தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெய்வீக திருமணங்கள் நடந்த புண்ணிய தினம் திருமண தடைகளை தகர்க்கும் திருமுருகன்

Go down

  தெய்வீக திருமணங்கள் நடந்த புண்ணிய தினம் திருமண தடைகளை தகர்க்கும் திருமுருகன் Empty தெய்வீக திருமணங்கள் நடந்த புண்ணிய தினம் திருமண தடைகளை தகர்க்கும் திருமுருகன்

Post  ishwarya Thu May 23, 2013 2:49 pm

எல்லா நட்சத்திரங்களும் சிறப்பு மிக்கவைதான் என்றாலும், குறிப்பிட்ட தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள் இன்னும் விசேஷமானவை. வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், தைப்பூசம், மாசி மகம். இந்த வரிசையில் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பானது. குரு வீடான மீன ராசியில் சூரியனும், புதன் வீடான கன்னியில் சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் சந்திரனும் இருந்து இருவரும் சமசப்தமமாக பார்த்துக்கொள்ளும் நாளே பங்குனி உத்திரம். நாள், நட்சத்திரம் பார்த்துதான் கல்யாணம், நிச்சயதார்த்தம் போன்ற வைபவங்களை வைக்கிறோம். பல கடவுள்களின் திருமணங்கள் இந்த பங்குனி உத்திர தினத்தில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

பார்வதி - பரமேஸ்வரன், முருகப்பெருமான் -தெய்வானை, ஆண்டாள் - ரெங்கமன்னார், சீதை - ராமர், மீனாட்சி - சுந்தரேஸ்வரர் என பல தெய்வ திருக்கல்யாணங்கள் இந்த நாளில் நடந்திருக்கின்றன. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தேவி விரதம் இருந்து திருமாலின் மார்பில் இடம் பெற்றதும் இந்த நாளே என்பது ஐதீகம். இதேபோல விரதம் இருந்து சரஸ்வதி தேவி பிரம்மாவையும், இந்திராணி இந்திரனையும் அடைந்தார்கள் என்றும் புராண, இதிகாசங்கள் கூறுகின்றன. மன்மதனை தனது நெற்றிக்கண்ணால் எரித்த சிவபெருமான் பின்னர் ரதி தேவியின் பிரார்த்தனையை ஏற்று அவனை மீண்டும் உயிர்ப்பித்த தினமும் இதுதான்.

கலியுகத்தை காக்கும் கடவுளாக சபரிமலையில் ஸ்ரீதர்ம சாஸ்தாவாக கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஐயப்பன் அவதரித்ததும் இந்த பங்குனி உத்திர நன்னாளில்தான். ஜென்ம நட்சத்திர நாளில் சபரிமலை உள்பட அனைத்து ஐயப்பன் கோயில்களிலும், ஐயனார் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. வில் வித்தகன் அர்ஜுனன் பிறந்தது, வள்ளி அவதாரம் நடந்தது. ராமன் உள்பட தசரதரின் நான்கு புதல்வர்களின் திருமணம் நடந்தது என இந்த நாளுக்கு மேலும் பல சிறப்புகளும் உள்ளன. பங்குனி உத்திர நாளில் சிவ ஸ்தலங்கள், முருகனின் அறுபடை வீடுகள், பெருமாள் ஆலயங்கள் என எல்லா கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், யாக ஹோமங்கள், சுவாமி புறப்பாடு விமரிசையாக நடைபெறும்.

12-வது மாதமான பங்குனி யில், 12-வது நட்சத்திரமான உத்திர நட்சத்திர தினம் பன்னிருகை வேலவனுக்கு மிகவும் உகந்த நாள். எல்லா முருகன் ஆலயங்களிலும், குறிப்பாக அறுபடை வீடுகளிலும் மிகப்பெரிய விழாவாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து புனித தீர்த்தங்களை கொண்டு வந்து முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த தீர்த்த யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றது. பாதயாத்திரையும் இதில் அடங்கும். பல்வேறு விதமான காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும், பக்தி பரவசத்துடன் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுவார்கள். பழநியில் பங்குனி உத்திரத்தன்று காவடி திருவிழா மிகவும் விசேஷமாக நடக்கும்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட முக்கிய சிவன் கோயில்களில் சுவாமி - அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கும். கும்பகோணம் மகாமக குளத்தில் ஆதிகும்பேஸ்வரர் தெப்ப உற்சவம் நடக்கும். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், மதுரை கூடலழகர் கோயில், திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஸ்தலங்களிலும் கல்யாண உற்சவம் விமரிசையாக நடக்கிறது. காஞ்சி, திருவாரூர் போன்ற கோயில்களில் ருத்ரபாத தீர்த்தம் பெறும் விழாவும் நடக்கிறது. மனமுருக பிரார்த்தித்தால் இறைவன் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பதே அனைத்து வழிபாடுகளின் தாத்பர்யமாக இருக்கிறது.

பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து வழிபடுவது இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்வது மிகவும் விசேஷம் என்று கூறப்பட்டுள்ளது. ஜாதகத்தில் பல்வேறு தோஷங்கள் ஏற்பட்டு திருமண தடை ஏற்படுபவர்கள், குறிப்பாக செவ்வாய் தோஷம் காரணமாக தொடர்ந்து கல்யாண தடங்கலை சந்திப்பவர்கள் பங்குனி உத்திரத்தன்று முருகப் பெருமானை மனதார வணங்கி வழிபட்டால் எல்லா தடைகள், தடங்கல்கள், இடையூறுகளும் நீங்கி சுபயோக சுபவாழ்வு அமையும் என்பது ஐதீகம். முருகனை வழிபட்டு சகல நலன்களும் பெறுவோமாக.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum