தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பளிங்குப் பேரழகால் பரவசமூட்டும் பாரியூர்

Go down

பளிங்குப் பேரழகால் பரவசமூட்டும் பாரியூர் Empty பளிங்குப் பேரழகால் பரவசமூட்டும் பாரியூர்

Post  ishwarya Thu May 23, 2013 12:08 pm

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம்
அருகேயுள்ளது, பாரியூர் அமரபணீஸ்வரர் ஆலயம். ஐந்து கலசங்கள் கொண்ட ராஜகோபுரத்தின் வழியாகத் திருக்கோயிலின் வெளிப் பிராகாரத்தில் நுழைந்தால் நாம் முதலில் காண்பது பளிங்கு பஞ்சமுக விநாயகப் பெருமான்தான். அடுத்து, தண்டபாணித் தெய்வத்தின் திருவுருவம்! பிராகாரத்தை வலம் வரும்போது கோயிலின் மேற்குப் பகுதியில் கிழக்கு நோக்கியபடி அன்னை மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் எழுந்தருளியுள்ளனர். மீனாட்சி-சுந்தரேஸ்வரரின் வடப்புறத்தில் தெற்கு நோக்கி சண்டிகேஸ்வரர், சனீஸ்வர பகவானின் சந்நதிகள்.

அதையடுத்து அமரபணீஸ்வரர் சந்நதியின் எதிரில் நந்தி மண்டபமும் அதன் பின்புறம் கொடிமரமும் கருடக் கம்பமும் காணப்படுகின்றன. ஆலயத்தின் வடமேற்குப் பகுதியில் தல விருட்சமாகிய மகிழ மரம் செழித்து வளர்ந்துள்ளது. தலவிருட்சத்தின் கீழே நாகர் சிலைகள், அருகிலேயே சனீஸ்வரர் சந்நதி.
கோயிலின் உட்பிராகாரம் முழுவதும் பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. பிராகாரத்தின் உள்ளே ஈசனின் சந்நதி வாயில் மேற்கு நோக்கி உள்ளது. வாயிலின் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். இந்த மண்டபத்தில் அழகிய வண்ணங்களில் பத்து தூண்கள் இடம் பெற்றிருக்கின்றன. மண்டப மேல் விதானத்தில் மூன்று தாமரை மலர்கள் வெகு அழகாக காண்போரின் சிந்தையைக் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன.

கருவறையில் அமரபணீஸ்வரர் லிங்க வடிவில் மேற்கு நோக்கி அமர்ந்து அழகே உருவாக பக்தர்களுக்குக் காட்சி தருவது பரவசமூட்டுகிறது. அர்த்த மண்டபமும் கருவறை உள்ளிட்ட பகுதி முழுவதும் வழவழப்பான வெண்பளிங்குக் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முற்றிலும் வெண்பளிங்கால் ஆன கோயில் இந்தப் பாரியூர் அமரபணீஸ்வரர் கோயில்தான் என்கிறார்கள். ஈசனின் கருவறையைச் சுற்றிலும் நிருத்த கணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர் ஆகிய தெய்வத் திருவுருவங்கள் காணப்படுகின்றன. அடுத்துள்ள சண்முக சுப்ரமணியர் தன் தாய், தந்தைக்கு இடையிலே பளிங்குக் கோயில் கொண்டு நாளும் தனது பக்தர்களுக்கு பரவசமூட்டி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த தனிச் சந்நதியின் கருவறை வடபுறச் சுவரில் கார்த்திகேயன், முத்துக்குமரன், பின்புறச் சுவரில் பழநி தண்டாயுதபாணி, தென்புறச் சுவரில் பாலமுருகன், குமார சுப்ரமணியர் சிலைகள் பேரழகோடு காட்சி தருகின்றன. ஒருமுறை ‘‘முருகா’’ என்றாலே வினைகளெல்லாம் பறந்தோடும். சண்முக சுப்ரமணியனை நாளும் தொழுவோர்க்குச் சகல நலன்களும் சித்திக்கும். அன்னை சௌந்தர்ய நாயகியின் திருக்கோயிலும் வெண்பளிங்குக் கற்களால் உருவானதே. விசேஷ காலங்களில் இந்த அம்மன் சந்நதியில் பெண்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். இந்த அம்பாள், கன்னிப் பெண்களுக்கு சகல சௌபாக்கியங்களும் மணமான பெண்களுக்குப் பிள்ளைப்பேறும் மாங்கல்ய பலமும் தந்து அருள்பாலிக்கிறாள்.

இந்தச் சந்நதியின் கருவறைச் சுவரின் வடபுறத்தில் பிராம்மி, சாமுண்டீஸ்வரி மற்றும் பின்புறச் சுவரில் மீனாட்சி, தென்புறம் மனோன்மணி, மகாகணபதி ஆகியோர் சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அமரபணீஸ்வரரின் ஆலயத்தின் முன் பகுதியில் வலது பக்கத்தில் வெண்பளிங்கு மண்டபம் நமக்கு சொர்க்க லோகத்தை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது. அதில் அமைக்கப்பட்டிருக்கும் நடராஜப் பெருமானின் சிலையைக் காணக் கண்கோடி வேண்டும்.
அவ்வளவு பேரழகு! தில்லை பொற்சபையைப்போல் பாரியூரில் பளிங்குச் சபையோ என்று வியக்க வைக்கிறது. பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் கிழக்கு பார்த்து பஞ்ச லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

அழகான அரிதான கோயில்களில் இதுவும் ஒன்று. பாரியூருக்கு வந்தால் பரவச தரிசனம் நிச்சயம். ஈரோட்டிலிருந்து கோபிசெட்டிபாளையம் வந்திறங்கி, அங்கிருந்து அந்தியூர் செல்லும் பேருந்து வழித்தடத்தில் 3 கி.மீ. பயணித்தால் பாரியூர் அமரபணீஸ்வரரின் ஆலயத்தை அடையலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum