தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்

Go down

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் Empty திருப்பதி வெங்கடாசலபதி கோயில்

Post  meenu Mon Jan 14, 2013 2:29 pm

திருப்பதி ஏழுமலையான் கோவில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணி வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.

முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கி விட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்த நேரத்தில் ``கவுசல்யா சுப்ரஜா ராம...'' என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.

சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க வெங்கடாசலபதி அருகில் போக சீனிவாச மூர்த்தி என்பவரை கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல்நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலில் இருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமர வைப்பர்.

சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணையும் படைத்து ``நவநீத ஹாரத்தி'' எனப்படும் தீபாராதனை செய்யப்படும். ``விஸ்வரூப தரிசனம்'' என்றும் இதை சொல்வதுண்டு. இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ. 120. மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

திருப்பதி மலையில் உள்ள ஆகாயகங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்து சேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். (பிரம்மோற்சவ காலத்தில் மட்டும் யானை மீது தீர்த்தம் எடுத்து வரப்படும்).

ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணி (ஸ்பூன் போனறது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள மூலவருக்கு பதிலாக அருகில் உள்ள போகசீனிவாத மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும்.

அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்து நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.

இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும். காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அம்சமான திருப்பதி பாலாஜியை காண கண் கோடி வேண்டும். பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. நம் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், சாத்தனார் மணிமேகலை போன்ற இயேசு பிறப்பதற்கு முந்தைய கால இலக்கியங்களிலேயே திருப்பதி பற்றிய குறிப்புகள் உள்ளன.

அவற்றில் திருப்பதியின் அப்போதைய பெயரான `திருவேங்கடம்' என குறிப்பிடப்பட்டிருக்கும். இன்று எத்தனையோ திருக்கோயில்கள் இருக்கும் போது திருப்பதியில் மட்டும் ஏன் பக்தர்கள் கூட்டம் இப்படி அலைமோதுகிறது? காரணம் இல்லாமல் இல்லை. இந்த சேஷத்திரத்தில் மகாவிஷ்ணு நடத்திக் காட்டிய மகிமைகள் பல. ஒருநாள் இருநாளில் அல்ல. பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டு நடத்திய `நாடகம்' தான் திருப்பதியில் வெங்கடேஸ்வர பெருமாள் குடிக்கொள்ள காரணமாயிற்று,

ஸ்தல புராணம் :

கங்கை நதிக்கரையில் காஸ்யப முனிவரின் தலைமையில் முனிவர்கள் சிலர் யாகம் செய்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நாரதர் இந்த யாகம் யாருடைய நன்மைக்காக நடத்தப்படுகிறது என கேட்டார். ஆனால் அங்கிருந்த முனிவர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. அதனால் பிருகு முனிவரிடம் உதவி கேட்டு சென்றனர்.

பிருகு முனிவரின் உள்ளங்காலில் ஒரு கண் இருந்ததால் அவருக்கு மற்ற முனிவர்களை விட ஞானம் சற்று அதிகம் இருந்தது. அவர் இதற்கு ஒரு தீர்வு காண நினைத்து பிரம்மனை தரிசிக்க சத்யலோகத்திற்கு சென்றார். அங்கே பிரம்மதேவர் சரஸ்வதி தேவியின் துணையுடன் தனது நான்கு முகங்களாலும் ஸ்ரீமன் நாராயணைப் போற்றி நான்கு வேதங்கள் ஓதிக் கொண்டிருந்தார்.

அவர் பிருகு முனிவர் வந்ததை கவனிக்கவே இல்லை. சற்று நேரம் பொறுத்துப் பார்த்த முனிவர் இவர் வழிபாட்டிற்கு உகந்தவர் இல்லை என முடிவு செய்து சிவப்பெருமானை தரிசிக்க கைலாசம் சென்றார். ஆனால் சிவன் பார்வதிதேவியுடன் ஏதோ முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததால் அவரும் முனிவரை கண்டுக் கொள்ளவில்லை.

முனிவரைக் கண்ட பார்வதிதேவி சிவனிடம் கூற அவரோ தனது முக்கிய ஆலோசனையின் போது முனிவர் குறுக்கிட்டதைக் விரும்பாததால் அவரை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலானார். அதனால் ஆத்திரமுற்ற பிருகு முனிவர் சிவப்பெருமானுக்கு சாபமிட்டு அங்கிருந்து நகர்ந்தார். பின்னர் மகாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் வந்தார்.

ஆனால் ஆதிசேஷன் குடை விரிக்க, மகாலட்சுமி காலடியில் அமர்ந்து பணிவிடை செய்ய ஆனந்த சயனத்தில் இருந்ததால் அவரும் முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. அதனால் ஆத்திரத்தில் மதியிழந்த பிருகு முனிவர் மகாலட்சுமியின் உறைவிடமான மகாவிஷ்ணுவின் நெஞ்சில் எட்டி உதைத்தார்.

முனிவரின் கோபத்தை தணிக்க நினைத்த பெருமாள் எட்டி உதைத்த காலை சட்டென பிடித்து பாதங்களை மென்மையாக அழுத்திவிட்டார். அந்த இதத்தில் முனிவரின் கோபம் தணிந்தது. அதே சமயம் மகாவிஷ்ணு பிருகு முனிவரின் காலில் இருந்த கண்ணை பறித்துவிட்டார். பாதத்தில் இருந்த கண் தான் அவருக்கு இத்தனை அகங்காரத்தை தந்தது.

தனது தவற்றை உணர்ந்த முனிவர் விஷ்ணுவிடம் மன்னிப்புக் கோரிவிட்டு மும்மூர்த்திகளில் சிறந்தவர் இவரே என முடிவு செய்தார். இருப்பினும், தனது மணவாளன் தன்னை எட்டி உதைத்த முனிவரின் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்டதை விரும்பாத ஸ்ரீதேவி அவரிடம் கோபித்துக் கொண்டு சென்று இன்று மகாராஷ்டிராவில் உள்ள கோலாபூர் எனும் இடத்திற்கு சென்றுவிட்டார்.

அவரைத் தேடிப் பிடித்து வருவதற்காக பூலோகம் வந்த மகாவிஷ்ணு வேங்கடமலையில் உள்ள புஷ்கரணியின் தெற்கு கரையில் ஒரு புளிய மரத்தடியில் எறும்பு புற்றின் மேல் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார். இதில் மனமுருகிய பிரம்மரும், ஈசனும் பெருமாளுக்கு உதவும் நோக்கோடு பசு மற்றும் கன்றுக் குட்டியின் வடிவெடுத்து அவர்களும் பூலோகம் வந்தனர்.

இத்தனை சங்கதிகளையும் சூர்ய பகவான் மூலம் அறிந்த மகாலட்சுமி அவரது அறிவுரைப்படி மாடு மேய்க்கும் பெண்ணாக உருக்கொண்டு வந்து பசுவையும் கன்றையும் சோழ மன்னனுக்கு விற்றார். அவற்றை வாங்கிய சோழ மன்னனின் பணியாட்கள் அவற்றை வேங்கடமலைக்கு மேய அனுப்புவார்கள்.

அங்கே ஒரு எறும்பு புற்றில் மகாவிஷ்ணுவை கண்ட பசு தாமாகவே அங்கே பால்சுரக்க ஆரம்பித்தது. அதை ஏற்று மகாவிஷ்ணுவும் பசியாறி வந்தார். இதற்கிடையே அரண்மனையில் பசுக்கள் பால் தருவது இல்லை என்பதை கவனித்த மன்னனின் வேலையாள் பசுவை பின் தொடர்ந்து வந்தான்.

அது ஒரு இடத்தில் தானாகவே பால் சுரந்து பாலை வீணடிப்பதை கவனித்த அவன் பசுவின் மீது தன் கோடாலியை வீசியெறிய அது பசு மீது பட்டுவிடக் கூடாது என மகாவிஷ்ணு குறுக்கேத் தோன்றி அடியை தான் வாங்கினார். தான் வீசிய ஆயுதம் மகாவிஷ்ணுவை தாக்கி அதனால் ரத்தம் வருவதைக் கண்ட வேலையாள் அதிர்ச்சியில் உயிரிழந்தான். ரத்தக் கறையுடன் பசு மாடு வருவதைக் கண்ட சோழ ராஜா என்ன நடந்தது என அறிய அதை பின் தொடர்ந்தான்.

அஙகே எறும்பு புற்று ஒன்றின் அருகே தனது வேலையாள் இறந்து கிடப்பதைக் கண்டு எதுமறியாமல் விழித்தான். அப்பொழுது அவனுக்கு காட்சியளித்த விஷ்ணு அவனது வேலைக்காரன் செய்த குற்றத்திற்கு மன்னனுக்கு சாபமிட்டார். ஆனால் மன்னன் மீது தவறேதுமில்லாக் காரணத்தால் அவன் அடுத்த ஜென்மத்தில் ஆகாய ராஜாவாக பிறப்பானென்றும் தனக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடக்கும் சமயம் அவனது சாபம் தீரும் எனவும் ஆசி வழங்கினார்.

ஸ்ரீ வராகசுவாமி ஆலயம் :

இந்த சம்பவங்கள் நடந்த காலக்கட்டத்தில் திருப்பதி மலை வராகசுவாமியின் இருப்பிடமாக ஆதி வராக ஷேத்திரமாக இருந்தது. சோழ ராஜாவிற்கு ஆசி வழங்கி அனுப்பிய மகாவிஷ்ணு ஸ்ரீனிவாசன் என்ற பெயருடன் தனக்கு ஒரு இருப்பிடம் வேண்டி வராக சுவாமியை சந்தித்தார்.

அவரும் மகிழ்ந்து இடமளித்தார். அதற்கு நன்றிக் கூறும் விதமாகத் தான் இன்றும் திருப்பதிக்கு செல்பவர்கள் முதலில் புஷ்கரணியில் குளித்து வராக சுவாமியை தரிசித்து பூஜை, நைவேத்தியங்களை முதலில் அவருக்கு செய்துவிட்டு பிறகு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க வேண்டும் என ஒரு ஐதீகம் உள்ளது.

பத்மாவதி தாயார் :

இது அனைத்தும் ஒரு ஜென்மத்து கதை. இக்கதை சோழ மன்னனின் அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிறது. அடுத்த பிறவியில் அச்சோழ மன்னன் ஆகாச ராஜாவாக பிறந்தான். பிறந்து வளர்ந்து அனைத்து வளங்களும் பெற்று திகழ்ந்த அவனுக்கு பிள்ளைப் பேறு இல்லை அதனால் யாகம் செய்ய எண்ணிய அவன் நிலத்தை உழுதப் பொழுது அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது.

அதை அருகில் சென்று பார்த்தப்போது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரிந்தது. அப்போது அதை எடுத்து வளர்த்தால் சகல சவுபாக்கியம் உண்டாகும் என அசரீரிக் கேட்டது. தாமரை மலரில் தோன்றியதால் பத்மாவதி எனப் பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தான். இதனிடையே சீனிவாசன் என்ற பெயரோடு வாழ்ந்து வந்த மகாவிஷ்ணு பத்மாவதியைக் கண்டார்.

உடனே பெற்ற தாய் போல தன்னை கவனித்து வந்த வகுலாதேவியிடம் சென்று பூர்வஜென்ம கதைகளைக் கூறி பத்மாவதியை தான் மணக்க வேண்டிய அவசியத்தைக் கூறுகிறார். அதே சமயம் ஆகாச ராஜாவும் அவனது மனைவியும் கூட தங்களது மகள் வேங்கட மலையில் வசித்து வரும் சீனிவாசனை மணக்க விரும்புவதை அறிகிறார்கள்.

செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் இத்திருமணச் செலவுகளுக்காக சீனிவாசனுக்கு கடன் தருகிறார். இரு வீட்டார் சம்மதத்துடன் தேவர்களும், சிவன், பிரம்மா புடைசூழ சீனிவாசன், பத்மாவதி திருமணம் நடைபெறுகிறது. இக்கதையும், இத்திருமணமும் நடைபெற்ற இடம் தான் திருவேங்கடமலை (திருப்பதி திருமலை).

அதனால் இன்றும் திருமலையில் தினமும் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி இப்போதும் பிரம்மோற்சவம் நடக்கும் 9 நாட்களும், மஞ்சள், குங்குமம் மற்றும் சேலை திருப்பதியில் இருந்து திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாருக்கு எடுத்து செல்லப்படுகிறது.

கோவில் வரலாறு :

தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது. அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர். ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசுக் காலத்தில் வந்தவை. கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.

1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது. 1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.

கோவில் அமைப்பு :

திருப்பதி திருமலையின் மலை கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் இருக்கிறது திருமலை ஏழுமலைகளைக் கொண்டது. ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் வீற்றிருப்பது ஏழாவது மலையான வெங்கடாத்ரியின் உச்சியில், மற்ற மலைகளின் பெயர்கள், சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, ஆகும். ஏழாவது மலை தான் வெங்கடாத்திரி. இந்த மலைகளின் மொத்த பரப்பளவு 10.33 சதுர மைல்கள்.

திருப்பதியில் மொட்டையடிப்பது ஏன்?

மகாவிஷ்ணு மாடு மேய்பபவனால் தாக்கப்பட்ட போது அவரது தலையில் இருந்த கேசம் உதிர்ந்து வழுக்கை விழுந்தது. பின்னர் அங்கே முடி வளரவேயில்லை. அதை ஒருமுறை கவனித்த கர்ந்தர்வ இளவசரசி நீலா தேவி இத்தனை அழகான முகத்தில் வழுக்கை ஒரு குறையாக இருக்கிறதே' என வருந்தி தனது கூந்தலை வெட்டி விஷ்ணுவின் வழுக்கையில் ஒட்டி முடி வளர செய்தாள். கண் விழித்து பார்த்த மகா விஷ்ணு அவளது பக்தியையும் தியாகத்தையும் கண்டு மெச்சி இனி தன்னை காண வரும் பக்தர்கள் தரும் முடி காணிக்கைகள் அனைத்து நீலா தேவியையே சேரும் என வரமளித்தார். அவளது பெயரில் இருக்கும் மலைதான் நீலாத்திரி.

சேவைகள் மற்றும் பூஜைகள்:

நாம் ஒரு பேச்சு வழக்கிற்கு நித்ய கல்யாணம் பூரணத் தோரணம் என்போம். அது எங்கு சரியாகப் பொருந்துகிறதோ இல்லையோ திருப்பதிக்கு மிகச் சரியாகப் பொருந்தும். சினிவாசப் பெருமாளுக்கும்,பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த ஸ்தலம் என்பதால் இங்கு தினமும் கல்யாண உற்சவம் நடைப்பெறுகிறது. மேலும் டோலோற்சவம், வசந்தோற்சவம்,அர்ச்சித பிரமோற்சவம் என பல உற்சவங்கள் தினசரி நடைபெறுகிறது.

சேவைகளில் சுப்பாத தரிசனம் அதிகாலை 2 மணிக்கு தினந்தோறும் நடைபெறுகிறது. தோமால சேவை மற்றும் அர்ச்சனைகள் செவ்வாய், புதன், வியாழன்களில் மட்டும் நடக்கிறது. உற்சவங்கள்:திருப்பதியில் தினமுமே உற்சவம்தான் என்றாலும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், தமிழில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிக முக்கியமானது.


9-நாட்கள் நடைபெறும் இந்த உற்சவம் முதன் முதலில் படைப்பு கடவுள் பிரம்மாவால் கொண்டாடப்பட்டது. தான் படைக்கும் உயிர்களை வெங்கடேசப்பெருமாள் சிறப்பாகப்பாதுகாப்பதற்கு நன்றி கூறும் விதமாக பிரம்மர் உற்சவம் நடத்தினார். அது தான் இன்று அவரது பெயராலேயே பிரமோற்சவம் என அழைக்கப்படுகிறது.

பிரம்மோற்சவம் முதல் நாள்:

துவஜரோகணம்: இது முதல் நாள் காலையில் நடைப்பெறும் வைபவம். இங்குள்ள துவஜ ஸ்தம்பத்தில் கருடன் உருவம் பதித்த கொடியேற்றப்படும். காரணம் விஷ்ணுவின் வாகனமாகிய கருடன் தேவலோகம் சென்று அனைத்து தேவர்களையும் பிரம்மோற்சவத்திற்கு அழைத்து வர செல்கிறார் என்பதை குறிக்கத்தான் இப்படி செய்யப்படுகிறது.

பெத்த சேஷ வாகனம்: முதல் நாள் மாலை எம் பெருமான் வீதியுலா நடைபெறும்.இதில் நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் வாகனமாக இருப்பார். இது பெரிய நாகம் என்பதால் 7 தலைகள் கொண்ட சேஷ வாகனம் இது. பிரம்மோற்சவம்

2-ம் நாள்:

சின்ன சேஷ வாகனம்: இரண்டாம் நாள் காலை நடைபெறும் வாகனம் இது. இதில் வெங்கடேசப்பெருமாளை தாங்கியிருப்பது வாசுகி என்ற நாகம். ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் நாகங்களில் நான் வாசுகியாக இருப்பேன் என்பாரே! அதே வாசுகி தான் இது. ஹம்ச வாகனம்: ஹம்சம் என்றால் அன்னம். அன்னம் நல்லது கெட்டதைப் பிரித்தெடுக்கும் வல்லமை கொண்டது. பிரம்மோற்சவம்

3-ம் நாள்:

சிம்ம வாகனம்: 3-ம் நாள் காலை சுவாமி சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடக்கும். விலங்குகளில் வலியது சிங்கம். ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் விலங்குகளில் நான் சிம்மமாக இருப்பேன் என்பார். பாதி மனிதன், பாதி சிங்கம் உருவம் தான் நரசிம்ம அவதாரம்.

முத்யால பல்லக்கி வாகனம்: 3-ம் நாள் மாலை எம்பெருமான் தம் மனைவியர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீதியுலா வர பயன்படுத்துவது முத்து பல்லக்கு வாகனம். பிரம்மோற்சவம்

4-ம் நாள்:

கல்பவிருஷ வாகனம்: 4-ம் நாள் காலை கல்ப விருஷ வாகனப் புறப்பாடு. மக்களுக்கு அனைத்து வரங்களையும்,வளங்களையும் அள்ளித்தருபவர் ஸ்ரீமன் நாராயணனே என்பதை குறிக்கும் வாகனம் இது.

சர்வ பூபாள வாகனம்: 4-ம் மாலைபுறப்பாட்டின் வாகனம் இது. வெங்கடேசப் பெருமாளே கடவுளுக்கெல்லாம் கடவுள் என்பதன் அறிகுறி. பிரம்மோற்சவம்

5-ம் நாள்:

மோகினி அலங்காரம்: 5-ம் நாள் காலையில் எம் பெருமான் மோகினி அலங்காரத்தில் வலம் வருவார். அசுரர்களிடமிருந்து தேவர்களை காக்க மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் பெண் அவதாரம் மோகினி அவதாரம் ஒன்று தான் எனக் கூறப்படுகிறது.

கருடவாகனம்: மகாவிஷ்ணுவின் வாகனம் கருடன் என்பது அனைவரும் அறிந்ததே. மற்ற நாட்களில் மற்ற வாகனங்களில் வலம் வந்தாலும் தனது சொந்த வாகனத்தை விட்டு விட முடியுமா? அதனால் 5-ம் நாள் மாலை கருட வாகனத்தில் பவனி வருகிறார் ஸ்ரீனிவாச பெருமாள். பிரமோற்சவம்

6-ம் நாள்:

அனுமந்த வாகனம்: திரேதா யுகத்தில் மகாவிஷ்ணுவின் ராமாவதாரத்தின் போது அனுமார் அவருக்கு செய்த உதவிகளை யாரால் மறக்க முடியும்? தன்னலமற்ற அந்த பெரிய பக்தருக்கான மரியாதைதான் 6-ம் நாள் காலை நடக்கும் அனுமந்த வாகனம்.

ஸ்வர்ண ரதோற்சவம், கஜ வாகனம்: கஜேந்திர மோட்சத்தில் யானை ஒன்றின் அபயக்குரல் கேட்டு உதவிக்கு ஒடிவந்த எம்பெருமான் ஸ்ரீமன்நாராயணனை 6-ம் நாள் மாலை தாங்கி வருகிறது யானை வாகனம். பிரம்மோற்சவம்

7-ம் நாள்:

சூர்ய பிரபை: சூரியன் மகாவிஷ்ணுவின் அம்சங்களில் ஒன்றாயிற்றே. சூர்ய நாராயணன் என்றே அழைக்கிறோமே! அது மட்டுமின்றி சூரியன் மகாவிஷ்ணுவின் கண்ணிலிருந்து தோன்றியது எனவும் ஒரு நம்பிக்கை உண்டு. இருப்பினும் உலகில் இருளைப் போக்கக்கூடிய கதிரவனுக்கு மரியாதை இல்லாமலா? அதனால் 7-ம் நாள் காலை சூர்ய பிரபை கொண்டாடப்படுகிறது.

சந்திர பிரபை: சூரியன் மகாவிஷ்ணுவின் கண்ணிலிருந்து தோன்றியது போல சந்திரன் மகாவிஷ்ணுவின் சிந்தனையிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. ஒரு நாளுக்கு பகலும், இரவும் எவ்வளவு முக்கியம் என்பதை குறிக்கும் வாகனம் சூரிய மற்றும் சந்திர பிரபை வாகனங்கள். பிரம்மோற்சவம்

8-ம் நாள்:

ரதோற்சவம்: 8-ம் நாள் காலை மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எம்பெருமான் தனது மனைவியாருடன் வலம் வருவார். இதை காண்போருக்கு மறுப்பிறப்பே கிடையாது என நம்பிக்கை.

அஸ்வ வாகனம்: 8-ம் நாள் மாலை பகவான் குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். குதிரைக்கும் பலமான முக்கியத்துவம் உண்டு. வெங்கடேசப் பெருமாள் அடுத்து எடுக்கப்போகும் கல்கி அவதாரத்திற்கு முன்னோட்டமாகவும், ஏற்கனவே எடுத்த ஹயக்ரீவ அவதாரத்தில் குதிரை முகத்துடன் அவதரித்ததை நினைவுகூறும் வகையிலும் அஸ்வ வாகனம் நடைபெறுகிறது.

பிரம்மோற்சவம் 9-ம் நாள்:

சக்ர ஸ்நானம்: 9-ம் நாள் காலை வராக சுவாமி ஆலயத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் விஷ்ணு ஏந்தியிருக்கும் ஆயுதமான சக்கரத்தை புஷ்கரணியில் முக்கி எடுப்பர். அதே சமயத்தில் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் முங்கி எழுவர். அதன் மூலம் பாபங்கள் அனைத்தும் விலகுவதாக நம்பப்படுகிறது. வெங்கடேஸ்வரா என்பதில் வென் என்றால் பாபம், கடா என்றால் அழிப்பவர்,ஈஸ்வரன் என பாபங்களை அழிக்கும் கடவுள் என்றுதானே அர்த்தம்.

துவஜரோகணம்: 9-ம் நாள் மாலை பிரம்மோற்சவம் முடிந்து விட்டதற்கு அறிகுறியாக கருடன் கொடி கீழிறக்கப்படும்.

போக்குவரத்து வசதி:

திருப்பதி சென்னையிலிருந்து 150 கி.மீ தொலைவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும் இந்த கோவிலுக்கு செல்ல பேருந்தும், ரெயில் வசதியும் உள்ளது.

எங்கே தங்குவது?

திருப்பதியில் ஏகப்பட்ட சத்திரங்கள் உள்ளன. ரூ.100 லிருந்து பல்வேறு கட்டணத்தில் அறைகள் கிடைக்கும் மேலும் திருமலையின் சுற்று வட்டாரத்தில் உள்ள கோயில்களுக்கு சென்று வர இலவச பேருந்து வசதிக்கூட இருக்கிறது. திருப்பதி சென்றால் அதன் சுற்றுப்புரத்தில் கணக்கிலடங்கா கோயில்கள் உள்ளன.

திருச்சானூரில் பத்மாவதி தாயார் கோயில் உள்ளது. இதுபோல ஏகப்பட்ட கோயில்கள் கொண்ட நகரம் திருப்பதி. திருப்பதிக்கு 35 கி.மீ தொலைவில் காளஹஸ்தி கோயில் உள்ளது. திருப்பதியில் ஸ்ரீனிவாசப்பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடமாதலால் திருமணமாகதவர்கள் சென்றால் உடனே திருமண கூடி வரும்.புது மண தம்பதிகள் தங்கள் மண வாழ்வு சீரும் சிறப்புமாக அமைய திருப்பதி சென்று வணங்கி வருகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum