மனதில் பரவும் `சந்தேகம்'
Page 1 of 1
மனதில் பரவும் `சந்தேகம்'
ஒருவர் மேல் இருக்கும் அதீத அன்புதான் சந்தேகத்திற்கு அடிப்படை காரணம் என்று விளக்கம் கூறுபவர்கள் சற்று கவனிக்க வேண்டும். அது முழு உண்மையல்ல. இயலாமை, கோபம், மற்றவர்களை புரிந்து கொள்ளும் திறமையின்மை, மனஒழுக்கம் இல்லாமை போன்ற தன்மைகளைக் கொண்டவர்கள்தான், அதிகம் சந்தேகம் கொள்வார்கள். சந்தேகப்படுகிறவர்களில் சிலர், சந்தேகத்தின் பேரில் மற்றவர்களை கையும் களவுமாக பிடித்து விட்டது போல் சந்தோஷப்படுவார்கள்.
அவர்களை கேள்வி கேட்டு திணறடித்து, தங்கள் சாமர்த்தியத்தை தாங்களே புகழ்ந்துகொள்வார்கள். அதனால் ஏற்படும் பின்விளைவு கள் தாக்கும்போதுதான் விபரீதத்தின் விளைவை அவர்கள் புரிந்துகொள்வார்கள். தொட்டதற்கெல்லாம் சந்தேகப்படுபவர்கள் ஒருவகை. அந்த சந்தேக பேர்வழிகள் பல நேரங்களில் காமெடியன்களாக ஆகிவிடுவார்கள். தங்களைத் தாங்களே அதி மேதாவியாக்கிக் கொள்ள அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி பல நேரங்களில் தோல்வியில்தான் முடியும்.
காரணம் தவறு செய்பவர்கள் யாரும் மற்றவர் கண்ணில் படும்படி எதையும் செய்ய மாட்டார்கள் என்பது இவர்கள் மூளைக்கு எட்டாது. எதுவுமே தெரியாது போல இருந்து கொண்டே தக்க ஆதாரங்களோடு கூட்டாளியை குற்றவாளி கூண்டில் நிறுத்தி விசாரிப்பவர்கள் இன்னொரு ரகம். தவறு செய்வது மனிதனின் இயல்பு. அதனை மாற்றியமைக்க பொறுமை வேண்டும்.
சந்தேகம் சரிப்பட்டு வராது. தவறே செய்திருந்தாலும் மன்னிப்பு பலநேரங்களில் மகத்தான மாற்றங்களை உருவாக்கும். சந்தேகம் வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே அசைத்து விடும். அதன் பிறகு ஏற்படும் மாற்றங்கள் அத்தனை மகிழ்ச்சியாக இருக்காது. காலப்போக்கில் சுற்றியிருக்கும் அனைவரையும் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வர முயலும்போது உலகமே அவர்களை வெறுக்க ஆரம்பித்து விடும்.
அப்போது, `நாம் சந்தேகிப்பதெல்லாம் பொய்' என்ற உண்மையை அவர்கள் உணர்ந்து, நடந்து முடிந்த சம்பவங்களால் குற்ற உணர்வு கொள்வார்கள். அதையே நினைத்து காலம் முழுக்க துடிப்பார்கள். சந்தேகத்தால் தங்கள் சந்தோஷத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டவர்கள் பலர். நாளடைவில் சந்தேகம் அவர்களை ஒரு மனநோயாளிபோல் ஆக்கி, அவர்களை தனிமைப்படுத்தி விடும்.
சந்தேகத்தால் ஏற்படும் மனஅழுத்தம் அவர்களை நோயாளியாக்கிவிடும். அதனால் அவர்கள் காலம் முழுக்க மன- உடல் நோயாளிகளாக வாழ வேண்டியதாகி விடும். சந்தேகமே இல்லாமல் வாழ முடியுமா? முடியும். சந்தேகத்தால் சாதிக்க முடியாததை அன்பால் சாதிக்கலாம். சந்தேகம் என்பது அறியாமையின் வெளிப்பாடு. இயலாமையின் செயல்பாடு. அன்பால் கட்டுப்படுத்த முடியாத விஷயம் எதுவும் இல்லை. ஆனால் அதற்கு பொறுமை தேவை.
நாம் யூகிக்கும் விஷயம் உண்மையா பொய்யா என்று தெளிவு பெற அமைதி தேவை. தெளிவும், அமைதியுமாய் இருப்பவர்கள் மனதில் சந்தேகப் பேய் குடி புகாது. புதுமண தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சந்தேகம் அவர்களுக்குள் தேவையற்ற குழப்பத்தையும், பூசலையும் ஏற்படுத்தி விடும். இது அவர்களை எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க விடாமல் அவர்கள் வாழ்க்கையை முடக்கி விடும். அவர்களிடம் இருக்கும் மகிழ்ச்சியை சிதைத்து அவர்கள் வாழ்க்கையை கேலிக்குரியதாக்கிவிடும்.
மற்றவர்கள் அவர்களை கேலிப்பொருட்கள் போல் ஆக்கிவிடுவார்கள். அதனால் அவர்கள் மனதில் ஏற்படும் வடு காலம் முழுவதும் மாறாது. தம்பதிகளில் கணவர்- மனைவியை சந்தேகிப்பதும், மனைவி- கணவரை சந்தேகிப்பதும் இருவர் வாழ்க்கையையும் அலங்கோலமாக்கிவிடும். எல்லோர் முன்னிலையிலும் சந்தேகத்தோடு பார்ப்பது, பேசுவது பின்னால் சென்று விசாரிப்பது இது அனைத்தும் தீராத அவமானத்தை மற்றவருக்கு ஏற்படுத்தி விடும்.
அதன் பிறகு ஏற்படும் சமாதானம் இழந்ததை மீட்டுத் தராது. மனதில் மேலோட்டமாக சந்தேகம் உருவாகும்போதே அதை கிள்ளி எறிய பழகிக்கொள்ள வேண்டும். கிள்ளி எறிந்தால் மனம் தெளிவு பெறும். வாழ்க்கை வளம் பெறும். சந்தேகத்தால் ஏற்படும் மனஸ்தாபங்கள் நாளடைவில் நீண்டு, நிரந்தர பிரிவிற்கு வழி வகுத்து விடும். அதுமட்டுமல்ல சந்தேகம் என்ற பலவீனத்தை மனதில் சுமந்தவர்களை யார் வேண்டுமாலும் ஆட்டிப் படைக்கலாம்.
சந்தேகப் பேர்வழிகளைத் தேடி பலரும் வருவார்கள். தங்களால் முடிந்த தொந்தரவுகளை அவர்களுக்கு கொடுப்பார்கள். போகிற போக்கில் சந்தேகப்படும்படியான விஷயம் ஏதாவது அகப்பட்டால் அதையும் அவர்களிடம் கூறி, அவர்களை தூண்டி விடுவார்கள். இந்த சந்தேக நபர் அதையும் நம்பி செயல்பட்டு அவமானப்படும்போது, தூர நின்று வேடிக்கைபார்த்து கைகொட்டி சிரிப்பார்கள்.
இதற்கெல்லாம் இடம் தராமல் உறுதியாக இருக்கும் வரைதான் வாழ்க்கை வண்டி தடம் புரளாமல் ஓடும். அறிவுள்ளவர்களால் மட்டுமே உண்மையை உணர முடியும். சந்தேக குணம் மூர்க்கத்தனமானது, உண்மைகளை அறிய விடாது. சில நேரங்களில் சிலர் சந்தேகம் கொள்வது உண்மையாகக் கூட இருக்கலாம்.
அப்போது மனம் பதறாமல் தவறுகளை திருத்த முயற்சிக்க வேண்டுமே தவிர, சந்தேகத்தை குற்றமாக்கி வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்ளக்கூடாது. சந்தேகம் எப்போதும், யாருக்கும் நன்மை செய்ததில்லை. சந்தேகம் மனதில் பரவும் விஷம். சந்தேகம் இல்லாத வாழ்க்கைதான் நிம்மதியானது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காதலிக்கு சந்தேகம்
» உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்!
» பயம், சந்தேகம், சலனம் வேண்டாம்
» குடியரசு தினத்தில் ‘தல’ யின் புதிய சந்தேகம்..!
» ஐ.பி.எல். கிரிக்கெட்: 4 ஆட்டத்தில் புஜாரா ஆடுவது சந்தேகம்
» உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்!
» பயம், சந்தேகம், சலனம் வேண்டாம்
» குடியரசு தினத்தில் ‘தல’ யின் புதிய சந்தேகம்..!
» ஐ.பி.எல். கிரிக்கெட்: 4 ஆட்டத்தில் புஜாரா ஆடுவது சந்தேகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum