தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமண யோகம் தரும் திருமாணிக்குழி ஈஸ்வரன்

Go down

திருமண யோகம் தரும் திருமாணிக்குழி ஈஸ்வரன் Empty திருமண யோகம் தரும் திருமாணிக்குழி ஈஸ்வரன்

Post  ishwarya Sat Feb 16, 2013 5:07 pm

தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி... என்று எந்நாளும் ஈசனை உள்ளன்போடு பாடுவது பக்தர்களின் மரபு. பரம்பொருளான பரமசிவத்தின் பெருமைகளுக்கு அளவே இல்லை. உலகின் ஒவ்வொரு அசைவுக்கும் ஆதி அவனே. அப்பேற்பட்ட ஈசன் அருளாட்சி புரியும் தலமே திருமாணிக்குழி. மகாபலியின் தலைமீது கால்வைத்து அவனை பூமியோடு அழுத்தி அழித்த வாமனப் பெருமாள் பூஜித்த தலம் இது. வாமனப் பெருமாள் பூஜித்தபோது பிரமாண்டமாக இருந்த தன் திருவுருவை அவர் வசதிக்காக, சுருக்கி காட்சி அளித்த புண்ணியத் தலம் இது. திருமாணிக்குழி என்ற பெயருக்குக் காரணம் என்ன?

ஒருமுறை இந்திரனின் தாயார் அதிதேவி பூஜை செய்தபோது விளக்கில் உள்ள நெய் உறைந்துபோக, அதனால் தீபம் அணையும் நிலையில் அலைபாய்ந்தது. அப்போது பசியால் அலைந்து திரிந்த ஒரு எலி அந்த நெய்யை சாப்பிட வந்தது. அதன் மூக்கு, திரியை தூண்டி விட்டதில் தீபம் பிரகாசமானது. தற்செயலாக நிகழ்ந்தது எனினும், தீபத்தைச் சுடர்விடச் செய்ததற்காக இறைவன் மகிழ்ந்து அந்த எலியை அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாய் பிறக்கச் செய்தார். அரசனாகப் பிறந்தாலும் தர்ம வாழ்விலிருந்து நழுவவில்லை அவன். ஆனால் தன் கொடைத்தன்மையை தானே கர்வமாக நோக்க ஆரம்பித்தான். மனதில் அகங்காரம் ஓங்கியது. தானே அறியாமல் செய்த ஓர் அற்பமான சேவைக்காகத் தனக்கு சக்ரவர்த்தி பதவியே கிடைத்துவிட்ட மமதை மேலோங்கியது.

அவனது இந்த ஆணவத்தை அழித்து தன் பதம் சேர்த்துக் கொள்ள விரும்பினார், ஸ்ரீமன் நாராயணன். அதனாலேயே வாமனராக அவதரித்தார். மகாபலியிடம் சென்று, யாசகமாக மூன்றடி மண் கேட்டார். திருமாலின் தந்திரத்தை அறிந்த சுக்ராச்சார்யார் மகாபலியை எவ்வளவோ தடுத்தும் மகாபலி கேட்கவில்லை. கடவுளே கேட்கும்போது இல்லை என்று சொல்வது தர்மம் ஆகாது என்று கூறி ‘‘தங்கள் காலால் மூன்றடி மண்ணை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றான். திடீரென விஸ்வரூபம் எடுத்த வாமனர், விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டையும் தன் ஈரடியால் வசப்படுத்திக் கொண்டார். மூன்றாவது அடிக்கு எங்கே இடம்? எனக் கேட்ட திருமாலிடம் ‘‘மூன்றாவது அடிக்கு என்னையே தருகிறேன்’’ என்று கூறிய மகாபலி, திருமாலின் திருவடிகளின் கீழே அமர்ந்தார். அவருடைய பக்தியை மெச்சிய திருமால் பாதாள லோகத்தையும், சிரஞ்சீவித் தன்மையையும் மகாபலிக்கு அருளினார்.

மனித உருவில் வந்த வாமனப் பெருமாள், மகாபலியை வதம் செய்த தோஷம் நீங்கும் பொருட்டு திருமாணிக்குழி ஈசனை பூஜித்தார். ராமர், ராவணனை அழித்துவிட்டு அந்தப் பாவம் நீங்க ராமேஸ்வரத்தில் லிங்கத்தை நிறுவி பூஜித்ததுபோல, இங்கு வாமனர் சிவலிங்கத்தை பூஜித்தார். அதனாலேயே இத்தல சிவனுக்கு வாமனபுரீஸ்வரர் என்ற பெயர் உண்டாயிற்று. தோன்றிய காலம் அறியமுடியாத சுயம்புநாதராக இருக்கிறார், வாமனபுரீஸ்வரர். எப்போதும் கருவறை திரையிடப்பட்டு மூடியிருக்கும் இந்த அபூர்வ ஆலயத்தில். தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டு திருத்தலம், சேக்கிழார் வழிபட்ட தலம் என பல பெருமைகளை கொண்டது. மூர்த்தி, தீர்த்தம், வனம், கிரி, நதி சங்கமம், ஆரண்யம், பதிகம் ஆகியவற்றால் பிரசித்தி பெற்ற திவ்ய தலமிது.

சிவபெருமான் பூவுலகில் தோன்றிய முதல் தலம். இதன் பிறகுதான் பிற சிவத் திருத்தலங்கள் தோன்றின என்கிறது தல வரலாறு. தேவர்களுக்கு ஞானத்தைப் புகட்டி, அஞ்ஞானத்தை விலக்கத் தோன்றியவர் இந்த ஈசன். சதாகாலமும் இறைவியோடு ஒன்றியிருப்பதாக வரலாறு. அதனால் மற்ற கோயில்களில் விளங்கும் போகசக்தி அம்பாள், பள்ளியறை சொக்கர் போன்ற விக்ரகங்கள் இங்கு கிடையாது; திருப்பள்ளி அறையும் கிடையாது. இத்தலத்தில் சம்பந்தர் தான் பாடிய பதினொறு பாடல்களிலும் இறைவன் உயிர்கள் அனைத்தையும் உய்வித்து உதவுவதாகக் குறிப்பிடுகிறார். எனவே இறைவனுக்கு உதவிநாயகன் என்றும் இறைவிக்கு உதவிநாயகி என்றும் பெயர். தலத்தையும் உதவி திருமாணிக்குழி என்றே சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

இத்தலத்தின் கெடிலம் நதிக்கரையில் மகாலட்சுமி தவம் செய்திருக்கிறாள். படைக்கும் கடவுளாகிய பிரம்மாவின் துணைவி சரஸ்வதி ஸ்வேத நதியாக பாய்ந்து கெடிலத்தில் வடக்கு முகமாக சங்கமமாகிறாள். இது சங்கம க்ஷேத்ரத்தில் நான்காவது பிரம்ம க்ஷேத்ரமாக விளங்குகிறது. எனவே வாமனபிரம்ம க்ஷேத்ரம் என்ற பெயரும் உண்டு. யுகப் பிரளயத்தில், இறைவன் ஜோதிப் பிழம்பாகக் காட்சி தந்த தலம் திருவண்ணாமலை. பிறகு அதே ஜோதிரூபமாக கடல் சூழ்ந்த உலகை மீண்டும் உற்பத்தி செய்வதற்காக தோன்றியது இத்தலம். எனவே உலகிலேயே திருவண்ணாமலையிலும் இத்தலத்திலும்தான் கார்த்திகை மாதத்தில் மலையின் மேல் தீப ஒளியாக காட்சி கொடுக்கிறார் சிவபெருமான். இத்தலத்தை சூரியன் உண்டாக்கி, பூஜித்ததாக வரலாறு.

எனவே, விநாயகர் முதல் சண்டிகேஸ்வரர் வரை அனைவருக்கும் ஆதித்ய விமானம் அமைந்த ஒரே கோயில் இதுவே. திருமால் வாமன அவதாரத்தில் இங்கு வழிபாடு நடத்தியபோது இறைவன் தன் ருத்ர கணங்களில் பீமசங்கரன் என்பவரை பூஜையை காவல் காக்கும் கணமாக நியமித்தார். எனவே அவருக்கு வழிபாடுகள் செய்த பின்னரே இறைவனை தரிசிக்கும் மரபைக் கொண்டது இக்கோயில். ஆசாரியார்கள் ஆத்மார்த்த பூஜையில் இறைவனை மனதுக்குள் ஸ்தாபிதம் செய்த பிறகு, மறுநாள் பூஜிக்க ஆரம்பிக்கும் முன், பீமசங்கர பூஜையை முடித்து விடுவார்கள். மீண்டும் பூஜிக்கும் போது பீமசங்கரனை வழிபட்டு அவருடைய அனுமதியோடு பூஜையை துவங்குவார்கள். எனவே சிவாச்சாரியார்களுக்கு இது முதன்மை தலமாக விளங்குகிறது.

திருமணத்திற்காகக் காத்திருப்பவர்கள், இந்த வாமனபுரீஸ்வரரையும் அம்புஜாக்ஷியையும் வழிபட்டு சென்றால் உடனடியாக திருமணம் கைகூடுகிறது. அதற்காக சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகின்றன. அதேபோல் நோய் தீரவும் குழந்தை பாக்கியம் மற்றும் சகல செல்வங்களை பெறவும் இந்த ஈசன் அருள்பாலிக்கிறார்.
இந்த கிரி க்ஷேத்ரத்தில், மலையில் தீபம் ஏற்றும்போது இறைவனுடைய நெற்றிக்கண் ஒளிர்வது போலவே இருக்கும். இந்த மலைக்கு ஜோதிகிரி, ரத்னகிரி, புஷ்பகிரி, ஔஷதகிரி என்ற பெயர்களும் உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் இது கேப்பர்மலை என்று அழைக்கப்பட்டது. இறைவனுக்கு மாணிக்கவரதர் என்ற பெயரும் இறைவிக்கு மாணிக்கவல்லி என்ற பெயரும் உண்டு. அருளை வாரி வழங்குவதால் அருள்புரீஸ்வரர் எனவும் ஞானாம்பாள் என்றும்கூட அழைக்கப்படுகிறார்கள். இங்குள்ள தல விருட்சம் யுகத்திற்கு ஒன்றாக ஏற்பட்டது.

முதல் யுகத்தில் சந்தன மரமும் இரண்டாவது யுகத்தில் வாமனன் வழிபட்டதால் விஷ்ணு-மகாலட்சுமிக்காக வில்வமரமும் உள்ளது. இங்கு மகாலட்சுமி நதி (கெடிலம்), சரஸ்வதி நதி (வெள்ளவாரி ஓடை), பாகீரதி (கங்கை நதி) தென் பெண்ணையாறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. மாசிமகத்தன்று தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுவாமி கடலாடுவார். இக்கோயிலின் எதிரே உள்ள மலையின் கீழ் அகத்தியர் பூஜித்த லிங்கம் ஒன்றுள்ளது. இக்கோயிலை ஒருமுறை வழிபடுவது காசிக்கு சென்று 16 முறை வழிபடுவதற்கும் திருவண்ணாமலையை 8 முறை வழிபடுவதற்கும் சிதம்பரத்தை 3 முறை வழிபடுவதற்கும் சமம் என்பது ஐதீகம். பழம்பெருமை வாய்ந்த இக்கோயிலை சோழன், பாண்டியன், சேரன், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.

நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோயிலில் பழம்பெருமை பொங்க சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. இவை முப்பரிமாண நுணுக்கத்தில் விளங்குவதும் வியப்புக்குரியதுதான். கடலூர், திருவஹீந்திரபுரம் வழியாக பண்ருட்டி செல்லும் சாலையில் 10வது கி.மீ. தொலைவில் உள்ளது. திருமாணிக்குழி நிறுத்தத்தில் இறங்கி கோயிலுக்கு நடந்து செல்லலாம். கோயில் வழியாகவும் பஸ்கள் செல்கின்றன. ஷேர் ஆட்டோ வசதியும் உண்டு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum