தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

10 லட்சம் பேர் திரளும் தசரா திருவிழா

Go down

10 லட்சம் பேர் திரளும் தசரா திருவிழா Empty 10 லட்சம் பேர் திரளும் தசரா திருவிழா

Post  birundha Sun May 26, 2013 3:14 pm


தசரா திருவிழா உலகப் புகழ்பெற்ற ஒரு திருவிழாவாகும். கர்நாடக மாநிலம் மைசூரில் இந்த திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மைசூருக்கு அடுத்தப்படியாக குலசேகரப்பட்டினத்தில்தான் தசரா திருவிழா மிகவும் கோலாகலமாக நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டமே குலுங்கும் வகையில் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவுக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் பக்தர்கள் வரை திரள்வார்கள். தசரா திருவிழா தினத்தன்று குலசேகரப்பட்டினம் கடற்கரையில் சுமார் 4 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சியளிக்கும்.

சுமார் 500-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் விதம், விதமான வேடத்தில் வந்து குலசையை குதூகலப்படுத்துவார்கள். ஒவ்வொரு குழுவும் தனித்தனியாக மேளம் முழங்க வட்டம், வட்டமாக நின்று ஆடுவதை காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். உலகில் எங்குமே காண இயலாத விமரிசையான விழா இது.

ஆன்மீகமும், கிராமிய கலைகளும் ஒருங்கிணைந்த இந்த தசரா திருவிழா ஆண்டுக்கு ஆண்டு அதிக பக்தர்களை ஈர்த்து வருகிறது. குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். 10-வது நாள் விஜயதசமி தினத்தன்று மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி கடலோரத்தில் நடைபெறும். அன்றுதான் குலசைநகரம், மக்கள் வெள்ளத்தில் மிதக்கும்.

இந்தத் திருவிழாதான் குலசை முத்தாரம்மன் ஆலயத்தில் மிகவும் பிரசித்து பெற்ற திருவிழாவாக விளங்கி வருகிறது. இவ்விழா நடத்தப்படுவதற்கு காரணமாக ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. வெகு காலத்திற்கு முன்பு வரமுனி என்ற பெயருடைய முனிவன் ஒருவன் இருந்தான். தவ வலிமை மிகுந்து காணப்பட்ட அவன் ஆணவம் கொண்டவனாக இருந்தான். ஒருநாள் அவன் இருப்பிடம் வழியாக அகத்திய முனிவர் சென்றார்.

ஆனால் வரமுனி, தனது ஆணவத்தின் காரணமாக அவரை மதிக்கத் தவறினான். அதோடு அவரை இகழ்ந்து பேசி ஏளனமும் செய்தான். இதனால் அகத்தியர் கோபம் கொண்டார். எருமைத்தலையும், மனித உடலும் பெறக்கடவது என்று அவனுக்கு சாபம் விட்டார். அத்துடன் அம்பாளால் நீ அழிவாயாக என்றும் சபித்தார்.

அகத்தியர் முனிவரின் சாபம் பலித்தது. எருமைத்தலையும், மனித உடலுமாக வரமுனி மாறினான். எனினும் அவன் விடா முயற்சி செய்து, கடும் தவம் புரிந்தான். அதன்மூலம் பல வரங்களைப்பெற்றான். மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தினான். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இடையூறுகளை செய்யத் தொடங்கினான். நாளடைவில் அவன் அசுரனாகவே மாறிப்போனான்.

இதனால் மகிசாசுரன் என்று அழைக்கப்பட்டான். மகிசம் என்றால் எருமை என்று பொருள். சுரன் என்றால் அசுரன் என்று அர்த்தம். எருமைத்தலை கொண்ட அசுரன் என்பதால் மகிசாசுரன் என்ற பெயரே அவனுக்கு நிலைத்தது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்த அவனது தொல்லைகளால் தாங்க முடியாத இன்னல்களுக்கு முனிவர்கள் ஆளானார்கள்.

அன்னையை நோக்கி வேள்விகள் நடத்தினர். கடும் தவம் புரிந்து, மகிசாசுரனின் அக்கிரமங்களை நீக்கித் தருமாறு அன்னையிடம் வேண்டினர். முனிவர்களின் கடும் தவம் அன்னையின் மனதை இளகச் செய்தது. மாமுனிவர்களின் வேள்விக்கு மகிசாசுரனால் எந்தவொரு இடைïறும் ஏற்படாத வண்ணம், அதனைச் சுற்றிலும் பிரம்மாண்டமான அரண் ஒன்றை அன்னை அமைத்துத் தந்தாள்.

இதனால் பெரிதும் மகிழ்ந்துபோன முனிவர்கள் தங்கள் வேள்வியை முறைப்படி மிக சிறப்பாக நடத்தினர். அந்த வேள்வியின் பயனாய், அழகிய பெண் குழந்தை ஒன்று தோன்றியது. அதற்கு லலிதாம்பிகை என்று பெயர் சூட்டப்பட்டது. அந்தக் குழந்தை ஒன்பது நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து பத்தாம் நாள் அன்னை பராசக்தியின் வடிவினை எடுத்தது.

பின்னர் மகிசாசுரனின் கொடூர செயல்களுக்கு முடிவு கட்டும் விதமாக அவனை அழித்தாள் லலிதாம்பிகை. இந்தப் புனித நாள் தசரா பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னை பராசக்தி, வேள்வியில் வளர்ந்த ஒன்பது நாட்களும் நவராத்திரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இவ்விழாவின் முதல் மூன்று நாட்களும் மலைமகளுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அடுத்த மூன்று நாட்கள் அலைமகளுக்கும், கடைசி மூன்று நாட்கள் கலைமகளுக்கும் சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன. மகிசாசுரனை அன்னை வென்றதால் அவளை மகிசாசுரமர்த்தினி என்றழைக்கின்றனர். புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்கு மறுநாள் கொடியேற்றத்துடன் தசரா பண்டிகை கோலாகலமாகத் தொடங்கும்.

கொடியேற்ற நாளுக்கு முந்தைய இரவில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரத் தேவதைகளுக்கு காப்பு கட்டப்படும். முதல் நாளில் அம்பாள் துர்க்கை கோலத்தில் காட்சி தருவாள்.

இரண்டாம் நாள் விசுவ கர்மேஸ்வரர் கோலத்திலும், மூன்றாம் நாள் பார்வதி கோலத்திலும், நான்காம் நாள் பாலசுப்பிரமணியர் கோலத்திலும், ஐந்தாம் நாள் நவநீதகிருஷ்ணர் கோலத்திலும், ஆறாம் நாள் மகிசாசுரமர்த்தினி யாகவும், ஏழாம் நாள் ஆனந்த நடராசராகவும், எட்டாம் நாள் அலைமகள் கோலத்திலும், ஒன்பதாம் நாள் கலைமகள் கோலத்திலும் காட்சியளித்து வீதிஉலா வருகிறாள்.

பத்தாம் நாள் பிற்பகலில் தசமி திதியில் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், மகிசாசுர சம்ஹாரத்திற்காக கொண்டு செல்லப்படும் சூலத்திற்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற பிறகு, மகிசாசுரமர்த்தினி கோலம் கொண்டு, கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரேசுவரர் கோவில் வளாகத்தை நோக்கி அம்பாள் புறப்பாடு நடைபெறும்.

காளி வேடம் அணிந்த ஏராளமான பக்தர்களும் அன்னையுடன் அங்கு அணிவகுத்துச் செல்வார்கள். அங்குதான் மகிசாசுரவதம் நடைபெறும். பண்டிகையின் கடைசி கட்டமாக விஜயதசமி அன்று கடற்கரையில் மகிஷாசுர சம்காரம் நடைபெறும். காளி மகாகாளியான முத்தாரம்மன் உலக மக்களை பெரிதும் துன்புறுத்தி அநியாயங்கள் புரிந்து வந்த முத்தாரம்மன் மகிஷாசுரனை வதம் செய்யும் காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க செய்வதாக அமையும்.

முதலில் மகிசனின் தலையினை அம்பாள் கொய்துவிடுவாள். அடுத்து சிம்மத் தலையினையும், பின்னர் மகிசாசுரனின் தலையினையும் கொய்து வெற்றிக் கொடி நாட்டுவாள். உலகில் தர்மத்தைக் காத்து, அதர்மத்தை அடியோடு வீழ்த்த இந்த வதையை அம்பாள் செய்வதாக ஐதீகம். அதன்பிறகு மேடையில் அம்பாள் எழுந்தருளுவாள்.

இந்த வெற்றியைக் கொண்டாடும்விதமாக பக்தர்கள் வாணவேடிக்கை நடத்தி மகிழ்ச்சி கடலில் திளைப்பார்கள். இதனையடுத்து, சிதம்பரேசுவரர் ஆலயத்தை வந்தடையும் அன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அடுத்த நாள் அதாவது பதினோராவது காலை பூஞ்சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள் புரிவாள்.

மாலை கோவிலை அம்பாள் வந்தடைந்த பின்னரே, கொடி இறக்கப்படும். அதன்பிறகு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். இதேபோல காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளைக் களைந்து விடுவார்கள். இரவில் அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறும். 12-வது நாள் முற்பகலில் முத்தாரம்மனை குளிர்விப்பதற்காக குடம், குடமாக பாலாபிஷேகம் நடத்தப்படும்.

அத்துடன் தசரா விழா சிறப்பாக நிறைவடையும். தசரா திருவிழா நடைபெறும் நாட்களில் இக்கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பூஜைகள், சமயச் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை இடைவிடாமல் நடந்து கொண்டே இருக்கும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum