தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருட்டும் பரிகாரமும்

Go down

திருட்டும் பரிகாரமும் Empty திருட்டும் பரிகாரமும்

Post  birundha Fri Mar 22, 2013 6:07 pm

புலால் உண்ட காலத்திலும், அதற்கு முன்னாலும், நான் செய்த வேறு சில தவறுகளையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இவை விவாகத்திற்கு முன்போ, விவாகமான உடனேயோ நடந்தவை. நானும் என் உறவினர் ஒருவரும் புகை பிடிப்பதில் விருப்பம் கொண்டோம். சிகரெட் பிடிப்பதில் நல்லது உண்டு என்று நாங்கள் கண்டதோ, சிகரெட் புகையின் வாசனை எங்களுக்கு பிரியமாக இருந்ததோ இதற்கு காரணம் அல்ல. எங்கள் வாய்களிலிருந்து ஏராளமாகப் புகை விடுவதில் ஒருவகையான இன்பம் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டோம். என் சிற்றப்பாவுக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. அவர் புகை பிடிப்பதைப் பார்த்தபோது நாங்களும் அவரைப்போல் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எங்களிடம் காசு இல்லை. ஆகவே, என் சிற்றப்பா பிடித்துவிட்டுப் போடும் சிகரெட்டுத் துண்டுகளைத் திருடி உபயோகிக்க ஆரம்பித்தோம்.

ஆனால், சிகரெட்டுத் துண்டுகள் எப்பொழுதும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிலிருந்து அதிகப் புகை வருவதும் இல்லை. ஆகவே, பீடி வாங்க வேலைக்காரன் பணத்திலிருந்து காசு திருடக் கிளம்பினோம். ஆனால் பீடியை வாங்கி எங்கே வைப்பது என்று பிரச்சனை வந்தது. பெரியவர்கள் முன்னிலையில் நாங்கள் பீடி பிடிக்க முடியாது. சில வாரங்கள் வரையில் திருடிய காசுகளைக் கொண்டே ஒருவாறு சமாளித்துக் கொண்டோம். இதற்கு மத்தியில் ஏதோ ஒரு செடியின் தண்டு, துவரங்கள் உள்ளது என்றும், சிகரெட்டைப் போல அதைப் பிடிக்கலாம் என்று கேள்விப்பட்டோம். அதைத் தேடிப் பிடித்து இந்த வகையான புகை பிடிக்கலானோம்.

இவை போன்றவைகளினாலெல்லாம் எங்களுக்குத் திருப்தி உண்டாகவே இல்லை. எங்கள் இஷ்டம் போல் செய்ய எங்களுக்கு சுதந்திரம் இல்லையே என்று உணர்ச்சி மனத்தில் எழுந்தது. பெரியவர்களின் அனுமதியில்லாமல் எதையும் நாங்கள் செய்ய முடியாதிருந்தது., பொறுக்க முடியாததாகத் தோன்றியது. கடைசியாக வாழ்வே முற்றும் வெறுத்துப் போய் தற்கொலை செய்து கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டோம்

ஆனால் தற்கொலை செய்து கொள்ளுவது எப்படி ? விஷம் எங்கிருந்து எங்களுக்குக் கிடைக்கும் ? ஊமத்தம் விதை சரியான விஷமுள்ளது என்று கேள்வியுற்றோம். அவ்விதையைத் தேடிக் கொண்டு காட்டுக்குப் போய் அதைக் கொண்டு வந்துவிட்டோம். மாலை நேரம் இதற்கு நல்லவேளை என்று முடிவாயிற்று. கேதார்ஜி கோயிலுக்கு போய் அங்கே விளக்குக்கு நெய் வார்த்தோம், சுவாமி தரிசனம் செய்து கொண்டோம். பிறகு ஒதுக்குப் புறமான ஒரு மூலைக்குப் போனோம். ஆனால் எங்களுக்குத் துணிச்சல் வரவில்லை. உடனேயே செத்துப் போகாமல் இருந்து விட்டால் ? அதோடு தற்கொலை செய்து கொள்ளுவதால் தான் என்ன நன்மை ? சுதந்திரமின்மையைத்தான் ஏன் சகித்துக் கொள்ளக் கூடாது ? என்றாலும் இரண்டு, மூன்று விதைகளை விழுங்கிவிட்டோம்.. இன்னும் அதிகமாகத் தின்னத் தைரியமில்லை. எங்கள் இருவருக்கும்மே சாவதற்கு பயம். மனத்தைத் தேற்றிக்கொள்ள ராம்ஜி கோயிலுக்குப் போய் தற்கொலை எண்ணத்தையே விட்டுவிடுவது என்று முடிவு செய்தோம்.

தற்கொலை செய்துகொள்ள எண்ணுவதைப் போலத் தற்கொலை செய்து கொண்டு விடுவது அவ்வளவு எளிதானதே அல்ல என்பதைப் புரிந்துக் கொண்டேன். அதிலிருந்து, யாராவது தற்கொலை செய்துகொள்ளுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் அறிந்தால், நான் கொஞ்சமும் பயப்படுவதே இல்லை. தற்கொலை எண்ணத்தினால் முடிவாக ஒரு நன்மையும் உண்டாயிற்று. துண்டுச் சிகரெட்டுகளைப் பொறுக்கிப் புகை பிடிக்கும் வழக்கத்தையும், புகை பிடிப்பதற்காக வேலைக்காரனின் காசைத் திருடுவதையும் நாங்கள் இருவரும் விட்டுவிட்டோம்.

நான் வயதடைந்துவிட்ட பின்பு, புகைப் பிடிக்கவேண்டும் என்று விரும்பியதே இல்லை. புகை பிடிக்கும் பழக்கம், காட்டு மிராண்டித்தனமானது. ஆபாசமானது, தீமையை விளைவிப்பது என்று நான் எப்பொழுதும் கருதி வந்திருக்கிறேன். உலகம் முழுவதிலும் புகை பிடிப்பதில் இவ்வளவு வெறி ஏன் இருக்கிறது என்பது விளங்கவே இல்லை. புகை பிடிப்பவர்கள் நிரம்பிய வண்டியில் பிரயாணம் செய்யவே எனக்குச் சகிப்பதில்லை எனக்கு மூச்சுத் திணறி விடுகிறது.

இந்தத் திருட்டையும்விட மிக மோசமான ஒன்று, அதற்குச் கொஞ்சம் பின்னால் நான் செய்த குற்றமாகும். பன்னிரெண்டு அல்லது பதின்மூன்று வயதிருக்கும்போது காசுகள் திருடினேன், வயது எனக்கு இன்னும் குறைவாகவே இருந்திருக்கலாம். நான் செய்த மற்றொரு திருட்டோ, எனக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போது, இச்சமயம், மாமிசம் தின்னும் என் அண்ணனின் கைக்காப்பிலிருந்து கொஞ்சம் தங்கத்தைத் திருடினேன். இந்த கையில் கெட்டித் தங்கக் காப்பு அணிந்திருந்தார். அதிலிருந்து கொஞ்சம் தங்கத்தை வெட்டி எடுத்துவிடுவது கஷ்டமன்று.

சரி, அப்படியே செய்யப்பட்டது, கடனும் தீர்ந்தது. ஆனால், இக்குற்றம் என்னால் பொறுக்க முடியாததாயிற்று. இனித் திருடுவதே இல்லை என்று முடிவு கட்டிக் கொண்டேன். இக்குற்றத்தை என் தந்தையாரிடம் ஒப்புக் கொண்டு விடுவது என்றும் தீர்மானித்தேன். ஆனால், சொல்லத் துணிவு வரவில்லை. என் தந்தையார் என்னை அடிப்பார் என்று நான் பயப்படவில்லை. எங்களில் யாரையுமே அவர் அடித்ததாக எனக்கு ஞாபகமில்லை. அவருக்கு நான் உண்டாக்கக்கூடிய மனவேதனையைக் குறித்தே அஞ்சினேன். அதற்கும் துணிந்துதான் ஆகவேண்டும் என்று தோன்றியது. எல்லாவற்றையும் அவரிடம் சொல்லி விட்டாலன்றிப் பாவம் தீராது என்று கருதினேன்.

என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி என் தந்தையிடம் கொடுத்து, மன்னிப்புக் கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில் நான் என் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்ததோடு அதற்குக் தக்க தண்டனையை எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்திற்காக அவர் தம்மையே தண்டித்துக் கொள்ள வேண்டாம் என்றும் முடிவில் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இனிமே திருடுவது இல்லை என்றும் நான் பிரதிக்ஞை செய்து கொண்டேன்.

குற்றத்தை ஒப்புக்கொண்டு எழுதியிருந்த காகிதத்தை என் தந்தையாரிடம் நான் கொடுத்தபோது என் உடலெல்லாம் நடுங்கியது. அப்பொழுது அவர் பவுந்திர நோயினால் பீடிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தார். சாதாரண மரப்பலகையே அவர் படுக்கை. என் கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, அப்பலகைக்கு எதிரில் உட்கார்ந்தேன்.

அவர் முழுவதையும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்து காகிதத்தை நனைத்தது. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு சிந்தித்தார். பிறகு கடிதத்தைக் கிழித்தெறிந்தார். அக்கடிதத்தைப் படிப்பதற்காக எழுந்து உட்கார்ந்தவர், திரும்பவும் படுத்துக் கொண்டார். நானும் கதறி அழுதேன். என் தந்தையார் அனுபவித்த வேதனையை நான் காண முடிந்தது. நான் ஓவியக்காரனாக இருந்தால் அக்காட்சி முழுவதையும் இன்று சித்திரமாக எழுதிவிட முடியும். அது இப்பொழுதும் மனத்தில் தெளிவாக இருந்து வருகிறது.

முத்துப்போன்ற அந்த அன்புத்துளிகள் என் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி, என் பாவத்தையும் அலம்பிவிட்டன. அத்தகைய அன்பை அனுபவித்தவர்கள் மட்டுமே, அது இன்னது என்பதை அறிய முடியும். அன்புக் கணைகளினால் எய்யப்பட்டவன் எவனோ, அவனே அறிவான் அதன் சக்தியை என்று ஒரு பாடலும் கூறுகிறது. அகிம்சா தருமத்தை அறிவதற்கு இது எனக்குச் சரியானதோர் பாடமாயிற்று. இதில் தந்தையின் அன்பைத் தவிர வேறு எதையும் நான் அப்பொழுது காணவில்லை. ஆனால், இன்றோ, அதுதான் சுத்தமான அகிம்சை என்று அறிகிறேன். அத்தகைய அகிம்சை எல்லாவற்றிலும் வியாபிப்பதாகி விடும்போது. அது தொட்டதையெல்லாம் தன்மயமாக்கி விடுகிறது. அதனுடைய சக்திக்கு ஓர் எல்லையே இல்லை.

இவ்விதமான உயர்வான மன்னிக்கும் குணம் என் தந்தைக்கு இயல்பானதன்று. கோபமடைவார், கடுஞ்சொற்களைக் கூறுவார், தலையில் அடித்துக் கொள்ளுவார் என்றெல்லாம் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவரோ அவ்வளவு அற்புதமாக அமைதியுடன் இருந்தார். மறைக்காமல் எல்லாவற்றையும் நான் ஒப்புக்கொண்டதே இதற்குக் காரணம் என்று நம்புகிறேன். மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தைச் செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்காகச் சரியான வகையில் வருத்தப்படுவதாகும். என் குற்றத்தை நான் ஒப்புக் கொண்டுவிட்டது, என்னைப் பற்றிக் கவலையே இல்லை என்று என் தந்தையாரை உணரும்படி செய்தது என்பதை அறிவேன். என் மீதுள்ள அவரது அன்பையும் அளவு கடந்து அதிகரிக்கும்படி இது செய்தது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum