தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சித்திர புத்திர நாயனார் கோவில்

Go down

  சித்திர புத்திர நாயனார் கோவில் Empty சித்திர புத்திர நாயனார் கோவில்

Post  ishwarya Thu May 23, 2013 4:54 pm

மனித வாழ்க்கையில் தெரிந்தே தவறுகளைச் செய்து கொண்டிருப்பவர்களும் உண்டு, தவறு என்றே தெரியாமல் செய்து விட்டு அதற்காக வருந்துபவர்களும் உண்டு. தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தவறு என்று ஆகிவிட்டால் அதற்கான தண்டனை கட்டாயம் உண்டு.

இந்தத் தண்டனைகளில் இருந்து விடுபட இறைவனை நாடுவதே சரியான வழி. ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் அவன் செய்யும் நற்செயல்கள், தீய செயல்கள் என அனைத்துமே கணக்கிடப்பட்டு வருகின்றன. இந்தக் கணக்குகளைப் பராமரிப்பதற்காகவே சித்திரகுப்தன் என்கிற தேவலோக கணக்காளன் இருப்பதாகவும் இந்து சமய புராணங்கள் தெரிவிக்கின்றன. இவர் சித்திர புத்திரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

சித்திரபுத்திர நாயனார்......... உலகில் வாழும் அனைத்து உயிர்களின் கணக்குகளையும் பராமரித்து வரும் சித்திரகுப்தருக்கு என்று சில இடங்களில் மட்டுமே கோவில்கள் உள்ளன. அவற்றுள் தேனி மாவட்டம், கோடாங்கிபட்டிக்கு மேற்கே தீர்த்தத்தொட்டி எனும் பகுதியில் அமைந்திருக்கும் சித்திர புத்திர நாயனார் கோவிலும் ஒன்று. காஞ்சீபுரத்தில் உள்ள சித்திர புத்திரர் கோவிலுக்கு அடுத்து சிறப்பு பெற்ற கோவிலாக இந்த கோவில் இருந்து வருகிறது.

தல வரலாறு................ தேனி மாவட்டம், கோடாங்கிபட்டியைச் சேர்ந்த ஒருவரின் கனவில் தோன்றிய சித்திரகுப்தன் தனக்கென்று தனியாக கோவில் ஒன்றைக் கட்டி வழிபட்டு வந்தால், அனைத்து பக்தர்களுக்கும், அவர்கள் வாழ்க்கையில் தெரியாமல் செய்த தீயசெயல்களை நீக்கி, நற்பலன்களை அடைந்திட தான் உதவுவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து சித்திரகுப்தன் கனவில் குறிப்பிட்டுச் சொன்ன இடத்தில் கோவில் ஒன்று எழுப்பப்பட்டது.

சுமார் அறுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலின் உள்ளே அமர்ந்த நிலையில், கிழக்குத் திசையை நோக்கிய நிலையில் சித்திர புத்திர நாயனார் அருள்பாலிக்கிறார். கருவறையை ஒட்டிய முன் சுவற்றில் விநாயகர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தென்பகுதியில் சீலைக்காரியம்மன் சிலை ஒன்று உள்ளது. சித்திர புத்திர நாயனார் கோவிலுக்கு அருகில் விருப்பாட்சி ஆறுமுக நாயனார் திருக்கோவில் உள்ளது.

கோவில் விழா........... சித்திர புத்திரன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சித்திரை நட்சத்திர நாளிலும், சித்திரை மாதத்தில் அனைத்து நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமியன்று சித்திர புத்திரருக்குச் சிறப்புப் பூஜைகளுடன் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது, சித்திர புத்திர நாயனார் தோற்றம் குறித்த வர லாற்றுக் கதைகள் படிக்கப்படுகின்றன.

அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குச் சித்திரை கஞ்சி வழங்கப்படுகின்றது. சித்திர புத்திரரை, பலரும் சித்திர குப்தன் என்றே தங்கள் பேச்சு வழக்கில் குறிப்பிடுகின்றனர். சித்திரம் என்றால் வியப்புக்குரியது என்றும், குப்தம் என்றால் மறைபொருள் (ரகசியம்) என்றும் பொருள் உண்டு. உலகில் எப்படிப்பட்ட மறைபொருளையும் கண்டறிந்து கணக்கெழுதி விடும் இவரது கணக்கெழுதும் முறை வியப்புக்குரியதாக இருப்பதால் இவரை சித்திரகுப்தன் என்று அழைப்பதிலும் தவறில்லை என்கின்றனர்.

சித்ரா பவுர்ணமி வழிபாடு......... ஒவ்வொரு ஆண்டும் சித்திர புத்திரன் அவதரித்த சித்திரை முழுநிலவு நாளன்று சித்திரை நோன்பு கொண்டாடப்படுகிறது. சித்திரை நோன்பு எனும் விரதத்தைப் பெண்கள்தான் அதிகமாகக் கடைப்பிடிக்கின்றனர். இந்நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து விரதம் இருக்கின்றனர்.

சித்திர புத்திரன் காமதேனுப் பசுவின் கர்ப்பத்தில் இருந்து பிறந்ததால், பசுவின் பால் மற்றும் பாலில் இருந்து பெறப்படும் எந்தப் பொருள்களையும் இந்த விரத நாளில் பயன்படுத்தக் கூடாது என்பது ஒரு கட்டுப்பாடாக உள்ளது. மேலும் இந்நாளில் சித்திரை நோன்பு மேற்கொள்பவர்கள் அன்று தங்கள் உணவில் உப்பையும் சேர்த்துக் கொள்வதில்லை. வீ

டுகளில் மாக்கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி, வாசனைப் பொருள் கலந்த பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். இந்தப் பூஜையைச் செய்பவர்கள் சித்திர புத்திரர் கோவிலுக்குச் சென்று ஏழை மாணவர் ஒருவருக்கு ஏடு, எழுதுகோல் போன்ற எழுது பொருட்களைத் தானமாக வழங்கிட வேண்டும். அல்லது ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். சித்திர புத்திரர் கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவபெருமான் கோவிலுக்குச் செல்லலாம்.

சித்திரை நோன்பின் பலன்......... மனிதன் உயிருடன் இருக்கும் போது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்றவாறு அவனுடைய இறப்புக்குப் பின்பு, அவனுடைய ஆன்மாவானது அதற்கான பலன்களை அடைகிறது. அவன் செய்த நற்செயல்களுக்கு நற்பலன்களையும், தீயசெயல்களுக்குத் தண்டனைகளையும் அந்த ஆன்மாஅடைகிறது.

இந்தப் பூமியில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவன் சிவபெருமான் சித்ர குப்தரைக் கொண்டு கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார். தெரியாமல் செய்த தவறு களை மன்னிக்க வேண்டியும், இனி எந்தத் தவறையும் செய்யப் போவதில்லை என்பதை உறுதியாகக் கொண்டும் சித்திர புத்திரரை வழிபட வேண்டும்.

இப்படி வழிபடுவதால், இறப்புக்குப் பின்பு, ஆன்மாவிற்குத் தீய செயல்களில் இருந்து விடுவிப்பு கிடைப்பது டன், அந்த ஆன்மா நரகம் செல்லாமல் காப்பாற்றப்பட்டு சொர்க்கத்துக்கு அனுப்பப்படும் என்கிற தொன்ம நம்பிக்கை உள்ளது. மேலும் சித்ரகுப்தரை வணங்குபவர்கள் கேதுவால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும் விடுபடுவார்கள்.

சித்திர புத்திரன் வரலாறு......... இந்த உலகின் தீய மற்றும் நற்செயல்களான பாவ புண்ணியங்களைக் கணக்கிடுவதற்காகச் சிவபெருமான் ஒரு தங்கப்பலகையில் சித்திரம் ஒன்றை வரைந்தார். இந்த சித்திரத்தைக் கண்ட பார்வதி தேவி, அந்தச் சித்திரத்தை உயிர்ப்பிக்க வேண்டினார். சிவபெருமானும் பார்வதிதேவியின் வேண்டுதலுக்காக அதனை உயிர்ப்பித்தார்.

சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் சித்திரத்தில் இருந்து உயிர்ப் பெற்றதால் அவர் சித்திர புத்திரன் என்ற பெயரைப் பெற்றார். சிவபெருமான் அவரிடம், மூவுலகிலும் உயிருடன் இயங்கும் அனைத்து உயிர்களின் தீய மற்றும் நற்செயல் குறித்த கணக்குகள் பற்றிய விவரங்களையும் கணக்கிட்டுத் தனக்குத் தெரிவிக்கும்படி கட்டளையிட்டார்.

அதன்படி, சித்திரபுத்திரனும் சிவபெருமானின் இருப்பிடமான கயிலாய மலையில் இருந்து அனைத்து உயிர்களின் கணக்குகளையும் பராமரித்து, சிவபெருமானிடம் தெரிவித்து வந்தார் என்று ஒரு வரலாறு தெரிவிக்கிறது. இந்திரன் தனக்கு குழந்தைப் பேறு அளிக்க வேண்டுமென்று இந்திராணியுடன் சேர்ந்து, பல தான தர்மங்கள் செய்து சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான்.

சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் மற்றும் இந்திராணி ஆகியோரின் தவத்தை எடுத்துச் சொல்லி, சித்திர புத்திரனை இந்திரனுக்கு மகனாக இருந்து, அவனுடைய கவலையைத் தீர்க்கும்படி அருள்புரிந்தார். அதன்படி சித்திரை மாதம், பவுர்ணமி நாளன்று காமதேனுவின் வயிற்றில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு சித்திர புத்திரன் பிறந்தார்.

இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்ட இந்திரன் மற்றும் இந்திராணி ஆகியோர் தங்கள் குழந்தையாக வளர்த்து வந்தனர். இந்திரனின் மகனாக வளர்ந்த சித்திர புத்திரன், சிவபெருமானைத் தொடர்ந்து வழிபட்டு வந்தார். சித்திர புத்திரன் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு, அனைத்து உயிரினங்களின் செயல்பாடுகள் குறித்தகணக்குகளையும் எழுதிப் பராமரிக்கும் பணியை வழங்கினார் என்றும் ஒரு வரலாறு தெரிவிக்கிறது.

அமைவிடம்........ தேனியில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தீர்த்தத் தொட்டி எனும் இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. தேனியில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் டவுன் பஸ்கள் இந்த நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum