தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பதி கோயில்

Go down

திருப்பதி கோயில் Empty திருப்பதி கோயில்

Post  meenu Mon Jan 14, 2013 1:38 pm

திருப்பதி ஆந்திர பிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் சந்திரகிரி தாலுகாவில் அமைந்துள்ளது.ஏழுமலையான் எழுந்தருளியிருக்கும் மலையைத்திருமலை என்றும் மலை அடிவாரத்திலுள்ள தலத்தைத்திருப்பதி என்றும் கூறுகின்றனர். இத்திருமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் 100 சதுர அடி பரப்பளவில் காணப்படுகிறது.

இம்மலை கிழக்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். திருமலை ஸ்ரீசைலம் எனும் தலத்தில் துவங்கி அகோபிலத்தில் தொடர்ந்து படர்ந்து திருமலையில் முடிகிறது.ஒரு பெரிய நாகபாம்பு தனது தலையை திருமலையில் பதித்து, வால்பகுதியை கிருஷ்ணா நதி வரைக்கும் நீட்டிப்படுத்திருப்பது போன்ற தோற்றத்தோடு காணப்படுகிறது.

இத்திருமலை கீழ்த்திருப்பதியிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் ஏழு மலைகளுக்கு அப்பால் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் உள்ள விநாயகரைத் தொழுது, தேங்காய் உடைத்து திருமலை பாதயாத்திரையைத் தொடங்க வேண்டும்.

அலிபிரியில் மிகக்கம்பீரமான தோற்றத்துடன் கூப்பிய திருக்கரங்களுடன் கூடிய கருடாழ்வாரின் நின்ற திருமேனியை முதலில் தரிசிக்கலாம். மலை அடிவாரத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் கபில தீர்த்தம் எனும் குளம் அமைந்துள்ளது. அங்கு ஒரு மலை அருவியும் உண்டு. அதன் பக்கம் ஒரு சிவன் கோவில் அமைந்துள்ளது.

இங்கிருந்து செங்குத்தான மலை மீது படிக்கட்டுக் ஏறி, காளி கோபுரம் எனும் மண்டபத்தை அடையவேண்டும். காளிகோபுரம் ஏறுவது சற்று கடினம். அதேபோல் ஆறாவது மலையில் அமைந்துள்ள முழங்கால் முடிச்சு என்பதும் ஏறுவதற்கு சற்று கடினமானதாகும். மலைகளைக்கடந்து நடந்து செல்லும் போது ஆங்காங்கே அடர்ந்த மரங்களையும் இளைப்பாறுவதற்கு மண்டபங்களையும் காணலாம்.

நடைபாதையில் கம்பீரமாக காட்சி தரும் கூப்பிய கரங்களுடன் கூடிய ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். 3 மணி நேரம் நடந்து செல்ல வேண்டியிருக்கும். ஏழு மலைகளைக்கடந்து செல்லும் போது ஏற்படும் களைப்பும், கஷ்டமும், திருமலையின் வைகுண்ட தோரணம் என்ற திருவாயிலைக் கண்டதும் மறைந்து விடும்.

திருமலையை அடைந்ததும் முதலில் காண்பது மொண்டி கோபுரம். இதன் வழியாக மற்றொரு கோபுர வாயிலை அடைந்து கிழக்கு மேற்காக விளங்கும் திருமலையானின் சன்னதி தெருவையும் ஓங்கி உயர்ந்த ராஜகோபுரத்தை தரிசிக்கலாம். இந்த ராஜகோபுரம் 50 அடி உயரத்துடன் ஐந்து நிலைகளைக் கொண்டு விளங்குகிறது.

திருவேங்கடமுடையானின் ராஜகோபுரத்தை தரிசனம் செய்து முடித்த பிறகு சுவாமி புஷ்கரணிக்குச் செல்ல வேண்டும். புஷ்கரணி தீர்த்தம் திருமலையிலுள்ள மற்ற எல்லா தீர்த்தங்களையும் விட மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு மூன்று கோடி பவித்ர தீர்த்தங்கள் புஷ்கரணியில் சங்கமம் செய்வதாக ஐதீகம் உள்ளது.

புஷ்கரணியில் நீராடி முடித்ததும் ஆதிவராகப் பெருமானைத் தரிசிக்க வேண்டும். கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் நாம் முதலில் காண்பது சம்பங்கி பிரதட்சணம் எனும் முதல் பிரகாரம். இந்த பிரகாரத்தில் பிரதிம மண்டபம் - ரங்க மண்டபம் - திருமலைராய மண்டபம் என்னும் துவஜஸ்தம்ப மண்டபம், சாலுவ நரசிம்ம மண்டபம் காணப்படுகிறது.

இப்பிராகாரத்தின் இடதுபுறம் கோபுர வாயிலை ஒட்டினாற்போல் அரங்க மண்டபம் அமைந்துள்ளது. இந்த ரங்க மண்டபத்தை அடுத்து உட்புற கோவில் கீழ்ச்சுவற்றை ஒட்டினாற் போல் திருமலைராயன் மண்டபம் அமைந்துள்ளது. இதற்கு பக்கத்தில் பிரதிம மண்டபம் அமைந்துள்ளது.

இம்மண்டபத்தில் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் எப்பொழுதும் திருவேங்கடமுடையானைத் தரிசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக தானே தமது தேவியர்களுடன் சிலையாக நின்று விட்டார் என்று வரலாறு சொல்கிறது. தெற்கு பாகத்தில் சிறிய நாலுகால் மண்டபத்தைக் காணலாம்.

அந்த மண்டபத்திலுள்ள தூண்களைக் கைகளினால் தட்டினால் இனிமையான ஓசை எழும். இந்த சம்பங்கி பிரகாரம் கொடிமரத்தின் சமீபம் முடிவடையும். சம்பங்கி பிரகாரத்தில் ஸ்ரீரங்கதாசன் கிணறு அமைந்துள்ளது. கொடிமரத்திற்குச் சற்று வலதுபுறமாக காணப்படுவது சயன மஹால், சயன மஹாலுள் நிலைக்கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இம்மஹாலின் மத்தியில் பொன்னூஞ்சல் போடப்பட்டுள்ளது.

இரண்டாவதாக காண்பது விமான பிரதட்சண பிரகாரம்! ஆனந்த நிலையத்தின் பொன் விமானம் அமைந்திருப்பதால் இந்த பிரகாரத்திற்கு இப்பெயர் ஏற்பட்டது. இந்த பிராகாரத்தில் கல்யாண மண்டபம் - விமான வேங்கடேசுவரர், ஸ்னபன மண்டபம் - சயன மண்டபம் - ஆனந்த நிலையம் - கர்ப்பகிரஹம் அமைந்துள்ளன.

விமான பிரதட்சண பிராகாரத்தின் தென்கிழக்கு மூலையில் சதுர்புஜ வரதராஜர் சந்நிதியும் - தெற்கே மடப்பள்ளியை மேற்பார்வை இடும் மடப்பள்ளி நாச்சியார் சிலையும் - தென்மேற்கே கல்யாண மண்டபம், வடக்கே சங்கீத பண்டாரம், ஸ்ரீராமானுஜர் சந்நதி - வடகிழக்கே நரசிம்மர் சந்நிதி இத்தனையும் அடங்கியுள்ளன. இப்பிரகாரத்தின் மத்தியில் புனிதமான பங்காரு கேணி அமைந்துள்ளது.

இந்த பிராகாரத்திலுள்ள சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கல்யாண மண்டபத்தில் பதினாறு புஜங்களைக் கொண்ட நரசிம்மர், ஹயக்ரீவர், நர்த்தன விஷ்ணு போன்ற பல தெய்வ உருவங்களைக் காணலாம். அத்தோடு இனிய இசை பிறக்கும் விசித்திரமான தூண்கள் பலவும் உண்டு. இந்தத் திருமண மண்டபம் திருமலையானுக்குத் திருமண வைபவம் நடந்த இடமாகும்.

எழில்மிகு கர்ப்பகிரஹ பொன் விமானத்தின் வடமேற்கு பகுதியில் திருவேங்கடமுடையான் பக்தர்களுக்கு பேரானந்த காட்சி தருகிறார். இந்த 9அடி உயர சிலையை வியாச தீர்த்தர் என்ற மகான் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. கர்ப்பகிரஹத்திற்கு முன்னால் காணப்படுவது திருமாமணி எனும் முகமண்டபம்.

இம்மண்டபத்தின் கிழக்குப் பக்கம் கர்ப்பகிரஹத்தை நோக்கியவாறு கருடாழ்வார் சிலை காணப்படுகிறது. வடமேற்கு பக்கம் மூலையில் காணிக்கை செலுத்தும் உண்டியல் அமைந்துள்ளது. அடுத்து அமைந்துள்ளது சனபன மண்டபம் இந்த மண்டபம் சற்று இருள் நிறைந்து காணப்படுகிறது. இம்மண்டபத்திலுள்ள தூண்களில் கருடனுடன், காளிங்க மார்த்தனன், யோக நரசிம்மர் போன்ற பல சிற்பங்ளைக் காணலாம்.

அதற்கு அடுத்தார் போல அடுத்தடுத்து இரு ராமர் மேடைகளைக் காணலாம். இந்த ராமர் மேடையிலிருந்துதான் மூன்றாவது பிரகாரமான முக்கோடி பிரதட்சணம் ஆரம்பமாகிறது. இதுவே வைகுண்ட பிரகாரம். இந்தப் பிரகாரம் ஆண்டுக்கு ஒருமுறை வரும் வைகுண்ட ஏகாதசியின் போதுதான் திறக்கப்படும்.

இந்த பிரகாரம் ஸ்ரீராமர் மேடையின் இடது புறத்தில் ஆரம்பித்து மூலமூர்த்தியை பிரதட்சணமாக வந்து உண்டியல் இருக்கும் மண்டபத்திற்கு அருகே வந்தடைகிறது. அடுத்து கர்ப்பகிரஹத்திற்கு முன்னால் காண்பது சயன மண்டபம். ஏகாந்த சேவைக்குப் பிறகு பெருமாள் பள்ளி கொள்வது இங்குதான். பக்தர்களுக்கு சயனமண்டபம் வரை செல்லத் தான் அனுமதி உண்டு.

சென்னையில் முன்பதிவு..............

சென்னை பக்தர்களின் வசதிக்காக, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. கைவிரல் ரேகை பதிவு மூலம் இங்கு டிக்கெட்டுகள் தரப்படுகின்றன. மேலும் இங்கிருந்தே 2 மாதங்களுக்கு முன்பே திருப்பதியில் அறைகளும் புக் செய்யலாம்.

வார நாட்களில் காலை 9 முதல் 1 மணி மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாலை 7 மணி வரையும் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் இது தொடர்பான தகவல்களைப் பெற தேவஸ்தான அலுவலகத்தை 044-24343535 என்ற எண்களில் பெறலாம்.

முதியோர்களுக்கு உடனடி தரிசனம்.......

திருப்பதி கோவிலில் 60 வயதை கடந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் சீனியர் சிட்டிசன் என்ற பெயரில் உடனடி தரிசனத்துக்கு அனுமதி கொடுக்கிறார்கள். ஊனமுற்றோர்கள், இருதய நோயாளிகள் ஆஸ்துமா நோயாளிகள் ஆகியோருக்கும் இந்த சலுகை கிடைக்கிறது. இதற்கு டாக்டரிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதை ஐ.டி.கார்டுடன் இணைத்து கொடுக்க வேண்டும். கோவில் ஊழியர்கள் அதை சரிபார்த்து உடனடி தரிசனத்துக்கு உதவி செய்வார்கள்.

ரூ.1000 போதும்........

சென்னையில் இருந்து திருப்பதி செல்வதற்கு ரெயில், பஸ்வழிதடங்களில் பல்வேறு வசதிகள் உள்ளன. சமீபத்தில் கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு ஏ.சி. பஸ் விட்டுள்ளனர். இதில் ஒரு நபருக்கு கட்டணம் ரூ.135. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல கட்டணம் ரூ.24. சாப்பாடு, தங்கும் வசதி மற்றும் போக்குவரத்து கட்டணம் எல்லாவற்றையும் சேர்த்தார் சுமார் ரூ.800 முதல் ரூ.1000 வரை இருந்தால் திருப்பதி போய்விட்டு வந்து விடலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum