தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூண்டி சித்தர்

Go down

பூண்டி சித்தர் Empty பூண்டி சித்தர்

Post  amma Sat Jan 12, 2013 5:45 pm


பூண்டி மகானின் பிறப்பு. வளர்ப்பு, பிறந்த ஊர், பெற்றோர் முதலிய விவரங்கள் யாருக்கும் தெரியாது. பர்வதமலை, காஞ்சிபுரம், கடலாடி, தென்மகாதேவமலை, வில்வாரணி முதலான இடங்களில் உடம்பின் மீது ஒன்றன் மேல் ஒன்றாய் ஐந்து சட்டைகளை அணிந்து கொண்டு, பரதேசியாய் பூண்டிசித்தர் திரிந்து கொண்டிருந்தார்.

கலசப்பாக்கத்தில் உள்ள செய்யாற்றில் சுவாமிகள் ஒருமுறை ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். அப்போது திடீரென பெய்த பேய்மழையின் காரணமாக செய்யாற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. ஆற்றின் இரு கரைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. யோகநிலையில் ஆழ்ந்திருந்த பூண்டி சுவாமிகளை ஆற்று வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விடக் கூடாதே என்னும் கவலையோடு அவரை பாதுகாக்க எண்ணி, ஒரு பெரிய கூடையை எடுத்து வந்து, அதைக்கொண்டு சுவாமிகளை மூடி வைத்தார்கள்.

அதற்கு பின்னர் வெள்ளம் வடியத் தொடங்கியது. அவர்கள் சுவாமிகள் இருக்குமிடத்தை தேடிவந்து பார்த்தபொழுது அங்கே மணல்மேடு மட்டுமே காணப்பட்டது. சுவாமிகள் வெள்ளத்தோடு போய்விட்டாரோ என்னும் கவலையில் அவர்கள் புலம்பத் தொடங்கினார்கள். இருப்பினும், சிலர் அம்மணல் மேட்டை நெருங்கி வந்து, விலக்கிப் பார்த்தார்கள்.

அதனுள்ளே சுவாமிகள் ஆடாமல் அசையாமல் நிர்விகற்ப சமாதியில் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி கொண்டார்கள். ஆனால் அவரது ஜடத்தன்மையைக் கண்ட அவர்கள் உண்மை நிலையை உணராமல் சுவாமிகள் உயிரோடு இருப்பதை அறியாமல் அவர் இருந்த நிலையிலேயே வைத்து இறுதிக் காரியங்களை செய்ய ஆரம்பித்தார்கள்.

அப்போது தம் சமாதிநிலையில் இருந்து பூண்டி சுவாமிகள் விடுபட்டு எழுந்து வந்தார். அவரது ஆன்மிக சக்தியை உணர்ந்து கொண்ட அன்பர்கள், தங்கள் அறியாமையை எண்ணி, சுவாமிகளை தூக்கிக் கொண்டு ஆற்றின் கரைக்கு வந்து அமர்த்தி, அபிஷேகம் செய்து மகிழ்ந்தார்கள். அன்று முதல் அவர் `ஆற்றுச்சாமிகள்' என அனைவராலும் வழங்கப்பட்டார்.

ஆற்றுச் சுவாமிகளாக அங்கு வாழ்ந்த காலத்தில் அவர் நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஏராளம். ஒருசமயம் அவர் செய்யாற்று மணலில் கடும் வெயிலில் அமர்ந்து கொண்டிருந்தார். அச்சமயம் அவரிடம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த பெண்மணி ஒருத்தி தனது கஷ்டங்களை சொல்லி அழுதுகொண்டு இருந்தாள்.

அதைக்கேட்டு மனமிரங்கிய சுவாமிகள், மறுமொழி ஏதும் சொல்லாமல் அந்த ஆற்றின் மணலிலிருந்து இரு சிறிய கற்களை பொறுக்கி எடுத்து அந்த அம்மையாரின் கைகளில் கொடுத்தார். ஆற்று மணலில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள் அவ்வம்மையாரின் கையில் விழுந்தபோது இரு வைரக்கம்மல்களாக மாறிவிட்டன.

அதைக்கண்ட அப்பெண்மணி திகைப்பும், அதிர்ச்சியும் அடைந்து சுவாமிகளை பார்த்து பேசமுடியாமல் நின்றிருந்தார். அப்போது சுவாமிகள், அவற்றை எடுத்துக்கொண்டு போய் வறுமை நீங்கி வாழ்வாயாக என்று ஆசியும் அருளும் கூறி அனுப்பி வைத்தார். சில காலத்திற்கு பின் ஆற்றுச் சுவாமிகள்' தாம் இருந்த செய்யாற்றின் கரையை விட்டு வெளியேறி கலசப்பாக்கம் அருகில் உள்ள பூண்டி என்னும் சிறிய கிராமத்திற்கு வந்தார்.

அங்கே உள்ள ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு மக்களுக்கு அருள் பாலிக்கத் தொடங்கினார். பூண்டிக்கு வந்து சேர்ந்த ஆரம்ப காலங்களில் சுவாமிகள், நான்கு வருடம் வரையில் உண்ணாமல், உறங்காமல் தாம் இருந்த இடத்தை விட்டு எழாமல் கடும் யோக நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்.

சுவாமிகள் பூண்டிக்கு வந்த புதிதில் அந்த வீட்டுத் திண்ணையின் மேற்கு பகுதியிலிருந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தார். பின்பு அவர் மூன்று வருடங்களுக்கு பிறகு அத்திண்ணையின் கிழக்குப் பகுதிக்கு இடம்மாறி வந்தமர்ந்தார். அந்த இடத்திலேயே நகராமல் பதினெட்டு வருடகாலம் இருந்து மக்களுக்கு நல்வழிகாட்டி உதவி வந்தார்.

சுவாமிகளுக்கு ஆறுகால பூஜை செய்து பணிவிடை செய்து மூன்று வேளை உணவையும் கொடுத்து சுப்பிரமணிய சுவாமி என்பவர் அருட்பணியாற்றி வந்தார். இவர் ஒருவரை தவிர வேறு எவரையும் தம்மைத் தொட்டு அபிஷேகம் செய்ய சுவாமிகள் ஒருபொழுதும் அனுமதித்ததே இல்லை.

ஒருநாள் இரவில் யாரும் எதிர்பாராத வேளையில், பழுத்த துறவியொருவர் சுவாமிகள் முன்னால் தோன்றி மரியாதையுடன் நின்றுகொண்டு, பணிவுடன் ``எங்கள் நிலைமை சுவாமி...'' என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார். அவர் அதைச்சொல்லி முடிப்பதற்குள் சுவாமிகள் ``நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம்; நான்பார்த்துக் கொள்கிறேன் என்று தம் திருவாய் மலர்ந்தருளினார்.

அதைக் கேட்டபின் அத்துறவியானவர் முற்றிலும் திருப்தியடைந்தவராய் உடனே மறைந்துவிட்டார். வந்திருந்த துறவி யார், அவர் சுவாமிகளிடம் என்ன உதவி கேட்டார் என்பது யாருக்கும் தெரியாது. இவர்போல வெளிநாட்டு துறவிகள் பலரும் சுவாமிகளைத் தரிசித்துச் சென்றதுண்டு. மேலைநாட்டுத் துறவி ஒருவர், சுவாமிகளைத் தேடி வந்து ``சுவாமி! தாங்கள் என்னிடம் எங்கள் நாட்டில் வந்து கொடுத்த தங்களின் விலாச கார்டைக் கொண்டு தங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் இவ்வளவு காலம் ஆகிவிட்டது, மன்னியுங்கள், என மனமுருகக் கூற வேண்டி'' நின்றார்.

அதைக்கேட்டு அனைவரும் மிகவும் வியப்புற்றனர். வந்துநின்ற துறவியாரோ அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். `அவரைச் சுவாமிகள் அவர் நாட்டிற்குச் சென்று நேரில் சந்தித்து வந்தாரா? சுவாமிதாம் இந்தச் சிறிய திண்ணையைவிட்டு எழுந்து எங்கும் சென்றதில்லையே! பின் இது எப்படி நடந்தது?' என எல்லோரும் யோசித்தார்கள். இதைவிட தமது `விசிட்டிங் கார்டை' அவரிடம் கொடுத்து, தம்மை வந்து சந்திக்கச் சொன்னதுதான் பேரதிசயமாய் இருந்தது.

அவரது அருளாட்சி மறைந்துவிடாமல் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டு வருகின்றது. ஒருமுறை,, பூண்டிக் கிராமத்தில் வாழ்ந்து வந்த சின்னு உடையார் என்னும் அன்பர் சுவாமிகளின் சமாதி அருகே படுத்துறங்கிக் கொண்டிருந்தார்.

அவர், இரவு சுமார் ஒரு மணி அளவில் பூண்டி மகான் அடங்கி இருந்த சமாதியைச் சுற்றிச் சித்தர்களும், அருளாளர்களும் தமது சூட்சும வடிவுடன் வந்திருந்து, `ஈஸ்வரா, ஈஸ்வரா...!' என்று கூறி வழிபடும் காட்சியைக் கண்டார். அதற்குப் பின்னர் அவர்களுக்கு இடையூறு தராமல் இருக்க வேண்டி, அவர் சமாதிக்கு மிக அருகில் படுக்காமல் தள்ளிப் படுக்கத் தொடங்கினார்.

இன்றும் தம்மை நினைத்து அன்போடு வழிபட்டு அழைக்கும் அன்பர்களுக்கு சுவாமிகள் தமது சூட்சும உருவில் காட்சிதந்து அருள் செய்து இன்னல்களைத் தீர்த்து வருகின்றார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum