தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வக்கீல் தொழில் பற்றிய நினைவுகள்

Go down

வக்கீல் தொழில் பற்றிய நினைவுகள் Empty வக்கீல் தொழில் பற்றிய நினைவுகள்

Post  birundha Sat Mar 23, 2013 3:05 pm

இந்தியாவில் என் வாழ்க்கை எந்தப் போக்கில் போயிற்று என்பதைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் முன்பு, இதுவரையில் வேண்டுமென்றே நான் கூறாமல் இருந்துவந்திருக்கும் தென் ஆப்பிரிக்கா பற்றிய மற்றும் சில செய்திகளை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். வக்கீல் தொழிலைப் பற்றிய என் நினைவுகளைக் கூறுமாறு சில வக்கீல் நண்பர்கள் கேட்கிறார்கள்.அத்தகைய நினைவுகள் ஏராளமானவை. அவைகளையெல்லாம் சொல்லுவதானால் அதுவே ஒரு புத்தகமாகிவிடும். அது என் நோக்கத்திற்கும் மாறானது. ஆனால், அவைகளில் உண்மையைக் கடைபிடிப்பது சம்பந்தமான சில நினைவுகளை மாத்திரம் கூறுவது தவறாக இல்லாமலும் இருக்கக்கூடும். எனக்கு நினைவிருக்கும் வரையில், எனது வக்கீல் தொழிலில் பொய்யை அனுசரித்ததே இல்லை என்று முன்பே சொல்லியிருக்கிறேன். நான் நடத்தியவழக்குகளில் பெரும் பகுதி பொதுஜன நன்மைக்காக நடத்தப்பட்டது. என் கையை விட்டுச் செலவு செய்த பணத்திற்கு அதிகமாக அந்த வழக்குகளுக்கு நான்
பணம் வாங்குவதே இல்லை. அவற்றில்கூட சில சமயங்களில் என் சொந்தப் பணத்தையும் செலவு செய்தது உண்டு.இதை முன்பே சொல்லிவிட்டதன் மூலம், என் வக்கீல் தொழிலைக் குறித்துச் சொல்லுவதற்கு அவசியமானவைகளையெல்லாம் நான் சொல்லி விட்டதாகவே எண்ணினேன். இன்னும் அதிகமாகச் சொல்ல வேண்டும் என்று நண்பர்கள் விரும்புகின்றனர். வக்கீல் தொழிலில் சத்தியத்தினின்றும் தவறிவிட மறுத்து நான் உறுதியுடனிருந்த சந்தர்ப்பங்களில் சிலவற்றைக் குறித்துச் சிறிதளவேனும் நான் விவரித்துச் சொன்னால் வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருப்போர் அதனால் பயனடையக் கூடும் என்று அந்த நண்பர்கள் நினைக்கிறார்கள் என்று தெரிகிறது. வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழில் என்று சொல்லப்பட்டதை நான் மாணவனாக இருந்தபோது கேட்டிருக்கிறேன்.

பொய்சொல்லிப் பணத்தையோ, அந்தஸ்தையோ சம்பாதித்துக் கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லாததனால், அதெல்லாம் என் மனத்தை மாற்றி விடவே இல்லை. தென்னாப்பிரிக்காவில் என் கொள்கைகள் பன்முறைகளிலும் சோதனைக்கு உள்ளானது உண்டு. என்எதிர்க் கட்சிக்காரர்கள், சாட்சிகளுக்குச்சொல்லிக்கொடுத்துத் தயார் செய்திருக்கிறார்கள் என்பதைப் பல தடவைகளிலும் நான் அறிந்திருக்கிறேன். என் கட்சிக்காரரையோ, அவருடைய சாட்சிகளையோபொய் சொல்ல மாத்திரம் நான் உற்சாகப் படுத்தியிருந்தால், நாங்கள் சில வழக்குகளில் வெற்றி பெற்று இருப்போம். ஆனால், அத்தகைய ஆசையை நான்எப்பொழுதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். ஒரு வழக்கில் வெற்றி பெற்றுவிட்ட பிறகுஎன் கட்சிக்காரர் என்னை ஏமாற்றி விட்டார் என்று நான் சந்தேகித்த ஒரே ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. என் கட்சிக்காரரின் வழக்கில் நியாயமிருந்தால்தான் அதில் வெற்றிகிடைக்க வேண்டும் என்று என் உள்ளத்திற்குள் எப்பொழுதும் விரும்பி வந்தேன். வழக்குக்கு என் கட்டணத்தை நிர்ணயிப்பதில்கூட, அதில் வெற்றிபெற்றால் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நான் நிபந்தனை போட்டதாகவும் எனக்கு நினைவில்லை. கட்சிக்காரர் வெற்றி பெற்றாலும் தோற்றாலும், என் கட்டணத்திற்கு அதிகமாகவோ, குறைவாகவோ எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை.

பொய் வழக்கை நடத்துவோன் என்றோ, சாட்சிகளுக்குச் சொல்லிக்கொடுத்துத் தயார் செய்வோன் என்றோ என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று புதிதாக வரும் கட்சிக்காரரிடம் ஆரம்பத்திலேயே கூறிவிடுவேன். இதன் பலனாக, எனக்கு ஒரு பெயர் ஏற்பட்டு என்னிடம்பொய் வழக்கே வருவதில்லை. என்னுடைய கட்சிக்காரர்களில் சிலர், பொய்க் கலப்பில்லாத வழக்குகளை மாத்திரம் என்னிடம் கொண்டு வந்து, சந்தேகத்திற்கு இடமுள்ளதான வழக்குகளுக்கு வேறு வக்கீல்களை அமர்த்திக் கொள்ளுவார்கள். ஒரு வழக்கு மிகவும் கடுமையான சோதனையாகிவிட்டது. என்னுடைய கட்சிக்காரர்களில் மிகச் சிறந்தவரானஒருவருடைய வழக்கு அது; அதிகச் சிக்கலான கணக்குவழக்குகளைப் பற்றிய நடவடிக்கை அது; நீண்ட காலம் நடந்து வந்தது. பல கோர்ட்டுகளும் அவ்வழக்கைக் கொஞ்சம் கொஞ்சம்விசாரித்திருந்தன. முடிவாக அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கணக்குத் தகராறுகளைத் தகுதி வாய்ந்த கணக்கர்களின் மத்தியஸ்தத்திற்குக் கோர்ட்டு விட்டு விட்டது. இந்த மத்தியஸ்தர்களின் முடிவு என் கட்சிக்காரருக்குச் சாதகம் ஆயிற்று. ஆனால், மத்தியஸ்தர்கள் கூட்டிப் போட்டதில் அறியாமலேயே ஒரு தவறைச் செய்து விட்டார்கள். தவறு சிறியதேயாயினும், பற்று வைக்க வேண்டிய தொகை வரவாக வைக்கப்பட்டு விட்டதால் அது முக்கியமான தவறேயாயிற்று. இத்தீர்ப்பை,எதிர்த்தரப்பினர் இக்காரணத்திற்காக ஆட்சேபிக்காமல் வேறு காரணங்களைக் கூறி ஆட்சேபித்தார்கள். இவ்வழக்கில்என் கட்சிக்காரருடைய பெரிய வக்கீலின் கீழ் நான் உதவி வக்கீலாகவே இருந்தேன். நடந்து இருந்த தவறைப் பெரிய வக்கீல் அறிந்ததும், அதை ஒப்புக் கொள்ள எங்கள் கட்சிக்காரர் கடமைப் பட்டவரல்ல என்று கூறினார். தம் கட்சிக்காரருக்கு விரோதமான எதையும் ஏற்றுக்கொண்டுவிடும் கடமை எந்த வக்கீலுக்கும் இல்லை என்பது அவருடைய தெளிவான அபிப்பிராயம். நானோ, தவறை ஏற்றுக் கொண்டுவிட வேண்டும் என்றேன்.

ஆனால், பெரிய வக்கீல் பின்வருமாறு விவாதித்தார்: தவறு நடந்திருப்பதாக நாம் ஏற்றுக்கொண்டால், மத்தியஸ்தர்களின் தீர்ப்பு முழுவதையுமே கோர்ட்டு ரத்து செய்துவிடக்கூடும். சித்த சுவாதீனமுள்ள எந்த வக்கீலும் தம் கட்சிக்காரனின் வழக்குக்கு அந்த அளவுக்கு ஆபத்தை உண்டாக்கிவிட மாட்டார். எப்படியானாலும் சரி, அத்தகைய அபாயத்திற்கு நான் உடன் படவே மாட்டேன். திரும்பவும் புதிதாக விசாரிக்கும்படி வழக்கு அனுப்பப்பட்டு விட்டால் நம் கட்சிக்காரருக்கு எவ்வளவு பணம் செலவாகும், முடிவு என்னவாகும் என்று யார்தான் சொல்ல முடியும்? இவ்விதம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது கட்சிக்காரரும் அங்கிருந்தார். நான் கூறியதாவது: இதில் ஆபத்திருந்தாலும் அதற்கு நாமும் நமது கட்சிக்காரரும் உடன்பட வேண்டியதே என்றுதான் நான் கருதுகிறேன்.நடந்திருக்கும் ஒரு தவறை நாம் ஏற்றுக்கொள்ளாததனாலேயே தவறானதோர் தீர்ப்பைக்கோர்ட்டு அங்கீகரித்து விடும் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? நாம் தவறை ஏற்றுக் கொள்ளுவதால் நம் கட்சிக்காரருக்குக் கஷ்டமே ஏற்படுவதாக இருந்தாலும் அதனால் என்ன தீங்கு நேர்ந்துவிடும்? ஆனால் நாமாகப் போய் ஏன் அதிலிருக்கும் தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும்? என்று கேட்டார், பெரிய வக்கீல். அத்தவறைக் கோர்ட்டு கண்டு பிடித்துவிடாது, எதிர்த் தரப்பினரும் கண்டுகொண்டுவிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? என்றேன், நான்.

ஆனால், இந்த வழக்கின் மீது கோர்ட்டில் விவாதிக்க நீங்கள் தயாரா? நீங்கள் கூறுகிற வகையில் அந்த வழக்கில் விவாதிக்க நான் தயாராயில்லை என்று தீர்மானமாகப் பதில் சொன்னார் பெரிய வக்கீல். இதற்கு நான் பணிவுடன் பின்வருமாறு பதில் சொன்னேன்: நீங்கள் விவாதிக்கவில்லையானால், நம் கட்சிக்காரர் விரும்பினால், நான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். தவறை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்த வழக்கில் நான் எந்தவித சம்பந்தமும் வைத்துக் கொள்ளப் போவதில்லை. இவ்விதம் கூறிவிட்டு என் கட்சிக்காரரைப் பார்த்தேன். அவர் நிலைமை கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. ஆரம்பத்திலிருந்தே நான் இந்த வழக்கை நடத்திவருகிறேன். கட்சிக்காரருக்கு என் மீது பூரண நம்பிக்கை உண்டு. என்னை அவர் மிக நன்றாக அறிவார். அவர் சொன்னார்: அப்படியானால் சரி,வழக்கில் கோர்ட்டில் நீங்கள் விவாதியுங்கள். தவறையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதுதான் நம் கதி என்றால் இதில் தோற்றுப் போனாலும் போகட்டும். நியாயத்தைக் கடவுள் பாதுகாப்பார். நான் ஆனந்தமடைந்தேன். இந்தப் பெருங் குணத்தைத் தவிர வேறு எதையும் என் கட்சிக்காரரிடம் நான் எதிர்பார்க்கவில்லை. பெரிய வக்கீல் என்னை மீண்டும் எச்சரிக்கை செய்தார். என் பிடிவாதத்தைக் கண்டு பரிதாபப்பட்டார். ஆனால், அதே சமயத்தில் எனக்கு வாழ்த்தும் கூறினார். கோர்ட்டில் என்ன நடந்தது என்பதை அடுத்த அத்தியாயத்தில் கவனிப்போம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» செக்ஸ் பற்றிய நினைவுகள்
»  நல்ல தொழில் அமைய, அமைந்த தொழில் சிறப்படைய...
»  2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: சி.பி.ஐ. வக்கீல் லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம் இல்லை சி.பி.ஐ. தகவல்
» நடிகையை கொன்று தலையுடன் இரண்டு நாட்கள் சுற்றிய வக்கீல் ஜோடி கைது!
»  சரஸ்வதிசபதம்' பெயரில் புதுபடம் தயாரிக்க எதிர்ப்பு: சிவாஜி ரசிகர்கள் வக்கீல் நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum