தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கூந்தல் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு

Go down

கூந்தல் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு Empty கூந்தல் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு

Post  meenu Fri Mar 01, 2013 12:57 pm

பெண்களுக்கு ஏற்படும் டென்ஷன்களில் இரண்டு முக்கியமானது. ஒன்று அவர்களின் முகம் பற்றிய கவலை. பருக்கள், எண்ணை வடிதல் இவற்றை பற்றிய சிந்தனை. இரண்டாவது தலை முடியை பற்றி – முடி உதிர்வது, பொடுகு அரிப்பு, பேன் இவற்றைப்பற்றிய கவலை. முட்டிக்கால் வரை தொங்கும் முடி, ஒரே வருடத்தில் எலி வால் போல் ஆகிவிட்டதே என்று பெண்கள் அதிகமாக கவலைப்பட்டால் இன்னும் முடி உதிர்வது அதிகமாகும்.
நமது இலக்கியங்களிலும் கூந்தல் அழகின் வசீகரத்தைபற்றி வர்ணணைகளை காணலாம்.
இந்திய பெண்மணிகளுக்கு, குறிப்பாக தென்னிந்தியருக்கு, அதிலும் குறிப்பாக கேரள நங்கைகளுக்கு, கூந்தல் அழகு, அதன் பராமரிப்பு சிறந்து காணப்படுகிறது. இதனால் மேலை நாட்டவர்களை விட, நம் தேசத்துப் பெண்களின் கூந்தல் அழகு சிறப்பாக இருக்கிறது.
கூந்தல் பராமரிப்புக்கு சில யோசனைகள்
திடமான, அடர்த்தியான கூந்தலுக்கு முதல் தேவை சரியான, சத்துள்ள உணவு. கூந்தலுக்கு உகந்த உணவுகளைப் பற்றி, தனியாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஆயுர்வேதத்தில் கூந்தல் பராமரிப்புக்கென பல மூலிகைகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேத தைலங்கள், நல்ல பலன்களை தரும். சிலவற்றை வீட்டிலேயே தயாரிக்கலாம். இவற்றை பற்றிய விவரங்களும் தனியாக கொடுக்கப்பட்டிருகின்றன. இந்த தைலங்களில் கூந்தலுக்கேற்ற மூலிகைகள் மற்றுமன்றி, மன உளைச்சல், மனோ ரீதியான பாதிப்புகளுக்கும் மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன.
ரசாயனங்கள் கலந்த கூந்தல் எண்ணை போன்றவற்றை தவிர்க்கவும். இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளே நல்லவை. வாரம் ஒரு முறையாவது எண்ணை தேய்த்துக் குளித்தல் நல்லது.
கூந்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் – சீப்பு, துவாலை, முடிப்ரஸ்கள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும். வாரம் இரு முறை சீப்பையெல்லாம் கழுவ வேண்டும்.
தலையை கைவிரல்களின் நுனிகளால் மசாஜ் செய்யவும் 15 நிமிடங்களுக்கு.
முடியை ப்ரஷ் செய்யும்முறை – காலை 5 நிமிடம், மாலை 5 நிமிடம் பிரஷ் செய்யவும்.
குளித்த பின், கூந்தலை இயற்கையாக காயவிடுங்கள். ஈரக்கூந்தலில் வார வேண்டாம். ஈரமான முடி பலவீனமாக இருக்கும். அப்போது வாரினால் முடி உடையும். ஹேர் டிரையர்கள் சூட்டை அதிகமாக்கும்.
முடியில் சிக்கு ஏற்படாமல், வாரி வரவும்.
வாசனை தேங்காய் எண்ணையில், ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுவதால் வீட்டில் தயாரிக்கப்படும் தைலங்களே நல்லது.
தலை, உடலில் எண்ணை தேய்த்து குளிப்பது இவற்றை விட்டுவிடாமல் செய்து வரவும். தைல எண்ணையை உபயோகிக்கும் போது முடி வேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டும்.
ஆறு மாதத்திற்கொருமுறை வயிற்றுப்பூச்சிகளை ஒழிக்கும் மருந்தை சாப்பிட்டுவரவும். (டாக்டரை கேட்டு)
உடலின் நோய்தடுப்பு சக்தியை அதிகரிக்க சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்.
தலை வாரும் முறைகள்
பெண்கள் ஒருவருக்கொருவர் தலை வாரி விடுவது நமது இல்லங்களில் காணும் தினசரி நிகழ்ச்சி. இது இப்போது அதிகமாக நடப்பதில்லை.
முதலில் நல்ல சீப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். இடைவெளி விட்டு அமைந்த சீப்புகள் பயன்படுத்தினால் முடிக்கு சேதம் ஏற்படாது. அகன்ற பற்கள் உடைய சீப்பு நல்லது.

கூந்தல் ஈரமாக இருக்கும் போது தலைவாரக்கூடாது. ஈரமான கூந்தல் பலவீனமானது. வாரினால் உடைந்து போகும்.
உலர்ந்த வரண்ட கூந்தல் உள்ளவர்கள் அடிக்கடி கூந்தலை சீவிக் கொள்ள வேண்டும் சீப்பை அழுத்தி, சுரண்டக்கூடாது.
பொதுவாகவே அடிக்கடி கூந்தலை சீப்பினாலோ/ப்ரஷினாலோ சீவினால் செபாஸியஸ் சுரப்பிகள் தூண்டப்பட்டு, முடி வேர்களுக்கு எண்ணை சேர்ந்து கூந்தல் எண்ணையால் பளபளக்கும்.
சீப்பானாலும், பிரஷ்ஆனாலும், முடி படிந்துள்ள திசையிலே தான் வார வேண்டும். எதிர் திசையாக சீவக் கூடாது.
மற்றவர்கள் உபயோகித்த சீப்பை உபயோகிக்காதீர்கள்.
கூந்தலை மேல் நோக்கி வாரி விட்டமின் கெட்டியாக இழுத்து கட்டினால் நெற்றி வழுக்கை ஏற்படலாம்.
மென்மையான பிரஷ் உபயோகிப்பது, சீப்பால் கூந்தலை வாருவதை விட நல்லது. ஆனால் கடினமான பிரஷ், அதுவும் நைலான் கூர்ச்சங்கள் இருந்தால், சீப்பே நல்லது
கூந்தல் பராமரிப்புக்கு ஷாம்பூவை விட சிகைக்காய் சீயக்காய், சீக்காய் நல்லது. இத்துடன் வேறு சில மூலிகைப் பொருட்களை சேர்த்து வைத்துக் கொண்டால், அவ்வவ்போது தலைக்கு உபயோகிக்கலாம்.
சிகைக்காய் – 600 கிராம்
கிச்சலிக்கிழங்கு – 60 கிராம்
அரிசி – 100 கிராம்
உலர்ந்த வேப்பிலை – 100 கிராம்
புங்கங்காய் – 100 கிராம்
எலுமிச்சை பழத்தோல் (காய வைத்தது) – 100 கிராம்
இவற்றை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இத்துடன் செம்பருத்தி இலையை உலர வைத்து அரைத்து, சேர்த்துக் கொண்டால் ஷாம்பூ போல் நுரை வரும்.
எண்ணை குளியல்
தமிழக பெண்கள் எண்ணைகுளியலுக்கு நல்லெண்ணை தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தலைக்கு தேய்க்குமுன் எண்ணையை சிறிது சூடுபடுத்த வேண்டும். சூடான ஆயில் மயிர்க்கால்களுள் எளிதாக செல்லும். ஒரு மணி நேரமாவது எண்ணை ஊற வேண்டும்.
நம் நாட்டவருக்கு, நல்லெண்ணையும், தேங்காய் எண்ணையும் தான் தலைக்கு தேய்த்துக் குளிக்க உபயோகப்படுகின்றன. பாதாம் எண்ணை, ஆலிவ் எண்ணை இவற்றையும் பயன்படுத்தலாம்.
லேசாக காய்ச்சிய எண்ணையுடன், மிளகு, ஓமம், சேர்க்ப்படுகிறது. இதனால், சளி பிடிக்காது. தவிர மிளகாய், இஞ்சி, வெந்தயம், கொம்பரக்கு, வெற்றிலை கொம்பரக்கு உடல் காங்கையை குறைக்கும். ஓமமும், வெந்தயமும், மிளகும் உடல் வலியை போக்கும். இஞ்சியும், வெற்றிலையும் சளி கட்டாமல் காக்கும். இவற்றில் ஏதாவது ஒன்றைப் போட்டு காய்ச்சி கொள்ளலாம்.
தலைமுடி பாதிப்பு உள்ளவர்கள் (பொடுகு, அரிப்பு) தூர்பாதி தைலம் தினேசவல்லி தைலம், போன்றவற்றை தேய்த்துக் குளிக்கலாம்.
முடி நன்கு வளர தேவையானவை
நல்ல உடல் ஆரோக்கியம்.
ஊட்டச்சத்து, சமச்சீர் உணவு, புரதக்குறைபாடில்லாமல் இருக்க வேண்டும்.
சுத்தமான முடி. எண்ணை மசாஜ் எண்ணை குளியல்.
நல்ல உறக்கம்.
உங்கள் கூந்தலுக்குகேற்ற நல்ல மூலிகை தைலம்.
மனமகிழ்ச்சி, கவலையின்மை.
மேலும் சில ஷாம்பூகள்

வெந்தயம் – சிகைக்காய் ஷாம்பூ
வெந்தயம் – 250 கிராம்
சிகைக்காய் – 1 கிலோ
ஆரஞ்சு (அ) எலுமிச்சைப்பழத்தோல் – ஒரு கைப்பிடி
இவற்றை பொடித்து வைத்துக் கொள்ளவும். உபயோகிப்பதற்கு 2 மணி நேர முன்பு. ஒரு கப் தண்ணீரில், இந்தப் பொடியை நனைத்து வைக்கவும்.
வேப்பிலை ஷாம்பூ
கடலை மாவு – 1/2 கிலோ
சந்தனப்பொடி – 125 கிராம்
வேப்பிலைப்பொடி – 3 கப்
சிகைக்காய்பொடி – 1/2 கிலோ
இவற்றை சலித்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது 2 மேஜைக்கரண்டி எடுத்து ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
கூந்தலை அலசும் முறைகள்
கூந்தல் பராமரிப்பில், கூந்தலில் எண்ணை தடவும் முறை, வாரும் முறை இவற்றை போலவே கூந்தலை அலசும் முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். சாதாரண உலர்ந்த கூந்தலை அலசுவதற்கு முன் இரவில் ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணையால் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனால் முடி ஃபாலிக்குகள் பலம் பெறும். பிறகு காலையில் வெது வெதுப்பான நீரில் கூந்தலை அலசிவிட்டு, சுடுநீரில் நனைத்த துவாலையை தலையில் கட்டிக் கொள்ளவும். 5-10 நிமிடம் கழித்து துவாலையை எடுத்துவிடவும்.
உங்களின் கூந்தல் எண்ணை பசை அதிகம் உள்ளதாக இருந்தால் அடிக்கடி தண்ணீரால் அலச வேண்டும். நல்ல ஷாம்பூக்களை பயன்படுத்தலாம். ஷாம்பூவை எப்பொழுதும் நேரடியாக தலையில் தடவ வேண்டாம். தேவையான அளவை உள்ளங்கையில் எடுத்துக் கொண்டு, இருகைகளால் தேய்த்து, கூந்தலில் தடவி, விரல்களால் மசாஜ் செய்யவும். இதனால் கூந்தல் நன்றாக சுத்தமடையும்.
கூந்தலை அலசிய பிறகு, ஈரமான தலையை, துவாலையால் துவட்ட வேண்டாம். அழுத்தி தேய்க்க வேண்டாம். உலர்ந்த துவாலையால் நன்றாக சுற்றி விடவும். முன்பே சொன்னது போல், ஈரமான முடி பலவீனமான முடி. அழுத்தினால் நுனி உடைந்து விடும். துவாலையால் சுற்றினால் ஈரம் உறிஞ்சப்படும்.
கூடியவரை ஹேர் ட்ரையர் உபயோகிப்பது தவிர்க்கவும். முடியாவிட்டால் அதை குறைந்த வேகத்தில், முடிக்கு 6 அங்குலம் தள்ளி வைத்து உபயோகிக்கவும்.
உலர்ந்த பின் கூந்தலை பெரிய பல் உள்ள சீப்பினால் வாரி, சிக்கெடுக்கவும்.
முட்டையின் பயன்கள்
உலர்ந்த கூந்தலுக்கு போஷாக்கு அளிப்பதற்கு முட்டை சிறந்த பொருள். முட்டையின் வெண் கருவை ஷாம்பூவுடன் கலந்து கூந்தலில் தடவி, அரைமணி நேரம் கழித்து அலசவும்.
எண்ணை பசை உள்ள கூந்தலுக்கு முட்டையின் வெண் கருவை தடவி, அரைமணி கழித்து ஷாம்பூ போட்டு அலசலாம்.
கடைசி அலசலுக்கு எலுமிச்சை சாறு சேர்ந்த தேயிலைத் தண்ணீரை பயன்படுத்தலாம். சூடான தேயிலை டிகாக்ஷன் குளிர வைத்து, பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து, தலையை அலசலாம்.
நெற்றிக் கண்ணை காட்டினாலும் குற்றம் குற்றமே
சிறந்த சிவபக்தனான வங்கிய சூடாமணி பாண்டியனின் ஆபசியில், ஒரு சிறந்த நந்தவனம் ஒன்று அமைக்கப்பட்டது. ஒரு சமயத்தில் அங்கு தனது மனைவியுடன் அரசன் தங்கியிருக்க, நறுமணம் மிகுந்த தென்றல் வீசியது. அதை நுகர்ந்த மன்னன், இந்த நறுமணம் சோலையிலிருந்து வீசும் மணம் என்று யோசித்தான். தனது மனைவி ராணியின் கூந்தலின் நறுமணத்தாலும், எழிலாலும் கவரப்பட்ட, மன்னன், இயற்கையானதா அல்லது செயற்கையானதா என்று சந்தேகப்பட்டான். அந்த சந்தேகத்தை தெளியவைக்கும் பாடலைக் கூறும் புலவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என்று அறிவித்தான்.
சிறந்த சிவபக்தரான ஏழைப்புலவன் தருமிக்கு உதவ, சிவபெருமானே அவருக்கு பாடலை எழுதிக் கொடுக்கிறார். அந்த பாடல்
கொங்கு தேர் வாழ்க்கையஞ்சிறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியியற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீயறியும் பூவே.
இந்த பாடலின் பொருள் – பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு. இந்த கருத்து தனது கருத்துடன் ஒத்திருந்தால், மன்னன் தருமிக்கு 1000 பொற்காசு வழங்க உத்தரவிட்டான். அதற்குள் பரிசை கொடுக்க விடாமல், நக்கீரர் தடுக்கிறார் பாடலில் பொருள் குற்றம் உள்ளது என்கிறார். சிவபெருமானே தருமியுடன் நேரில் அவைக்கு வந்து கேட்க, நக்கீரர் வாடுகிறார். பெண்களின் கூந்தலுக்கு, வாசனாதி திரவியங்கள், தைலம் மற்றும் அவர்கள் சூடும் மலர்களால் தான் நறுமணம் வீசுகிறது, இயற்கையாக அல்ல என்பது அவர் கூற்று. சிவபெருமான் தெய்வீக மகளிர்களுக்கும் அதுவும் நக்கீரர் வணங்கும் பார்வதிதேவிக்கு கூடவா இயற்கை மணம் கிடையாது என்கிறாயா என்று நக்கீரரை சாடுகிறார். நக்கீரர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். சினமடைந்த சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணை திறந்து காட்ட நெற்றிக்கண்ணை காட்டினாலும் குற்றம் குற்றமே எனும் புகழ்பெற்ற பதிலை நக்கீரர் கூறுகிறார். நெற்றிக் கண்ணிலிருந்து வந்த தீயினால் சுடப்பட்டு, வெப்பம் தாங்காமல் பொற்றாமரைக் குளத்தில் ழூழ்கி மறைந்தார். பிறகு அரசன், புலவர்களால், வேண்டப்பட்டு, சிவபெருமான் பொற்றாமரைக் குளத்திலிருந்து நக்கீரனை மீட்கிறார். நக்கீரன் இறைவனை பணிந்து பல பதிகங்களை இயற்றினார். தருமிக்கும் 1000 பொற்காசுகள் கிடைத்தன.
முடியின் விலை
உலகத்திலேயே பணக்கார கோயில் நமது திருமலை – திருப்பதி என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. சாதாரண நாட்களில் தினம் 60,000 பேரும், வைகுண்டஏகாதேசி போன்ற விசேஷ நாட்களில் 2 லட்சம் பேரும் வந்து தரிசிக்கும் கோயில் திருப்பதி. இங்கு இறைவனுக்கு முடிதானம் செய்வது பிரசித்தமான வேண்டுதல். இந்த வேண்டுதலுக்கு காரணம்.
ஒரு முறை மகாலட்சுமியுடன் நேர்ந்த சிறு பிணக்கால், மகாவிஷ்ணு ஒரு கரையான் புற்றில் தங்கியிருந்தார். சிவபெருமான், பிரம்மா இவர்களின் உதவியால், தினமும் பசு ஒன்று வந்து புற்றில் மேல் பாலை சுரந்து விட்டு செல்லும். இந்த பசு அரண்மனை பசுவானதால், பசு மேய்ப்பவர், இதை பார்த்த புற்றை கோடாரியால் வெட்டிவிடுகிறார். மகாவிஷ்ணுவின் தலையில் காயம்பட்டு ரத்தம் வர, பார்வதி தேவி வந்து தனது கூந்தலின் ஒரு பாகத்தை வெட்டி, பெருமானின் காயத்தை மூடுகிறார். இதிலிருந்து, காயம்பட்டு பெருமாளுக்கு முடி காணிக்கை வழங்குவது வழக்கமாயிற்று. இந்த இலவச முடி வெட்டுதலுக்கு 1000 முடிவெட்டுபவர்கள், 3 ஷிப்டில் 24 மணிநேரமும் கோயிலில் இருக்கின்றனர். இந்திய முடி, ஜரோப்பியர்களின் முடியை விட வலுவானது. சவுரி தயாரிப்புக்கு ஏற்றது. வெட்டப்பட்ட முடி, ஹாங்காங், ஜப்பான், மலேசியா, அமெரிக்கா, ஜரோப்பியா தேசங்களுக்கு ஏற்றுமதி ஆகிறது. இதில் கிடைக்கும் வருட வருமானம் 1 மில்லியன் ரூபாய்கள் என்று கூறப்படுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum