நவ கிரகங்களில் சுக்கிரனும் பரிகாரமும்
Page 1 of 1
நவ கிரகங்களில் சுக்கிரனும் பரிகாரமும்
ஒருவர் சுகமான வாழ்க்கை வாழ்வதைக் கண்டாலும், எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வந்தாலும், யாரையாவது காதலித்தாலும் அவனுக்கென்ன சுக்கிரன் உச்சத்தில் உள்ளான் என்றும், சுக்கிர திசை நடக்குதோ என்னவோ என்றும் கூறுவது உண்டு. இவ்வுலகில் உள்ள சகல இன்பங்களையும் ஒருவர்அனுபவிக்க வேண்டுமேயானால் அவருக்கு சுக்கிரன் பலமாக அமைந்திருப்பது மிகவும் அவசியமாகும். சுக்கிரன் பலமாக இருந்தால் மட்டுமே அவருக்கு சொகுசான வாழ்க்கை அமையும். அசுர குரு, களத்திர காரகன், சுக காரகன், வண்டிவாகன காரகன் என பல பெயர்களும் சுக்கிரனுக்கு உண்டு. சுக்கிரன் காதலையும், காமத்தையும் உண்டாக்குவதில் முக்கியமான பங்கை வகிக்கிறார். சுக்கிரன் பலமின்றி அமைந்துவிட்டால் இவ்வாழ்வில் சோதனை, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்பு, முன்னேற்றத் தடைகள் என எல்லாவகையிலும் அசுப பலனையே சந்திக்க நேரிடுகிறது. எனவே இவ்வுலகில் உள்ள அனைத்து இன்ப சுகவாழ்விற்கும் வித்தானவராக சுக்கிரன் கருதப்படுகுறார்.
சுக்கிரனின் உச்ச வீடு மீனம், நீச வீடு கன்னி, பகை வீடுகள் கடகம், சிம்மம். ஆட்சி வீடுகள் ரிஷபம், துலாம், நட்பு வீடுகள் மகரம் கும்பம் ஆகும். சுக்கிர திசை 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரனுக்கு நட்பு கிரகங்கள் புதன், சனி, ராகு, கேது சம கிரகங்கள் செவ்வாய், குரு, பகை கிரகங்கள் சூரியன், சந்திரன் ஆகும். சுக்கிரன், பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதியாவார். சுக்கிரனின் திசை தென்கிழக்கு, சுவை இனிப்பு, கிழமை வெள்ளி, தெய்வம் சுகீர்த்தி.
சுக்கிரனின் காரகத்துவங்கள்,
சுக்கிரன் களத்திரம், செல்வம், வாகனம், ஆடை ஆபரணங்கள் காமம், வாசனை பொருட்கள், கட்டில், மெத்தை, கவிதை, விவாகம், கப்பல் வியாபாரம், ஹோட்டல், பால் தயிர் மீது பிரியம், பாக்குமரம், மந்திரித்துவம், மற்ற பெண்களின் சேர்க்கை, உடல் உறவு, சுருண்ட தலைமுடி போன்றவற்றிற்கு காரகனாகிறார். சிற்றின்ப நோய்கள், சர்க்கரை வியாதி, சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் நோய், ராஜ பிளவை, வீரியமின்மை, ஆண், பெண் குறியில் ஏற்படக்கூடிய நோய்கள் போன்றவற்றிற்கும் சுக்கிரன் காரகனாகிறார். முல்லை மலர், வெண்தாமரை, பனி போன்ற வெண்மையான நிறத்தை கொண்டவர் சுக்கிரனாவார்.
சுக்கிரன் மீன ராசியில் 27 பாகையில் உச்சம் பெறுகிறார். கன்னியா ராசியில் 27 பாகையில் நீசம் பெறுகிறார். சுக்கிரன் ஒரு ராசியை விட்டு கடந்து செல்ல 1 மாதம் ஆகியறது.
சுக்கிரன் தான் நின்ற இடத்திலிருந்து 7ம் வீட்டை பார்வை செய்கிறார். சுக்கிரனின் பார்வை ஏற்றமிகுப் பலன்களை உண்டாக்கும்.
களத்திர காரகனாகிய சுக்கிரனை சனி பார்வை செய்தால் குடும்பத்தில் ஓற்றுமை குறையும். சுக்கிரனும் குருவும் இணைந்து 8 ல் அமைந்தால் கணவன், மனைவி இருவருக்கும் ஒற்றுமை குறைவு உண்டாகி பிரிய நேரிடும். சுக்கிரனும் 7ம் வீட்டாதிபதியும் அசுபகிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்றால் களத்திர தோஷம் உண்டாகிறது. இது மட்டுமின்றி சுக்கிரனுக்கு இருபுறமும் அசுபர்கள் அமைவதும் களத்திர தோஷமாகும்.
அசுபர்களுக்கு குருவாக இருக்கக்கூடிய சுக்கிரன் குருவுக்கு அடுத்தப்படியான சுபகிரகமாவார். இவர் ஜெனன ஜாதகத்தில் கேந்திராதிபதியாகி திரிகோணத்தில் இருந்தாலும், திரிகோணாதிபதியாகி கேந்திரத்தில் இருந்தாலும் சுபயோகத்தை அள்ளித் தருவார். சுக்கிரன் விபரீத ராஜயோகம் பெற்றால் சினிமா, டிராமா, கூத்து, நடனம், சங்கீதம், அரசியல், பெண்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.
சுக்கிரன் ஒரு ராசியில் சஞ்சரிக்கும்போது 10 பாகை முதல் 20 முடிய சஞ்சரிக்கும் காலத்தில் நற்பலன்கள் உண்டாகின்றன.
சுக்கிரனால் ஏற்படக் கூடிய யோகங்கள்
மாளவியா யோகம், லட்சுமி யோகம், பிருகு மங்கள யோகம்
மாளவியா யோகம்,
சுக்கிரன் ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரம் பெறுவது. இதனால் நீண்ட ஆயுள், வீடு, மனை, பூமி சேர்க்கை குடும்பத்திற்கு தேவையான அதிநவீன பொருட்களின் சேர்க்கை, செல்வம், செல்வாக்கு சேரும் நிலை, சந்தோஷமான வாழ்க்கை போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
லட்சுமியோகம்,
சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியோ, உச்சமோ பெற்று சஞ்சரிக்கும்போது உண்டாவது. இதனால் புகழ் பெருமை செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய யோகம் உண்டாகும்.
பிருகு மங்கள யோகம்,
சுக்கிரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அமையப் பெறுவது. இதனால் வீட்டு மனை, வண்டி, வாகனம், ஆடை, ஆபரணம் போன்ற யாவும் சேரும்.
சுக்கிர ஓரையில் செய்யக்கூடியவை,
எல்லா நல்ல காரியங்களையும் செய்யலாம். பெண் பார்த்தல், நகைகள் வாங்குதல், வீடு, மனை வாங்குதல், வாகனம் வாங்குதல், விருந்துண்ணல் திருமணம் பற்றி பேசுதல், சினிமா மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல், மனைவி, உற்றார் உறவினர்களோடு இனிமையாக கலந்துரையாடல்,உடல் உறவு ஆகியவற்றை சுக்கிர ஓரையில் செய்வது நல்லது.
கலைத்துறையில் நிலையான புகழைப் பெற சுக்கிரன் ஆட்சி பெற்று, உச்சம் பெறுவதும், குரு பார்வை பெறுவதும் மிகவும் அவசியமானதாகும். ஆட்சி உச்சம் பெற்று குரு பார்வையுடன் அமைந்துவிட்டால் கலைத்துறையில் புகழின் உச்சிக்கே சென்றுவிட முடியும்.
சுக்கிரன் சூரியனுக்கு முன் பின் 8 டிகிரி இருக்கும் போது அஸ்தங்கம் அடைகிறார். அப்படி அமையப்பெற்றால் மண வாழ்வில் பிரச்சினை, ஈடுபாடற்ற நிலை, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிக்கும் அமைப்பு ஏற்படும்.
சூரியனுக்கு 29 டிகிரியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 26 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ர நிவர்த்தியடைகிறார். சுக்கிரன் ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை சுமார் 42 நாட்கள் வக்ரமடைவார்.
7ல் சுக்கிரன் அமைந்தால் உண்டாகக்கூடிய பலன்கள்
ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடு, இல்வாழ்வு, இன்பம், மனைவி, ஆசை போன்றவற்றை பற்றி குறிப்பிடுவதாகும். சுக்கிரன் 7ல் சுபர் வீட்டில் அமைந்து சுபர் பார்வை பெற்றால் அழகிய மனைவியும், மனைவியால் பல வகையில் முன்னேற்றமும், மனைவி நல்ல குணவதியாக அமையும் யோகம் உண்டாகும். அதுவே 7ல் உள்ள சுக்கிரன் அசுபர்களின் சேர்க்கை பெற்றிருந்தால் சிற்றின்ப விஷயங்களில் வல்லவராக திகழக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
7 ல் சுக்கிரன் செய்வாயுடனிருந்தால் மனைவியின் மீது வெறுப்பு ஏற்படும். மற்ற பெண்களின் தொடர்பு அதிகரிக்கும். 7 ல் உள்ள சுக்கிரன் பகை நீசம் பெற்றிருந்தால் இல்வாழ்க்கையே பாலைவனமாக மாறும். வாழ்க்கை துணைக்கு தீராத வியாதிகள் ஏற்பட்டு இழக்க வேண்டிய அவலம் ஏற்படும். அல்லது பிரிவு, விவாகரத்து போன்றவற்றால் நிம்மதி குறையும். 7 ல் சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் தரம் தாழ்ந்தவர்களுடன் தகாத உறவு ஏற்பட்டு மரியாதையை இழக்க நேரிடும். சுக்கிரன் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால் அவருக்கு காமவெறி அதிகமாக இருக்கும். 7 ல் சக்கிரன் சனி செவ்வாயுடன் சேர்க்கை பெற்றால் மணவாழ்க்கை அமைவதில்லை. அப்படி அமைந்தாலும் புத்திர பாக்கியமோ, மகிழ்ச்சியான வாழ்வோ உண்டாவதில்லை.
சுக்கிரனை குரு பார்வை செய்வதால் ஒன்றுக்கும் மேற்பட்ட களத்திரம் உண்டு. தேவர்களுக்கெல்லாம் குரு பிரகஸ்பதி. அது போல அசுரர்களுக்கெல்லாம் குரு சுக்கிரனாவார்.
சுக்கிரனின் வழிபாட்டு ஸ்தலங்கள்,
கஞ்சனூர், திருநாவலூர், ஸ்ரீரங்கம்
கஞ்சனூர்,
மகாவிஷ்ணு தன் சுக்ரதோஷம் நீங்க இங்குள்ள ஸ்ரீஅக்னீஸ்வரரையும், கற்பகாம்பாளையும் வணங்கி நன்மை பெற்றார். வெள்ளிக்கிழமைகளில் வெள்ளைநிற மலர்களால் இங்கு வழிபாடு செய்வது நல்லது. இந்த ஸ்தலம் சூரியனார் கோவிலில் இருந்து கிழக்கே 6 கி.மீ. தொலையவில் உள்ளது.
திருநாவலூர்,
சுக்கிரன் பூஜித்து வரம் பெற்ற ஸ்தலமாகும். இது பண்ருட்டி ரயில் நிலைதிலிருந்து 15 மைல் தொலைவில் உள்ளது.
ஸ்ரீரங்கம்,
பெரிய கோவில் என்று குறிப்பிடப்படும் திருப்பதியம் இது என்று குறிப்பிடப்படுகிறது. ஸ்ரீரங்கத்தின் விமானத்திற்கு ப்ரணவ விமானம் என்று பெயர். இந்த விமானத்தை தரிசித்தாலே சகல பாவங்களும் விலகும். சுக்கிரன் வழிபட்டு வரம் பெற்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. சுக்கிரனால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீரங்கம் சென்று அரங்க நாதரை வழிபட்டால் பல நன்மைகள் ஏற்படும்.
சுக்கிரனை வழிபடும் முறைகள்,
வெள்ளிக்கிழமைகளில் விரத மிருந்து மஹா லட்சுமி தேவிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, வெண்மை நிற தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்தல்.
துர்க்கை அம்மனை வழிபாடு செய்தல், துர்க்கா பூஜை செய்தல், ஸ்ரீசரக்ம், தேவிதுதிபாடல்கள், துர்க்கா சாலிஸா போன்றவற்றை பாராயணம் செய்தல்.
6 முகருத்ராட்சை அணிதல். வைரக்கல் பதித்த மோதிரம் அணிவது,
பட்டாடை, மொச்சை பயிர், தயிர், பாலாடை கட்டி, வாசனைப் பொருட்கள், சர்க்கரை,, சூடம், ஆடை, அரிசி போன்றவற்றை வெள்ளியன்று மாலை வேளையில் ஏழைப் பெண்ணுக்கு தானம் செய்தல்.
வெண்ணிற உடைகள்,கைகுட்டைகள் பயன்படுத்துதல், வெள்ளைமலர்களை சூடுதல், வெள்ளிப் பாத்திரங்களை பயன்படுத்துதல்,
ஓம் தீரம் த்ரிம் ட்ரௌம் சஹ சுக்ர பகவதே நமஹ எனும் பிஜ மந்திரத்தை 40 நாட்களுக்குள் 20000 தடவை அதிகாலையில் பாராயணம் செய்யும்.
பசுவுக்கு அகத்தி கீரை கொடுப்பது நல்லது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சமையலும் சுக்கிரனும்
» சமையலும் சுக்கிரனும்
» சுக்கிரனும் கேதுவும்
» மாதங்களுக்கு ஏற்ப பலனும் பரிகாரமும்
» திருட்டும் பரிகாரமும்
» சமையலும் சுக்கிரனும்
» சுக்கிரனும் கேதுவும்
» மாதங்களுக்கு ஏற்ப பலனும் பரிகாரமும்
» திருட்டும் பரிகாரமும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum