தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சகல வரங்களும் அருளும் சொர்ண நரசிம்மர்

Go down

சகல வரங்களும் அருளும் சொர்ண நரசிம்மர்  Empty சகல வரங்களும் அருளும் சொர்ண நரசிம்மர்

Post  ishwarya Sat Feb 16, 2013 2:09 pm

கோனார்பாளையம்

மகா விஷ்ணுவின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் மிகவும் போற்றி வணங்கத்தக்கது. சர்வ இடங்களிலும் வியாபித்து இருக்கும் ஸ்ரீமன் நாராயணன் சிறு பாலகனான பக்த பிரகலாதனின் பக்தியை அங்கீகரிக்கவும் அதர்மத்தை அழிக்கவும் ஒரு தூணைப் பிளந்து கொண்டு அவதரித்தார். இரண்யகசிபு என்ற கொடூர அரக்கன், பிரம்மாவிடம் வரம் கேட்டுத் தவம் புரிந்தான். அவனது தவத்தால் மனம் குளிர்ந்த பிரம்மா, அவன் வேண்டிய வரத்தை அளித்தார். அந்த வரத்தின்படி மனிதனாலோ, மிருகத்தாலோ, உயிருள்ள, உயிரற்ற ஆயுதங்களாலோ, காலை, மதியம், இரவு வேளைகளில் வீட்டிற்குள்ளோ, வெளியேவோ தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என்ற உத்தரவாதம் பெற்றான். வரம் கிடைத்த கர்வத்தினால் நாராயணனின் பக்தர்களையும் ஏன் நாராயணின் திருநாமத்தைக் கூறினால் கூட கடுமையாக துன்புறுத்தினான். தன் மகனான பிரகலாதன், நாராயணனின் நாமம் பாட அவனையும் துன்புறுத்தினான்.

ஒருநாள் பிரகலாதனிடம் அவன் விவாதம் செய்தபோது, ‘‘நீ துதிக்கும் நாராயணன் தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் என்கிறாயே, என்னால் கட்டப்பட்டுள்ள அரண்மனையில் உள்ள இந்த தூண்களிலும் இருப்பானா?’’ என்று கேட்டான். அதற்குப் பிரகலாதன், ‘‘ஆமாம். நிச்சயமாக இருக்கி றார்’’ என்றான். ‘‘இப்போது பார், இந்த தூணைப் பிளக்கிறேன், உள்ளிருந்து உன் நாராயணன் வருவானா?’’ என்று கதையால் தாக்க, பெருமாள் சிங்க முகமும் மனித உடலும் கொண்ட நரசிம்மராக வெளிப்பட்டார். அரண்மனையின் வாசற்படியில் அமர்ந்து, இரண்யகசிபுவைத் தன் மடியில் கிட த்தி, தன் கூரிய நகரங்களால் வயிற்றை கிழித்து அழித்தார். பிறகு பிரகலாதன் பலவித ஸ்தோத்திரங்கள் பாடி நரசிம்மரைக் குளிர்வித்தான். அந்த நர சிம்மர் பல தலங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில், குருவரெட்டியூர் அருகே அமைந்திருக்கும் கோனார் பாளையத்தில் மேற்கு முகமாக வீற்றிருக்கிறார், சொர்ண நரசிம்மர். இவருக்கு சுவாதி நட்சத்திரத்தன்று பானகம் கரைத்து நிவேதித்து, இங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் எண்ணிய காரியங்கள் உடனே கைகூடும் என்று கூறப்படுகிறது.சொர்ண லட்சுமி நரசிம்மரின் காயத்ரி மந்திரமான, ‘‘ஓம் வஞ்ர நாகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி; தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்’’ என்ற மந்திரத்தைத் தினமும் 12 முறை சொல்லி வந்தால் பதவி உயர்வும் சகல நலன்களும் உண்டாகும். மதுரை கள்ளழகர் கோயில் 18ம் படி காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி, இங்கு திருமாலின் அம்சமாகவும் கொண்டாடப்படுபவர். தமிழ்நாட்டில் அநேகமாக எல்லா மாவட்டங்களிலும் இவருக்கு கோயில்கள் உள்ளன. ஆங்காங்கு அவரவர் வழக்கப்படி பூஜை முறைகள் செய்யப்படு கின்றன.

கருப்பண்ண சுவாமி மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வமாக இங்கே கருதப்படுகிறார். இங்கு வந்து இவர் முன்னிலையில் பக்தர்கள் தங்களுக்குள் ஏற்படும் வம்பு, வழக்குகளைச் சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்வதைக் காணலாம். கருப்பண்ண சுவாமிக்கு உகந்த நைவேத்தியம், சர்க்கரைப் பொங்கல். உகந்த காணிக்கை குதிரைச் சிலையும் அரிவாள், ஈட்டி, மணி போன்றவையும் ஆகும். இவருக்குப் பொங்கல் படைக்கும்போது, இங்குள்ள ஏழு கன்னிமார்களுக்கும் சேர்த்துப் படைக்க வேண்டும். ஆடி அமாவாசை, ஆடிப்பதினெட்டு ஆகிய தினங்கள் கருப்பண்ண சுவாமிக்கு மிகவும் உகந்த நாட்கள். இந்த தினங்களில் பக்தர்கள் வேண்டிக்கொண்டு நேர்ச்சை வைத்தால், அடுத்த ஆண்டில் அதே நாளுக்குள் வேண்டுதல் நிறைவேறி விடும் என்று சொல்கிறார்கள். கோனார்பாளையம் சொர்ண நரசிம்மர் ஆலயத்தில் அனுமனுக்கும் தனி சந்நதி அமைந்துள்ளது.

ஐந்து முகங்களை கொண்ட ருத்ரனுடைய அவதார மாக அனுமன் தோன்றியதால்தான் அனுமனை ஐந்து முகங்களுடன் வழிபடுகிறோம். கிழக்கு பக்கம் அனுமன் முகம், மேற்கில் கருடன், வடக்கில் வரா கம், தெற்கில் நரசிம்மம், மேல்நோக்கி குதிரை முகம் என்று ஐந்து முகங்களுடன் கோயிலின் கோபுரத்தில் அவர் தரிசனம் தருவதை காணலாம். இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதல்கள் நிறைவேற வெள்ளை காகிதத்தில் ‘ஸ்ரீ ராமஜெயம்’ என்ற ராம மந்திரத்தை எழுதி, அதனுடன் தேங்காய் ஒன்றையும் சேர்த்து கோயில் அர்ச்சகரிடம் கொடுக்கின்றனர். அவற்றை ஆஞ்சநேயரின் பாதங்களில் வைத்துப் பூஜை செய்வதன் மூலம் பக்தர்களின் வேண்டுகோள் நிறைவேறுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இவ்வாலயத்தில் மிக நீண்ட பிராகாரம் பலவிதமான தெய்வ சந்நதிகளோடு காணப்படுகின்றது. கிருஷ்ணருக்கு கருவறைக் கோபுரத்தோடு கூடிய தனி சந்நதி விசாலமாக அமைந்துள்ளது. கோயிலின் இடதுபுறத்தில் நந்தவனம் இருக்கிறது. அதில் கோபியர் புடை சூழ கோபால கிருஷ்ணனின் அற்புதமான வண்ணச் சிலை காணப்படுகின்றன. வெளிப் பிராகாரத்தைச் சுற்றி வந்தால் ராகு-கேது, சப்த மாதாக்கள், விநாயகர், முருகர் மற்றும் நவகிரகங்கள் ஆங்காங்கே அருள்பாலித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். மொத்தத்தில் சொர்ண நரசிம்மரின் இந்த ஆலயத்தில் அனைத்து தெய்வங்களையும் ஒருசேர வழிபட்டு மனநிம்மதி பெற்று வரலாம். ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், குருவரெட்டியூர் அருகே மூன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, கோனார்பாளையம். பவானியிலிருந்தும், ஈரோட்டிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum