தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவபெருமான் பாத தரிசனம் அருளிய திருக்கோயில்

Go down

  சிவபெருமான் பாத தரிசனம் அருளிய திருக்கோயில் Empty சிவபெருமான் பாத தரிசனம் அருளிய திருக்கோயில்

Post  ishwarya Fri May 24, 2013 12:28 pm

விளமல்

சிவாலயங்களில் பாத தரிசனம் என்பது பக்தர்கள் இறைவனின் திருவடியைக் கண்டு வணங்கி அருள் பெற வேண்டும் என்பதற்காக ஏற்பட்டதாகும். இந்தப் பாத தரிசனம் பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகிய இரு ரிஷிகளுக்குத்தான் முதன் முதலில் கிடைத்தது. அப்படிக் கிடைத்த சிறப்புமிக்க ஆதி முதல் தலம்தான் விளமல் என்றழைக்கப்படும் திருவிளமல். இத்தலத்தை பதஞ்சலி மனோகரர் ஆலயம் என்பர். திருவாரூர் புராணத்தில் திருஞானசம்பந்தர் இக்கோயிலின் லிங்கத்தை வியந்து பாடியுள்ளார். தேவாரத்தில் திருநாவுக்கரசர் கயிலாயநாதரை எங்கெங்கு காணலாம் என குறிப்பிடும் பாடலில் விளமலைப் பற்றி குறிப்பு உள்ளது. மாணிக்கவாசகரும் தம் சிவபுராணத்தின் பல இடங்களில் விளமல் புகழ் பாடுகிறார்.

பரந்தாமனை எப்பொழுதும் தாங்கிக் கொண்டிருந்த ஆதிசேஷனுக்கு அன்றென்னவோ மகாவிஷ்ணு மிகுந்த பாரத்துடன் இருந்தார். மகா விஷ்ணுவிடமே ஆதிசேஷன் விளக்கம் கேட்க, ‘‘கலி பிறப்பதற்கு முன்னால் சிவத்தின் மகிமையை ரிஷிகள் அனைவரும் உணர வேண்டும். அவர்களால்தான் உலகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக சிவபெருமான் பிச்சாண்டியாகவும், மகாவிஷ்ணுவாகிய நான் மோகினிப் பெண்ணாகவும் வேடமிட்டோம். ரிஷிகளை நான் மயக்கி அவர்கள் என் பின்னால் வந்தபோது பிச்சாண்டியான சிவபெருமான் ஆனந்த நர்த்தனம் ஆடினார். அதைக் கண்டு நானும், முனிவர்களும், யோகிகளும் மெய்மறந்து நின்றுவிட்டோம். அந்தக் காட்சியை நினைத்துக் கொண்டிருந்ததால் நான் உனக்கு பாரமாகத் தோன்றுகிறேன்‘‘ என பதில் அளித்தார்.

உடனே, ஆதிசேஷன், தானும் சிவனின் நர்த்தனத்தைக் காண விரும்பித் தவம் இயற்றினார். சிவபெருமானும் அவர்முன் தோன்றி, அளித்த வரத்தின்படி அத்திரி முனிவர்-அனுசுயா தேவிக்கு பிள்ளையாக பதஞ்சலி என்ற பெயருடன் வியாக்ரபுரத்தில் பிறந்தார் ஆதிசேஷன். வியாக்ரபாதரோடு தில்லையில் மகாசிவனின் ஆனந்த நடனத்தைக் கண்டு பரவசப்பட்டார். பிறகு, பதஞ்சலியும் வியாக்ரபாதரும் சிவபெருமானிடம் அவருடைய அஜபா நடனத்தையும் ருத்ர தாண்டவத்தையும் காண விரும்புவதோடு, அவரது திருவடி தரிசனத்தையும் என்றென்றும் எல்லோரும் தரிசிக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டார்கள். அதைக் கேட்ட சிவன், அவ்விருவரையும் ஸ்ரீபுரம் எனும் திருவாரூர் செல்லப் பணித்தார். இதன்பிறகுதான் பதஞ்சலியும் வியாக்ரபாதரும் திருவாரூர் வந்தார்கள்.

ஊர் முழுவதும் சிவலிங்க சொரூபமாக இருப்பதைக் கண்டு பூரிப்படைந்த அவர்கள், திருவாரூர் கமலாம்பாளை வணங்கும் பொருட்டு பதஞ்சலி தன் உடலைப் பாம்பு வடிவமாகவும், வியாக்ரபாதர் புலிக் கால் கொண்டவராகவும் மாறினார்கள். சிவலிங்கங்கள் நிறைந்த ஊரில் தங்கள் பாதம் படக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு உருமாறினார்கள். அப்போது கமலாம்பாள் கூறியபடி, விளமல் என்னும் இடத்தில் பதஞ்சலி மண்ணால் லிங்கத்தைப் பிடித்து வைக்க, அவர்முன் சிவன் தோன்றினார். உடனே பதஞ்சலி தேவகாந்தாரி ராகத்தில் பாட, அந்தப் பாடலுக்கு சிவன் ‘அஜபா’ நடனம் ஆடி, இரு முனிவர்களுக்கும் திருவடி தரிசனம் தந்தார். இதனை மகாவிஷ்ணு, பிரம்ம தேவர், முசுகுந்த சக்ரவர்த்தி, தேவாதி தேவர்கள் அனைவரும் புடை சூழ நின்று தம் நிலை மறந்து கண்டு
களித்தார்கள்.

இது தவிர, செவிவழிச் செய்தியும் ஒன்று உண்டு. ஆனந்த நர்த்தனம் ஆடிய சிவபெருமான் தன்னுடைய சிவதனுசை மகாவிஷ்ணுவிடம் தந்தார். அதைப் பெற்றுக்கொண்ட விஷ்ணு ஆணவத்தில் திளைக்க, சிவபெருமான் அவரிடம் தன்னை முழுவதுமாகக் காணுமாறு கூறி விஸ்வரூபம் எடுத்தார். விஷ்ணு எவ்வளவு உயரம் பறந்தும் சிவனின் முடியைக் காணவே முடியவில்லை. பிறகு அவருடைய திருவடியைக் காண முயன்றார். அதுவும் எளிதில் முடியாமல் போகவே, வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து சென்றும் திருவடியைக் காண இயலவில்லை. தவறை உணர்ந்த மகாவிஷ்ணுவுக்கு சிவபெருமான் தன் திருவடியைக் காட்டிய இடம்தான் விளமல். அதனால்தான் இது ஆதிமுதல் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

ராஜநாகம் மிக அதிக விஷம் உடையது. சாதாரணமாக நாம் அதைக்கண்டு அஞ்சி ஓடுவோம். ஆனால் சிவனின் கழுத்தில் ஆபரணமாக இருக்கும்போது யாரும் அதற்கு அஞ்சுவது இல்லை. ஒருவர் இயல்பில் கொடூரமானவராகவே இருந்தாலும் சேரும் இடம் மதிப்புடையதாக இருந்தால் குணாதிசயம் மாறலாம் என்ற கருத்து இதனால் வலியுறுத்தப்படுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தும் வகையில் பதஞ்சலி முனிவரின் உருவம் இடுப்புக்கு கீழ்பகுதியில் பாம்பு சுற்றிக் கொண்டிருப்பது போலவும் அது முதுகுப்புறமாக ஏறி தலைக்கு மேலே தன் ஐந்து தலைகளையும் விரித்தபடியும் காட்சியளிக்கும். பதஞ்சலி, தேவர்களின் தலைவன் இந்திரனுக்கே குரு. சிவபெருமானின் ஒரு அம்சமான முருகனுக்கு ஆறாவது நெற்றிக் கண்ணாக இருப்பவர்.

இவரை புலிக்கால் முனிவர் என்றும் சொல்வார்கள். இவரின் உடல் இடுப்புக்கு கீழே புலியைப்போல் இருக்கும். புலி, விலங்குகளில் கொடூரமானது. தனக்குப் பசியில்லாவிட்டாலும் பிற மிருகத்தை அடித்துக் கொல்லும். அதைப்போல மனிதன் இயல்பில் முதலில் எவ்வளவுதான் கெட்டவனாக இருந்தாலும், பின்னர் மனம் திருந்தி பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, செய்த தவறுகளுக்கு வருந்துவான் என்றால் இறைவனின் அருள் கிட்டும் என்ற தத்துவத்தை இவரது உருவம் அறிவிக்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க ஆலயத்தில் பாத தரிசனம் முடிந்தபிறகுதான், ஆழித்தேர் உற்சவத்துக்கு உரிய தியாகராஜரின் திருவாரூர் பெரிய கோயிலில் பாத தரிசன நிகழ்ச்சி நடைபெறும். இங்கேயுள்ள உற்சவர் முன்னிலையில்தான், ஆழித் தேரோட்டத்துக்கு, திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் கொடியேற்றம் நடைபெறும்.

ஆலய முகப்பிலேயே அக்னி தீர்த்தத்தை காணலாம். திங்கட்கிழமை, அமாவாசை அல்லது சஷ்டி தினங்களில் தம்பதி சமேதராய் வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானுக்கு நெய்யிட்டு அன்னம் சாத்தி வழிபட்டால், புத்திர பாக்கியம் கிட்டும். ஒரு பிடி அன்னதானம் செய்தால் பல அசுவமேத யாகம் செய்த பலனைப் பெற முடியும். இந்த ஆலயம் சோழ மண்டலத்தில் அன்னதானக் கட்டளையாக தொன்று தொட்டு விளங்கி வந்துள்ளது. நுழைவாயிலின் இருபுறமுள்ள விநாயகர், சுப்ரமணியரை வணங்கிவிட்டு வெளிப் பிராகாரத்தில் நுழைகிறோம். அங்கேயுள்ள நந்தி வடகிழக்காக திரும்பி, அம்பாளின் விமான கலசத்தை நோக்கி இருப்பதால் நாமும் அதைக் கண்டு தரிசனம் செய்கிறோம். அதைக் கடந்து உள்பிராகாரம் சென்றால் தென்திசை நோக்கி க்ஷேத்ரகால பைரவர் அருளுகிறார்.

இந்த க்ஷேத்ரகால பைரவர் தனித்துவத்தோடு அருள்கிறார். நவகோள்களின் அதிபதியாக க்ஷேத்ரகால பைரவர் இருப்பதால் இங்கு நவகிரகம் கிடையாது. இவர் நவகோள்களைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டவர். இவரை தரிசனம் செய்பவர்களுக்கு நவகிரகங்கள் கெடுதல் செய்யாது. கருவறையில் ‘பதஞ்சலி மனோகரர்’ எனும் திருப்பெயரோடு ஈசன் அருளாட்சி நடத்துகிறார். அம்பாளின் அமுதமான திருப்பெயர் என்ன தெரியுமா? ‘யாழினுமென் மொழியாளம்மை’. வடமொழியில் மதுரபாஷினி, மஞ்சுளவாணி என்றும் அழைக்கப்படுகிறாள். சூரியனையும் சந்திரனையும் பிறையாகக் கொண்ட அம்பாள் மதுரபாஷினி, சக்தி பீடங்களில் வித்யா பீடமாக விளங்குகிறாள். தினமும் அம்பாளை வணங்கி வந்தால் கலைகள், கல்விகளில் பெயரும் புகழும், வளர்ச்சியும் பெருகும். இங்குள்ள ராஜ துர்க்கை, கையில் கிளியுடன் இருப்பதால் மதுரை மீனாட்சியின் அவதாரம் என்கிறார்கள்.

இத்தலத்திற்கு வந்து வழிபடுபவர்களின் நோய்கள், துயரங்கள் நீங்குவதால் எமனுக்கு வேலை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் எமசண்டிகேஸ்வரர், கையில் ஆயுதம் எதுவுமின்றி, மலர்களுடன் பூஜை செய்யும் கோலத்தில் வீற்றிருக்கிறார். ஆலயத்திற்குள் சித்தி விநாயகர், சுப்ரமணியர், மகாலட்சுமி, சூரியன், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோரை தரிசிக்கலாம். ஆலய மகா மண்டபத்தில் அமைந்துள்ள திருச்சபையில் பதினோராம் நூற்றாண்டு ஓவியங்கள் தீட்டப்
பட்டுள்ளன.

பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் தவம் இயற்றிய பிறகு இறைவன் தில்லையில் காட்சி கொடுத்தது, அம்பாள் ஞான தேவதையாகி கமலாம்பாளாக யோக நிலையில் இறைவனை எதிர்நோக்கி இருக்கிற காட்சி பிறகு அம்பாள் வித்யா தேவதையாகி விளமலில் எழுந்து நிற்கும் பரவசக் காட்சி ஆகியவை ஓவியங்களாக ஒளிர்கின்றன. வேறு சில ஓவியங்களில் தியாகராஜரின் திருவடிகளை பதஞ்சலியும், வியாக்ரபாதரும் தரிசனம் செய்கிறார்கள். அந்த கண்கொள்ளாக் காட்சியை விஷ்ணு, பிரம்மா, தேவேந்திரன், முசுகுந்தச் சக்ரவர்த்தி ஆகியோர் பார்த்து வணங்குகிறார்கள். திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கி.மீ தூரத்தில், தஞ்சை சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum