தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அங்காடித் தெரு – திரை விமர்சனம்

Go down

அங்காடித் தெரு – திரை விமர்சனம் Empty அங்காடித் தெரு – திரை விமர்சனம்

Post  ishwarya Fri Apr 26, 2013 1:10 pm

நடிகர்கள்: மகேஷ், அஞ்சலி, ஏ வெங்கடேஷ், பழ கருப்பையா, பிளாக் பாண்டி
ஒளிப்பதிவு: ரிச்சர்டு எம் நாதன்
வசனம்: ஜெயமோகன்
இசை: விஜய் ஆண்டனி – ஜிவி பிரகாஷ்
பின்னணி இசை: விஜய் ஆன்டனி
மக்கள் தொடர்பு: டைமன்ட் பாபு
எழுத்து – இயக்கம்: ஜி வசந்தபாலன்
தயாரிப்பு: கே கருணாமூர்த்தி – சி அருண்பாண்டியன்

தமிழ் சினிமாவில் அபூர்வமாக சில குறிஞ்சிகள் மலர்வதுண்டு. வசந்த பாலனின் அங்காடித் தெரு அப்படியொரு குறிஞ்சி!.

இது பண்ணப்பட்ட கதையல்ல… விளிம்பு நிலை மனிதர்கள் வாழும் வாழ்க்கையின் இன்னொரு பரிமாணம். அத்தனையும் நிஜம்!.

பத்து மாடி, பதினைந்து மாடி என உயரமான கட்டடங்களில் பரபரப்பாக நடக்கும் பளபள வர்த்தகங்களுக்குப் பின்னே அதன் முதலாளிகள் செய்யும் சில்லறைத்தனங்களும், மனிதனை மனிதன் காலில் போட்டு நசுக்கி நாயினும் கீழாய் நடத்தும் கொடுமைகளும் பத்திரிகைகளில் செய்தியாக வரும்போது படித்துவிட்டு, அந்த காகிதத்தை பஜ்ஜியிலிருந்து எண்ணெய் இறக்க பயன்படுத்துவதோடு மக்களின் பச்சாதாபம் முடிந்து போகிறது.

ஆனால் வசந்தபாலன், அத்தனை செய்திகளின் பின்னணியையும் தேடிப் பிடித்து, அந்த மனிதர்களையும் அவர்களுடன் புதைந்துபோன சில உண்மைகளையும் பேச வைத்துள்ளார். தாங்க முடியவில்லை. உண்மையின் வீர்யம் அப்படி!.

வழக்கமான காட்சிகளுடன் விரிகிறது கதை. மழையில் குளித்த ‘அழகான’ சென்னைத் தெருக்களில், பின்னிரவில் பாட்டுப் பாடும் ஜோதியும் சேர்மக்கனியும் (மகேஷ்- அஞ்சலி), அப்படியே உதயம் தியேட்டர் நடைபாதையோரம் இடம் தேடுகிறார்கள்… அன்று இரவுப் பொழுதை உறங்கிக் கழிக்க! வேறு போக்கிடமில்லாத ஜீவன்கள்… நல்ல முறையில் விடியும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் படுக்க, அடுத்த சில மணி நேரங்களில் அவர்கள் வாழ்க்கையை சிதைத்துப் போடுகிறது அந்த கோர விபத்து!

மருத்துவமனையில் கிழிந்த துணியாய் அந்த இருவரும்…

நாயகன் பார்வையில் பிளாஷ்பேக் விரிகிறது.

தெற்கத்திச் சீமையின் தேரிக் காடுகளில் விளையாடி மகிழும் அந்த ப்ளஸ் டூ இளைஞனின் வாழ்க்கை, தந்தை ஒரு ஆளில்லா லெவல் கிராஸ் விபத்தில் அகால மரணமடைந்ததும், தடுமாறி வழிமாறிப் போகிறது. பள்ளியிலேயே முதலாவதாகத் தேறியும், சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு பெரிய்ய்ய கடையில் வேலைக்கு சேரத்தான் அவனுக்கு கொடுப்பினை இருக்கிது. கூடவே அவனது நண்பனும் புறப்பட்டு வந்து அந்த உழைப்பாளர் சந்தையில் ஐக்கியமாகிறான்.

வாழ வழியற்ற அத்தனை மனிதர்களின் சங்கமமாகத் திகழ்கிறது அந்த கடையிருக்கும் அங்காடித் தெரு. பெரிய கடையில் வேலைக்குச் சேர்கிறோம் என்று கனவோடு வந்தவனுக்கு, கடையின் பிரமாண்டத்துக்குப் பின்னே இருக்கும் கோர முகம் திடுக்கிட வைக்கிறது. ஆடு மாடுகளிலும் கேவலமாக கடை முதலாளியும் அவனது எடுபிடி மேனேஜரும் தொழிலாளர்களை நடத்தும் விதம்…

ஒருவேளை சாப்பாட்டுக்காக கழிப்பறையை விட கேவலமான ஒரு கூடத்தில் அடித்துக் கொள்ளும் அவலம், இரவில் ஒருவர் மேல் ஒருவர் படுத்து உறங்க, வெளியில் கம்புடன் காவலாளி நிற்கும் சிறை வாழ்க்கை…

விட்டுப் போய்விடலாம்தான்… ஆனாலும், கிராமத்தின் வறுமை, அம்மா தங்கைகளின் வாழ்க்கையை நினைத்து கொடுமைகளை ஜீரணிக்கப் பழகிக் கொள்கிறார்கள்.

அந்த சகதிக்குள் தட்டுத்தடுமாறி நடைபோட முயலும் ஜோதிக்கு சின்ன ஆறுதலாக வருகிறாள் சேர்மக்கனி. ஆரம்பத்தில் சின்னச்சின்ன சண்டை. அவள் படும் பாடுகளைப் புரிந்த பின் தன் தோளை ஆதரவாகத் தர முன்வருகிறான். இரண்டு ஆதரவில்லாத கொடிகள் ஒன்றையொன்று பற்றிக் கொள்வது போன்ற நிஜமான, வலிகள் புரிந்த நேசம்.

ஆனால் கடைக்கார அண்ணாச்சிக்கு இந்த காதல் தெரிந்துவிட, சித்திரவதையின் உச்சத்தை அனுபவிக்கிறார்கள். போராடி வெளியேறுகிறார்கள்.

இனி சுய முயற்சியால் வாழலாம் என்ற முடிவோடு, முதல் நாளிரவை சென்னையின் நடைபாதையில் கழிக்க முயல, மாநகரின் கோர முகம் அவர்களை தூங்கவிடாமல் விரட்டுகிறது. மறுநாள்தான் அந்த உதயம் தியேட்டர் பக்கத்து பிளாட்பாரத்தை காட்டித் தருகிறார் தெருவிலிருக்கும் வியாபாரி ஒருவர். அங்கே இரவில் படுத்து காலையில் விழிக்கும் முன்பே விபத்து அவர்களை கிழித்துப் போட்டுவிடுகிறது.

அதன் பிறகு அந்த இருவரின் கதி என்ன என்பது ஒரு எதார்த்தமான க்ளைமாக்ஸ்…

எந்தக் காட்சியைப் பாராட்டுவது… எதை விடுவது என்றே புரியவில்லை. அத்தனை அர்த்தமுள்ள, கருத்துச் செறிவான படமாக்கம். ஒரு படைப்பாளனை நினைத்து ரசிகர்கள் பெருமைப்படுமளவுக்கு, தனது ஆளுமையைக் காட்டியுள்ளார் வசந்தபாலன்.

படத்தில் வருகிற சின்னச் சின்ன காரெக்டர்கள் கூட, நினைவில் நிற்கிறார்கள். உழைப்பு, விற்கும் திறன் தெரிந்தவன் பிழைத்துக் கொள்வான் என்பதற்கு, பிச்சைக்காரனாய் வந்து, ஒரு சிதிலமடைந்த பொதுக் கழிப்பிடத்தை சுத்தமாக்கி, கட்டணம் வசூலித்து, பின் டிப் டாப்பாக வாழ்க்கையை நடத்தும் ஆசாமி உதாரணம்.

மானத்தோடு வாழவேண்டும் என்பதே ஒவ்வொரு பெண்ணின் மனக்கிடக்கையாகவும் இருக்கிறது.. அது எப்பேர்ப்பட்ட சூழலாக இருந்தாலும் என்பதற்கு அந்த ‘முன்னாள் விபச்சாரி’ ஒரு உதாரணம்… இப்படி நிறைய சொல்லலாம்.

ஆதரவுக்கு யாருமில்லாத ஒரு பெண் வயதுக்கு வந்த பிறகு, சடங்கு செய்ய முடியாத கையறு நிலையில் தவிக்கும் கனிக்கு, ஒரு மரத்தடி அம்மனும் அதைச் சுற்றி வாழும் மனிதர்களும் காட்டும் பரிவு இருக்கிறதே… ஈர மனசுக்காரர்களும் இருக்கிறார்கள் என்பதை நசசென்று சொல்லுமிடம் அது.

இந்தப் படம் சில சட்டச் சிக்கல்களைச் சந்திக்கவும் நேரலாம் என்பது தெரிந்தும் அதனை தயங்காமல் படமாக்கியிருக்கும் வசந்தபாலனின் துணிச்சலுக்கு ஒரு சல்யூட்.

நடிகர்கள் மகேஷ், அஞ்சலி, பிளாக் பாண்டி, கடை மேனேஜர் ஏ வெங்கடேஷ், முதலாளி பழ கருப்பையா என அனைவருமே பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள். இவர்களைத் தவிர அத்தனை புதுமுகங்களுமே அருமையான பங்களிப்பைச் செய்துள்ளனர். காதலன் ஏமாற்றிய சோகத்தில் நொடியில் மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அந்த ராணி கேரக்டர் மனதில் பெரும் வலியை ஏற்படுத்துகிறது.

அஞ்சலி அத்தனை தத்ரூபமாகச் செய்துள்ளார். சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருப்பது அவருக்கு இன்னும் அழகு சேர்த்துள்ளது.

மகேஷை புதுமுகம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். பிளாக் பாண்டி கச்சிதமாக செய்துள்ளார். மிரட்டிவிட்டார் ஏ.வெங்கடேஷ். பழ கருப்பையா உண்மையிலே கடை முதலாளியோ என்று ரசிகர்கள் கேட்கும் அளவு மகா எதார்த்தமான நடிப்பு.

இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள் சற்று மெதுவாக நகர்வது போலத் தோன்றும். ஆனாலும் இதுபோன்ற படங்களில் என்ன குறையிருக்கிறது என்று தேடுவதை விட்டுவிடலாம்.

ரிச்சர்டின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர்பிரசாத்தின் எடிட்டிங் அனைத்துமே சிறப்பாக உள்ளது. ஜெயமோகனின் வசனங்கள் இன்னொரு ப்ளஸ்.

விஜய் ஆண்டனி இயக்குநருக்கு வலதுகரம் மாதிரி கைகொடுத்துள்ளார். பின்னணி இசையும், அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடலும் அருமை. இந்த பாணியை அவர் தொடர வேண்டும்.

தலை நிமிர்ந்து நிற்கும் தலைநகர் சென்னையில், மனித இனத்தையே தலைகுனிய வைக்கும் இந்த இழிவுகள் இன்னும் தொடர்கின்றன- ஆள்பவர்கள், சட்டத்தின் காவலர்களின் பலத்த துணையுடன். எதிர்த்துக் கேட்பவனை நசுக்கிவிடும் அந்த மிருகபலத்துக்கு, ஓங்கி பலமாக வசந்தபாலன் கொடுத்திருக்கும் சாட்டையடி இந்தப் படம்.

ஒரு புலனாய்வு பத்திரிகையாளன் செய்யும் வேலையை வசந்தபாலன் செய்திருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum