்னிடம் வந்து என் ஆலோசனையைக் கேட்டார். அப்பொழுதே அவர் ஓர் அச்சகத்தை நடத்திக் கொண்டிருந்தார். அவருடைய திட்டத்தை அங்கீகரித்தேன். இப்பத்திரிக்கை 1904-இல் ஆரம்பமாயிற்று. ஸ்ரீ மன்சுக்லால் நாஸர் அதன் முதல் ஆசிரியரானால் எல்லாச் சமயங்களிலும் நானே அப்பத்திரிகையை நடத்தி வரவேண்டி வந்ததால் வேலை முழுவதும் என் தலையிலேயே விழுந்தது. அவ் வேலையைச் செய்து கொண்டு போக ஸ்ரீ மன்சுக்லாலினால் முடியாது என்பதல்ல. இந்தியாவில் இருந்த போது ஓரளவுக்குப் பத்திரிக்கையாளராக அவர் அனுபவம் பெற்றிருக்கிறார். ஆனால் நான் அங்கே இருக்கும் போது சிக்கலான தென்னாப்பிரிக்கப் பிரச்சினைகளைக் குறித்து அவர் எழுத முற்படுவதில்லை. என்னுடைய விருப்பு, வெறுப்பற்ற தன்மையில் அவருக்குப் பரிபூரண நம்பிக்கை உண்டு. ஆகவே, தலையங்கங்களை எழுதும் பொறுப்பை அவர் என்; மீது போட்டு விட்டார். இன்றளவும் அது குஜராத்தி, ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிரசுரமாயிற்று. ஆனால் ஹிந்திப் பகுதியும் தமிழ்ப் பகுதியும் பெயரளவுக்குதான் இருந்தனவே ஒழிய, எந்த நோக்கத்தின் பேரில் அவை ஆரம்பிக்கப்பட்டனவோ அதை அவை நிறைவேற்றவில்லை. ஆகையால் அந்தப் பகுதிகளைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருப்பது ஓரளவுக்கு ஏமாற்றுவதாகும் என்று நான் உணர்ந்ததால் அவற்றை நிறுத்தி விட்டேன்.

இந்தப் பத்திரிகைக்கு நான் பணம் எதுவும் போட வேண்டிவரும் என்று நினைக்கவே இல்லை. ஆனால், பண உதவி இல்லாமல் அது நடந்துகொண்டு போக முடியாது என்பதைச் சீக்கிரத்திலேயே கண்டுகொண்டேன். பெயரைப் பொறுத்த வரையில் இப்பத்திரிக்கைக்கு நான் ஆசிரியன் அல்ல என்றாலும் அதை நடத்துவதற்கு முழுப் பொறுப்பாளியாக இருப்பது நான் தான் என்பதை இந்தியரும், ஐரோப்பியரும் நன்கு அறிவார்கள். இப் பத்திரிகையை ஆரம்பிக்காமலேயே இருந்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஆரம்பித்துவிட்ட பிறகு அதை நிறுத்தி விடுவதென்பது நஷ்டத்தோடு வெட்கக் கேடுமாகும். ஆகவே, என் பணத்தை அதில் போட்டுக் கொண்டே போனேன். முடிவில் நான் மிச்சம் பிடித்து வைத்திருந்த பணத்தையெல்லாம் அதிலேயே போட்டு விட நேர்;ந்தது. ஒரு சமயம் மாதத்திற்கு 75 பவுன் நான் அனுப்ப வேண்டியிருந்ததும் எனக்கு நினைவிருக்கிறது.

இப் பத்திரிகை சமூகத்திற்கு நல்ல சேவை செய்திருக்கிறது என்பதை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நான் உணருகிறேன். லாபத்திற்கு நடத்தும் வர்த்தக ஸ்தாபனமாக அது இருக்க வேண்டும் என்ற நோக்கம் என்றும் இருந்ததில்லை. என்னால் நடத்தப்பட்டு வந்தவரையில் அப் பத்திரிகையில் ஏற்பட்ட மாறுதல்கள் என்னிடம் ஏற்பட்ட மாறுதல்களுக்கு அடையாளங்களாக இருந்தன. இப்பொழுது எங் இந்தியா-வும், நவஜிவனும் இருப்பதைப்போல் அந்த நாளில் இந்தியன் ஒப்பீனியன் என் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் காட்டும் கண்ணாடி போல் இருந்து வந்தது. அதன் பத்திகளில் பிரதி வாரமும் என் ஆன்ம உணர்ச்சிகளைக் கொட்டி வந்தேன். சத்தியாக்கிரகக் கொள்கையையும் அதன் அனுஷ்டானத்தையும நான் அறிந்திருந்த வகையில் அதில் வெளியிட்டு வந்தேன். பத்து வருட காலத்தில், அதாவது 1914-ஆம் ஆண்டு வரையில், சிறைச் சாலைக்குள் எனக்குக் கிடைத்த கட்டாய ஓய்வைத் தவிர மற்றச் சமயங்களில் என்னுடைய கட்டுரை இடம் பெறாத இந்தியன் ஒப்பீனியன் இதழே இல்லை. நான் தீர யோசிக்காமலோ, வேண்டும் என்றோ அக்கட்டுரைகளில் ஒரு வார்த்தையைக்கூட எழுதியதாக எனக்கு நினைவு இல்லை. எனக்கு அப்பத்திரிகை தன்னடக்கத்திற்கு ஒரு பயிற்சியாக இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. நண்பர்களுக்கோ, என் கருத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு அது ஒரு சாதனமாக இருந்தது.

குற்றங் கண்டுபிடிப்பவர்களுக்கு அதில் ஆட்சேபிக்கத் தக்க விஷயங்கள் அதிகம் கிடைப்பதில்லை. உண்மையில் இந்தியன் ஒப்பீனியனின் நேர்மையான போக்கு, குற்றங் கூறுவோரும் தங்கள் பேனாவை அடக்கிக் கொள்ளும்படி செய்தது. இந்தியன் ஒப்பீனியன் இல்லாமல் சத்தியாக்கிரகம் சாத்தியமில்லாமலும் இருந்திருக்கக்கூடும். சத்தியாக்கிரகப் போராட்டத்தின் நம்பிக்கையான விவரங்களையும் தென்னாப்பிரிக்காவில் இந்தியரின் உண்மையான நிலைமையையும் அறிவதற்கு வாசகர்கள் இப்பத்திரிகையை ஆவலுடன் எதிர் நோக்கினர். ஆசிரியருக்கும் வாசகர்களுக்கும் இடையே நெருங்கிய தூய சம்பந்தத்தை உண்டாக்கி கொள்ள வேண்டுமென்று நான் எப்பொழுதும் முயன்று வந்தேன். ஆகையால், நான் மனித சுபாவத்தின் எல்லாவிதத் தோற்றங்களையும் சாயல்களையும் கற்றறிவதற்கு இப்பத்திரிகை ஒரு நல்ல சாதனமாயிற்று. இதய அந்தரங்க உணர்ச்சிகளைப் பொழிந்து எழுதிய கடிதங்கள் ஏராளமாக, பிரவாகமாக எனக்கு வந்து குவிந்து கொண்டிருந்தன. எழுதியவரின் மனப்போக்கை ஒட்டிச் சில சிநேக முறையில் இருந்தன, சில குற்றங் கூறுவனவாகவோ, கசப்பானவையாகவோ இருந்தன. இந்தக் கடிதங்களையெல்லாம் படித்து, விஷயத்தை அறிந்துகொண்டு பதில் சொல்வது எனக்கு நல்ல படியாக அமைந்தது. என்னுடன் நடத்திய இக்கடிதப் போக்குவரத்தின் மூலம் சமூகம் தன்னுடைய எண்ணத்தை எனக்கு அறிவிப்பது போலவே இருந்தது. ஒரு பத்திரிக்கையாளரின் பொறுப்பை முழுவதும் நான் அறிந்து கொள்ளுமாறும் அது செய்தது. இந்த வகையில் நான் சமூகத்தில் அடைந்த செல்வாக்கு, வருங்காலப் போராட்டத்தைக் காரிய சாத்தியமானதாகவும், கண்ணியமானதாகவும், எதிர்க்க முடியாததாகவும் ஆக்கியது.

பத்திரிக்கைத் தொழிலின் ஒரே நோக்கம் சேவையாகவே இருக்கவேண்டும் என்பதை இநதியன் ஒப்பீனியன் ஆரம்பமான முதல் மாதத்திலேயே அறிந்துகொண்டேன். பத்திரிக்கை, ஒரு பெரிய சக்தி. ஆனால், கரையில்லாத நீர்ப் பிரவாகம். எவ்விதம் கிராமப் புறங்களையெல்லாம் மூழ்கடித்துப் பயிர்களையும் நாசமாக்கி விடுமோ அதே போலக் கட்டுத்திட்டத்திற்கு உட்படாத பேனாவும் நாச வேலைக்குத்தான் பயன்படும். கட்டுத்திட்டம் வெளியிலிருந்தே வருவதாயிருந்தால், கட்டுத்திட்டமில்லாததைவிட அது அதிக விஷயமானதாகும். கட்டுத்திட்டம் உள்ளுக்குள்ளிருந்தே வருவதாக இருந்தால்தான் அதனால் லாபம் உண்டு. இந்த நியாயமே சரியானது என்றால், உலகில் இப்பொழுது இருக்கும் பத்திரிகைகளில் எத்தனை இந்தச் சோதனையில் தேறும் ? ஆனால் பயனில்லாதவைகளாக இருப்பவைகளை யார் நிறுத்துவார்கள் ? மேலும் இதில் முடிவு கூறுவது யார் ? பொதுவாக நல்லதையும் தீயதையும் போலப் பயனுள்ளவையும் பயனில்லாதவையும் கலந்து இருந்துகொண்டுதான் வரும். மனிதனே அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum