தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வைத்தியலிங்க சுவாமி கோவில்

Go down

வைத்தியலிங்க சுவாமி கோவில் Empty வைத்தியலிங்க சுவாமி கோவில்

Post  amma Mon Jan 14, 2013 1:05 pm

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் வைத்தியலிங்க சுவாமி கோவிலுக்கு ஒரு சிறப்பு உண்டு. சிவாலயமாக வழிபடப்படும் இந்த கோவிலின் மூலவர் அறையில் சிவலிங்கத்துக்கு பதிலாக சாமி உருவச் சிலை அமைந்துள்ளது. சிவாலயங்களில் பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகளே இங்கும் பின்பற்றப்படுகின்றன.

இது தவிர, ஆவணி மற்றும் பங்குனி மாதங்களில் பத்து நாள் விழா நடைபெறுகின்றன. இரண்டு மாதங்களிலும் 10-வது திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மார்கழி மாதம் ஆருத்திரா தரிசனம் தினத்தன்று சிறப்பு பூஜையுடன் சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.

இது தவிர, சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று மூன்று தினங்களுக்கு கொடை விழாவும் நடத்தப்படுகின்றன. ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதி மட்டுமல்லாமல் சிவகாசி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருத்தங்கல், சிதம்பரம், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களை கொண்டுள்ள வைத்தியலிங்க சுவாமி கோவிலின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள கூழையன் குண்டு என்கிற `கல்லால்' என்ற இடம் தான் வைத்தியலிங்க சுவாமியின் பூர்வீக தலம். திருச்செந்தூர் வட்டம் மானாடு பகுதியில் இருந்து சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் குடியேறிய கற்பக சித்தர் என்பவரே வைத்தியலிங்க சுவாமி மூல விக்கிரகத்தை ஆலடிப்பட்டிக்கு கொண்டு வந்து ஆலயம் அமைத்தார் என்பது இக்கோவில் வரலாறு.

கல்லால் என்ற ஊரில் இருந்து ஆலடிப்பட்டிக்கு இந்த வைத்தியலிங்க சுவாமி வந்த கதை வித்தியாசமானது. அந்த காலத்தில், கல்லால் பகுதியில் தங்கப் புதையல் (கிடாரம்) எடுக்கும் முயற்சியில் 60 வீட்டுக்காரர்கள் ஈடுபட்டனர். அதற்காக ஒரு ஜோதிடரை நாடியபோது, திருச்செந்தூர் கோவில் மாசி திருவிழாவுக்கு தேவதைகள் செல்லும் சமயத்தில் புதையல் எடுக்கலாம் என்றும், அதற்காக நிறைமாத கர்ப்பிணிப் பெண், ஆடு, பன்றி ஆகியோரை பலி கொடுக்க வேண்டும் என்றும் ஜோதிடர் தெரிவித்தார்.

அதன்படியே, புதையலை எடுத்த 60 வீட்டுக்காரர்களும் புதையலை 61 பங்கு வைத்து ஜோதிடருக்கு ஒரு பங்கு அளித்தனர். ஆனால், ஜோதிடர் அந்த புதையலை வாங்காமல் பூமியிலேயே புதைத்து விட்டார். இந்த தகவலை அறிந்த தேவதைகள், திருச்செந்தூரில் இருந்து திரும்பி வந்ததும் 60 வீட்டுக்காரர்களையும் தீயிட்டு அழித்தன.

ஜோதிடர் மட்டும் தப்பித்தார். அந்த ஜோதிடரின் மகன் தான் கற்பக சித்தர். அவருடைய கனவில் வைத்தியலிங்க சுவாமி தோன்றி, தான் இருக்கும் இடத்தை காண்பித்துள்ளார். அதன்படியே, கல்லால் பகுதியில் புதைந்திருந்த வைத்தியலிங்க சுவாமியின் விக்கிரகத்தை கற்பக சித்தர் எடுத்து அபிஷேகம் செய்து பூஜித்து வந்தார்.

தங்கப் புதையலை மறுத்த ஜோதிடரின் மகனுக்கு புதையலாக வந்தவரே, வைத்தியலிங்க சுவாமி. காலப்போக்கில் பஞ்சம் ஏற்பட்டதால், ஓலைப் பெட்டியில் வைத்தியலிங்க சுவாமியை வைத்துக் கொண்டு ஊர் ஊராக கற்பக சித்தர் சுற்றி வந்தார். ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் என்ற இடத்துக்கு வந்தபோது சுவாமிக்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் தேவைப்பட்டது.

எனவே, கையில் இருந்த வேலால் தரையில் குத்தினார். அந்த இடத்தில் நீருற்று பெருகியது. தற்போதும், அந்த இடம் `எச்சி நா ஊற்று` மலை என்றே அழைக்கப்படுகிறது. சிவலார் குளத்திலேயே சில காலம் தங்கியிருந்த கற்பக சித்தர், பின்னர் ஆலடிப்பட்டிக்கு வந்து ஊருக்கு வட பகுதியில் உள்ள தெப்பக்குளம் அருகே வன்னி மரத்தின் அடியில் சுவாமி சிலையை வைத்து பூஜை செய்தார்.

அதன் பிறகு, தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தில் பத்திரகாளி அம்மன் கோவிலும், அபிஷேக கிணறும், ஆலமரமும் சேர்ந்திருப்பதை பார்த்து... ஓலைப்பெட்டியில் வைத்திருந்த வைத்தியலிங்க சுவாமியை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். இதைத் தொடர்ந்து, அந்த பகுதிக்கு ஆலடிப்பெட்டி என்ற பெயர் உருவானது.

காலப்போக்கில் ஆலடிப்பட்டி என அழைக்கப்படுகிறது. கோவிலின் தல விருட்சமாக வன்னிமரம் உள்ளது. கற்பக சித்தர் வந்தடைந்த தெப்பக் குளத்தையும் அதன் அருகே வன்னி மரத்தையும் இன்றும் காணலாம். இந்த கோவிலில் கற்பக சித்தருக்கும் சிலை எழுப்பப்பட்டு தினந்தோறும் பூஜைகள் நடைபெறுகின்றன. கற்பக சித்தருக்கு நேர்த்திக்கடன் செய்தால் தலை சம்பந்தமான நோய்கள் குணமடையும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கை.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum