தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வினோதினியுடன் பேசிய அந்த தருணங்கள்…

Go down

வினோதினியுடன் பேசிய அந்த தருணங்கள்… Empty வினோதினியுடன் பேசிய அந்த தருணங்கள்…

Post  ishwarya Sat Feb 16, 2013 6:21 pm

வினோதினி…. சில மாதங்களுக்கு முன்பு காரைக்காலில் ஆசிட் வீச்சுக்கு இலக்காகி சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயம் பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. அப்போது கூட ஒரு சராசரி குடிமகன் போலவே சற்று வருத்தப்பட்டு அந்த செய்தியை பார்த்துவிட்டு அடுத்த பக்கம் புரட்டி படிக்க சென்றுவிட்டேன்.

ஆனால் சில மாதங்கள் கழித்து இரு கண்களும் பறிபோன நிலையில் சிகிச்சை செலவுக்கு கூட பணமின்றி அந்த குடும்பம் திண்டாடுவதாக செய்தி படித்தபோது தான் மனதை பிசைந்தது. “நாமெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்? துன்பத்தில் துடிக்கும் ஒரு ஜீவனுக்கும் அவர் குடும்பத்திற்கும் உதவ முடியாம என்ன பெரிசா ஆன்மிகம் கோவில்னு சுத்திகிட்டுருக்கோம்…?” மனசாட்சி உலுக்க… நண்பர்களுடன் உடனடியாக களமிறங்கினோம்.

நம் தளத்தில் அது பற்றிய செய்தியை வினோதினியின் தந்தையின் வங்கிக் கணக்கு எண்ணுடன் அளித்தோம். குறைந்த பட்சம் நூறு அல்லது இருநூறு பேராவது நமது பதிவை பார்த்து வினோதினிக்கு உதவியிருப்பார்கள் என்று கருதுகிறேன். தவிர நமது டீம் நண்பர்கள் அளித்த நிதியை வங்கி வரைவோலை (டி.டி) எடுத்து இரு தவணைகளில் வினோதினியின் தந்தையை சந்தித்து அளித்தோம்.

பேலும் பலரும் இந்த புனித பணியில் தங்களை இணைத்துக்கொண்டு வினோதினிக்கு உதவ தங்கள் முயற்சிகளை செய்தனர். WWW.HELPVINODHINI.COM என்ற விசேஷ தளம் உருவாக்கப்பட்டது.

நாம் முதல் முறை பாலம் ஐயாவை அழைத்துக்கொண்டு சென்று அவர் மூலம் நண்பர்கள் அளித்த நிதியை அளித்தோம். பாலம் ஐயா அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு புத்தககக் கண்காட்சியில் தன்னுடைய ஸ்டால் திறப்பு விழாவின்போது வினோதினியின் தந்தையை வரவழைத்து நம் மூலமாக நிதியுதவி அளித்தார்.


(ஜனவரி 1 ஆம் தேதி முதல் முறை சந்தித்தபோது…)

முதல் முறை நிதி அளிக்க இயலாத நண்பர்கள் அடுத்தடுத்து நிதி அளிக்க அவற்றை சேர்த்து ஒரு டி.டி. எடுத்து வினோதினியின் தந்தைக்கு இரண்டாம் கட்ட நிதி அளிக்க முடிவு செய்தோம்.

ஜனவரி 27 ஆம் தேதி – தைப்பூசம் தினத்தன்று – நேதாஜியின் தொண்டர் தியாகி திரு.முத்தப்பா அவர்களை அழைத்துச் சென்று விநோதினியை பார்த்தோம். இம்முறை நம்முடன் நண்பர் ராஜா, சிட்டி மற்றும் திரு.முத்தப்பா ஆகியோர் வந்தனர். முதல் முறை சென்ற போது இருந்த நிலையை விட இந்த முறை வினோதினியிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. முகத்தில் காயங்கள் 50% ஆறியிருந்தன. நமது பெயர்கள் அவருக்கு நன்கு பரிச்சயமாகி இருந்தது. (அவர் தந்தை நம்மை பற்றி நமது முயற்சிகள் பற்றி கூறியிருப்பார் போல.)

முத்தப்பா அவர்கள் கண்கலங்கியபடி வினோதினியிடம் “உனக்கு ஒன்னும் ஆகாதுடா செல்லம். நீ நல்லா இருப்பேடா. கவலைபடாத தாயி. சீக்கிரமே குணமாயிடுவே….” என்று வாஞ்சையுடன் ஆறுதல் சொல்ல… பார்த்துகொண்டிருந்த எங்கள் கண்களில் எல்லாம் நெகிழ்ச்சியில் கண்ணீர் பெருகி வழிகிறது.

(ஜனவரி 27 ஆம் தேதி இரண்டாம் முறை சந்தித்தபோது…)

“ஐயா… உங்க கையால என்னை தொட்டு ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று வினோதினி திரு.முத்தப்பாவிடம் கேட்டுக்கொள்ள, முத்தப்பா அவரது நெற்றியை தொட்டு லேசாக வருடிகொடுத்து ஆசி கூறினார்.

வினோதினி சில சமயம் – விரக்தியில் – வலி தரும் வேதனையில் – அழுது புலம்பும் விஷயத்தை அவரின் தந்தை நம்மிடம் கூறியிருந்தார்.

எனவே அடுத்து வினோதினியிடம் பேசிய நாம் “இதோ பாருங்க… வயசுல பெரியவர் ஆசி பண்ணிட்டார். முதல்ல பாலம் கலியாணசுந்தரம் ஐயா. அடுத்து இப்போ முத்தப்பா ஐயா. இதுவே உங்களை குணப்படுத்திடும். தன்னம்பிக்கையோட சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கணும். டாக்டர்ஸ் கொடுக்குற ட்ரீட்மென்ட் பாதிண்ணா மீதி உங்களோட ஒத்துழைப்பும் தன்னம்பிக்கையும் தான் உங்களை குணப்படுத்தும். இந்த ட்ரீட்மென்ட் எல்லாம் நல்லபடியா முடியட்டும். நீங்க விரும்புற துறையில் ஈடுபட்டு விரும்புறதை செய்றதுக்கு நான் ஏற்பாடு பண்றேன். ஃபீனிக்ஸ் பறவை மாதிரி நீங்க மறுபடியும் எழுந்திருச்சு…. தூள் கிளப்பணும். கடந்த கால கசப்புக்களை ரப்பர் போட்டு அழிச்சிடுங்க. இனிமே உங்களுக்கு ஒரு புது வாழ்வு காத்துகிட்டு இருக்கு. தன்னம்பிக்கைன்னா வினோதின்னு எதிர்காலத்துல டிக்ஷ்னைரியில வரணும். அதுக்கு உங்களுக்கு என்ன உதவி செய்யணுமோ நாங்கள் பக்கத்துல இருந்து செய்வோம். ஆண்டவன் இருக்கான். கவலைப்படாதீங்க. ப்ளீஸ் கோ-ஆபரேட் வித் டாக்டர்ஸ் அண்ட் ட்ரீட்மென்ட் வினோதினி” அப்படின்னு சொன்னேன்.

நாம் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த வினோதினியின் பெற்றோர் நன்றிப் பெருக்குடன் கண்களாலேயே நமக்கு நன்றி கூறினர்.

“அண்ணா.. ரொம்ப நன்றிண்ணா.. ரொம்ப நன்றிண்ணா.. இவ்ளோ தூரம் எனக்காக பண்றீங்களே… உங்களையெல்லாம் பார்க்க முடியலியேன்னு தான் எனக்கு வருத்தமா இருக்கு” என்று அவர் உடைந்த குரலில் கூற எனக்கு என்னவோ போலிருந்தது.

“அண்ணா.. ரொம்ப நன்றிண்ணா.. ரொம்ப நன்றிண்ணா.. இவ்ளோ தூரம் எனக்காக பண்றீங்களே… உங்களையெல்லாம் பார்க்க முடியலியேன்னு தான் எனக்கு வருத்தமா இருக்கு” என்று அவர் உடைந்த குரலில் கூற எனக்கு என்னவோ போலிருந்தது.

வினோதினியின் குரலை அப்போது தான் சற்று தெளிவாக அருகில் இருந்து கேட்கிறேன். (அந்த குரல் இன்னும் என் மனசுல இருந்து போகலே… படுபாவி இப்படி பண்ணிட்டானே….)

அடுத்து நண்பர் ராஜா கொண்டு சென்றிருந்த முருகன் கோவில் திருநீற்றை தனது நெற்றியில் வைக்கும்படி கேட்டுக்கொண்டார் வினோதினி. ராஜாவும் வைத்துவிட “ரொம்ப நன்றிண்ணா… ரொம்ப நன்றி” என்றார் நெகிழ்ச்சியில்.

அறையை விட்டு வெளியே வந்தவுடன் அவரது தந்தை திரு.ஜெயபாலன் “நல்லா சொன்னீங்க சார்…. அவளுக்கு இப்போ தேவை தன்னம்பிக்கை தான். நீங்க வந்தது உண்மையிலேயே எங்களுக்கு ஒரு பெரிய பூஸ்ட் தான்” என்றார்.

“நெகட்டிவாக பேசுபவர்களை மறந்தும் கூட வினோதினிக்கு பக்கத்தில் விடாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டேன்.

கீழே வந்தவுடன் இரண்டாம் கட்ட தொகைக்காக டி.டி.யை அவர் கையில திரு.முத்தப்பா மூலம் ஒப்படைத்தோம்.

சென்ற வாரம் ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும்போது திரு.ஜெயபாலன் ஃபோன் செய்தார்.

“சொல்லுங்க சார்… என்ன சார் விஷயம்?” என்றேன்.

“என்னமோ உங்க கிட்டே பேசணும்னு தோணிச்சு சார்…. அதான் சார் ஃபோன் பண்ணினேன். நீங்க வந்துட்டு போனதுல இருந்து கொஞ்சம் நம்பிக்கையோட இருக்கா குழந்தை. இதே நம்பிக்கை மெயிண்டெயின் ஆச்சுனா போதும் சார்….” என்றார்.

ஒரு ஐந்து நிமிடம் தொடர்ந்து பேசினோம். சிகிச்சை முறைகள் & ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தேன்.

முதல் முறை சென்றபோதே பார்வை திறன் சவால் கொண்ட சாதனையாளர் – நம் நண்பர் – திரு.இளங்கோவை அழைத்து சென்று விநோதினியை மருத்துவமனையில் சந்திக்க வைத்து தன்னம்பிக்கை ஊட்ட ஏற்பாடு செய்வதாக சொல்லியிருந்தேன். “முதலில் அதை செய்ங்க சார். டாக்டர்ஸ் கூட அவளுக்கு தேவை முதல்ல கவுன்சிலிங் தான் அப்படின்னு சொல்லியிருக்காங்க. நீங்க சொல்ற அவர் வந்து பார்த்தா வினோதினிக்கு கொஞ்சம் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வரும். எங்களுக்கு அது போதும்” என்று என்னிடம் சொல்லியிருந்தார் திரு.ஜெயபாலன்.

இளங்கோ அவர்களை அழைத்துக்கொண்டு இதோ அடுத்த சில நாட்களில் செல்ல ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில்…. நேற்றைக்கு செய்தித் தாளில் வினோதினி சுவாசக் கோளாறு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பார்த்தேன். அவர் தந்தைக்கு ஃபோன் செய்யலாம் என்று நினைத்தேன். வேண்டாம் இப்போது அவர்கள் பதட்டத்துடன் இருப்பார்கள். நிலைமை சற்று சீரானவுடன் பேசிக்கொள்ளலாம் என்று இருந்தேன்.

இந்த நிலையில் இன்று காலை அந்த துக்க செய்தி இடியாய் என்னை தாக்கியது.

ஆம் வினோதினி நம்மை விட்டு சென்று விட்டார்.

வண்ண வண்ணக் கனவுகளுடன் பெற்றோர் வளர்த்து பூச்சூட்டி படிக்க வைத்து ஆளாக்கி அழகு பார்த்த அருமை மகள் – காதலை ஏற்க மறுத்த ஒரே காரணத்தால் – ஒரு மனித மிருகத்தால் அமிலத்தில் தோய்க்கப்பட்டு – படுக்கையில் சாய்ந்து இன்று ஒரேயடியாக நம்மை விட்டு சென்றுவிட்டாள்.

நம் தளம் சார்பாக காலை நண்பர் ராஜா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று வினோதினிக்கு அஞ்சலி செலுத்தினர்.

வினோதினியின் உடல் நாளை பொதுமக்களின் அஞ்சலிக்காக கோயம்பேடு அருகே ஒரு மைதானத்தில் வைக்கப்பட இருக்கிறது. அதற்கு பிறகு நாளை மறுநாள் அவரது சொந்த ஊரான திருக்கடையூரில் அவரது இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.

இந்த இளம் வயதில் ஏன் அந்த சின்ன பெண்ணுக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் இவ்வளவு பெரிய தண்டனை? வளர்ந்து பூத்துக் குலுங்க வேண்டிய ஒரு ரோஜா செடி நெருப்பில் பட்டு தீய்ந்துவிட்டதே… ஏன் இப்படி ?

உங்களை போலவே நானும் பதில் தெரியாமல் விழிக்கிறேன்.

ஒருவேளை இருகண்களும் இழந்த நிலையில் முகமும் சிதைந்து உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு வினோதினி துடிப்பது ஒரு புறம் - தாங்கள் பெற்ற மகள் தங்கள் கண் முன்னே அன்றாடம் படும் துயரை காண சகிக்காமல் துடிக்கும் அந்த பெற்றோர் மறுபுறம் இருவருக்கும் வினோதினியின் மரணமே இறுதியான ஆறுதலாக இருக்கும் என்று இறைவன் நினைத்துவிட்டானோ என்னவோ?

சில கேள்விகளுக்கு பதிலை அவனால் மட்டுமே தரமுடியும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum