தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சீர் பெறுமா சித்தர் கட்டிய சிவன் கோயில்?

Go down

 சீர் பெறுமா சித்தர் கட்டிய சிவன் கோயில்? Empty சீர் பெறுமா சித்தர் கட்டிய சிவன் கோயில்?

Post  ishwarya Thu May 23, 2013 5:05 pm

அந்தக் கோயிலுக்கு நீண்ட மதில் சுவர். அதில் பதிக்கப்பட்டிருந்த கருங்கல் பலகைகள் கால ஓட்டத்தில் பராமரிப்பில்லாமல் பெயர்ந்து சிதறிக் கிடக் கின்றன. நுழைவாயிலில் சுண்ணாம்பு காரைகள் பெயர்ந்து, ‘எனக்கு வயது முன்னூறைத் தாண்டி...’ என்றது. நுழைவாயிலை அடைகிறோம். உள்ளே தரை தெரியாத அளவுக்கு செடி கொடிகள். வேம்பு, வன்னி, வில்வ மரங்கள் காற்றில் அசைந்து நம்மை வரவேற்பது போல் இருந்தது. என்னதான் புதராக கிடந்தாலும் கோயில் அல்லவா? வெறும் காலுடன் நுழைந்த நம் பாதங்களை நெருஞ்சிமுள் ருசி பார்த்தது. வலி காலில் மட்டுமல்ல; மனதிலும்தான். ஒரு பிரமாண்டமான கோயிலின் சிதைவு சொல்லொணா வருத்தத்தை நம்முள் விதைத்தது.

நாம் வலியோடு வலம் வரும் பாலி, கைலாசநாதர் திருக்கோயில், உளுந்தூர்பேட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டையிலிருந்து தெற்கே 9வது கிலோ மீட்டரில் உள்ளடங்கி இருக்கிறது. நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம். நந்தி. பலிபீடமும் நந்தியும் அபிஷேகம் கண்டு பல மாதங்களாகியிருக்கும் பரிதாபத்தில் காட்சி தருகின்றன. உள்ளே மகாமண்டபம், அர்த்தமண்டபம், ஸ்தபன மண்டபம் கடந்தால் கருவறை. உள்ளே கைலாசநாதர் இருக்கிறாரா? கண்களைக் கூர் மையாக்கிப் பார்க்கிறோம். ‘‘இப்படியன், இன்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொனாத ஈசன்’’ என்று திருநாவுக்கரசர் பதிகமாய் பாடிச்சென்றது ஞாபகத்துக்கு வந்தது.

ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்துவிட்ட மூலவரை மக்கிய வேட்டி ஒன்று சுற்றியிருக்கிறது. அதை சற்றே விலக்கிப் பார்த்தால் கரையான் படை படையாய் ஓடுகிறது. ஈசனின் ஆழ்ந்த தியானம்... சலனமற்ற அவரது தன்மை... தன் கோயில் எப்படியிருப்பினும் தன்னை நாடிவரும் பக்தரின் துயர் துடைப்பது தன் கடமை என்பதாய் சொன்னது. அங்கிருந்து ஆலயத்தை வலம் வர கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை என அழகு சிற்பங்கள் ஆதரவற்ற குழந்தைகள் போன்று பராமரிப்பில்லாது கிடக்கின்றன. தனி கோயில் கொண்டிருக்கும் கணபதி. வள்ளி-தெய்வானை சமேதரராய் காட்சி தரும் ஆறுமுகப்பெருமானுக்கும் தனி சந்நதி. அருகில் மகாவிஷ்ணுவும் தனி சந்நதி கொண்டி ருக்கிறார். பிராகாரத்தில் ஆங்காங்கே விக்ரகங்கள் சிதறிக் கிடக்கின்றன.

இத்தல நாயகி அன்னை ஞானாம்பிகையின் சந்நதியும் இடிந்து கிடக்கிறது. உலக நாயகியான உமையவள் வானமே கூரையாய் கொண்ட வெட்டவெளி யில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளாள். இவளைப் பணிய படிப்பில் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதும் தியானம், யோகம் போன்ற ஞானத்தேட லில் இருப்பவர்களை அன்னையின் அருள் உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதும் நம்பிக்கை. இத்தனை அழகான கோயில், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சித்தரால் கட்டப்பட்டது என்கிறார்கள். இந்தக் கோயிலைக் கட்டிய சித்தரின் ஜீவ சமாதி கோயிலுக்கு எதிரேயே உள்ளது. சித்தர் கட்டிய கோயிலை புனரமைக்க உள்ளூர் மக்களும் சிவத்தொண்டர்களும் தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
திருப்பணிக்குக் கைகொடுக்க விரும்புவோர் 9626039055, 9443481365 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum