தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருணை பொழியும் காள மேகப் பெருமாள்

Go down

 கருணை பொழியும் காள மேகப் பெருமாள் Empty கருணை பொழியும் காள மேகப் பெருமாள்

Post  meenu Sat Mar 09, 2013 1:26 pm

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள், அர்ச்சாவதாரம் உருவத் திருமேனி கொண்டு நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் 108 கோயில்களில் காட்சி தருகிறார். நின்ற கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கும் 60 கோயில்களில் ஒன்றுதான். மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புபெற்ற இக்கோயிலில் கருணைக் கடலான காளமேகப் பெருமாள் காட்சி தருகிறார். திருப்பாற்கடலில் கடைந் தெடுத்த அமுதத்தை தேவர்களுக்கு பெருமாள் வழங்கிய இடம் தான் திருமோகூர். 12 ஆழ்வார் களில் முதல் ஆழ்வாரான நம்மாழ்வாரும், கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

கிருத யுகத்தில் இந்திரன், துர்வாசரை மதிக்காத குற்றத்திற்காக சாபம் பெற்றான். அவனுடைய செல்வங்கள் பாற்கடலில் மறைந்தன. இந்திராதி தேவர்கள் வலிமை யிழந்தனர். அசுரர் வலிமை அதிகரித்தது. இறவாமல் இருக்க நினைத்த தேவர்கள், பாற்கடலை கடைந்து அமுதம் பெற நினைத்தனர்.

மேரு என்கிற மந்திரமலையை குடைபோல் கவிழ்த்து மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் திரித்து தேவர்களும், அசுரர்களும் மாபெரும் சப்தத்தோடு கடையத் தொடங்கினார்கள். மெல்லமெல்ல அவ்விடம் வெம்மையாய் தகிக்க ஆரம்பித்தது. சட்டென்று கடுமையான நெடியோடு காளகூடம் என்ற நஞ்சு, வாசுகி பாம்பினின்று பொத்துக்கொண்டு வெளியே எழுந்தது. அதன் வெம்மை அங்குள்ள வர்களை பொசுக்குவதுபோல் இருந்தது. அதைத்தாங்கமுடியாத தேவக்கூட்டம் மஹாதேவனிடம் ஓடியது. ஈசன் நஞ்சை எடுத்து அருந்தி, திருநீலகண்டனானார். பிறகு பாற்கடலில் இருந்து உச்சைச்ரவஸ் என்ற குதிரை, ஐராவதம் என்ற வெள்ளை யானை, நினைத்ததை கொடுக்கும் கற்பகமரம், சந்திரன், அகலிகை, திருமகள், கவுஸ்துபமணி ஆகியன ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்பட்டன.

அதன் பிறகு வந்த அமுதத்தை பருக, தேவர்களும், அசுரர்களும் சண்டையிட்டனர். தேவர்கள் வலிமை இழந்தனர். பாம்பணையில் பள்ளி கொண்ட பரந்தாமனை வணங்கித் துதித்து, வழிகாட்டுமாறு தேவியர்களிடம் வேண்டினர்.

தொட்டு எழுப்பினால் அபச்சாரம் என்று கருதி மானசீகமாக தேவர்களுக்கு அருளுமாறு தேவியர்கள் பெருமாளை பிரார்த்தித்தனர். அதையேற்று மனங்கவரும் மோகினியாய் வடிவத்தை மாற்றிக் கொண்டு திருக்கரங்களில் அமிர்தகலசத்தை ஏந்தினார் பெருமாள். பெண்ணழகில் மயங்கி அசுரர்கள் ஏமாற்றம் அடைய, தேவர்களுக்கு அமுதத்தை பங்கிட்டு கொடுத்தார். 'மோகினியை எப்படி வணங்குவது, திருமாலாக காட்சி கொடுக்க வேண்டும்' என்று தேவர்கள் கேட்டுக்கொண்டதை ஏற்று, தன் பேரழகு திருவுருவை எப்போதும் யாரும் வழிபடத்தக்க வகையில் திவ்ய மங்கள திருவுருவாக, இங்கு காட்சியளிக்கிறார்.

மூலவர் கிழக்கு நோக்கி காளமேகப் பெருமாள் எனும் திருநாமத்தோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சேவை சாதிக்கிறார். நீருண்டமேகம் போன்ற திருமேனியுடனும், சங்கு சக்கரங்கள் ஏந்திய திருக்கரங்களோடும், மேகம் கருணைகொண்டு மழைபொழிவதுபோல் இப்பெருமாள் அருள்மழை பொழிவதால் இவர் காளமேகப் பெருமாள் எனும் நாமம் பெற்றார். இவரை குடமாடுகூத்தன், தயரதம் பெற்ற மரகத மணித்தடம், சுடர்கொள் சோதி, திருமோகூர் ஆப்தன் என்றும் ஆழ்வார்கள் பாடிப் பரவுகிறார்கள். இங்கு மூலவருக்கும் திருமஞ்சனம் உண்டு.

காளமேகப் பெருமாள் சந்நதிக்கு தெற்கு பக்கத்தில் தாயார் சந்நதி உள்ளது. மோகன வல்லி தாயார் என்றும் மோகவல்லி என்றும் திருமோகூர் வல்லி என்றும் அழைக்கப்படுகிறார். கருணை பொழியும் திருமுகத்தோடு காட்சி தருகிறார். வீதி உலா வரும்போது பெருமாள் மட்டும் கோயிலுக்கு வெளியே செல்வார். தாயார் எந்த காலத்திலும் கோயில் படியை தாண்டியதில்லை. இதனால், தாயாரை படிதாண்டா பத்தினி என்று பக்தர்கள் போற்றுகின்றனர்.

இரண்டாம் திருச்சுற்றின் வடகிழக்கில் பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் பிரார்த்தனா சயனத்தில் காட்சியருள்கிறார். ஏனெனில் பெருமான் பள்ளியெழுந்தருள வேண்டுமென்று தாயார்கள் இருவரும் இருகரம் கூப்பி பிரார்த்தனை செய்யும் வண்ணம் உள்ளதால் இது பிரார்த்தனா சயனம் எனப்படுகிறது. எம்பெருமானிடத்தில் அடியவர்களின் குறைகளை வினயமாக எடுத்துச்சொல்லும் விதமாக உள்ளது எங்கும் காணக்கிடைக்காதது. துவாதசி நாளில் திருமஞ்சனம் செய்வித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

கோயிலின் தென்மேற்கு பகுதியில் (கன்னி மூலையில்) சக்கரத்தாழ்வார் சந்நதி உள்ளது. திருமோகூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவாழி ஆழ்வான் எனும் அற்புதப் பெருமான் சக்கரத்தாழ்வாரே ஆவார். திருமாலின் ஐந்து படைக்களன்களில் முதன்மையும், ஆதியந்த முமில்லாததும், பெருமாளைவிட்டு பிரியாததுமான சுதர்சனமுமே ஆகும். சுதர்சனம் என்றாலே காட்சிக்கு இனியவன், நல்வழிகாட்டும் நாயகன் என்று பல பொருள்கள் உண்டு.

முன்புறம் சக்கரத்தாழ்வாராகவும், பின்புறம் நரசிங்கப் பெருமாளாகவும் காட்சிதரும் திருக்கோலம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. மிகப் பிரமாண்டமான ஒரு சக்திச் சுழற்சியின் முன்பு நாம் ஏதுமற்றவர்கள் என்ற ஓர் உணர்வு நம்முள் அழுத்தமாய் பரவுகிறது. திகழ்ச்சக்கரமான சக்கரத்தாழ்வார் அருட்சக்கரமாகி தீப்போல் பிரகாசிக்கிறார். ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் சுழற்சிக்கு ஆதாரமான விஷயம் இங்கு வீற்றிருக்கிறதோ எனும் பெரும்வியப்பு நம்மை சிலிர்க்க வைக்கிறது.

நாற்பத்தெட்டு தேவதைகள் சுற்றிலும் இருக்க, ஆறுவட்டங்களுக்குள் நூற்று ஐம்பத்து நான்கு எழுத்துக்கள் பொறித்திருக்க, பதினாறு திருக்கரங்களிலும், பதினாறு படைக்கலன்கள் ஏந்தி மூன்று கண்களுடனும் காட்சியளிக்கிறார். அவற்றில் மந்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. திருமுடி தீப்பரப்பி, நாற்புறமும் விரவி ஒளிர்கிறது. நரசிங்கப் பெருமான் நான்குவித சக்ராயுதங்களை ஏந்தி கால்களை மடித்து யோகநிலையில் காட்சியருள்கிறார்.

ஆனி மாதம் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரத்தில் இங்கு நடத்தப்படும் சுதர்சன வேள்வி காண்போரை களிப்புற வைக்கிறது. பங்கு கொண்டோரை பவித்ரமாக்குகிறது. இப்பெருமானை ஆறுமுறையோ, ஆறின் மடங்குகளிலோ வலம் வந்தால் எண்ணிய செயல்கள் சட்டென்று நிறைவேறுகின்றன. வேண்டுதல்கள் விரைவில் பலிதமாகின்றன. வேண்டிய வரமருளும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். மரணபயம் அறுத்தும், மனோவியாதியை ஒழித்தும், கன்னியருக்கு மாலை கொடுத்தும், காளையருக்கு வேலை கொடுத்தும், மக்கட்பேறை மட்டிலாது அளித்தும், தொழிலில் ஏற்படும் தோல்வியை நீக்கி கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக நரசிம்ம சுதர்சனப் பெருமாள் அருளாட்சி நடத்துகிறார்.

காளமேகப் பெருமாள் சந்நதிக்கு வடக்கு பகுதியில் ஆண்டாள் சந்நதி உள்ளது. பிரம்மோற்சவத் தின் 6வது நாள், வைகுண்ட ஏகாதசி, மார்கழி 27ம் நாள், பங்குனி உத்திரம் (திருக்கல்யாணம்), பங்குனி அஷ்டம் (தெப்பத்திருவிழா) ஆகிய 5 நாட்கள் பெருமாளுடன் சேர்ந்து பக்தர்களுக்கு ஆண்டாள் காட்சி அளிக்கிறார். ஆடி வீதி எனப்படும் 2ம் திருச்சுற்றில் தெற்கே வடக்கு பார்த்த ஆஞ்சநேயர் சந்நதி உள்ளது. நவநீதகிருஷ்ணனுக் கும் தனி சந்நதி உள்ளது. காளமேகப் பெருமாள் கோயிலில் நான்முகன் தவம் செய்துள்ளார். நான்முகனுக்கு தொல்லை கொடுத்த அரக்கர்களை கடலில் தூக்கி எறிந்த திருமாலுக்கு நன்றி செலுத்த உருவாக்கப்பட்ட பிரம்மதீர்த்த குளம் இங்கு உள்ளது.

கருட மண்டபத்தின் தென்புறத் தூண் ஒன்றில் கரும்புவில், மலர் கணையுடன் மன்மதன் சிற்பமும், எதிரேயுள்ள தூணில் மன்மதனை பார்த்தபடி அன்னப் பறவையில் ரதிதேவி சிற்பமும் உள்ளது. ராமர், சீதை, லட்சுமணன் சிற்பங்கள் காளமேகப் பெருமாளை நோக்கி காணப்படுகின்றன. கம்பத்தடி மண்டப தூண்க ளில் மருது சகோதரர்களின் சிற்பம் உள்ளது. கோயிலுக்கு வெளியே பதினெட்டாம்படி கருப்பன்னசாமி கோயில் உள்ளது.

ஒவ்வொரு மாதமும் திருவோண நாளில் ஆப்தன் என்றழைக்கப்படும் உற்சவர் எழுந்தருளுகிறார். சித்திரை முதல் நாளில் காள மேகப் பெருமாளை காண மக்கள் கூடுகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு கூடும் கூட்டத்திற்கு கணக்கே இல்லை.

நம்மாழ்வாரின் மனங்கவர்ந்த பெருமான் காளமேகப் பிரான். வைகுண்டத்திற்கு போகும் போது நம்மாழ்வாருக்கு வழித்துணையாக காளமேகப் பெருமானே நேரடியாக சென்றுள்ளார். நம்மாழ்வார் வைகாசி விசாகத்தில் பிறந்ததால், விசாகத்தை நிறைவு நாளாக வைத்து பத்து நாள் திருவிழா நடத்தப்படுகிறது. திருத்தேரோட்டம், தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நடைபெறும்.

ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய உற்சவங்கள் இங்கே சிறப்புற மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழை வேதமாக்கிய நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும், பேயாழ்வாரும் இப்பெருமானை பாடிப் பரவசமாகி பாசுரங்கள் செய்து கருணை மழை பொழியும் காளமேகப் பெருமானின் திருவடி பரவிநின்றனர். நாமும் அத்தடத்திலேயே திடமாய் அவன் திருவடியை பற்றுவோம். மட்டிலாது வாழ்க்கையை வாழ்வோம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பரமஹம்ஸர் பொழியும் கருணை மழை
» கனக மழை பொழியும் கமலாத்மிகா
» அருள் மழை பொழியும் அறப்பள்ளீஸ்வரர்
» அருள் மழை பொழியும் அகத்தீஸ்வரர்
» சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum